Published:Updated:

Long Drive போலாமா? - 7 | கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் கெண்டை மீன் வறுவல்... அணைக் குளியல்..!

KRP Dam

KRP அணை பெரிதாகப் பிரபலமில்லை. ஆனால், ஒரு தடவை போனால் திரும்ப மனம் வராது. KRP–ன் ஃபேவரைட்டே கெண்டை மீன் வறுவல்தான். சேலம், கிருஷ்ணகிரி, வாணியம்பாடிவாசிகள் மீன் சாப்பிடுவதற்காகவே இங்கே வருவதாகச் சொல்கிறார்கள்.

Long Drive போலாமா? - 7 | கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் கெண்டை மீன் வறுவல்... அணைக் குளியல்..!

KRP அணை பெரிதாகப் பிரபலமில்லை. ஆனால், ஒரு தடவை போனால் திரும்ப மனம் வராது. KRP–ன் ஃபேவரைட்டே கெண்டை மீன் வறுவல்தான். சேலம், கிருஷ்ணகிரி, வாணியம்பாடிவாசிகள் மீன் சாப்பிடுவதற்காகவே இங்கே வருவதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
KRP Dam
சென்னையில் இருந்து ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக, சட்டுனு ஒரு வீக் எண்டைக் கழிக்க, கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் ஜலகாம்பாறை, ஏலகிரி, குந்தாணிமலை, அனுமன் தீர்த்தம், அஞ்செட்டி, புல்லூர் அணை, ஏழருவி என்று ஏகப்பட்ட இடங்கள் உண்டு. கிருஷ்ணகிரிக்காரர்களைத் துருவித் துருவிக் கேட்டால், இன்னும் சில இடங்கள் சிக்கலாம். அதில் ஒன்றுதான் KRP அணை.

`Krishnagiri River Park’ என்பதுதான் KRP–யின் விரிவாக்கம். KRP அணை, பெரிதாகப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அணைக்குளியல், சுடச் சுட மீன் வறுவல் என்று குளியல் பார்ட்டிகள், அசைவ விரும்பிகளுக்குச் செமயான தீனி போடும் இந்த KRP அணை.

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஒரே நேர் ரோடுதான். வேலூர் தாண்டி வாணியம்பாடியிலோ… ஆம்பூரிலோ… சீரக சம்பா பிரியாணியை முழுங்கிவிட்டு அப்படியே மறுபடியும் ஒரே ரோடுதான். கட்டக்கடைசியாக வலதுபுறம் திரும்பினால்… கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு. இடதுபுறம் திரும்பினால் சேலம். இங்கேதான் கவனமாக இருக்க வேண்டும்.

லாங் ஷாட்டில் KRP அணை
லாங் ஷாட்டில் KRP அணை

‘‘எப்பவுமே சாமி கும்பிட்டுத்தான் எந்த வேலையையும் ஆரம்பிக்கிறது வழக்கம்’’ என்று சொல்லும் பக்திப் பரவசப் பிரியர்களுக்கு, இங்கே ஓர் அருமையான சிவன் கோயில் உண்டு. சென்னை பைபாஸில் கடைசியாக வலதுபுறம் திரும்பி ஓசூருக்குப் போகும் சாலையில் போக வேண்டும். கொஞ்ச தூரம் தள்ளி முன்பாக இடதுபுறம் மலையேறினால்... ஆன்மிகப் பிரியர்களுக்கு ஓர் அற்புதமான ஸ்பாட் வருகிறது. கீழே முருகன் கோயில், பக்கத்தில் வைரவர் கோயில், மலை உச்சியில் சிவன் கோயில்... என்று பக்தி மணம் கமழ ஒரு டூர் அடிக்கலாம். இந்தக் கோயிலுக்கு 500 வயது என்பதுதான் இதன் சிறப்பு என்றார்கள்.

மலையில் இருந்து இறங்கி யூ–டர்ன் அடித்தால்... மறுபடியும் கிருஷ்ணகிரி வழி. சென்னை பைபாஸில் இருந்து சேலம் போவதற்கு இடதுபுறம் திரும்பி, சரியாக 3 கி.மீ தொலைவுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே போனால்... பெரிய ஏரியும் பூங்காவும் தென்படும். இதுதான் கிருஷ்ணகிரி பூங்கா என்றார்கள். போட்டிங், பார்க் என்று பரபரப்பாக இருக்கிறது கிருஷ்ணகிரி பூங்கா. ஒகேனக்கல் செல்பவர்கள், இங்கேயும் ஒரு மினி போட்டிங் அடிக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தாண்டி ஒரு கி.மீ–யில் வலதுபுறம் ‘கிருட்டிணகிரி நீர்த்தேக்கம்’ என்ற எழுத்தில் பெரிய ஆர்ச் வரவேற்கிறது. ஆர்ச் ஆரம்பத்திலேயே மீன் வறுவல் வாசம் நாசியைத் துளைத்தது. என்ட்ரன்ஸிலேயே ஏகப்பட்ட மீன் கடைதான்.

‘‘நம்ம கேஆர்பி டேம் மீனுதாங்க... உள்ளார போனா லேட்டாயிடும் இல்லையா? லாரி டிரைவருங்க, அவசரமாப் போறவங்க இங்கேயே மீன் சாப்பிட்டுக்கலாம்’’ என்று ஆரம்பத்திலேயே வெறியேற்றினார்கள். அதாவது, பைபாஸ் வழியாக அணைக்கு உள்ளே போக முடியாதவர்கள், இங்கேயே மீன் வறுவல்களை லவட்டிவிட்டுப் போகலாம்.

ஆர்ச்சுக்குள் வண்டியை விட்டேன். செக்போஸ்ட் இருந்தது. பெரிதாக செக் செய்யவில்லை. 6 ரூபாய்தான் கட்டணம் வசூலித்தார்கள். ரொம்ப மலிவுதான் போங்கள். ஏதோ ரிசர்வ் ஃபாரஸ்ட்டுக்குள் போவது மாதிரி ஓர் உணர்வு இருந்தது. செமையான அனுபவம். தமிழ்நாட்டுக்குள்… அதுவும் கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் இப்படி ஓர் இடமா என்று அடிக்கடி வியந்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

இது மட்டும்தான் சைன் போர்டு
இது மட்டும்தான் சைன் போர்டு
நந்தி அருவி
நந்தி அருவி

ரோடு போகும் இடமெல்லாம் போக வேண்டியதுதான். கடைசிவரை போய் இடதுபுறம் திரும்பினால்... KRP அணை. நாம் சென்ற நேரம், ‘‘நேத்துதான் தண்ணி திறந்து விடறதை நிப்பாட்டினாங்க’’ என்றார்கள். அதனால், அணை காய்ந்துதான் போயிருந்தது. ஆனால், அணையிலிருந்து விழுந்த நீர், சுணைகளாகக் கெட்டி அங்கே குளியல், மீன் பிடித்தல், இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தல் என்று பரபரப்பாக இருந்தது KRP அணை.

ஒரு சின்னக் குளியலுக்கு ஓகேவாக இருந்தது அணையின் எதிர்ப்புறம். ஆனால், வழுக்கும் பாறைகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அணை நீரில் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பற்பல பாறைகள்… அதற்கு நடுவே கடந்தோடிய நீர்வரப்பில் – பெரிய குச்சியையோ, காலையோ வைத்து ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, ‘‘இங்க குளிங்கடா... ஆழமில்ல’’ என்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் போல் ஃபீல் செய்தார்கள் சில பெற்றோர்கள். இன்னும் சிலர், பக்கத்தில் உள்ள கோவில் நந்தியிலிருந்து கொத்தாக விழும் நீரில் அருவியில் குளிப்பதாய் ஃபீல் செய்து, பாதுகாப்பான பாத் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஜிலேபி மீன் கிலோ 100 ரூபாய்
ஜிலேபி மீன் கிலோ 100 ரூபாய்

இதைத் தவிர வேறு குளிப்பதற்குப் பெரிய அளவில் இடம் இல்லையா என்று என் சந்தேகத்தைக் கேட்டேன். அணைக்கு மேலே ஏற்றமாக ஒரு சாலை பிரிந்தது. அங்கே வழிகாட்டினார்கள்.

அணை வாசலிலேயே மீன் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. கண்ணெதிரேயே சிக்ஸ்பேக் இளைஞர் ஒருவர், ‘பாகுபலி’ பிரபாஸ் - சிவன் சிலையைத் தூக்கி வருவதுபோல், கும்பலாக மீன்களைக் கட்டிச் சுமந்து வந்து கொண்டிருந்தார். ‘‘எல்லாம் கெண்டை மீனு ஜிலேபி மீனுண்ணே.. ரகம் ரகமா இருக்கு....எதுவா இருந்தாலும் கிலோ 100 ரூவாதான்...’’ என்று சட்டென வியாபாரியாகி விட்டார். அங்கங்கே ஏகப்பட்ட பேர் மீன்களை வலையிலோ, தூண்டிலிலோ பிடித்து ஆன் தி ஸ்பாட்டில் விற்பனை செய்து, தொழில்முனைவர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். சட்டென ஒரு தூண்டிலைப் போட்டு உட்கார்ந்தால்… சில நிமிடங்களில் சில ஆயிரங்கள் சம்பாதிக்கலாம்போல!

உண்மையான அசைவ விரும்பிகள் என்றால், கெண்டை மீன்களைப் பார்த்தவுடனேயே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ‘‘மீன் வறுவல், சாப்பாடுலாம் காணுமே?’’ என்றபோது, அதே மேலறிய சாலையைக் காட்டினார்கள். ‘‘அப்படியே அணைக்குப் பின்னாடி போங்கண்ணே... ஏரியில் குளிச்சுட்டு மீன் சாப்பாடு சாப்பிட்டு வாங்க… ரிட்டர்ன் ஆகிறதுக்குச் சரியா இருக்கும்’’ என்று டிராவலாக் ஸ்டைலில் டிப்ஸ் கொடுத்தார்கள்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல், KRP என்றால், ‘கிருஷ்ணகிரி ரிவர் பார்க்’ என்று அர்த்தம். சில படங்களில் அதன் தலைப்பு, ஏதாவது பாடல்களில் சம்பந்தமில்லாமல் ஒட்டிக் கொண்டு வருமே... அதுபோல், ரிவர் பார்க்குக்கான அர்த்தம் இப்போதுதான் தெரிந்தது. அதாவது ஆற்றை ஒட்டியிருக்கும் பூங்கா. ஆற்றை ஒட்டியே பூங்கா வைத்திருக்கிறார்கள். பெரிதாகப் பராமரிக்கப்படவெல்லாம் இல்லை. ஆனால் மான்கள், மயில்கள் என்று ‘பக்கா பார்க்’ ஆக இருந்தது.

KRP Dam
KRP Dam
Krishnagiri River Park
Krishnagiri River Park

‘என்னடா இது... இவ்வளவுதான் அணையா’ என்றால், ‘இனிதான் என்ஜாய்மென்ட்டே இருக்கு’ என்பதுபோல், நேரே மேலே மறுபடியும் போதையேற்றும் பாதை. மேலே போகப் போக KRP அணையின் பிரமாண்டம் தெரிகிறது. வீராணம் ஏரிக்கு இணையாக KRP–யை ஒப்பிடலாம். அத்தனை பெருசு! ஆனால், இதற்கு சீஸன் பார்த்துத்தான் வர வேண்டும். (வாண்டர்லஸ்ட்டுகள் மன்னிக்கவும். இந்தப் பயணம், மழை ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு மாதங்கள் முன்பு போனது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏப்ரல், மே, ஜூன் போன்ற மொட்டை வெயிலில் போனால், மண்டை காய வைத்துவிடும் கேஆர்பி அணை.) இதுவே சீசன் நேரங்களில் கேஆர்பி அணையின் அழகும் உக்கிரமும் வேற லெவலில் இருக்கும் என்றார்கள்.

KRP Dam
KRP Dam

அணைக்குப் பக்கத்தில் செமையான ஒரு செல்ஃபி. விட்டு விட்டுப் பெய்த மழை வேறு, ஒதுங்கக்கூட முடியாமல், இன்ப அவஸ்தையாய் இருந்தது. அணையிலோ அருவியிலோ குளிப்பதற்கு என்று திட்டம் போட்டு வருபவர்களுக்கு மழை என்பது, விருந்துகளின்போது வைக்கப்படும் எக்ஸ்ட்ரா சைடு டிஷ்தான் என்பேன். மழைத் தூறலில் அணை இன்னும் அழகாக மாறிவிட்டிருந்தது. மழைக்கு நனையவும் பயந்து, ஒதுங்கவும் இடம் இல்லாமல்… ‘எப்படியும் நனையத்தான் போறோம்’ என்று வேறு வழியில்லாமல் அணைக்குள் குதித்தார்கள் சில பைக் பார்ட்டிகள்.

‘இத்தனை பெரிய ஏரியில் முதலைகள் இருக்கணுமே’ என்ற சந்தேகம் வராமல் இல்லை. ‘வெறும் மீன்கள் மட்டும்தான்; முதலைகள் இல்லை’ என்று உள்ளூர்வாசிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, டைவ் அடித்தார்கள் சில இளசுகள். ‘‘தர்மபுரி பாலக்கோட்டில் ஒரு கல்யாணம். KRP–யைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்தோம். மீன் வறுவல்... குளியல்னு அடடா...’’ என்று தொப்பையைத் தடவியபடி குப்புற விழுந்தார்கள் சில ஊர் சுற்றிகள். போகப் போக ஆழம் அதிகம் என்பதால், நீச்சல் பார்ட்டிகள் மட்டும்தான் இங்கே குளிப்பது நல்லது. குளித்து முடித்தால்... வயிறு கபகபவெனக் கூச்சல் போட்டது. அசைவ விரும்பிகளுக்கு இனிதான் விருந்தே!

Fish Fry
Fish Fry
Fish Fry
Fish Fry

குளித்துவிட்டு ஈரத் தலையுடன் அப்படியே மேலேறினால்.. வழிநெடுக மீன்களை வறுத்துக் கொண்டிருந்தார்கள். ‘‘25 ரூவாதாண்ணே ஜிலேபி மீனு... குழம்பு மீனு ஒரு பிடி பிடிக்கலாம்... வாங்க’’ என்று பாசமான வரவேற்புகள். நான்கு நல்ல திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால், எந்தப் படத்துக்குப் போவது என்கிற குழப்பம் வருமே… அதுபோன்றதொரு குழப்பம். எந்தக் கடைக்குள் நுழைவது என்பது மிகப் பெரிய டாஸ்க்காகவே இருந்தது. 4 பேர் படுத்து உருளும் அளவுள்ள தோசைக் கல்லில் மீன்களை வரிசையாகப் படுக்க வைத்து வறுத்துக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். அணை வாசலில் கெண்டை மீன் என்றழைக்கப்பட்டதுதான், இங்கே ஜிலேபியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பார்த்தவுடனேயே எச்சில் ஊற வைத்தது ஜிலேபி. சேலம், நாட்ராம்பள்ளி, வாணியம்பாடி, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று எல்லா சுற்றுவட்டார மக்களையும் கேஆர்பி மீன் கடைகளில் பார்க்க முடிந்தது.

சிலர், ‘முதல் மரியாதை’ சிவாஜி ஸ்டைலில் மீன்களை ஒரே இழுவையில் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். நிஜம்தான். அணை மீனுக்கு என்னவோ அத்தனை ருசி. சாப்பாடு, குழம்பு மீன், சில்லி ஜிலேபி, கெண்டை வறுவல் என்று அன்று நாள் முழுவதும் மீன் மயம்தான்.

சில பல கெண்டைகளைத் தொண்டைக்குள் வாங்கிவிட்டுக் கீழே இறங்கும்போது, ‘இனி வீக் எண்டுக்கு மெரினா, பெசன்ட் நகர், பாண்டிச்சேரி–னு ஒதுங்காமல், KRP–க்கும் ஒரு விசிட் அடிச்சுட வேண்டியதுதான்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

Fish Fry
Fish Fry
அணை குளியல்
அணை குளியல்

நோட் பண்ணுங்க!

KRP அணை பெரிதாகப் பிரபலமில்லை. ஆனால், ஒரு தடவை போனால் திரும்ப மனம் வராது. KRP–ன் ஃபேவரைட்டே கெண்டை மீன் வறுவல்தான். சேலம், கிருஷ்ணகிரி, வாணியம்பாடிவாசிகள் மீன் சாப்பிடுவதற்காகவே இங்கே வருவதாகச் சொல்கிறார்கள். வேலூர், வாணியம்பாடி வழியாக சென்னை பைபாஸ் வழியே போனால்... சேலம் பைபாஸுக்கு இடதுபுறம் திரும்பி, 3 கி.மீ பயணித்தால்... வருகிறது KRP அணை. ‘கிருஷ்ணகிரி ரிவர் பார்க்’ என்பதுதான் இதன் விரிவாக்கம். வழியில் ஒரு சைன்போர்டுகூடக் கிடையாது. ‘கிருட்டிணகிரி நீர்த்தேக்கம்’ எனும் ஆர்ச்தான் இதற்கான ரூட் மேப். தலைக்கு 5 ரூபாய்தான் கட்டணம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் குளித்து என்ஜாய் பண்ணலாம். மழை நேரம்தான் இதற்கான சீஸன். நீச்சல் தெரிந்தால் அவ்வளவு பெரிய அணையில் நிம்மதியாகக் குளிக்கலாம். குழந்தைகள் குளிக்கவும் இடம் உண்டு. ‘எட்றா வண்டியை’ என்று இனி சென்னையில் இருந்து KRP அணைக்கும் ஒரு வீக் எண்டில் வண்டியை விடலாம்.

என்ன பார்க்கலாம்?

(கிருஷ்ணகிரியில் இருந்து)

* புல்லூர் அணை (65 கி.மீ)

வாணியம்பாடியில் இருக்கும் அணை. சீஸன் விசாரித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அணைக் குளியல், மீன் வறுவல் இங்கும் ஃபேமஸ்.

* அஞ்செட்டி (85 கி.மீ)

ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால், காட்டிலாகாவினரின் அனுமதி தேவை. 6 மணிக்குள் செக்போஸ்ட்டைக் கடந்துவிட வேண்டும். வனஆர்வலர்களுக்கு அற்புதமான ஸ்பாட். அருவிக் குளியலும் உண்டு.

* அனுமன் தீர்த்தம் (60 கி.மீ)

பொன்னையார் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அருவி. ராமன், அனுமன் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். ஆகஸ்ட்–செப்டம்பர் சீஸனில் குளிக்கலாம்.

* ஜலகம்பாறை (60 கி.மீ)

ஏலகிரி மலைக்குப் பின்புறம் உள்ள அருவி. கீழே கோவில், மேலே அருவி என்று இயற்கை விரும்பிகளுக்குப் பிடித்த ஸ்பாட். ஆகஸ்ட்–அக்டோபர் நல்ல சீஸன்.

* பன்னருகெட்டா (85 கி.மீ)

பெங்களூருவில் உள்ள மிருகக்காட்சி சாலை. வாகனங்களில் சவாரி போய்க்கொண்டே திறந்தவெளியில் திரியும் புலி, சிங்கம், கரடி, யானைகளுக்குப் பக்கத்தில் இருந்து ஹாய் சொல்லலாம்.

* மேக்கேதாட்டு (140 கி.மீ)

ஆடு தாண்டும் பாறை என்பதுதான் இதன் அர்த்தம். ஒகேனக்கலின் இன்னொரு புறமான இது கர்நாடகாவில் உள்ளது. அருவிக்குளியல், மீன் வறுவல் என்று ஜமாய்க்கலாம்.