Published:Updated:

`இவ்ளோ வேகமா வந்த வறட்சிய நம்பவே முடியல!' உற்சாகம் குறைந்த ஊர்த் திருவிழாக்கள்

ஊர் திருவிழா

``இந்த தண்ணி பிரச்னையால இப்பெல்லாம் காலைல கோயிலுக்கு வந்துட்டு சாயங்காலம் கெளம்பிடுறோம். பெரிய ஆறு இருந்தும் இந்த கிராமத்துல குடிக்கிற தண்ணி கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு."

`இவ்ளோ வேகமா வந்த வறட்சிய நம்பவே முடியல!' உற்சாகம் குறைந்த ஊர்த் திருவிழாக்கள்

``இந்த தண்ணி பிரச்னையால இப்பெல்லாம் காலைல கோயிலுக்கு வந்துட்டு சாயங்காலம் கெளம்பிடுறோம். பெரிய ஆறு இருந்தும் இந்த கிராமத்துல குடிக்கிற தண்ணி கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு."

Published:Updated:
ஊர் திருவிழா

அந்த ஏரியில் எப்போதும் நீர் குறைந்து பார்த்ததில்லை. குறுகி பின் விரிந்து நீண்டு செல்லும் அதன் கரையின் மீது, கோட்டையைக் காக்கும் காவல் வீரர்கள் போல பனைமரங்கள் நிற்கும். அதன் அருகே இளம் வெயிலில் பசுமை படர்ந்த புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள், வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பறவைகள் எனச் சலிப்பூட்டாத அந்தக் காட்சியை, அடுக்கடுக்காக கட்டப்பட்ட நண்பன் வீட்டின் மூன்றாவது மாடியில் நின்று பலமுறை ரசித்திருக்கிறேன்.

ஆண்டியூர்
ஆண்டியூர்

அன்று காலை 5.10 மணி, அதே மூன்றாவது மாடி. நாங்கள் தங்கிய அறையிலிருந்து ஒரு கப் தேநீருடன் வெளியே வந்தேன். இளம் குளிர்காற்று என்னை வருடிச்செல்ல, வானை நிமிர்ந்து பார்த்தேன். ஒளி இருளை வெல்லப் போராடிக்கொண்டிருந்தது. கண்கள் இருளுக்குப் பழகியபின் அந்த ஏரியைத் தேடினேன், தூரத்தில் மங்கிய ஒளியில் எண்ணெய் ஊற்றிய ஒரு பிரமாண்ட தகடு போல அதன் நீர்ப்பரப்பு பளபளத்தது. ``ரெடியாடா... போய்ச் சேர ரெண்டு மூணு மணிநேரம் ஆகும். இப்ப கெளம்புனாதான் சரியா இருக்கும்” என்றான் நண்பன்.

ஊர் காவேரிப்பட்டினம். இருப்பதுவோ தென்பெண்ணை நதிக் கரையில். கிருஷ்ணகிரியிலிருந்து தர்மபுரி நோக்கிச்செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் கே.ஆர்.பி அணை அருகே `கிணற்றடி தென்னை’ போல இவ்வூர் வளமாகவே இருக்கிறது.

அரூர் சாலை
அரூர் சாலை

எங்கள் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. குளிர் வீசும் அந்தக் காலை வேலையில் NH 44 தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் இருசக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே கட்டடங்கள் சிதறிக்கிடந்தன இடையிடையே பிரமாண்ட மொட்டை மலைகளும் முளைத்திருந்தன. சிறிது தூரப் பயணத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் ஒரு சாலை பிரிந்து காரிமங்கலம் சென்றது. அங்கிருந்து அரூர் செல்லும் சாலையில் பயணத்தைத் தொடர்ந்தோம். தூரத்தில் மலைத்தொடர்களின் இடையே கண்ணைக் கூசச் செய்த வெள்ளித் தட்டொன்று தயங்கித் தயங்கி வெளிவர வானம் வெளுக்கத் தொடங்கியது. நிழல் விழச் செய்யாத அந்த ஒளியும் குளிர்ந்த காற்றும் அப்பகுதியில் கனத்திருந்தது. தெளிவான அந்தச் சாலையின் இருபுறங்களையும் மரங்கள் அலங்கரித்து நின்றன.

சுமார் ஒருமணி நேரம் தொடர்ந்த பயணத்தில் பாறைக் கற்கள் நிறைந்த சிவந்த மண், இறுகிய கரிய நிற மண், இலகிய தவிட்டுநிற மண் என வெவ்வேறு வடிவங்களைக் கொண்ட அந்த வறண்ட வானம் பார்த்த பூமியில், மக்கள் தண்ணீருக்காக வண்ண வண்ண பிளாஸ்டிக் குடங்களுடன் அலைந்து கொண்டிருந்தார்கள்.

தீர்த்தமலை சாலை
தீர்த்தமலை சாலை

அரூரை அடைந்தோம். சாலை பிரியும் இடத்தில் வலது கையில் ஒரு பறவையைப் பறக்க விட்டாற்போல் இருக்கும் ராஜீவ் காந்தி சிலை. அதன் வலதுபுறத்தில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை. அதன் எதிரே சுதந்தரமாக அமைந்திருக்கும் அண்ணா சிலை. கொஞ்சம் முரணாகப்பட்டது.

திருவண்ணாமலை சாலையில் பயணம் தொடர்ந்தது, வறட்சியும், நீரை தேடிய காலிக்குடங்களும் குறைந்தது. வலதுபுறம் ஒரு மலைத்தொடர் தொடர்ந்தது. அந்தச் சாலையில் வனப்பகுதி மெதுவாகச் செல்லவும் என்ற தட்டிகளைக் காண முடிந்தது.

தீர்த்தமலை
தீர்த்தமலை

சிறுசிறு குன்றுகள் மீது சரிந்து விழுந்து பின் எழுந்து, வளைந்து நெளிந்து சென்ற அந்தச் சாலையில் சரியாக 10 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் பயண இலக்கான நீப்பத்துறை கிராமத்தை அடைந்தோம். தென்பெண்ணை ஆறு எங்கிருந்தோ வந்து அந்த ஊரைப் பிளந்து சென்றது. ஆற்றுக்குள் பல்லாயிரம் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தனர். உள்ளே சென்றோம் மணல் பரப்பில் முளைத்து நிற்கும் சிறுசிறு பாறைகள் மீது மஞ்சள் குங்குமம் பூசி குழு குழுக்களாக மக்கள் பொங்கலிட்டு வணங்கிக் கொண்டிருந்தனர். நன்பகல் நேரம் ஆற்றில் நீருக்குப் பதிலாக சூரிய ஒளிதான் நிரம்பி வழிந்து ஓடியது. ஆனாலும் வீசும் காற்றில் அனல் இல்லை அதுதான் அம்மக்களைக் களைப்படையச் செய்யவில்லை என்று பட்டது.

சென்னம்மாள் கோயில் திருவிழா
சென்னம்மாள் கோயில் திருவிழா

ஆற்றின் நடுவே ஒரு அரச மரத்தின் அடியில் சிறு கோயில் உள்ளே பாறையின் மீது வெள்ளியில் செய்யப்பட்ட அழகிய அம்மன் சிலை `சென்னம்மாள்' என்றார்கள். பரவசத்தோடு கைகளை மேலே கூப்பியும், கன்னத்தில் அடித்துக்கொண்டும், ஏதோ முணுமுணுத்தபடி வணங்கிச் சென்றார்கள்.

சென்னம்மாள் அம்மன்
சென்னம்மாள் அம்மன்

அங்கிருந்து மெல்ல நகர்ந்து தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் அமர்ந்தோம். ஆற்றின் வறண்டு நீண்ட மணல் பரப்பைக் வெறித்துக்கொண்டிருந்த நண்பன். ``பத்து வருஷத்துக்கு முன்ன இந்த ஆத்த தண்ணி இல்லாம பாத்ததே கிடையாது. வருஷா வருஷம் ஆடி மாச திருவிழாவுக்கு ஒருநாள் முன்னயே குடும்பத்தோட வந்து தங்கி மறுநாள் காலைல ஆத்துல குளிச்சி கெடா வெட்டி பூச வைப்போம். இந்தத் தண்ணிப் பிரச்னையால இப்பெல்லாம் காலைல கோயிலுக்கு வந்துட்டு சாயங்காலம் கெளம்பிடுறோம். பெரிய ஆறு இருந்தும் இந்தக் கிராமத்துல குடிக்கிற தண்ணி கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு. இவ்ளோ வேகமா வந்த இந்த வறட்சிய நம்பவே முடியல.” என்றான்.

வற்றிய தென்பெண்ணை
வற்றிய தென்பெண்ணை

மாலைநேரம் காவேரிப்பட்டினம் நோக்கி மீண்டும் பயணம் தொடர்ந்தது. நிழல் கிழக்கு நோக்கிச் சரிந்துகொண்டிருந்தது. மேகக்கூட்டங்கள் இடையே சிக்கிய சூரியன் தன் ஒளியை மூங்கில் மூங்கிலாக இறக்கியது.

இந்த ஊரில் மட்டுமல்ல, இன்னும் பல பகுதிகளில் இந்த வறட்சி திருவிழாக்களின் உற்சாகத்தைக் குறைத்திருக்கிறது. அல்லது அந்த உற்சாகத்துக்காக தண்ணீர் லாரிகளைச் சார்ந்திருக்கும்படி மாற்றியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று களையிழந்து காணப்படும் காவிரி ஆறே அதற்கு மற்றுமொரு சாட்சி.

ஒருகாலத்தில் நம் வாழ்வும், அதைச் சார்ந்த அத்தனை கொண்டாட்டங்களும் நீர்நிலைகளைச் சார்ந்தே இருந்தன. அதனால் அவற்றின் நலனும் சரியாகப் பேணப்பட்டது. ஆனால், இன்றைக்கு பண்டிகைகளின்போதும், சடங்குகளின்போதும் மட்டுமே ஆற்றின் கரைகள் நம் நினைவுக்கு வருகின்றன. நிலைமை இப்படியிருக்க இயற்கையை மட்டும் நொந்து என்ன பயன்? காலத்திற்கேற்ப மனித வாழ்வியல், மாறுவது இயல்புதான். எனவே பாரம்பர்ய, கலாசார விஷயங்களுக்காக மட்டுமே நீர்நிலைகளைப் பார்க்காமல் இயற்கையில் அதன் முக்கியத்துவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் முற்றிலும் அழியும் முன்பு, இப்போது இருக்கும் நீர்நிலைகளையாவது மீட்டெடுக்க முடியும்.