Published:Updated:

திருச்சி உலா - குடுமியான்மலை: நூற்றாண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படும் இசைக் கல்வெட்டுகள்! எப்படி?

குடுமியான் மலை

திருச்சி ஹேங்கவுட்: குகைக்கோயில், ஆயிரங்கால் மண்டபம், இசை கல்வெட்டு, சமணர் படுக்கைகள்... வியக்க வைக்கும் குடுமியான்மலை!

திருச்சி உலா - குடுமியான்மலை: நூற்றாண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படும் இசைக் கல்வெட்டுகள்! எப்படி?

திருச்சி ஹேங்கவுட்: குகைக்கோயில், ஆயிரங்கால் மண்டபம், இசை கல்வெட்டு, சமணர் படுக்கைகள்... வியக்க வைக்கும் குடுமியான்மலை!

Published:Updated:
குடுமியான் மலை

திருச்சியிலிருந்து 62 கி.மீ தொலைவிலிருக்கிறது குடுமியான்மலை. மலைக்குன்றைச் சுற்றிதான் ஊர் அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் உள்ள சிகாநாதசாமி கோயில் முழுவதுமே இருக்கும் தத்ரூபமான, நுண்ணிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் ஆச்சரியம் அளிப்பவை. குடைவரைக்கோயிலுடன், அதன் அருகே உள்ள கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு இந்தியாவிலேயே குடுமியான்மலையில் மட்டும்தான் இருக்கிறது. குன்றின் மேற்பகுதிக்குச் செல்லும் வழியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. குடுமியான்மலை முழுவதும் மொத்தமாக 120 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.

குடுமியான்மலை
குடுமியான்மலை

மலைக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதி, அதன் அருகில், குன்றின் மேல் பகுதி என மொத்தம் நான்கு கோயில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிகாநாதசாமி கோயிலின் ராஜ கோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.

இந்த மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதையடுத்து, வசந்த மண்டபத்திற்குள் நுழைந்ததும் சிற்பக் கூடம் ஒன்றிற்குள் நுழைந்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மன்மதன், ரதி சிற்பங்கள், உலகத்து அழகையெல்லாம் தன்வசப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர், பன்னிரு கைகளும் ஆறுமுகங்களும் கொண்ட சண்முகர், பத்துத் தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீது அமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு எனத் தத்ரூபமாக அமைந்துள்ள ஏராளமான சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இங்குள்ள சிவபெருமான் சிகாபுரீஸ்வரன் அல்லது குடுமி நாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கர்ப்பக் கிரகத்தில் லிங்க வடிவம் இருக்கிறது. பெயருக்கு ஏற்ப லிங்கத்திலும் குடுமி இருப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. நுழைவு மண்டபத்தைத் தாண்டி பிரகாரத்தில் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு சிற்பம் நம்மை வியக்க வைக்கிறது.

இங்குள்ள கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் நாயன்மார்களின் விக்கிரகங்கள் இல்லை. மாறாக சுற்றுப் பிராகாரத்தில் நின்று பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், அறுபத்து மூன்று நாயன்மார்களின் வடிவங்கள், ரிஷப வாகனத்தின் மேல் சிவன், பார்வதி வடிவம் மலையின் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள அற்புதத்தை நம்மால் காணமுடிகிறது.

குடுமியான்மலை கோயில்
குடுமியான்மலை கோயில்

பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் பிராகாரத்தில்தான் இந்த அறுபத்துமூவர் சிலைகளை காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம் நீண்டு காணப்படும். ஆனால் ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும் ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதியையும் தமிழகத்தில் இந்தக் கோயிலில் மட்டும்தான் காண முடிகிறது. இங்குள்ள முருகன் சன்னதிக்கு முன்பாக மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் விதமாகக் கட்டங்கள் போன்ற அமைப்பினை வடித்துள்ளனர்.

இங்குள்ள அம்பாள் தனி சன்னதியில் அகிலாண்டேஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார். கோயிலின் பின் பகுதியில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்குமுன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டவையாகும்.

மூலஸ்தானத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடை சதுர வடிவமாக இருக்கிறது. குகையின் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்தத் துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்குமே கிடையாது. இங்கு அவர்கள் தனிக்கற்களில் செதுக்கப்படாமல், குகையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளனர். குகையைக் குடைந்து உருவாக்கப்பட்ட வலம்புரி விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இதன் நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது.

குகைக் கோயிலின் தென் பகுதியில்தான், கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த கல்வெட்டு இருக்கிறது. இசையைப் பற்றியும் அதன் அடிப்படை ராகங்களைப் பற்றியும், ஏழு ராகங்களுக்கு உரிய விதிகளைப் பற்றியும் பாலி கிரந்த எழுத்தில் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

குடுமியான்மலை மண்டபம்
குடுமியான்மலை மண்டபம்

இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது. இந்த இசைக் குறிப்புகளை வைத்தே அந்தக் காலத்தில் சங்கீதம் பயில்பவர்கள் ராகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். கல்வெட்டு உள்ள பகுதிக்கு கற்களாலே பந்தல் அமைத்திருக்கின்றனர். கி.பி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாத்திரம் என்னும் நூலுக்கும், சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும்.

இங்கே நாட்டியம் சம்மந்தமான விஷயங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மிக தெளிவாகவும் இடைவெளிவிட்டும் ஏற்ற இறக்கம் இல்லாமல், இசைக் குறியீடுகளுடன் உள்ள இக்கல்வெட்டு மிகவும் சிறப்பானதாகும். இக்கல்வெட்டில் உள்ள இசை அமைப்புகள் அநேகமாக பரிவாதினி எனும் யாழில் மீட்டக்கூடிய வண்ணம் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இசைக் கல்வெட்டு பகுதி மட்டும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. அதற்குக் காரணம், இயற்கையை வெல்ல யாராலும் முடியாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அந்தப் பகுதியை அருகில் சென்று காண முடியாத அளவிற்கு, ஒரே இடத்தில் பத்து பதினைந்து தேன்கூடுகள் என்று இயற்கை அமைத்த அரண். இந்தக் காட்சியினைக் காணும்போதே மெய் சிலிர்க்கிறது.

சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி 9-10ம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது.கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றுள்ளன.

குடுமியான்மலை நந்தி
குடுமியான்மலை நந்தி

இக்கல்வெட்டின் பெருமையைக் கேள்விப்பட்டு வெளிநாட்டு இசை மேதைகள் பலரும் இங்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து வருகின்றனர். மலை உச்சியில் முருகன் கோயில், விநாயகர் கோயில் இருக்கிறது. முருகன் கோயிலுக்குச் செல்ல மலைப் பாதையில் மெல்ல ஏறி, சிறிது தூரம் நடந்து சென்றால், பாறையில் செதுக்கப்பட்ட படிகள் வருகின்றன. அதில் ஏறி மேலே சென்றால், முருகப்பெருமானை தரிசிக்கலாம். அங்கு ஆங்காங்கே சுனைகள் ஏராளமாகத் தென்படுகின்றன. அங்கிருந்து பார்த்தால், குன்றைச் சுற்றி கிராமம் இருப்பது தெரிவரும். கிராமத்தை நாம் ஏரியல் வியூவில் கண்டு ரசிக்கலாம். முன்னதாக மலைப் பகுதியின் முகப்புப் பகுதியிலேயே சமணர் படுக்கைகள் தென்படுகின்றன. அங்கும் நாம் கல்வெட்டுகளைக் காண முடிகிறது.

குடைவரைக் கோயில், இசைக் கல்வெட்டுகள் உட்பட குடுமியான்மலையைச் சுற்றி ஏராளமான கல்வெட்டுகளை நாம் பார்க்கலாம். இங்கு பாறைகளிலே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. வரலாற்று ஆச்சரியங்களைத் தேடிப் பயணிப்பவர்களுக்கு நிச்சயமாக குடுமியான்மலை தீனி போடும். கொரோனாவிற்குப் பிறகு இங்கு வரும் பொதுமக்களின் கூட்டம் குறைந்திருக்கிறது. பெரும்பாலும், மதிய நேரத்தில் மலை உச்சிக்கு ஏறுவதைத் தவிர்க்கலாம்.

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது குடுமியான்மலை. புதுக்கோட்டையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. இதேபோல், திருச்சியிலிருந்து 62 கி.மீ தொலைவிலிருக்கிறது. திருச்சியிலிருந்து விராலிமலை வந்து அங்கிருந்து குடுமியான்மலையை அடையலாம். பெரும்பாலும், சொந்த வாகனம் வைத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் தங்களது வாகனங்களில் வந்து பார்த்துச் செல்வது நலம்.