Published:Updated:

மலைக் கொய்யா... காந்தாரி மிளகாய்... மூலிகை அருவி! கொல்லிமலை ஸ்பெஷல்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் | சென்னை – கொல்லிமலை, மாருதி எர்டிகா சிஎன்ஜி & பெட்ரோல்

பிரீமியம் ஸ்டோரி
கொல்லிமலை
கொல்லிமலை

வாசகர்கள்: நிஷாந்த் – காயத்ரி

ஊர்: சென்னை

இடம்: கொல்லிமலை

வாகனம்: மாருதி எர்டிகா சிஎன்ஜி & பெட்ரோல்

தூரம்: 1,350 கிமீ

சிஎன்ஜி செலவு : 11 கிலோ – சுமார் 720 ரூபாய்

பெட்ரோல் செலவு: சுமார் 6,000 ரூபாய்

இந்த மாத கிரேட் எஸ்கேப்புக்கு வசமாகச் சிக்கியிருந்தது மாருதியின் எர்டிகா. இந்த முறை ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதாவது, கார் மாருதியினுடையது; வாசகர்கள் மோ.வி-யினுடையது! ‘`இந்த கிரேட் எஸ்கேப்புக்கு நாங்களும் வருவோம்’’ என்று அடம்பிடித்தனர் வாசகர்கள் நிஷாந்த் – காயத்ரி தம்பதியினர்.

‘‘இந்த எர்டிகா கார்ல நாங்கதான் வருவோம்னு சொல்றதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு!’’ என்று பீடிகை போட்டார் நிஷாந்த். காரணம், இது மாருதியின் முதல் சிஎன்ஜி (Compressed Natural Gas) கார். ‘‘என்னோட கிச்சன்ல நான் பயோ கேஸ் பயன்படுத்தலாம்னு இருக்கேன். இந்த சிஎன்ஜி எப்படித்தான் இருக்குனு பார்த்துடலாமே.. நாங்களும் வருவோம்!’’ என்று மனைவி – குழந்தையுடன் வண்டியேறி விட்டார்.

‘எங்கே போகலாம்’ என்று திட்டம் போட்டதில் கொல்லிமலைக்கு ஸ்கெட்ச் போடப்பட்டது. ‘‘72 ஹேர்பின் பெண்ட் இருக்கும்ல… எர்டிகா எப்படி இருக்குனு பார்த்துடலாம்!’’ என்று ஆர்வமாகக் கிளம்பினார்கள் நிஷாந்த் தம்பதியினர்.

கொல்லிமலை ஆகாய கங்கை அருவி
கொல்லிமலை ஆகாய கங்கை அருவி
 நம் கண் முன்னேயே நாட்டுக்கோழி சமையல் ரெடியாகும்...
நம் கண் முன்னேயே நாட்டுக்கோழி சமையல் ரெடியாகும்...

சென்னையில் இருந்து கொல்லி மலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் நாமக்கல் ரூட்டைத்தான் தேர்ந்தெடுப் பார்கள். காரணம் – அந்த 72 கொண்டை ஊசி வளைவுகள். அதற்கும் திருச்சி ரூட்டை டிக் அடிப்பார்கள் சிலர். சட்டெனப் போக வேண்டுமென்றால், இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. ஆத்தூர் தாண்டி முள்ளுக்குறிச்சி வழியாகப் போனால், பச்சைப் பசேல் வயல்வெளிச் சாலையில் ஜிவ்வெனப் பறக்கலாம்.

‘அச்சச்சோ… அப்போ ஹேர்பின் பெண்டு போச்சா சோணமுத்தா?’’ என்று ‘உச்’ கொட்டினார் காயத்ரி. ‘வரும்போது நிச்சயம் 72–யையும் ஒரு கை பார்த்துடலாம்’ என்று சமாதானம் செய்து கிளம்பினோம்.

காலையில் வண்டலூரில் சாப்பிட்ட பொங்கல் வடை காபி உளுந்தூர்பேட்டையில் வலதுபுறம் திரும்புவதற்குள் செமித்து விட்டிருந்தது. இங்கே ஆத்தூரில்… மதிய உணவுக்குச் சரியான ஆப்ஷன் ஒன்று இருக்கிறது.

தென்னங்குடிப் பாளையத்தில் சரவணா நாட்டுக்கோழி உணவகம், நான்வெஜ் பிரியர்களுக்கு வரம். 2 கிலோ எடையுள்ள ஒரு சேவலை டிக் அடித்தான் குழந்தை அகிரா. நம் கண்ணெதிரேயே மஞ்சள் தடவி உரித்து, சூப் வைத்து, குழம்பு வைத்து, வறுவல் வைத்து, இலை நிறைய சுடச்சுட சோறு பரிமாறுகிறார்கள். நாட்டுக்கோழி சூப்பைவிட ஹைலைட் – மண்பானையில் தரப்படும் சின்ன வெங்காயத் தயிர்தான். நான்–ஜிஎஸ்டியோடு நான்வெஜ் `மத்தியானச்’ சாப்பாடு `செமத்தியாக’ அமைந்து போனது.

நெடுஞ்சாலை நெடுக மாறி மாறி சிஎன்ஜி – பெட்ரோல் என டாகிள் செய்து செய்து ஓட்டியது வித்தியாசமாக இருந்தது. முள்ளுக்குறிச்சி வழியே போனால், அடிவாரம். செக்போஸ்ட்டில் RT-PCR டெஸ்ட் கேட்டார்கள். ‘‘தடுப்பூசி போட்டிங்களா’’ என்று விசாரித்தார்கள். இந்த அடிவாரத்தில் இருந்து கொல்லிமலை ஏறுவதும் செமையாக இருந்தது. ஆனால், சேந்தமங்கலம் அடிவாரம்போல் பயங்கர கொண்டை ஊசிகளெல்லாம் இல்லை. கடல் மட்டத்தில் இருந்து மேலே மேலே ஏற கீழே நாமக்கல் பரந்து விரிந்து அழகாக இருந்தது.

லேசாக இருட்ட ஆரம்பித்ததும் த்ரில்லிங்காகவே இருந்தது பயணம். இத்தனைக்கும் கொல்லிமலையில் விலங்குகளே இல்லை. அதனால் நம்மிடம் இருந்து விலங்குகளுக்குப் பயமில்லை.

கொல்லிமலையில் சென்டர் பாயின்ட் – செம்மேடு எனும் ஊர்தான். உணவகங்களும் இங்கே ரொம்பவும் அரிதாகவே இருக்கின்றன. வருணன் எனும் உணவகத்தைத்தான் பெரிதாக ரெக்கமண்ட் செய்தார்கள். 9.30–க்கெல்லாம் அடுப்பை அணைத்துவிடுகிறார்கள் கொல்லிமலையில். நாம் வசந்த மாளிகை என்ற உணவகத்தில் பார்சல் வாங்கிக் கொண்டோம். ‘‘என்னண்ணே… சாம்பார் புளிக்கொழம்பு மாதிரி இருக்கு’’ என்றார் நிஷாந்த்.

கொல்லிமலையில் வீக் எண்ட் போனால், தங்குவதற்குப் பெரிய சிக்கலாகி விடும். முன்பதிவு நல்லது. நாங்கள் சீஸன் இல்லாத நேரத்தில் போனதால் தப்பித்தோம். 500 ரூபாயில் இருந்து இங்கே ரூம்கள் கிடைக்கின்றன. RVR என்றொரு ரெஸார்ட்டில், வில்லா எடுத்துத் தங்கினோம். முதலில் தலைக்கு 750 ரூபாய் கேட்டார்கள். ‘கம்மி பண்ணித் தர்றேன்’ என்று 5 பேருக்கு 5,000 ரூபாய் என்று நன்றாக ‘கம்மி’ பண்ணித் தந்தார்கள். ‘‘பில் போடலைனாதான் சார் அந்த ரேட்’’ என்று அதிர்ச்சி தந்தார் ரெஸார்ட் மேனேஜர்.

கொல்லிமலையில் நிஷாந்த் - காயத்ரி
கொல்லிமலையில் நிஷாந்த் - காயத்ரி
 மண் சட்டியில் செய்த நாட்டுக்கோழிக் கறி சமையல் நாவில் எச்சி ஊற வைக்கும்.
மண் சட்டியில் செய்த நாட்டுக்கோழிக் கறி சமையல் நாவில் எச்சி ஊற வைக்கும்.
 மாசில்லாமல் விழுவதால் மாசிலா அருவி... சின்ன அருவிதான்... ஆனால் பெரிய குளியல் போடலாம்.
மாசில்லாமல் விழுவதால் மாசிலா அருவி... சின்ன அருவிதான்... ஆனால் பெரிய குளியல் போடலாம்.

நல்லவேளையாக – ரெஸார்ட்டில் காம்ப்ளிமென்ட்ரி காலை உணவு நன்றாகவே இருந்தது. இந்த ரெஸார்ட்டைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் – மாசிலா அருவி, அரப்பளீஸ்வரர் ஆலயம், மாசி பெரியசாமி கோயில் என்று கொல்லிமலையின் பெரிய அட்ராக்ஷன்கள் எல்லாமே இங்கிருந்து பக்கமாக இருந்தது. கொல்லிமலையில் எல்லா இடங்களிலும் 12 மணிதான் செக்–அவுட் நேரம் என்பதை நினைவில் கொள்க. ‘‘சார், கிரேஸ் டைம் 12 மணி’’ என்று அதே தள்ளுபடி தந்தார் ரெஸார்ட் மேனேஜர்.

குழந்தை அகிராவுக்குப் படகுச்சவாரி விசாரித்தோம். ‘‘போட்டிங், பொட்டானிக்கல் கார்டன் எல்லாம் மூடிட்டாங்க சார்!’’ என்றார்கள்.

காலை உணவை முடித்துவிட்டு, மாசிலா அருவிக்கு எர்டிகாவைக் கிளப்பினோம். போகும் வழியெல்லாம் மிளகுக் கொடிகளும், காட்டுச் செம்பருத்திகளும் ஹாய் சொல்லின. 30 ரூபாய் கட்டணம். கார் பார்க்கிங்கே செமையாக இருந்தது. ‘`ஆடு மேய்க்கப் போணும்ணே… மலைக் கொய்யா நீங்களே ஒரு ரேட் சொல்லுங்க!’’ என்று பாவமாக நின்றார் ஒரு ஐயா. 200 ரூபாய்க்கு பை நிறைய கொய்யாக்களை கொடுத்தார். ‘Value for Money’ கொய்யாக்கள்தான்.

மிளகுக் காரப் பணியாரம், மூங்கில் அரிசி இட்லி, மூலிகை சூப் என்று மூலிகை விருந்தே சாப்பிடலாம் போங்கள். அருவிக்கு பார்க் வழியாக சின்ன ட்ரெக்கிங். ஆயில் மசாஜ் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. சட்டென வந்துவிட்டது மாசிலா அருவி. மாசில்லாமல் விழுந்து கொண்டிருந்ததால், மாசிலா அருவி என்று பெயர் வந்திருக்குமோ என்னவோ!

‘சின்ன அருவியா இருந்தாலும் நல்லா இருக்குல்ல’ என்று வரிந்து கட்டிக்கொண்டு குளித்தோம். ஆனாலும், இங்கே இருந்துதான் ஆகாயகங்கை அருவிக்குத் தண்ணீர் சப்ளை ஆவதாகச் சொன்னார்கள்.

குளித்து முடித்து மேலேறும்போது, ‘‘ஆடு மேய்க்கப் போணும்ணே… மலைக் கொய்யா… நீங்களே ஒரு ரேட் சொல்லுங்க!’’ என்று அதே குரல். (!) அதே ஐயா. ஒரு கிலோ மிளகு 450 ரூபாய்க்கு பார்சல் செய்து கொண்டோம். கொல்லிமலையில் மிளகுக்குப் பிறகு ஒரு ஸ்பெஷல் – மூட்டுவலிக் கொட்டை. காபி கலரில் உள்ள கொட்டையை உடைத்து அதிலுள்ள பருப்பை எடுத்து நல்லெண்ணெயில் கொதிக்க வைத்துத் தேய்த்தால்… மூட்டு வலி பறந்தே போகுமாம். ‘‘நானெல்லாம் அதான் ஓடியாடி வியாபாரம் பண்றேன்’’ என்றார் அந்த மூட்டுவலிக் கொட்டையை விற்ற 90 வயதுப் பாட்டி.

 மலைப் பழங்கள்... காந்தாரி மிளகாய்...
மலைப் பழங்கள்... காந்தாரி மிளகாய்...
 மாசிலா அருவிக்குப் போகும் வழியில் ஷாப்பிங்...
மாசிலா அருவிக்குப் போகும் வழியில் ஷாப்பிங்...
 ஆகாச கங்கை அருவிக்குப் போக 2-Way என்றால், மொத்தம் 2,500 படிகள் இறங்கி... ஏற வேண்டும். ரசனையோடு ஏறினால் அலுப்பு தெரியவில்லை.
ஆகாச கங்கை அருவிக்குப் போக 2-Way என்றால், மொத்தம் 2,500 படிகள் இறங்கி... ஏற வேண்டும். ரசனையோடு ஏறினால் அலுப்பு தெரியவில்லை.

மாசிலா அருவிக்குப் பக்கத்தில் மதிய உணவு சமைத்துத் தரவும் ரெடியாக இருந்தார்கள். மாசிலா அருவிக்குப் பக்கத்தில் ரூம் எடுத்துத் தங்குபவர்கள், இதை மிஸ் பண்ணாதீர்கள்.

இங்கே ட்ரெக்கிங் விரும்பிகளுக்கு இன்னொரு ஆப்ஷன் உண்டு. மாசி பெரியசாமி கோயில். மாசிலா அருவிக்கு அப்படியே பின் பக்கம் 1 மணி நேரம் காட்டுக்குள்ளே ட்ரெக்கிங் போனால் செமையாக இருக்கும் என்றார்கள். வழியில் ஓடையில் கால் நனைத்து, கோயிலின் அழகைத் தரிசனம் செய்ய ஆசையாக இருந்தாலும், செக்அவுட் நேரம் அலார்ம் அடித்தது. ரெஸார்ட் மேனேஜர் கண் முன்னே வந்து போனார்.

செக்அவுட் முடித்துவிட்டு, நம்ம அருவிக்கு ஸ்கெட்ச் போட்டோம். அது சுமார்தான் என்று தகவல் வர, ஆகாய கங்கை அருவிக்கு எர்டிகா பறந்தது. அருவிக்குப் பக்கத்தில் அரப்பளீஸ்வரர் கோயில் ஆன்மிக அன்பர்களுக்குச் சரியான மன அமைதி தரும். தரிசனம் முடித்துவிட்டு, 30 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டுப் படியிறங்க வேண்டும். சுமார் 1,250 படிகள் என்றார்கள். அதாவது – டூ வே என்றால் சுமார் 2,500 படிகள்.

உற்சாகமாக இறங்கும்போது, பாவமாக மேலேறுபவர்களைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ‘நமக்கும் இதே கதிதான்’ என்று நினைத்துக் கொண்டோம். இறங்கி முடித்தபோது, இறங்கிய களைப்பே தெரியவில்லை. அருவியின் அழகு அப்படி. பார்க்கிங்கிலேயே சாரல் அடித்தது. தொலைதூரத்தில் இருந்த பாறைகள் மழையில் நனைந்ததுபோல், அருவிச் சாரலில் நனைந்து விட்டிருந்தன. ‘‘ஆஹா… இந்த அருவிக்கு 5,000 படிகூட இறங்கலாம்ணே!’’ என்று உணர்ச்சிவசப் பட்டார் புகைப்பட நிபுணர்.

அருவிக்குப் போக, கயிறு கட்டி வைத்திருந்தார்கள். அருவி நீர்க் குளத்தில் இறங்கித்தான் போக வேண்டும். குழந்தைகள் அனுமதியில்லை. சில இடங்களில் 6.5 அடி நிஷாந்த்தே மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தது.

50 மீட்டர் தண்ணீரில் நடக்க 10 நிமிஷத்துக்கு மேல் ஆனது. லாங்ஷாட்டில் பார்க்கும்போதே, அதிரப்பள்ளி அருவிக்குத் தம்பி மாதிரி தம் கட்டி விழுந்து கொண்டிருந்தது ஆகாயகங்கை.

‘டமார்.. டுமார்’ என அருவி நீரைத் தலைக்கு வாங்கவே தனி தெம்பு இருக்க வேண்டும். லேசாக வலித்தாலும், மூச்சு முட்டினாலும் தாலாட்டுபோலத்தான் இருந்தது. அருவியில் நனைந்தபடி ஆகாசத்தைப் பார்த்தால்… அது வேறு ஒரு ஜென்நிலை. நிஜமாகவே ஆகாசத்தில் இருந்து முத்துக்கள் விழுவதுபோலவே இருந்தது.

குளிக்கும்போது தெரியவில்லை; தலையைத் துவட்டும்போதுதான் 1,250 படிகளும் கண் முன்னே வந்து போயின.

செங்குத்தாக இருந்த சில படிகளைத் தவிர, மற்றவை மூச்சிறைக்கவில்லை. சகிப்பைவிட இங்கே ரசிப்பு முக்கியம். ‘‘சகிச்சுக்கிட்டு வாழாதீங்க… ரசிச்சு வாழுங்க!’’ என்று யாரோ மஹான் சொன்னது நினைவுக்கு வர… ரசனையோடு படியேறினால்… அலுப்பு தெரியவே இல்லை. இலக்கை அடைந்த மராத்தான் வீரர்கள்போல் உற்சாகப் பெருமூச்சு விட்டோம்.

நம்ம அருவிக்கு நேரம் இல்லை. மாசி பெரியசாமி கோயில் ட்ரெக்கிங்குக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. சித்தர் குகைக்கும் சான்ஸ் இல்லை. சீக்குப்பாறை வியூ பாயின்ட்டில் செல்ஃபி எடுத்துவிட்டுக் கிளம்பினோம். 72 ஹேர்பின் பெண்டுகளை நினைத்து உற்சாகமாக இருந்தது. ஆனால், கொண்டை ஊசி வளைவுகளில் இறங்கிய பிறகும், மண்டையில் இருந்து கொல்லிமலை இறங்கவே இல்லை.

கொல்லிமலையில் பார்க்க வேண்டியவை!

ஆகாச கங்கை அருவி

அரப்பளீஸ்வரர் ஆலயம்

மாசிலா அருவி

நம்ம அருவி

படகுச் சவாரி

மாசி பெரியசாமி கோயில் ட்ரெக்கிங்

தாவரவியல் பூங்கா

சீக்குப்பாறை வியூ பாயின்ட்

சித்தர் குகைகள்

எட்டுக்கை அம்மன் கோவில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை நோட் பண்ணுங்க!

சென்னையில் இருந்து நாமக்கல் போகாமல், கொல்லிமலைக்குச் சட்டென்று போக ஒரு ரூட் இருக்கிறது. ஆத்தூர் வழியாக முள்ளுக்குறிச்சி போய், அடிவாரம் அடையலாம். ‘அப்போ.. 72 ஹேர்பின் பெண்டுகளை மிஸ் பண்ணணுமா’ என்பவர்கள், ரிட்டர்ன் வரும்போது இதைப் பயன்படுத்தலாம். ஆத்தூரில் சரவணா நாட்டுக்கோழி மண்சட்டி உணவகம், நான்–ஜிஎஸ்டி இல்லாமல் நான்–வெஜ் விரும்புபவர்களுக்குச் சரியான ஆப்ஷன். கொல்லிமலை அருவிகளுக்கு சீஸன் என்பது ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை என்கிறார்கள். மற்றபடி வீக் எண்டுகள் எல்லாமே கொல்லிமலைக்கு சீஸன்தான். ரூம்கள் கிடைப்பது சிரமம். புக்கிங் நல்லது. 500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை ரூம்கள் உண்டு. அருவிகளுக்குப் பக்கத்தில் விசாரியுங்கள். சல்லிசு விலையில் சுவையான வீட்டுச் சாப்பாடு சமைத்துத் தருபவர்கள் சிக்குவார்கள். மூலிகை வனம்தான் கொல்லிமலை. மலிவான விலையில் மிளகு, மூட்டுவலிக் கொட்டை, சுள்ளென உறைக்கும் குட்டி சைஸ் காந்தாரி மிளகாய், தலைவலித் தைலம், மலைக்கொய்யா என்று பார்சல் செய்ய மறக்காதீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு