Published:Updated:

குரங்கணி டிரெக்கிங்... இனி தடையில்லை - அனுமதி பெறுவது ஈஸி!

தேனி மாவட்ட மலைகளில் டிரெக்கிங் செல்ல வேண்டுமென்றால், மாவட்ட வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குரங்கணி மலை
குரங்கணி மலை

கடந்த வருடம் மார்ச் மாதம், தேனி மாவட்டம் குரங்கணி மலையில் டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அச்சம்பவத்தைத் தொடர்ந்து மலைகளில் டிரெக்கிங் செல்வதை முறைப்படுத்த முயன்றது தமிழக வனத்துறை.

Kurangani Hill
Kurangani Hill
Vikatan

குறிப்பாக, தேனி மாவட்ட மலைகளில் டிரெக்கிங் செல்ல வேண்டுமென்றால், வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொழுக்குமலை வேறு குரங்கணி மலை வேறு!

காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் சென்ற பாதையானது குரங்கணி முதல் கொழுக்குமலை செல்லும் மலைப்பாதை. கொழுக்குமலை சுமார் ‎2,160 மீட்டர் உயரம் (7,090 அடி) கொண்டது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் எந்தவித ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல், இயற்கை முறையில் தேயிலை விளைவிக்கப்படுகிறது. மேலும், உலகில் அதிக உயரத்தில் தேயிலை விளையும் ஒரே இடம், கொழுக்குமலை என்ற பெருமை கொண்டது.

Kurangani Trekking Way
Kurangani Trekking Way

இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட கொழுக்குமலைக்கு, கேரள மாநிலம் மூணாறு, சூரியநெல்லி வழியாக ஜீப் பாதை உண்டு. ஆனால், தேனி மாவட்டத்தின் குரங்கணி வழியாக செல்லும் ஒற்றையடி மலைப்பாதையை பலரும் விரும்புவர். அப்படி விரும்பிச் சென்ற குழு ஒன்றுதான் காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டது. அச்சம்பவத்துக்குப் பிறகு குரங்கணி முதல் கொழுக்குமலை பாதையை நிரந்தரமாக மூடிவிட்டது வனத்துறை.

குரங்கணி டு டாப் ஸ்டேஷன்:

அங்கீகரிக்கப்பட்ட பாதை என்று பார்த்தால், குரங்கணி முதல் கொழுக்குமலை பாதையை குறிப்பிட முடியாது. ஏனென்றால், அப்பாதையானது, கொழுக்குமலையில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு, போடி, கொட்டக்குடி, குரங்கணி பகுதிகளிலிருந்து மக்கள் செல்ல பயன்படுத்தப்படும் ஒற்றையடிப் பாதை. அதில் வேறு நபர்கள் செல்ல எப்போதும் அனுமதி கிடையாது. சட்டவிரோதமாக சிலர் டிரெக்கிங் செல்ல பயன்படுத்தினர். அப்போதுதான் அந்த விபரீத சம்பவம் நடந்தது.

Forest Dept Caution
Forest Dept Caution

அப்படி என்றால், வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான டிரெக்கிங் பாதை எது எனக் கேட்கிறீர்களா? இருக்கிறதே… குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான டிரெக்கிங் பாதைதான் அது.

குரங்கணியிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வழியாக டாப் ஸ்டேஷன் வரையிலான மலைப்பாதையில் செல்ல மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதிக் கடிதம் வாங்க வேண்டும். கூடவே, ஒருவருக்கு தலா 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கேமரா கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தனிக்கட்டணம்.

Kurangani to TopStation root
Kurangani to TopStation root

சென்ட்ரல் ஸ்டேஷனில் தங்குவதற்கு எந்த வசதிகளும் இல்லை. ஆனால், டாப் ஸ்டேஷன் சென்றால், அங்கிருந்து கேரளாவின் வட்டவடை, மூணாறு, சூரியநெல்லி ஆகிய பகுதிகளில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஹோட்டல்கள் உள்ளன.

குரங்கணி தீவிபத்துச் சம்பவத்தை அடுத்து, குரங்கணி டு டாப் ஸ்டேஷன் டிரெக்கிங் பாதையையும் மூடியிருந்தது வனத்துறை. சமீபத்தில்தான் இப்பாதை திறக்கப்பட்டது.

Kurangani Hill
Kurangani Hill

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "குரங்கணி காட்டுத்தீ விபத்து சம்பவம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அனைவரையும் வருத்தப்பட வைத்த சம்பவம் அது. அப்பாதையும் பாதுகாப்பில்லாத பாதை. ஆனால், குரங்கணி டு டாப் ஸ்டேஷன் பாதையானது பாதுகாப்பான பாதை என்பது ஒருபுறம் என்றாலும், ஏதாவது ஒரு மருத்துவ அவசரம் என்றால் கூட, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை மீட்க முடியும்.

தற்போது குரங்கணி டு டாப் ஸ்டேஷன் பாதையில் நிறைய பேர் டிரெக்கிங் செல்கிறார்கள். வழியெங்கும் அழகான மேற்குத்தொடர்ச்சிமலையைக் காணலாம். பல வியூ பாயின்ட்கள் உள்ளன. அருமையான, ரம்மியமான அனுபவமாக இருக்கும்.

Vikatan

டிரெக்கிங் செல்ல, மாவட்ட வனத்துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். இணையத்தில் போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி உள்ளது. அவற்றில் தொடர்புகொண்டு அனுமதிக் கடிதம் பெற்றால் போதும். அனுமதி இல்லாமல் டிரெக்கிங் சென்றால், வழி எங்கிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவிலிருந்து தப்ப முடியாது. கட்டுப்பாடுகள் மக்களின் பாதுகாப்புக்காகதான்!” என்றார்.

என்ன… குரங்கணி கிளம்பீட்டிங்க போல… அதுக்கு முன்னால, அனுமதி வாங்கிட்டுக் கிளம்புங்க!