Published:Updated:

கோடந்தூர் காட்டுக்கு தார்களில் தாறுமாறு டிரைவ்!

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்
பிரீமியம் ஸ்டோரி
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மஹிந்திரா தார் டீசல்

கோடந்தூர் காட்டுக்கு தார்களில் தாறுமாறு டிரைவ்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மஹிந்திரா தார் டீசல்

Published:Updated:
 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்
பிரீமியம் ஸ்டோரி
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்

பெயர்: விக்னேஷ், மனோஜ்

ஊர்: உடுமலைப்பேட்டை

வாகனங்கள் : மஹிந்திரா தார் டீசல் (ஆட்டோமேட்டிக் / மேனுவல்)

தூரம் : சுமார் 250 கிமீ

இடம் : கோடந்தூர் (மூணார் போகும் வழியில் வலதுபுறம்)

அனுமதி: வனத்துறையினர் அனுமதி தேவை

அட்ராக்ஷன் : ஆஃப்ரோடு, காட்டுக்குள்ளே இருக்கும் அம்மன் கோவில், வனத்துக்குள் தங்கும் ஆப்ஷன், அருவிக் குளியல்

கோடந்தூர் காட்டுக்கு தார்களில் தாறுமாறு டிரைவ்!

போகும் இடமெல்லாம் பாதை இருக்கும் என்று சொல்ல முடியாது; பாதை இருக்கும் இடத்தில் எல்லாம் கார்கள் போக முடியுமா தெரியாது; ஆனால், பாதையே இல்லாத இடத்திலும் ஒரு வாகனத்தில் போவது போதை ஏற்றும் என்றால், அது ஜீப். இதைத்தான் ரோட்டுக்கு அப்பாற்பட்ட ஆஃப்ரோடு என்கிறோம். ‘‘ஹலோ… எங்ககிட்டயே ஆஃப்ரோடுக்கு அப்ரிவியேஷனா!’’ என்றார்கள் கோரஸாக விக்னேஷும், மனோஜும். ‘‘நாங்க மஹிந்திரா தார் வாங்கினதே ஆஃப்ரோடுக்காகத்தான் சார்! நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அதனால்தான் ஒரே காரை, ஒரே நேரத்தில் புக் செஞ்சு, கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் டெலிவரி எடுத்தோம். ஓடோ மீட்டரை செக் செய்தால்… அட, அதுவும் கிட்டத்தட்ட சில ஆயிரம் கிமீ–க்கள்தான் வித்தியாசம் இருந்தது.

‘‘கோயம்புத்தூர்காரங்களுக்கு வீக் எண்டுக்கு ஊட்டி… மதுரைன்னா கொடைக்கானல்… உடுமலைப்பேட்டைக்காரங்களுக்கு மூணாறு…அப்படித்தானே நினைப்பீங்க… ஆனா உங்களை ஒரு அற்புதமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போறோம்!’’ என்றார்கள்.

அது மூணாறு போகும் வழியில், முதலாவதாக வரும் ஒரு செக்போஸ்ட்டில் வலதுபுறம் ஓர் இடத்தில் திரும்பினால் வரும், கோடந்தூர் எனும் காடு. உடுமலையில் காலை டிபனை முடித்துவிட்டு, சென்னையில் இருந்தே புகைப்பட நிபுணரையும் உடன் அழைத்துக் கொண்டு தாரில் ஒரு தாறுமாறான டிரைவுக்கு ஆயத்தமானோம்.

உடுமலைப்பேட்டைக்காரர்கள் என்றாலே வால்பாறை, மூணார் போகும் வழியில் செக்போஸ்ட்டில் நம்பரை வைத்தே கண்டுபிடித்து விடுகிறார்கள். பயணமும் ஈஸியாக முடிகிறது. செக்போஸ்ட்டிலேயே இதைக் கண்டுகொள்ள முடிந்தது.

இரண்டு தார்கள். காடுகளுக்குள் புகுந்து புறப்படுவதற்கு ஏதுவாகவே அளவெடுத்ததுபோல் இருந்ததுபோல் இருக்கிறது தாரின் டிசைன். ‘‘வேலுசாமி சாரோட இன்டர்வியூ மோ.வி யூட்யூப்பில் பார்த்தேன். செமையா டிசைன் பண்ணியிருக்காரு!’’ என்றார் விக்னேஷ்.

கோடந்தூர் காட்டுக்கு தார்களில் தாறுமாறு டிரைவ்!
வாட்ச் டவரில் ஏறி மொத்த அழகையும் பார்க்கலாம்.
வாட்ச் டவரில் ஏறி மொத்த அழகையும் பார்க்கலாம்.

காடுகள் மட்டும் என்றில்லை; சாஃப்ட்ரோடிலும் செடான் கார்களுக்கு இணையாகக் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தன இரண்டு தார்களும். மனோஜின் தார் – மேனுவல்; விக்னேஷின் தார் – ஆட்டோமேட்டிக். 130bhp பவரில் சாலை போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘ஆனா நான் 110 கிமீ–க்கு மேல போனதில்லை சார். இவன்தான் பறப்பான்!’’ என்றார் விக்னேஷ். இரண்டையும் மாற்றி மாற்றி ஓட்டிப் பறப்பது உண்மையிலேயே ஜாலியாகவே இருந்தது.

உடுமலையில் இருந்து மூணாறு போகும் வழியில் வந்தது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் முதல் செக்போஸ்ட். இங்கு முறையான அனுமதி இருந்தால்தான் கோடந்தூருக்குப் போக முடியும். மற்றபடி மூணாருக்குப் போக வேண்டும் என்றால்… வழக்கமான ஃபார்மாலிட்டீஸ் போதும்.

அடுத்த செக்போஸ்ட்டில் பணியாரம், போண்டா விற்றுக்கொண்டிருந்த பாட்டிகளிடம் உள்ளூர் ஸ்நாக்ஸை விழுங்கிவிட்டு ஒரு போட்டோ ஷூட். காட்டுக்குள் போன தாரைப் பார்த்துப் பலர், ‘‘சார், ஃபாரஸ்ட் டிப்பார்ட்மென்ட்டா!’’ என்றெல்லாம் கேட்டுவிட்டார்கள்.

செக்போஸ்ட் தாண்டியதுமே வலதுபுறம் ஒரு சாலை பிரிகிறது. அனுமதிச் சீட்டைக் காட்டினால்தான் உள்ளே விடுகிறார்கள். சாலையே பார்ப்பதற்கு செம மிரட்டலாக இருந்தது. நம்மைவிட நம் தார்கள் உற்சாகமாக உறுமியதுபோல் இருந்தது.

எரவிக்குளம் நேஷனல் பார்க்... 
தற்காலிகமாகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
எரவிக்குளம் நேஷனல் பார்க்... தற்காலிகமாகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
கோடந்தூர் காட்டுக்கு தார்களில் தாறுமாறு டிரைவ்!

போகும் வழியில், ‘‘இந்தா இருக்கு பாருங்க… இந்த காட்டேஜ்லதான் தங்குறதுக்கு அனுமதி கேட்டேன்! கிடைக்கலை!’’ என்று வருத்தப்பட்டார் விக்னேஷ். இங்குள்ள காட்டேஜில் ஒரு ஸ்பெஷல் – முழுக்க முழுக்க சோலார் சிஸ்டத்தில்தான் உள்ளே மின்சாரம் எடுக்கிறார்கள். நாம் போனபோது சோலாரில் கோளாறு என்பதால்தான் அனுமதி கிடைக்கவில்லை என்றார்கள்.

கோடந்தூரில் கட்டளை மாரியம்மன் என்றொரு அம்மன் கோவில்தான் மிகப் பிரசித்தம். வியாழக் கிழமை மற்றும் சில குறிப்பிட்ட அமாவாசை நாட்களில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களுக்கு, இங்குள்ள லோக்கல் மக்களுக்கு மட்டும் இங்கே அனுமதி தருகிறார்கள். இது டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது என்பதால், பயங்கரப் பாதுகாப்பாக இந்த வனத்தைப் பாதுகாக் கிறார்கள். அனுமதிக்கும் லோக்கல்வாசி களின் தயவு இருந்தால் சாத்தியம்.

அந்த காட்டேஜில் தங்கத்தான் முடியவில்லை; சும்மா ஆசையாகச் சுற்றிப் பார்த்தோம். பகலிலேயே வனவிலங்குகள் வரும் என்றார்கள். காட்டேஜுக்குப் பக்கத்திலேயே சின்னதாகவும் இல்லாமல், பெரிதாகவும் இல்லாமல் ஓர் ஓடை! பகலிலேயே ஆள் நடமாட்டம் இல்லாமல் த்ரில்லிங்காக இருந்தது. இரவு இங்கே தங்கினால் எத்தனை அமானுஷ்யமாகவும், வனவிலங்குகளின் சத்தத்தினூடே த்ரில்லிங்காகவும் இரவு கழிந்திருக்கும் என்று ஏக்கமாகப் பேசிக் கொள்ள மட்டும் செய்ய முடிந்தது.

‘செம த்ரில்லிங்கா இருக்குல்ல’ என்று சொல்லி முடிப்பதற்குள், அது நடந்தது. திடீரென நம் புகைப்பட நிபுணர், ‘‘அண்ணே…’’ என்று சினிமா பாணியில் கதறினார். ஒரு பெரிய பாம்புச் சட்டை. முகத்திலிருந்து கண்கள்… உடம்பு வரை எல்லாமே பக்காவான ரெடிமேட் பாம்பு ஷர்ட் அது. சட்டையே கிட்டத்தட்ட 10 அடிக்கு மேல் கட்டுமஸ்த்தாக இருந்தது. அப்படியென்றால், அந்தப் பாம்பின் ஒரிஜினல் வெர்ஷன் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே இன்னும் கிலியாக இருந்தது. நல்ல பாம்பாகவோ… நாகப் பாம்பாகவோ இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டோம். ‘‘இரண்டு பாம்பு அண்ணம் இங்கதான் குடியிருக்கும்!’’ என்று கூலாகச் சொன்னார் லோக்கல்வாசி.

நிச்சயம் தார் போன்ற ஜீப்களைத் தவிர வேறெதுவும் இங்கே சில அடிகள் கூட நகராது என்றே தெரியாது. கோடந்தூர் போன்ற காட்டுக்காகவே தாரைச் செய்திருக்கிறார்களா…. தார் போன்ற ஜீப்கள் வருவதற்காக கோடந்தூர் போன்ற காடுகள் இருக்கின்றனவா என்று மறுபடியும் மொக்கையாகச் சண்டை போட்டோம்.

நல்லபாம்புச் சட்டையா.. சாரைப்பாம்புச் சட்டையா...?
நல்லபாம்புச் சட்டையா.. சாரைப்பாம்புச் சட்டையா...?

கட்டளை அம்மன் கோயில் பிசியாக இல்லை. சில பக்தர்கள் மட்டும் இருந்தார்கள். உள்ளூர்வாசிகளாக இருக்க வேண்டும். கோயிலைத் தாண்டி வலப்புறம் திரும்பின தார்கள். போகப் போக காடு வெட்டவெளியாக இருந்தது. இந்த ஓப்பன் காட்டில் ஓப்பன் ஜீப்பில் வந்தால் செமையாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், நாம் வந்தவை ஹார்டு டாப் தார்கள். உள்ளுக்குள் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கே தைரியம் வேண்டும் போல! அந்தளவு காடு அமைதியாகச் சத்தம் போட்டது.

பயணமாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் – பாதை முக்கியம் என்பது புலப்பட்ட தருணம். திடீரென எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு தார் ஜீப்பைக் காணவில்லை. நட்ட நடுக்காட்டுக்குள் என்னுடைய ஆட்டோமேட்டிக் தார் மட்டும் டீசல் இன்ஜினில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. மேனுவல் தாரைக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. ‘‘அண்ணே… ரூட் மாறிட்டீங்க… ஃபால்ஸுக்கு இங்கிட்டு வாங்க!’’ என்றார் நம்முடன் வந்த லோக்கல்வாசி அண்ணன். அட, பாதை மாறியது நாம்தான்.

மறுபடியும் கட்டளை அம்மன் தரிசனம். இந்த முறை இடதுபுறம் கீழிறங்கினோம். கோடந்தூர் காட்டின் மொத்த அழகையும் பார்க்க, இங்கே கோடநாடு போல ஒரு வாட்ச் டவர் வைத்திருந்தார்கள். அந்த வாட்ச் டவருக்குப் படுக்கைவசத்தில் ஏறும் ஒரு ஏணி. அதில் ஒரு கதவு இருந்தது. ‘என்னடா இது… ஏணிக்குக் கதவா’ என்று நக்கல் செய்தோம். ஆனால், அதில் ஒரு சிவில் அறிவியல் உண்டு. ஆம்! சிறுத்தை, கரடி போன்ற காட்டு விலங்குகள் ஏணியில் ஏறும்போது, அவற்றைத் தடுக்கத்தான் இந்தக் கதவு என்று சொன்ன பிறகுதான், ‘அட’ என்று பாராட்டினோம்.

வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால்… நம்மைச் சுற்றி ஓடைகள்.. கிளை அருவிகள்… நமக்கு நடுவில் காடு வசமாக மாட்டிக் கொண்டதுபோல் இருந்தது. கொஞ்சம் மாலை நேரமாக இருந்தால்… யானைகளோ சிறுத்தைகளோ உலவுவதை நிச்சயம் பார்த்திருக்கலாம்.

‘அதோ, அங்க வேணாம். இந்த ஓடையில குளிக்கலாம்; இங்கதான் ஆழம் அதிகம் இல்லை’ என்றார் கோடந்தூர் அண்ணன். நினைக்கும்போதே ஜிவ்வென்று இருந்தது. கீழே இறங்கி – வாட்ச் டவருக்குக் கொஞ்சம் தள்ளி தார்களை பார்க் செய்துவிட்டு, அருவி நோக்கிய பயணம். தூரத்திலேயே ஓடைச் சலசலப்புச் சத்தம் மனசை அள்ளியது.

இங்கே நீச்சல் தெரியாதவர்கள் இறங்குவது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய செயல். அருவி என்றதும், அதிரப்பள்ளி, குற்றாலம் மெயின் அருவிபோல் கற்பனை செய்தால் கம்பெனி பொறுப்பில்லை. ஆனால், செம ரம்மியமாக, சிக்கென விழுந்து கொண்டிருந்தது அருவி. கீழே பெரிய அகழி மாதிரி கெட்டிக் கிடந்தது. அதில்தான் குளியல். யாருமே இல்லாமல் எங்களுக்காகவே விழுந்து கொண்டிருந்ததுபோல் இருந்தது கோடந்தூர் அருவி.

நீர் பச்சையாக இருந்ததைப் பார்த்து, ‘தண்ணி கெட்டுப் போச்சோ’ என்று சந்தேகப்பட்டேன். ‘‘அட, மூலிகைத் தண்ணிங்க… செம டேஸ்ட்டா இருக்கும். எங்கூருக்குக் குடிதண்ணியே இதான்’’ என்றார் நமது கைடு அண்ணன். அந்த அருவிக்கு மேலே ‘தத்தக்கா பித்தக்கா’ என்று செருப்புப் போடாமல் ஏறினால்… இன்னொரு உலகம் விரிந்தது. குட்டிக் குட்டி அருவிகளில், பேட்டரி காலியாகும் வரை ஈர உடம்போடு போட்டோ ஷூட் போட்டோம்.

குட்டி ஓடைகளில் மல்லாக்கப் படுத்து வானத்தைப் பார்ப்பதில் என்னா ஒரு ஆனந்தம்! நிஜமாகவே ஒரு ஜென் நிலைதான்!

‘அனிமல்ஸ் ஏரியா’ என்று எச்சரிந்திருந்தாலும்… ‘இங்கெல்லாம் எப்படி யானை ஏறி வரும்’ என்ற எங்கள் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்தக் காட்சி. காட்டு யானைகளின் ஃப்ரெஷ்ஷான சாணங்கள். ‘‘சாயங்காலம் ஆனா வந்துரும்ங்க… அதுவும் மிட் நைட்லாம் யானைங்க இங்கதான் குடியிருக்கும்ங்க! சிறுத்தை, கரடி எப்பவாச்சும் வருவாங்க!’’ என்று ‘டர்’ கூட்டினார் கோடந்தூர் அண்ணன்.

சில ஹாலிவுட் படங்களில் ஹீரோவோ, ஹீரோயினோ – காட்டில் மாட்டிக் கொண்டு கிடைத்ததைச் சாப்பிட்டு சர்வைவ் செய்வார்களே.. அதுபோன்றதொரு சிச்சுவேஷன் சீன்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், இங்கே கிடைத்ததைச் சாப்பிடவில்லை. மெனக்கெட்டு மெஸ் சாப்பாடை வரவழைத்திருந்தனர் விக்னேஷும் மனோஜும்.

பட்டப் பகலில், நட்ட நடுக் காட்டில்… மொட்டை வெயிலில் ஈர உடலோடு சிக்கன் சாப்பாட்டை ருசித்தது உண்மயைிலேயே செமத்தியான லஞ்ச்.

காடுகளைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் என்பதால்… மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டனர் மனோஜும் விக்னேஷும். ‘சார், பிளாஸ்டிக்லாம் யூஸ் பண்ண வேண்டாம்; காலி தண்ணி பாட்டிலைத் திரும்ப எடுத்துட்டுப் போயிடலாம்’ என்று காட்டைக் குப்பைத் தொட்டியாக்காமல் பொறுப்போடு நடக்க அறிவுரை செய்தார்கள்.

மறுபடியும் தார்களில் ரிட்டர்ன். ‘மூணாறு ரோடு வரைக்கும் வந்துட்டு தங்காமப் போனா எப்படி’ என்று மறையூர், காந்தலூர் வழியாக மூணாறுக்கு தார்களை விரட்டினோம். மறையூர் போய்த்தான் போக வேண்டும்.

மறையூர் போகும் வழியெங்கும் அருவிகளின் தலையீடுதான் அதிகமாக இருக்கும். சந்தன மரங்கள், நாட்டுச் சர்க்கரை வாசம், அருவிச் சத்தங்களினூடே – மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கேரளா மலைச் சாலையில் தார்களில் போவது செமையாக இருந்தது.

மூணாறில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருந்தாலும், அங்குள்ள ஹெரிடேஜ் கிளப் ஒன்றை முன்கூட்டியே புக் செய்திருந்தோம். 1930–களில் இருந்து வெள்ளைக்காரர்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கிளப்பில், பிரிட்டிஷ் ஸ்டைலில் தங்கியது ஒரு புது அனுபவம்.

மறுநாள் காலை, வரும் வழியில் எரவிக்குளம் நேஷனல் பார்க், சின்னார் வனச்சரகம் வந்தன. வரையாடுகளின் இனப்பெருக்கத்துக்காக சுற்றுலாவை கேன்சல் செய்திருந்தது கேரள வனத்துறை.

மீண்டும் மறையூர் வழியாக கோடந்தூர் ரிட்டர்ன். போதையேற்றும் அந்தக் காட்டுப் பாதை, ஏக்கத்தை ஏற்படுத்திய அந்த சோலார் காட்டேஜ், சிம்பொனி மீட்டிய அருவிக் குளியல், யானைச் சாணம் – தாரோடு சேர்ந்து தாறுமாறாக ஓடியது எங்கள் மனம்!

பார்க்க வேண்டிய இடங்கள்:

(மறையூரில் இருந்து)

தூவானம் அருவி (5 கி.மீ)

தூரத்திலேயே தெரியும் தூவானம் அருவிக்குப் பக்கத்தில் போக, கைடுகள் உதவியுடன் ட்ரெக்கிங் வசதி உண்டு. செல்லும் வழியில் விலங்குகள் பார்க்கலாம்.

மூணார் (39 கி.மீ)

அருமையான மலைப் பிரதேசம். போட்டிங், ட்ரெக்கிங், ஜில் க்ளைமேட் என எல்லாவற் றையும் அனுபவிக்கலாம்.

சின்னார் வனச்சரகம் (9 கி.மீ)

கேரள அரசாங்கமே சின்னார் வனச்சரகத்தில் ட்ரெக்கிங் வசதி செய்து தருகிறது. காட்டுக்குள் ஜீப் ட்ரெக்கிங் மூலம் எல்லா விலங்குகளையும் பார்க்கலாம்.

சந்தனக்காடு (2 கி.மீ)

கிட்டத்தட்ட 65,000 சந்தனமரங்கள் இருக்கும் ஏரியா. சந்தன வாசத்தோடு திரும்பி வரலாம்.

டால்மென் முனியரா (5 கி.மீ)

ராமர், சீதா வாழ்ந்த இடம் என்கிறார்கள். கற்கால கல்வீடுகள், கற்குகைகள் பார்க்கலாம்.

காந்தலூர் (14 கி.மீ)

இங்கேதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்த் தோட்டம் உண்டு. காந்தலூரில் ஜீப் ட்ரெக்கிங் வசதியும் உண்டு. ஏகப்பட்ட வியூ பாயின்ட்கள் மூலம் கேரளாவின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

ராஜமலை (22 கி.மீ)

வரையாடுகள் வதவதவெனத் திரியும் இந்த இடம், ட்ரெக்கிங் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏகப்பட்ட டீ எஸ்டேட்களும், வியூ பாயின்ட்களும் உண்டு.

எரவிக்குளம் நேஷனல் பார்க் (36 கி.மீ)

காட்டுக்குள் சஃபாரி போகலாம். இங்கு வரையாடுகளோடு ஏகப்பட்ட விலங்குகளையும் பார்க்கலாம்.

கோடந்தூருக்குப் போறீங்களா… இதைக் கவனிங்க!

உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் போகும் வழியில், இரண்டாவது செக்போஸ்ட்டில் இருந்து வலதுபுறம் திரும்பினால், கோடந்தூர் காடு வருகிறது. இது ஒரு சுற்றுலாத்தலம் இல்லை என்பதை மனதில் கொள்க. காட்டுக்குள்ளே இருக்கும் கட்டளை அம்மன் கோவில்தான் இங்கே மெயின் அட்ராக்ஷன். அம்மன் கோவில் லோக்கல் பக்தர்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி! மேலும், பக்தர்கள் அருவியில் குளிக்கவும் அனுமதி வாங்க வேண்டும். இங்குள்ள ஒரே ஒரு சோலார் ரெஸார்ட்டில், அரசாங்க அனுமதியோடு வேண்டுமானால் தங்க முயற்சிக்கலாம். யானை, சிறுத்தை, பாம்பு, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் மாலையானால் இங்கே அதிகமாக இருக்கும். வாட்ச் டவரில் ஏறினால், காட்டின் மொத்த வியூவும் கிடைக்கும். நீச்சல் பார்ட்டிகள் மட்டும் அருவியில் இறங்கலாம். அதற்கும் வனத்துறையினர் அனுமதி தேவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism