Published:Updated:

`1000 ஆண்டு பழைமையான முருகன் சிலை; புத்தரின் எதிரிகள்!' -ஆச்சர்யம் கொடுத்த சாரநாத் பயணம் #MyVikatan

புத்தர்

நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த கௌதம புத்தர் கயாவில் உள்ள போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். அதன்பிறகு சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கி சீடர்களுக்கு போதனை செய்தார்.

`1000 ஆண்டு பழைமையான முருகன் சிலை; புத்தரின் எதிரிகள்!' -ஆச்சர்யம் கொடுத்த சாரநாத் பயணம் #MyVikatan

நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த கௌதம புத்தர் கயாவில் உள்ள போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். அதன்பிறகு சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கி சீடர்களுக்கு போதனை செய்தார்.

Published:Updated:
புத்தர்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று இரவு மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைகர் என்ற ஊரில் ஹோட்டல் காமதேனுவில் தங்கினோம். இந்தப் பயணத்தில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யவில்லை. மாலை 5 மணி வாக்கில் இன்னும் எவ்வளவு தூரத்துக்குச் சோர்வில்லாமல் செல்ல முடியும் என்று முடிவு செய்து, அந்த இடத்தில் ஏதேனும் தங்கும் விடுதிகள் இருக்கிறதா என்று கூகுளில் தேடி, தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்தோம். இரண்டு பேருக்கு அறை வாடகை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் விடியற்காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பேரம் பேசி நூறு, இருநூறு குறைக்க வைத்தோம்.

representational image
representational image

இந்தப் பயணத்திற்கு பிப்ரவரி இறுதியைத் தேர்வு செய்ததற்கு தட்பவெட்ப நிலை முக்கியக் காரணம். வட இந்தியாவில் கடும் குளிர் முடிந்து கொஞ்சம் மிதமான தட்பவெட்ப நிலை நிலவும் காலம் இது. வெயில் காலம் இன்னும் தொடங்கவில்லை. இந்தக் காலத்தில் மழையும் இருக்காது. நான் ஆண்டு முழுவதும் பச்சைத் தண்ணீரில் குளிப்பவன். இன்று வரை பச்சைத் தண்ணீரில் குளிக்க முடிந்தது! மைகரிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு சாரநாத்தை நோக்கிப் பயணித்தோம். இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு மலைக் கணவாய் வழியாக இறங்கி உத்தரப் பிரதேசத்தை அடைகிறோம்.

இதுவரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் சொகுசாக வந்த நாங்கள் ஒரு வழிச் சாலையில் பயணிக்க வேண்டி வந்தது. நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையின் இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய வரை மஞ்சள் கம்பளமாகக் கடுகு வயல்கள். இடையிடையே கொஞ்சம் கோதுமைக் கழனிகள் மற்றும் துவரைத் தோட்டங்கள். நிறைய மாமரங்களைக் காண முடிந்தன.

நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலங்களில் வீட்டில் விறகு அடுப்பு இருக்கும். பக்கத்தில் உள்ள காட்டிலிருந்து பெண்கள் மாலை நேரத்தில் விறகுச்சுமைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். நடுவிலே ஒரு நீண்ட விறகு இருக்கும். அதைச் சுற்றி சிறிய விறகுகளைக் கட்டி, சும்மாடு வைத்து தலையில் தூக்கி வருவார்கள். சுமை ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் என்று என் அம்மா விலை பேசியதாக ஞாபகம். 50 ஆண்டுகள் கழித்து விறகுச் சுமைகளை விற்கும் பெண்களை உத்தரப்பிரதேசத்தில் பார்த்தேன். சுவர்கள் முழுவதும் சாணி வறட்டி அடித்திருக்கிறார்கள். சாலையோரங்களில், குவியல் குவியலாக சாணி வறட்டிகள் இருக்கின்றன. இவை விற்பனைக்காக போலும்.

வரட்டி
வரட்டி

சாலைகளில் லாரிகளே அதிகம் போய்க் கொண்டிருந்தன. பேருந்துகள் மிக மிகக் குறைவு. கார்களும் மிகக் குறைவு. தருமபுரியிலிருந்து கோயம்புத்தூருக்கோ, சென்னைக்கோ, அல்லது பெங்களூருக்கோ செல்லும் போது பென்ஸ், வால்வோ, பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களைப் பார்க்க முடியும். மைகரிலிருந்து சாரநாத் வரையிலான 300 கிலோமீட்டர் பயணத்தின்போது இப்படிப்பட்ட விலையுயர்ந்த கார் ஒன்றைக்கூட காணவில்லை. பல பிரதமர்களைத் தந்த மாநிலம் அடிப்படைக் கட்டுமான வசதிகள் குறைவான, ஏழை மக்கள் அதிகம் வாழும் மாநிலமாகத் தென்பட்டது. புனித நகரமாகப் போற்றப்படும் வாரணாசி குறுகலான, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம். இவ்வளவு அதிகமாக மிதிவண்டிகளை இந்தியாவின் எந்த நகரத்திலும் நான் கண்டதில்லை.

சாரநாத், வாரணாசியின் வடகிழக்கில் இருக்கிறது. நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த கௌதம புத்தர் கயாவில் உள்ள போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். அதன்பிறகு சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கி சீடர்களுக்கு போதனை செய்தார். இங்கிருந்த இரண்டு தூபிகளில் தாமேக் தூபி மட்டுமே எஞ்சி இருக்கிறது. இந்தத் தூபி 43.1 மீட்டர் உயரம் 28 மீட்டர் அகலமும் கொண்டது. இது சுட்ட ஓடுகளால் கட்டப்பட்ட கட்டடம். இதனுள் அறைகள் கிடையாது. உள்ளே காலி இடம் கிடையாது. இந்தத் தூபிகளுக்குள் புத்தரை எரித்த சாம்பல் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மான் பூங்காவில் இதே போல இன்னொரு தூபியின் அடிப்பக்கம் மட்டும் இருக்கிறது.

ஜெகத் சிங் என்ற வாரணாசியை ஆண்ட மன்னன் 180 ஆண்டுகளுக்கு முன்பு அரண்மனை கட்டுவதற்காக அந்தத் தூபியை இடித்து விட்டான். அதன் மையப்பகுதியில் பச்சை நிறத்தில் ஒரு பெட்டியைக் கண்டான். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது பல ஓலைச் சுவடிகள் இருந்தன. மூட நம்பிக்கை காரணமாக அந்தப் பெட்டியையும் ஓலைச்சுவடியையும் கங்கையில் தூக்கிப் போட்டு விடுகிறான். சில ஓலைச்சுவடிகள் மட்டும் மீட்டெடுக்கப்பட்டு அவை இப்போது வெளிநாட்டில் இருக்கின்றன. தாமேக் தூபிக்குள்ளும் புத்தரின் போதனைகள் இருக்கலாம்.

புத்தர்
புத்தர்

தாமேக் தூபியில் இருந்த எட்டு புத்தர் சிலைகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. மான் பூங்காவின் முன்புறம் இருந்த தூண் இடிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தூணின் மேல் இருந்த நான்கு சிங்க முக சிலை அருகிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்திய அரசு முத்திரையாக இருக்கிறது. அதனோடு இருந்த 36 ஆரங்கள் கொண்ட சக்கரம் உடைந்து போய்விட்டது. அதன் பகுதிகளையும் அருங்காட்சியகத்தில் காணலாம். நம் தேசியக் கொடியின் நடுவில் 24 ஆரங்களோடு இருக்கும் சக்கரம் இதன் நகலாகும்.

அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலைகள் 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய அசோகர் காலத்திய கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன. ஆனால், இந்த அற்புதமான சிலைகளின் முகங்கள் மட்டும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மூக்கு மட்டும் உடைக்கப்பட்டிருக்கிறது. பௌத்த மதம் இந்தியாவில் மிக வேகமாகப் பரவிய நிலையில், அதனை அழிப்பதற்காக, புராதன இந்து மதவாதிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தாக்குதல் நடத்தினர். அப்போது புத்தர் சிலைகள் இந்தியா முழுவதும் உடைக்கப்பட்டன. தருமபுரி அருங்காட்சியத்தில்கூட இப்படிப்பட்ட தலை உடைக்கப்பட்ட புத்தர் சிலையைக் காணலாம். பல இடங்களில் புத்தர் சிலைகள் ஏரிகளின் நடுவில் தூக்கி வீசப்பட்டன.

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் அறிவியக்கத்தை நடத்திய பேரறிஞனின் அடையாளங்களை அழிக்க நடத்தப்பட்ட தாக்குதல்களின் சான்றுகளை மனச்சுமையோடு பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முருகன் சிலை மகிழ்ச்சியைத் தந்தது.

கார்த்திகேயன் என்ற பெயரிடப்பட்ட அந்தச் சிலையும் சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. மனிதர்களுக்குள் ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன. ஆனால் நிறுவனமாக்கப்பட்ட மத அமைப்புகள் வெறுப்பையும் வன்முறையையுமே நிகழ்த்தி இருக்கின்றன. லியோனார்டோ டாவின்சி வரைந்த (இயேசுவின்) 'கடைசி இரவு உணவு' (Last supper) சித்திரத்தில் இயேசுவின் சீடர்கள் சோகத்துடன் இருக்க, ஒருவன் மட்டும் கையில் கத்தியோடு, வன்மத்தோடு இயேசுவின் அருகில் இருக்கும் பெண் தோற்றம் உடைய ஒருவரை குத்த வருவது போல வரையப்பட்டிருக்கும். அதில் உள்ள மறைசெய்தி 'தி டாவின்சி கோட்' என்ற பெயரில் கதையாக வெளிவந்தது.

தாமேக் தூபி
தாமேக் தூபி

அருங்காட்சியகத்தின் அருகில் இலங்கை சிங்கள பௌத்தர்களால் கட்டப்பட்ட புத்தர் கோயில் இருக்கிறது. கோயிலின் உட்புறச் சுவரில் புத்தர் சாகும் தறுவாயில் இருப்பது சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்தச் சித்திரத்தில் அவரைச் சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை பேரும் சோகமே உருவாக அமர்ந்திருக்க, ஒருவன் மட்டும் குரோதத்தோடு பார்ப்பது போல வரையப்பட்டிருக்கும். அவனைப் பார்த்து ஒரு குழந்தை மிரள்வது போலவும் வரையப்பட்டிருக்கும். அது புத்தரின் எதிரிகளை அடையாளம் காட்டும் மறைசெய்தி.

சாரநாத்தைப் பார்த்த பிறகு இரவு தங்குவதற்காக மொகல்சராய் என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டோம்.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee