Published:Updated:

`கார்லயே கிச்சன், படுக்கை வசதி; இந்தியா முழுக்க பயணம்!' - சுவாரஸ்யம் பகிரும் திருச்சூர் தம்பதி

சுற்றுலாவில் லெட்சுமி - ஹரிகிருஷ்ணன் தம்பதி

சாலைகளிலும் அது தரும் சாகசங்களிலும் பெருகுகிறது இந்தத் தம்பதியின் காதல்!

`கார்லயே கிச்சன், படுக்கை வசதி; இந்தியா முழுக்க பயணம்!' - சுவாரஸ்யம் பகிரும் திருச்சூர் தம்பதி

சாலைகளிலும் அது தரும் சாகசங்களிலும் பெருகுகிறது இந்தத் தம்பதியின் காதல்!

Published:Updated:
சுற்றுலாவில் லெட்சுமி - ஹரிகிருஷ்ணன் தம்பதி

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (31), லெட்சுமி (21) தம்பதி, கடந்த மூன்று மாதங்களாக காரில் இந்தியா முழுவதும் டூர் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் உறங்க காரிலேயே பெட் அமைத்துள்ளனர். சமைப்பதற்கான எல்லா பொருள்களையும் காரிலேயே வைத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி திருச்சூரில் தங்கள் சுற்றுலாவைத் தொடங்கி, இப்போது மூன்று மாதங்களைத் தாண்டி பயணித்து வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஹரிகிருஷ்ணன், லெட்சுமி தம்பதியிடம் போனில் பேசினோம்.

ஹரிகிருஷ்ணன், ``நான் சென்னை லயோலா காலேஜ்ல படிச்சேன். என் மனைவி லெட்சுமி கோவை பி.எஸ்.ஜி காலேஜ்ல படிச்சாங்க. நான் முன்பு பெங்களூரில் ஒரு எஜூகேஷன் டெக்னாலஜி கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தேன். என் மனைவி லெட்சுமி `டின் பின்' என்ற ஆன்லைன் ஸ்டோர் நடத்திட்டு வர்றாங்க.

ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் நிச்சயம் ஆன பிறகு, நாங்க போன்ல பேசும்போது அதிகமா பயணங்கள் பத்திதான் பேசிக்கிட்டிருப்போம். கல்யாணத்துக்கு அப்புறம் தாய்லாந்துக்கு ஹனிமூன் போனோம். அந்த நேரத்துலதான், இன்னும் அதிகமா சுற்றுலா போகணும்னு நாங்க முடிவு செய்தோம். நான் ஏற்கெனவே இந்தியா முழுவதும் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல டூர் போயிருக்கேன்.

காரில் ஓய்வெடுக்கும் தம்பதி
காரில் ஓய்வெடுக்கும் தம்பதி

கொரோனா லாக்டெளன் நேரத்துல வீட்டுலேயே அடைஞ்சு கிடந்தது ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதனால ஏதாவது பெருசா பண்ணணும்னு நினைச்சோம். அப்போதான் இந்தியா டூர் பண்ணலாம்னு ஐடியா தோணுச்சு. பொது வாகனப் போக்குவரத்து இல்லாததால என்ன செய்யலாம்னு ஒரு வாரம் ஆலோசனை நடத்தினோம். என் அம்மாகிட்ட ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்தது. `இதுல டூர் போங்களேன்'னு அம்மா சொன்னாங்க. நாங்க சட்ட விதிமுறைக்கு உட்பட்டு, அந்த கார்ல பின் சீட் இருக்கும் பகுதியில பெட் மாதிரி தயார் செய்துவிட்டு டூர் கிளம்பினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சூர்ல இருந்து சேலம் போய் அங்க பிரியாணி சாப்பிட்டுட்டு, அங்க இருந்து பெங்களூரு, உடுப்பி, அப்புறம் பெதாமி போனோம். அங்க, எல்லாப்பூர்ங்கிற பகுதியில 400 வருஷத்துக்கு மேல பாரம்பர்யம் கொண்ட மலைவாழ் மக்களோட சிபி கிராமத்துக்குப் போனோம். மகாராஷ்டிராவில ஹோல்காபூர்ல எருமைத்தோலில் செருப்பு செய்யும் தொழில் ஃபேமஸ். அதற்கான தோல் சென்னையில் இருந்துதான் வருவதாகச் சொன்னாங்க. அதையெல்லாம் பார்த்தோம்.

படகு பயணத்தில்
படகு பயணத்தில்

அப்பிடியே புனே, மும்பை வழியா அவுரங்காபாத் போனோம். அங்க லொனார்னு ஒரு ஏரி இருக்கிறது. ஐந்தாயிரம் வருஷத்துக்கு முன்னாடி உருவான அந்த ஏரியில் தண்ணீர் காரத்தன்மையுடன் (Alkaline Water) இருக்கு. இதனால அங்க மீனே இருக்காது. அந்த ஏரிக்கு ரெண்டு, மூணு அருவிகள்ல இருந்து தண்ணீர் வருது. அருவி தண்ணீர் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அது ஏரியில் விழுந்ததும் காரத்தன்மையா மாறிடுது. அந்தத் தண்ணீரில் மஞ்சளை கலந்தால் சிவப்பு நிறமா மாறிவிடும். அதையெல்லாம் வீடியோவாக எடுத்தோம்.

கட்ச் பகுதியில இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இரவு தங்கினோம். உதய்ப்பூர் வழியா குண்டல் பகுதியில் உள்ள பெருஞ்சுவரை பார்க்கச் சென்றோம். நாம் சீன பெருஞ்சுவர் பற்றிதான் கேள்விப்பட்டிருக்கோம். அதற்கு அடுத்த இரண்டாவது நீளமான பெருஞ்சுவர், குண்டல் மதில் சுவர். அது 36 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்திருக்கு.

இனி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் போகத் திட்டமிட்டுள்ளோம். முடிந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பயணிக்கணும். இல்லைனா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா வழியாக மீண்டும் கேரளா திரும்பத் திட்டமிட்டிருக்கோம்.

எங்க பயணத்துக்கு, எங்களோட `டின்பின் ஆன்லைன் ஸ்டோர்' மற்றும் `டின்பின் ஸ்டோரீஸ்' என்ற எங்க யூடியூப் சேனல்ல இருந்து கிடைக்கிற பணம் உதவுது. ஏற்கெனவே என்னோட சேமிப்பு மற்றும் சில பொருள்களை விற்றுக் கொண்டு வந்த பணத்துலதான் பயணம் தொடருது.

கிராம மக்களுடன்
கிராம மக்களுடன்

ரூம் எடுத்தா வாடகை அதிகமாக இருக்கும் என்பதால நாங்க கார்லயே தங்கிக்கிறோம். இரவு நேரத்துல பெட்ரோல் பங்க்ல காரை பார்க் பண்ணிட்டு காரிலேயே தூங்குவோம். மற்றபடி வழியில் யாரையாவது சந்தித்துப் பழகினா அவங்க வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ள காரை நிறுத்திட்டு தங்குவோம். காரை நிறுத்தி தங்குவதற்கான சரியான இடம் கிடைக்காததால நாலுமுறை வெளியே ரூம் எடுத்து தங்கியிருக்கிறோம். தூங்கும்போது கார்ல ஏ.சி போடக்கூடாதுங்கிறதுனால எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் ஒண்ணு செட் பண்ணியிருக்கோம்.

வட மாநிலங்கள்ல இப்ப குளிர்காலம்ங்கிறதால எங்களுக்கு கார்ல தங்குறது வசதியாதான் இருக்கு. பகல்ல கார்லயே மொபைல் சார்ஜ் போட்டுக்குவோம். நைட்ல கார் ஆஃப்ல இருக்கும் என்பதால சார்ஜ் போடுறது சிரமம். ரெண்டு மாதம் டூர் போக பெட்ரோல் செலவுக்கு 1,20,000 ரூபாய் செலவாகும்னு கணக்குப் போட்டோம். அதையும் தாண்டி செலவு போய்க்கிட்டே இருக்கு" என்றவர், பயணத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்தப்போன இடங்கள் பற்றிப் பகிர்ந்தார்.

``கோகர்ணத்தில் இரவு நேரத்தில நீல நிறத்தில மாறும் கடல் பகுதி ரொம்பப் பிடிச்சிருந்தது. கட்ச் பகுதியில ஒரு கிராமத்தில ஒரு குடும்பத்தினர் அறிமுகமானாங்க. அங்க ஒருநாள் இரவு நாங்க தங்கினோம். அவங்க கலாசாரம் பிடிச்சிருந்தது. அப்புறம் ராஜஸ்தான்ல அறிமுகமான ஒரு பெண் அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப்போய் எங்களை உபசரிச்சாங்க. நாங்க பார்க்குற மக்களிடம் எல்லாம் அன்புடன் பழகுகிறோம். அதனால அதுபோன்ற அன்பு உபசரிப்புகள் எங்களுக்குக் கிடைக்குது. எனக்குக் கொஞ்சம் இந்தி தெரியும்ங்கிறதால மக்கள்கிட்ட பேச முடியுது" என்றார்.

சமையல்
சமையல்

ஹரிகிருஷ்ணனின் மனைவி லெட்சுமி பேசினார். ``கார்ல பயணம் செய்து கார்லேயே தங்குறது ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, எனக்கு அது அவ்வளவு கஷ்டமா தெரியல. வழியெல்லாம் மக்கள் ரொம்ப பாசமா பழகுறாங்க. குஜராத்தின் கட்ச் பகுதி மக்கள் ரொம்ப அன்பா இருந்தாங்க. சில கிராமங்கள் பிடிச்சிருந்தா, அந்தப் பகுதியில சில நாள்கள் தங்கியிருப்போம். போறபோக்குல நல்ல இடங்கள் இருந்தா வீடியோ எடுப்போம். அப்படி இதுவரைக்கும் 33 வீடியோக்களுக்கு மேல எங்க யூடியூப்ல போட்டிருக்கேன். காலை டிபனும் மதிய உணவும் நாங்களே சமைச்சுப்போம். ராத்திரி சமைக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதனால இரவு பெரும்பாலும் வெளிய சாப்பிடுவோம். சமைக்கிறதுக்காக சின்ன கேஸ் சிலிண்டர், சிங்கிள் பர்ன்ர் ஸ்டவ் இருக்கு. அரிசி, பருப்பு போன்றவை வீட்டில் இருந்து கொண்டு வந்தது இருக்கு. சமைக்கிறதுக்கான காய்கறிகள் மட்டும் வெளியில வாங்கிப்போம். மற்றபடி நாங்க போகும் ஊர்ல ஏதாவது ஸ்பெஷல் உணவு இருந்தா அதையும் டேஸ்ட் பண்ணுவோம். அவங்களும் சமைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. நாங்க டூர் போறதுக்கு எங்க ரெண்டு வீட்டுலயும் சப்போர்ட் பண்ணுறாங்க" என்றார்.

``இந்தப் பயணம் முடிஞ்ச பிறகும், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் நிறைய பயணங்கள் செய்யணும்னு முடிவு செய்திருக்கிறோம்" என்றனர் இருவரும் உற்சாகமாக.

சாலைகளிலும் அது தரும் சாகசங்களிலும் பெருகுகிறது இந்தத் தம்பதியின் காதல்!