
பயணம் / ரஜினி பிரதாப்சிங்
சுற்றுலா சம்பந்தமான நோட்டிஃபிகேஷன்கள்தான் என் செல்பேசியின் திரையில் அடிக்கடி வந்து விழும். அப்படி ஒரு வீக் எண்டில் என் இன்ஸ்டாவை நோண்டிக்கொண்டிருந்தபோது, ‘டொப்’ என ஒரு நோட்டிஃபிகேஷன். ‘மினி கோவா’ என்று கேரளாவின் வர்க்கலா பற்றிய வீடியோ அது. வர்க்கலா பற்றி ஏற்கெனவே நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ‘மினி கோவா’ என்று இந்த பீச்சுக்கு ஹேஷ்டேக் கொடுத்துப் பலர் பதிவிட்டதையும் பார்த்திருக்கிறேன். ‘பீச் இருந்தா கோவா ஆகிடுமா’ என்று எங்கள் நண்பர்களுக்குள் பேசிக்கொண்டோம். எல்லாம் வர்க்கலாாவுக்குப் போகும் வரைதான். ஆனால், வர்க்கலா கடற்கரைக்கு விசிட் அடித்துவிட்டு வந்த பிறகு, எங்கள் புரிதல் வேற லெவலில் இருந்தது!
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கும் கொல்லத்துக்கும் இடையில் அரபிக் கடலலைகளின் தாலாட்டில் சுகமாகக் கிடந்துகொண்டு நம்மை நீண்ட நாள்களாக அழைத்துக்கொண்டிருந்த வர்க்கலாவுக்குப் போனதை மட்டுமே ஒரு தொடராக விளிக்கலாம். ஆனால், மற்ற இடங்கள் கோபித்துக் கொள்ளும். ஓகே! ஓவர் டு மினி கோவா!

தொய்ந்துபோனதொரு வியாழக்கிழமை மாலையில் முடிவெடுத்து, சுறுசுறுப்பான சனிக்கிழமையின் அதிகாலையில் பரபரப்பாக எழுந்து, 5 மணிக்குக் கோவையின் பாலக்காட்டுச் சுற்றுச்சாலையில் புஷ்டியான வறுத்த முந்திரிப் பருப்புகளையும், பதமான உலர் திராட்சைகளையும், சுண்டக் காய்ச்சிய பாதாம் பாலின் துணையோடு சப்புக்கொட்டிச் சுவைத்துச் சாப்பிட்டு முடித்துவிட்டு வண்டியைக் கிளப்பும்போது இருட்டு மெல்ல விலகிக்கொண்டிருந்தது; பொழுது மெல்லப் புலர்ந்துகொண்டிருந்தது.
கோவையிலிருந்து பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழ, கொல்லம் - இதுதான் நமது ரூட். 350 கிலோ மீட்டர்- 7 மணிநேரம். ‘சந்திரன் பிள்ளை ஸீஃபுட் ரெஸ்ட்டாரன்ட்’ என்றொரு கடலுணவகம் கொல்லத்தில் கடற்கரையோரம் இருந்துகொண்டு அங்கு வருவோர் எல்லோரையும் அடிமையாக்கி வைத்துக்கொண்டிருக்கிறது என்ற தகவல் நம்மை நேராக அங்கே அழைத்துச் சென்றது.
பழைமையான ஓட்டுக் கட்டடம், விறகு அடுப்பு, ஐந்து மேசைகள், 20 - 25 பேர் ஒரு நேரத்தில் சாப்பிடக்கூடிய அறை எனக் கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் குடியிருப்புப் பகுதி களுக்குள் தன்னந்தனியாக அமைந்துள்ளது. வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சாலைகளுக்குள் ஹோட்டல் இருப்பதற்கான எந்த அறிகுறியு மில்லாமல் எங்களைக் கொஞ்சம் குழப்பியது.
ஒரு திருப்பத்தில் 20- 30 கார்கள் ஒரு காலியிடத்தில் நெருக்கிப் பிடித்து அணிவகுத்து இருந்தன. ஜன்னல் கண்ணாடிகளை இறக்கும் முன்பே வாசனை மூக்கைத் துளைத்தது. இங்குதான் இருக்கிறேன் என சந்திரன் பிள்ளை கட்டியம் கூறினார்.

விதவிதமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மீன்களுள் வேலா என்றொரு மீனைப் பொலிச்சுத் தரச் சொல்லித் தேர்ந்தெடுத்தோம். நான்கு பேருக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மீனின் விலை 900 ரூபாய். மேசை நடுவில் வாழை இலையைப் பரத்தி மூன்று நான்கு வித மீன்குழம்பு வாளிகளை வைத்து அசத்திவிட்டார்கள். வஞ்சிரம் மீன் வறுவலுக்கு அடுத்ததாக நாம் சுவைத்த இறால் மீன் வறுவலைப் போல இதுவரை வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ‘தெனாலி’ படத்தில் ரமேஷ் கண்ணா, தெனாலி என்ற பெயர் நினைவுக்கு வராமல் ஒவ்வொரு முறையும் விராலி, தக்காளி என்று விதவிதமாகக் கூப்பிடுவதுபோல சந்திரன் பிள்ளை ரெஸ்ட்டாரன்டை நம் நண்பர்கள் கணேசனும், ரஃபியும் காரில் வரும்போது சாமி பிள்ளை, சண்முகம் பிள்ளை, சங்கரன்பிள்ளை, சந்தனம் பிள்ளை என மாற்றி மாற்றி ஏலம் போட்டதைச் சந்திரன் பிள்ளை கேட்டிருந்தால் ‘சாப்பாடு இல்லை’ என்று எங்களை விரட்டிவிட்டிருப்பார். நல்லவேளை..!
தொண்டை வரை நிறைத்துக்கொண்டு கடற்கரை ஓரமாகவே அலைகள் பிற்பகல் கதிரவனின் ஒளியில் மின்னுவதைப் பார்த்தவாறே அடுத்த ஒரு மணி நேரத்தில் வர்க்கலா பீச்சை அடைந்தோம்.
ஹெலிபேட் என்ற இடத்தில் காமன் பார்க்கிங். கடலை ஒட்டி அமைந்துள்ள மலையின் மீது ஹெலிபேடிலிருந்து செல்லும் பாதை ஏதோ ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்ததுபோல இருக்கிறது. வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளால் நிறைந்து காட்டேஜ்களும், ரெஸ்ட்டாரன்டுகளும், ஷாப்பிங் ஸ்பாட்டுகளுமாகக் கலர்ஃபுல்லாக வைப்ரேஷன் மோடில் வெகு பரபரப்பாக இருக்கிறது. எல்லாமே யானை விலை, குதிரை விலைதான்... 150 ரூபாய்க்குக் குறைவாக காபி குடிக்க முடியாது.ஹெலிபேட் வரை நடந்து வந்தால் ஒரு சிறிய பேக்கரி இருக்கிறது. சாதாரண டீ பத்து ரூபாய்க்குக் கிடைப்பதால் என்போன்ற பட்ஜெட் பார்ட்டிகளின் கூட்டம் குவிந்து கிடக்கிறது.
மலையிலிருந்து ஆங்காங்கு கடற்கரையில் இறங்கப் பாதைகள் உள்ளன. மாலை நேரத்தில் கடற்கரை அமர்க்களப்படுகிறது என்றால், இரவு 11:30 வரை ஏரியா மொத்தமும் திமிலோகப்படுகிறது.

உண்மையிலேயே ஒரு குட்டி கோவா போலத்தான் இருக்கிறது வர்க்கலா. பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் சேரர்களின் ஆளுகையிலிருந்த வேணாட்டின் தெற்கெல்லை இன்று தக்கலை எனவும், வடக்கெல்லை வர்க்கலா எனவும் மருவி வழங்கப்படுகிறது என்று தமிழ் ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாற்றுத் தகவல் வியப்பூட்டு்கிறது.
நமது காட்டேஜின் பால்கனியிலிருந்து பார்க்கும்போது இரவு நேரக் கடல் மெல்லிய நிலவொளியில் மனதை ஏதேதோ செய்கிறது. நெடுநேரம் கடலைப் பார்த்தவாறு மெய்மறந்து இருந்துவிட்டு, ஒரு வழியாகத் தூங்கச் சென்ற பிறகும் கடலலைகளின் இடைவிடாத குரல் நம்மைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறது.
ரொம்ப லேட்டாகத்தான் கண்விழிக்கிறது வர்க்கலா. காற்று ஒத்துழைத்தால் பாராகிளைடிங், பாரா செய்லிங் செய்வது இங்கு அலாதியானதொரு பொழுதுபோக்கு. வாட்டர் சர்ஃபிங், போட்டிங், ஸ்கூட்டர் ரைடிங் எனப் பல்வேறு ஆக்டிவிட்டீஸ் இங்கு கிடைக்கின்றன. அருகில் உள்ள ஒடயம் பீச், பிளாக் சாண்ட் பீச், இடவ பீச், காப்பில் பீச், பரவூர் பீச், பொழிக்கர பீச் ஆகியவற்றுக்கு ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் இடைவிடாமல் போய் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஐரோப்பியர் ஒருவர் ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் ஒருவரிடம் வந்து, ‘வண்டி இருக்கா’ என ஆங்கிலத்தில் கேட்க, நம்மாள், ‘‘நோ... ஃபுல் கோயிங்...!” என்று அடித்துவிட, அவரும் ‘‘ஃபுல் கோயிங்... ஓ..!” என்று நகர்ந்தார். இந்நாட்டு மொழியும் ஆங்கிலம் போலவே இருக்கிறது என வியந்திருப்பார்.
காலைக் கதிரவன் வெயிலைக் கஞ்சத்தனமில்லாமல் கொட்டத் தொடங்க, கும்பல் கும்பலாக ஃபாரின் டூரிஸ்ட்டுகள் சுள்ளென்ற வெயிலில் சுகமாகச் சூரியக் குளியல் எடுத்துக்கொண்டிருந்தனர். கொதிக்கின்ற மணலையும், காய்ச்சுகிற வெயிலையும் பொறுக்க முடியாமல் நாம் நிழல் தேடி ஓட, அவர்கள் இளநீரை ஸ்ட்ராவால் உறிஞ்சிக்கொண்டு கூடவே வெயிலையும் அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தனர்.
குளுமையைத் தேடிக் கோடைக்காலங்களில் நாம் ஊட்டிக்கு ஓடுவது போல, அவர்கள் வெயிலைத் தேடி இங்கு ஓடி வந்திருக்கின்றனர். இயற்கை அன்னை உண்மையிலேயே விந்தை மிகுந்த குறும்புக்காரிதான்.

இரண்டு நாள்களிலேயே நாவு இட்லிக்கு ஏங்கத் தொடங்கியிருந்தது. ‘இட்லி, தோசை அவைலபிள்’ என்ற ஓர் அரிய அறிவிப்புப் பலகை, நண்பர் சதாசிவம் கண்களில் பட்டதும், புயல் வேகத்தில் பாய்ந்து சென்று இடம் பிடித்துப் போர்க்கால அடிப்படையில் இட்லியும் உப்புமாவும் ஆர்டர் செய்தார். சாப்பிட்டு முடித்து அவர் பில் செலுத்துவதைப் பார்க்கும்போது ஏதோ குலசாமிக்குக் காணிக்கை செலுத்துவது போல அவரது பாடி லாங்குவேஜ் இருந்தது.
இங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அஞ்சுதெங்குக் கோட்டை, தங்கச்சேரிக் கோட்டை, அஸ்தமுடி ஹவுஸ் போட் லேக், மன்ரோத் தீவுகள், நெடுங்கோலம் சதுப்பு நிலக்காடுகள் போன்ற அட்டகாசமான லொகேஷன்கள் இருக்கின்றன.
காற்று ஒத்துழைக்காததால் அன்று பாராக்ளைடிங், பாரா செய்லிங் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனால் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வர்க்கலா க்ளிஃபின் வடமுனையில் இருக்கும் பிளாக் சேன்ட் பீச் வரை ஒரு ரைடு போய்விட்டு வந்தது ஜில்லென்ற அனுபவம்.
(இந்தக் கடைசி பாராவை ‘புலிகேசி’ வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
நல்ல வெயில் தாழும் நேரத்தில் வர்க்கலா பீச்சின் கடலலையைக் காலில் வாங்கியபடி, ஜில்லென்ற இளநீர் மில்க் ஷேக் ஒன்றை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது – என் இதயத்தில் உதயமானது இந்தச் சிந்தனை... ‘‘நாம் ஏன் கோவாவை ‘குட்டி வர்க்கலா’ என்று அழைக்கக் கூடாது!’’