Published:Updated:

கடலும் மலையும் காற்றும் மக்களுமே இத்தாலி!

இத்தாலி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியாவின் நாடு என்பதால், நம் மக்களுக்கு அது பரிச்சயமான பெயர் ஆகி விட்டது. அதோடு, இந்தியாவுடனான இன்னொரு ஒற்றுமையும் அந்த நாட்டுக்கு உண்டு.

கடலும் மலையும் காற்றும் மக்களுமே இத்தாலி!

இத்தாலி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியாவின் நாடு என்பதால், நம் மக்களுக்கு அது பரிச்சயமான பெயர் ஆகி விட்டது. அதோடு, இந்தியாவுடனான இன்னொரு ஒற்றுமையும் அந்த நாட்டுக்கு உண்டு.

Published:Updated:

கடலும் மலையும் காற்றும் மக்களுமே இத்தாலி என்று சொன்னால் அது பொருத்தமாகவே அமையும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டுள்ள இந்த நாட்டைச் சுற்றி வரும்போது மிகுந்த உற்சாகம் உள்ளத்தை நிறைக்கிறது.

அட்ரியாடிக் கடல் பக்கம், வெனிஸ், அங்கோனா மற்றும் காசரோனாவும், டைரேனியன் கடல் பக்கம் ஜெனோவா, நேப்பிள்ஸ், மற்றும் ரிக்கியோ டி கலப்ரியாவும் முக்கிய இடங்களாக உள்ளன. கீழே ஐயோனியன் கடல். . . உலக அதிசயங்களில் ஒன்றான பிசா நகரின் சாய்ந்த கோபுரமும், மற்றோர் உலக அதிசயமான ரோமின் கலோஜியமும் பார்த்து இன்புற்றுப் பரவசப்பட வேண்டிய இடங்கள். தனிச்சிறப்புடன் விளங்கும் வாடிகன், இதன் அருகிலேயே. பிசா, ஃப்ளோரன்ஸ், வெனிஸ், வாடிகன், ரோம் ஆகியவை ஒரு பயணத்தில், ஒரு வாரத்தில் பார்த்திடக்கூடிய அடுத்தடுத்த இடங்கள். ஏற்கெனவே அவற்றை நாம் பார்த்துக் களித்து விட்டதால், இம்முறை நேப்பிள்ஸ், பொம்பை, அமால்பி, சலர்னோ, மையோரி, மினோரி, சுரண்டோ மற்றும் கேப்ரி ஆகிய இடங்களைப் பத்து நாட்களில் பார்த்து வந்தோம்.

இத்தாலி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியாவின் நாடு என்பதால், நம் மக்களுக்கு அது பரிச்சயமான பெயர் ஆகி விட்டது. அதோடு, இந்தியாவுடனான இன்னொரு ஒற்றுமையும் அந்த நாட்டுக்கு உண்டு. ஆம்... நம்மைப் போலவே அங்கும் மக்கட்தொகைக்குக் குறைவில்லை. மற்ற ஐரோப்பிய நாடுகளில் இல்லாத அளவு அதிகக் கூட்டம் இந்த நாட்டில் காணப்படுகிறது.

Metropolitan City of Rome, Italy
Metropolitan City of Rome, Italy

சுவிஸ் நாட்டின் ஜூரிக் நகரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப் பயணத்தில், காலை 11 மணிக்கு நேபிள்சை அடைந்தோம். நல்ல வெயில் அடித்தாலும், ஐரோப்பாவின் வின்டருக்கே உரித்தான குளிர்க் காற்று மெல்ல உடலைத் தழுவியது. மனதின் ஓரத்தில் நம் சென்னை வெயில் சற்றே தலைதூக்கிப் பயமுறுத்தியது. காரிலேறி, நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை அடைந்தோம். மூன்றாவது மாடியில்தான் வீடு என்றாலும், டூப்ளக்ஸ் வீடுகள் என்பதால் 5 மாடிவீடு போல அவ்வளவு உயரம். வீடுகளின் நெருக்கமும், மக்களின் கலகலப்பும், நமது சென்னை எம்எம்டிஏ-வை ஞாபகப்படுத்தின. வீட்டில் 5 நட்சத்திர ஓட்டலின் அனைத்து வசதிகளும் உண்டு. கூடவே கிச்சனும் உண்டு. விரும்பிய உணவை நாமே தயாரித்துச் சாப்பிடலாம். அந்தக் காலத்தில்கட்டப்பட்ட வீடுகள். எனவே உறுதி அதிகம். ஏசி, ஹீட்டர், வாஷிங் மெஷின், ஃப்ரிஜ், அயர்ன், டிவி என்று அத்தனை வசதிகளுக்கும் குறைவில்லை.

ஓய்வுக்குப் பிறகு, ஊர் சுற்றக் கிளம்பினோம். பஸ், ரயில் என்று அனைத்து வசதிகளும் உண்டு. சாலைகள் அனைத்துமே கருங்கல் பதிக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு வரக் கூடியவை. பராமரிப்புச் செலவே கிடையாது. ரயில்கள் அனைத்துமே பாதாள ரயில்கள்தான். பூமிக்குக் கீழே இறங்கிப் போய்த்தான் ரயில்களில் ஏற வேண்டும். சில சதுக்கங்களையும், மக்கள் கூடும் மன்றங்களையும் பார்த்தபின் கடற்கரைக்குச் சென்றோம்.

துறைமுகத்தில் நின்ற கப்பலுக்கும், அருகிலிருந்த பில்டிங்குக்கும், அருகில் செல்லும் வரை வித்தியாசம் தெரியவில்லை. அவ்வளவு அருகாமை வரை கப்பல்கள் வருகின்றன. 'பீச்' என்றால், சாலைதான். கடலை ஒட்டிப் போடப்பட்டுள்ள பாறாங்கற்கள் மீது, இளைஞர்களிலும், யுவதிகளிலும் ஒரு சிலர் சென்று அமர்கிறார்கள். நமது மெரினா பீச்சின் மகத்துவம் அப்பொழுதுதான் முழுமையாகப் புரிந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நமது உணவு சாப்பிட நம்மூர் ரெஸ்டாரண்டுகள் உண்டு. இட்லியும், தோசையும், பிரியாணியும் கூடக் கிடைக்கின்றன. வயிற்றை நிரப்பியபின் வந்த ரயிலைப் பிடித்து தங்கிய இடம் திரும்பினோம். அடுத்த நாள் காலை, ஓல்ட் டவுன் என்றழைக்கப்படும் நகரைப் பார்த்துக் கொண்டே நடந்தோம். இரு பக்கமும் ஐந்தாறு மாடிகள் கொண்ட கட்டிடங்கள். குறுகலான, நீண்ட, நேரான சாலைகள். இரண்டு பக்கமும் சிறிதும், பெரிதுமான கடைகள். ஆங்காங்கே பிரமாண்ட சர்ச்சுகள்.

அப்படியே போனால், இரண்டு, மூன்று கிலோ மீட்டர்கள் தாண்டிய பிறகு அப்பாதை கொஞ்சங் கொஞ்சமாக மேலே ஏறி ஒரு கோட்டையில் முடிவடைகிறது. கோட்டையின் உள்ளே சென்று பார்த்தால், பழமை குறித்த படங்களும், சிலைகளும் நம்மை வரவேற்கின்றன. வெளியே வந்தால், மதில் சுவரில் ஏறப் படிகள் காணப்படுகின்றன. வயதானவர்களும் வந்து பார்க்க ஏதுவாக, ஒருபுறம் சாய்தளப் பாதையும் அமைத்திருக்கிறார்கள். மதிலையொட்டி அகன்ற பாதை உள்ளது. ஊரிலேயே உயரமான இடம் என்பதால், ஒரு புறம் ஊரையும், மறுபுறம் கடலையும், இன்னொரு புறம் மலைகளையும் இங்கிருந்து காண்கையில் மனது றெக்கை கட்டிப் பறக்கிறது. ஓல்ட் டவுனின் குறுகிய பாதை மேலிருந்து பார்க்கையில் ஒரு கருங்கோடாகத் தெரிகிறது. தூரத்தில் விமான நிலையமும் இன்ன பிற இடங்களும், கண்களுக்கு விருந்தாகின்றன. எதையும் மேலிருந்து பார்க்கையில் தனி அழகுதானே. ஐந்தாறு மாடி கொண்ட கட்டிடங்கள் இரண்டு பக்கமும் நீண்டு கிடப்பதிலேயே தனியழகு வந்து விடுகிறது. அந்த அழகை, இத்தாலியின் பெரும்பாலான நகரங்கள் கொண்டுள்ளன.

San Quirico d'Orcia, Italy
San Quirico d'Orcia, Italy
'தும்மலில் போனாலும் தூற்றலில் போகக் கூடாது' என்ற நம்மூர் பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது. தூற்றலில் நனைந்தால் எளிதாகச் சளி பிடிக்கும் என்று கருதியே நம் முன்னோர் இதனைப் பழமொழியாக்கியிருக்க வேண்டும்!

காலை நாங்கள் தங்கியிருந்த வீட்டை விட்டுப் புறப்பட்டோம். இரவிலிருந்தே மழை தூறிக்கொண்டேயிருந்தது. 'தும்மலில் போனாலும் தூற்றலில் போகக் கூடாது' என்ற நம்மூர் பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது. தூற்றலில் நனைந்தால் எளிதாகச் சளி பிடிக்கும் என்று கருதியே நம் முன்னோர் இதனைப் பழமொழியாக்கியிருக்க வேண்டும்.

வாடகைக் காரில் ஏர்போர்ட் அருகேயுள்ள 'இரோப்கார்' என்ற கார் வாடகைக் கம்பெனிக்குச் சென்று, எங்களுக்கென ஒரு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். பொம்பியை நோக்கி. பொம்பைக்குப் போகும் வழியில், அங்குள்ள 'ரிகி டி காசர்டோ' என்ற அரண்மனைக்குச் சென்றோம். அரண்மனையையொட்டியே அந்த ஊரும் அமைந்துள்ளது. அரண்மனைக்கு எதிரேயுள்ள தோட்டம், பல கிலோமீட்டர் தூரம் பரந்து விரிந்து கிடக்கிறது.

அரண்மனையின் வாசலில் நின்று பார்த்தால், தூரத்தில், நீர்வீழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. அதிலும் நாங்கள் அங்கு சென்ற அன்று, லேசான மழைத்தூறல் அந்தத் தோட்டத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. அரண்மனையின் படிகளே, தனி அழகு காட்டுகின்றன. மேலே செல்லும் படிகளின் இரு பக்கமும்ராட்சச சிங்க உருவங்கள் படிக்கட்டின் பகட்டைப் பறை சாற்றுகின்றன. வரிசையான அறைகள், சாரி. அவற்றை அறைகள் என்று சொல்வதைக் காட்டிலும், ஹால்கள் என்று அழைப்பதே பொருந்தும். அறைகளின் நான்கு சுவர்களைத்தான் நாம் சாதாரணமாக அழகுபடுத்துவோம். ஆனால், அவர்கள் ஆறு சுவர்களையும் - ஆமாம், தரையையும், உள் கூரையையும் சேர்த்துத்தான் அழகுபடுத்துகிறார்கள். அதிலும் உள் கூரைக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமே அலாதி. ஒவ்வொரு ஹாலின் உள் கூரையும் விதம் விதமான கலைவண்ணத்துடன் திகழ்கிறது.

அரசர் காலையில் எழுந்ததிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லும் வரை அவர் பயன்படுத்திய அத்தனையும் அங்கு காட்சிப் பொருட்களாகி, நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றன. மந்திரிப் பிரதானிகள் கூடும் அறை, அரசரின் நூலகம், அரிய பொருட்கள் அறை, பொழுதுபோக்கு அறைகள், ராணியின் ஒப்பனை அறை, படுக்கை அறை என்று அத்தனையும் அக்கால வேலைப்பாடுகள் அமைந்த உபகரணங்களுடன் நமக்குக் காட்சி தருகின்றன. சாதாரணமாகச் சுற்றிப் பார்த்து வர ஒன்றரைமணி நேரமாயிற்று. விளக்கமாகப் பார்க்க வேண்டுமானால், அதிக நேரமாகும். சில இடங்களில் மிகப் பிரமாண்டமானதும் கலைநுணுக்கம் நிறைந்ததுமான தொங்கும் விளக்குகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

ராஜ வாழ்க்கை என்பது இதுதானோ? ஆனாலும், எதிரிகளுக்குப் பயந்தே வாழ வேண்டிய கட்டாயமும் இருந்திருக்கிறது. அரச வாழ்வு நமக்குக் கிடைக்காவிட்டாலும், அரண்மனையைப் பார்த்து மகிழும் பேறாவது கிடைத்ததே!
Doge's Palace, Venice, Italy
Doge's Palace, Venice, Italy

அரண்மனையின் மேல் மாடத்திலிருந்து தோட்டத்தின் அழகை ரசித்துக் கொண்டே, தூய, இனிய காற்றையும் வாங்கி இன்புறலாம். நமது நாட்டின் பதேபூர் சிக்ரி அரண்மனையிலும்இந்த ஏற்பாடு உண்டு. குளிர்ந்த, இனிய காற்று அரண்மனைக்குள்ளும், குறிப்பாக ராஜா-ராணி அறைக்குள் வருவதற்குமான ஏற்பாடுகளை அங்கும் செய்திருந்தார்கள் என்பதை, நாங்கள் அங்குசென்றபோது, அழைத்துச் சென்ற 'கைடு' தெளிவாகவே விளக்கினார். பல்லடுக்கு அரண்மனை... எதிரே மிகப்பெரிய மைதானம். பின்னாலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை நிறைந்த தோட்டம். அரண்மனையின் உள்ளிருந்தே இரண்டையும் கண்டு களிக்கும் வசதி. ராஜ வாழ்க்கை என்பது இதுதானோ? ஆனாலும், எதிரிகளுக்குப் பயந்தே வாழ வேண்டிய கட்டாயமும் இருந்திருக்கிறது. அரச வாழ்வு நமக்குக் கிடைக்காவிட்டாலும், அரண்மனையைப் பார்த்து மகிழும் பேறாவது கிடைத்ததே என்ற திருப்தியுடன், பொம்பை நோக்கிப் பயணமானோம்.

நாங்கள் தங்கும் வீட்டை அடைந்தபோது, வீட்டின் உரிமைப் பெண்மணி இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சிரித்த முகமும், அன்பான வார்த்தைகளும் மனத்துக்கு இதமளிப்பவைதாமே? பிரயாணக் களைப்பு போக ஓய்வெடுத்தோம். இயற்கை, இருள் போர்வையை ஊரின் மீது விரிக்க, உள்ளே குளிர் ஒளிந்துகொள்ள, அந்தக் குளிரைப் போக்க, போர்வையை இழுத்துப் போர்த்தியபடி உறங்கிப் போனோம். காலையில், அவ்வீட்டு உரிமையாளரே தனது காரில் எங்களை 'ரூயின்ஸ்' என்றழைக்கப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். நாம் தாமதமாகச் சென்றால், காரை தூரத்தில் நிறுத்தி விட்டு நடக்க வேண்டி வரலாம். அதைத் தடுக்கவே இந்த 'ட்ராப் அன்ட் பிக் அப். 'ஏற்பாடு.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 2, 3 கிலோ மீட்டர் தூரமே. லேசான தூறல் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்க, நுழைவுச் சீட்டைப் பெற்று உள்ளே சென்றோம். அப்பப்பா. எவ்வளவு பெரிய நகரம். எவ்வளவு வசதிகள். தற்கால ஸ்டேடியம் போன்றே விளையாட்டரங்கம். கருங்கல் பதிக்கப்பட்ட சாலைகள். சாலைகளின் இருமருங்கிலும் கடைகள். பள்ளிகள். ஜிம்கள். பெருங்கூட்டம் கூட ஏதுவான சதுக்கங்கள். அவ்விடங்களில் சிலைகள். இன்றைக்கு நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் அப்பொழுதே இருந்திருக்கின்றன. பளிங்குக் கற்கள் பாவப்பட்ட வீடுகள். வீட்டின் பின்புறத்தில் தோட்டங்கள். சில கடைகள் மற்றும் வீடுகளின் சுவர்களில் வண்ண ஓவியங்கள். பெரிய பெரிய தாளிகள்.

Colosseum, Roma, Italy
Colosseum, Roma, Italy

நுழைவுச் சீட்டு வாங்கும்போதே, கையில் ஒரு வரைபடத்தையும் கொடுத்து விடுகிறார்கள். அந்த வரைபடத்தில், இடிபாடுகளில் சிதிலமடைந்த நகரை 9 பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். மூன்று, நான்கு மணி நேரத்தில் அவசரமாகப் பார்த்துச் செல்வோருக்காக, அவர்களே அதில்பாதை குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி சென்று, விரைந்து பார்க்கலாம். 'ஆடியோ கைடு' என்ற பெயரில் நம் கையில் ஒரு செல்போன் போன்ற கருவியைக் கொடுத்து விடுகிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கான எண்ணை அதில் அழுத்தினால், அந்த இடத்தின் விரிவான விளக்கம் நம் செவிகளுக்குள் ஓடுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகச் செழித்திருந்த அவ்விடத்தில், முதலில் பூகம்பமும், அதனைத்தொடர்ந்து எரிமலை வெடித்தும், அந்த நகரையே அழித்திருக்கின்றன. வரலாற்றைக் கேட்கும்போதே நம் கண்கள் குளமாகின்றன. நம்மூர் பூம்புகார்தான் உடன் நினைவுக்கு வந்தது. கோவலனையும், கண்ணகியையும் சீராட்டி வளர்த்த அந்தச் சிங்கார நகரம் இன்று கடலுக்குள் அல்லவா போய் விட்டது. அந்த அழகு நகரத்தை நம்மால் காணவே முடியாதல்லவா போயிற்று. அப்போதைக்கப்போது வானம் பொழிய, ஒரு வழியாக நான்கைந்து மணி நேரம் நடந்து முக்கிய இடங்களைப் பார்த்துத் திரும்பினோம்.

தங்கியிருந்த வீட்டின் பெண்மணி எங்களை வந்து பிக்-அப் செய்து கொள்ள, வீடு திரும்பி உடனடியாக பொம்பியை விட்டுக் கிளம்பினோம்.

அடுத்து நாங்கள் சென்ற ஊர் ப்ரையானோ. சென்ற ஊர்கள் அனைத்துமே கடற்கரையை ஒட்டியவை. வீட்டின் கதவைத் திறந்தால் கடல் முகத்தில் விழிக்கலாம். கடலை ஒட்டியுள்ள மலைகளில், படிப்படியாக வீடுகள், நீண்ட தெருக்களில் அமைந்திருக்க எங்கள் வீடோ அனைத்தின் உச்சத்தில். இதுவும் ஒரு டூப்ளக்ஸ் வீடுதான். பாதி மாடியை, ஓபனாக விட்டிருக்கிறார்கள். எதிரே பறந்து கிடக்கும் கடலை முழுமையாக ரசிப்பதற்கென்றே. கீழே ஹாலும் கிச்சனும். மேலே படுக்கை அறைகள். கடற்கரையை ஒட்டியே அனைத்துச் சாலைகளும். முதல் நாள் காலை அங்குள்ள பேருந்தில் ஏறி நகரை வலம் வந்தோம். கடற்கரை சென்று பார்த்தோம். மிகச் சிறிய மணல் பகுதி. மற்றபடி 'பீச்' என்பது கடலையொட்டி சிமெண்டால் கட்டப்பட்டுள்ள நடைபாதைகளே. கடற்கரையை மிகவொட்டிய பல ரெஸ்டாரண்டுகள். முழு மீனை, அவர்கள் ஸ்டைலில் தயார் செய்து கொடுக்கிறார்கள்.

அடுத்த நாள், 8 கி. மீ தொலைவிலுள்ள 'அமால்பி' சென்றோம். ப்ரையானோவைவிட அமால்பி பெரிய நகரம். அங்கிருந்து மயோரி, மினோரி, சலர்னோ போன்ற இடங்களுக்கு ஃபெரி சர்வீஸ் உண்டு. அமால்பியின் கடற்கரைக்கு அருகிலேயே உள்ள பெரிய சர்ச் ஒன்றுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். பின்னர் கடைத் தெருவைச் சுற்றி வந்தோம். இங்குள்ள கடற்கரையோர ரெஸ்டாரெண்டுகள் பிரசித்தம். கீழே கடல் அலைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அவற்றிற்கு மேலே உள்ள ரெஸ்டாரண்டுகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கும் மழை எங்களுக்குத் துணை வர, அதனோடே கடற்கரையில் சுற்றி வந்தோம். வீடு வந்து, ஓபன் தளத்தில் நின்றபடி, கடலில் போகும் ஃபெரிகளையும், தூரத்தில் கப்பலில் தெரியும் விளக்குகளையும் ரசித்தோம்.

Grand Canal, Venice, Italy
Grand Canal, Venice, Italy

அடுத்த நாள் புறப்பட்டு அமால்பி சென்று, அங்கிருந்து சலர்னோ செல்லும் ஃபெரியில் ஏறினோம். டெரஸ் சீட்டில் அமர்ந்து கடலை ரசித்தபடி பிரயாணமானோம். கடலில் இருந்து மலை மேல்உள்ள கட்டிடங்களைக் காண்பதே ஓர் ஆனந்தம். அதிலும் இத்தாலியின் நான்கைந்து மாடிக்கட்டிடங்கள், மலைகளின் மீது அனாயாசமாக நிற்பதைப் பார்க்கையில், உற்சாகம் மனதில் கரை புரண்டோடுகிறது. சுமார் ஒன்றரை மணி நேரப்பயணம். இரண்டு நிறுத்தங்களில் பயணியரை ஏற்றி இறக்கிய பின், சலர்னோ சென்று இறங்கினோம். நீண்ட கடற்கரை. கடலை ஒட்டிய பெரிய பார்க். அதில் அமர்ந்துதான் கடலை ரசிக்க வேண்டும். கடல் நீரில் கால் நனைப்பதும், அலைகளைத் தொட்டபடி நடப்பதும் நம் மெரினாவில்தான் சாத்தியம். கால் நனைப்பதற்கென்று மிகச் சிறிய மணற் பரப்புகளே உள்ளன.

சலர்னோ ஒரு பெரிய நகரம். கடற்கரையையொட்டி சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட பார்க்கை அமைத்து, நிறைய சிமெண்ட் பெஞ்ச்களை அமைத்திருக்கிறார்கள் - உட்கார்ந்து வசதியாகக் காற்று வாங்குவதற்காக. நாங்களும் சிறிது நேரம் அமர்ந்து காற்று வாங்கினோம், தூரத்தில் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பல்களை ரசித்தபடி.

அப்படியே நடந்தோம் அழகழகான கட்டிடங்களைப் பார்த்தபடி. அங்குள்ள இந்தியன் ரெஸ்டாரெண்டில், மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என்று ஒரு கட்டு கட்டினோம். அதனை நடத்துபவர் ஒரு பங்களாதேஷ்காரர். இந்தியர் என்று அறிந்ததும் அவர் இந்தியில் பேச ஆரம்பிக்க, நாமோ திருதிருவென விழித்தோம். ருசிக்கு மொழி இல்லையே. மிகுந்த சுவையுடன், மிக்க அன்புடன் அவர் பரிமாறினார். சொந்த மண்ணும், பக்கத்து மண்ணும் ஒட்டிக் கொள்ளுமோ? பின்பு பாகிஸ்தான் மட்டும் ஏன் பகை பாராட்டுகிறது?

அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பி, சொரண்டோ நோக்கிப் பயணமானோம். அதே போன்ற கடலையொட்டிய சாலைகள். ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சொரண்டோவை அடைந்து மதிய உணவு சாப்பிட்டோம். உணவெல்லாம் பெரும்பாலும் பீசா, பாஸ்டா, பர்கர் போன்றவை. எல்லா இடங்களிலும் சிக்கன் கிடைக்கிறது. இத்தாலியைப் பொறுத்தவரை மீனுக்கும் பஞ்சமில்லை. ஆக்டோபஸ் சூப்பை, விரும்புபவர்கள் சுவைக்கலாம். பீசாவைச் சாப்பிட்டுக் கிளம்பினோம்.

Lago di Garda, Italy
Lago di Garda, Italy

எங்களுக்கு வீடு தருபவர் அங்கேயே வந்து எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். நகரிலிருந்து ஒரு 3 கி. மீ. பெரிய சாலை. அதனை விடச் சிறிய சாலை. பின்பு அதற்கும் குறுகிய சாலை, மலையடிவாரத்தில். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்கள். அதற்கருகில், கடலையொட்டிய வீடு. எதிரே சிறு தோட்டம். தோட்டத்தில் ஓர் ஆமையை வளர்க்கிறார்கள். அவர்களுடைய 'பெட்'டாம். அது பொந்துக்குள் சென்று அமர்ந்து கொள்வதும், பின்னர் வெளியே வந்து அங்குள்ள புற்களைக் கடித்துத் தின்பதும், ஆரத்யாவுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் நல்ல பொழுதுபோக்கு. ஃபைபராலான, வட்ட வடிவமான நீர்த்தொட்டி. மின்சாரத்துடன் பொருத்தப்பட்ட அதில், நமக்கு வேண்டிய சூட்டில் தண்ணீரை வைத்துக் குளிக்கலாம். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மனித வாழ்வுக்கு வேண்டிய அனைத்தையும் கண்டு பிடித்து, வாழ்வை இனிதாக்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டுக்கு இவையெல்லாம் என்று வருமோவென்ற ஏக்கத்திலேயே உறங்கிப் போனோம்.

அடுத்த நாள் ‘கேப்ரி’ ஐலாண்ட் சென்று வந்தோம். அதைத் தனியாகச் சொல்கிறேனே... அதுவரை நீங்களும் ஓய்வெடுங்கள்!

- ரெ.ஆத்மநாதன்

(காட்டிகன், சுவிட்சர்லாந்து)

இந்த பயணக் கட்டுரையின் அடுத்த பகுதியை இங்கே படிக்கலாம்.