Published:Updated:

பொள்ளாச்சி போயிட்டு ரிட்டன் வரும்போது, வடிவேலு குளிச்ச 'வின்னர்' ஃபால்ஸ்! Long Drive போலாமா?-2

ஆத்துப்பாறை வின்னர் ஃபால்ஸ்

ஆத்துப்பாறைக் குளியலும் ஆழியார் மீன் வறுவலும்: மீன்குழம்புச் சாப்பாடே 60 ரூபாய்க்குத்தான் பில் போட்டார்கள். ஜிலேபி, அயிலா, கட்லா மீன் வறுவல்கள் 30 ரூபாய் என்றார்கள்

பொள்ளாச்சி போயிட்டு ரிட்டன் வரும்போது, வடிவேலு குளிச்ச 'வின்னர்' ஃபால்ஸ்! Long Drive போலாமா?-2

ஆத்துப்பாறைக் குளியலும் ஆழியார் மீன் வறுவலும்: மீன்குழம்புச் சாப்பாடே 60 ரூபாய்க்குத்தான் பில் போட்டார்கள். ஜிலேபி, அயிலா, கட்லா மீன் வறுவல்கள் 30 ரூபாய் என்றார்கள்

Published:Updated:
ஆத்துப்பாறை வின்னர் ஃபால்ஸ்

ஞாயிறுக்கு ஞாயிறே கிடையாதுபோல. ஞாயிறும் அதுவுமாய் இப்போதெல்லாம் வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டது ஞாயிறு. இது சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால், பொள்ளாச்சிவாசிகளுக்குப் பொருந்தாது. தென்னை மரங்கள்சூழ் பொள்ளாச்சிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள். வெயிலே தெரியாதுல்ல!

aazhiyar
aazhiyar
ஆத்துப்பாறை ஆறு
ஆத்துப்பாறை ஆறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆழியார், வால்பாறை, சோலையார், அதிரப்பள்ளி, ஆனைமலை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், திருமூர்த்தி ஃபால்ஸ், மறையூர், சின்னார், லக்கம் ஃபால்ஸ், தூவானம், காந்தலூர்... நிற்க!

இதெல்லாம் திருப்பூர், பொள்ளாச்சிக்காரர்களுக்கு இரண்டு நாள் என்ஜாய் பண்ணக்கூடிய வீக் எண்ட் ஸ்பாட்கள். (ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்!) ஆனால், வீக் எண்டில் அற்புதமாய்க் கழிக்க, குளிக்க என்று ஒரு செம ஸ்பாட், பொள்ளாச்சிக்காரர்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் வியப்பு. ‘‘ஆத்துப்பாறையா... தெரியலையே...’’ என்று 12 ஆண்டுகளாய் பொள்ளாச்சியில் செட்டில் ஆன ஒரு நண்பருக்கே ஆத்துப்பாறை தெரிந்திருக்கவில்லை. ஆனால், ‘வின்னர்’ படத்துல வடிவேலு குளிப்பாரே... அந்த இடம் எங்க இருக்கு’ என்று கேட்டால், ‘வின்னர் ஃபால்ஸா’ என்று சட்டென அனைவரும் மயிலாடுதுறை எனும் கிராமத்தை நோக்கிக் கை காட்டுகிறார்கள். கொடைக்கானலில் ‘டெவில்ஸ் கிச்சன்’ எனும் ஒரு குகையில் கமலின் ‘குணா’ பட ஷூட்டிங் நடந்த பிறகு, அதற்கு ‘குணா குகை’ என்றே பெயர் மாறியதே... அதேபோல் இங்கே ஆத்துப்பாறை, ‘வைகைப் புயல்’ குளித்த பிறகு ‘வின்னர் ஃபால்ஸ்’ ஆகிவிட்டது.

‘வின்னர்’ படத்தில் வடிவேலு, சில ஆண் சிங்கங்களுடன் பெண் சிங்கங்கள் பாதுகாப்பில் குளித்துவிட்டு ரகளை செய்வாரே... அதே ஸ்பாட்தான் ஆத்துப்பாறை. நமது மோட்டார் விகடன் வாசகிகளான டாக்டர் பிங்கி மற்றும் செளமியாவின் வேகன்–ஆர் மற்றும் புல்லட்டில்தான் ஆத்துப்பாறைக்கு ஒரு ட்ரிப் அடித்தோம். ‘‘மயிலாடுதுறை, மயிலாடும்பாறை, ஆடுதுறை, ஆத்துப்பாறைனு ஏகப்பட்ட பேர் இதுக்கு உண்டு!’’ என்று நமக்கு இந்த ஸ்பாட்டை ரெக்கமண்ட் செய்ததே இவர்கள்தான். ‘‘ஆக்சுவலா இந்தப் பெண் சிங்கங்கள் பாதுகாப்பில்தான் நீங்க வர்றீங்க!’’ என்று நம்மை நக்கலடித்ததும் இவர்கள்தான்.

‘பொள்ளாச்சி – ஆத்துப்பாறை’ என்று கூகுளில் டைப் செய்தால், போனால் போகுது என்று சில ஃபேஸ்புக் பக்கங்களும், சில வாண்டர்லஸ்ட்டின் டிராவலாக் பக்கங்களும்தான் வரும். அந்தளவு இன்னும் பிரபலமாகாத ஸ்பாட்தான் ஆத்துப்பாறை. ஆத்துப்பாறைக்கு சைன் போர்டு, வழிகாட்டி என்று எதுவும் இல்லை. விசாரித்து விசாரித்துத்தான் போக வேண்டும். ஷார்ட்டான ரூட் மேப் இதுதான். பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் போகும் வழியில், பொங்காளியூர் அல்லது கோட்டூர் என்று விசாரித்தும் ஆத்துப்பாறைக்குள் இறங்கலாம்.

ஆத்துப்பாறை அருண் மெஸ்
ஆத்துப்பாறை அருண் மெஸ்

ஆத்துப்பாறை செல்பவர்களுக்கு மத்தியான உணவுக்கு ஒரு செமத்தியான ஆப்ஷன் இருக்கிறது. அது அருண் மெஸ். ஆத்துப்பாறை போகும் வழியில், கோட்டூருக்கு 5 கிமீ–க்கு முன்பாக இருக்கிறது அருண் மெஸ். சாதாரண கூரை வீடுதான். நான்வெஜ் ஹோட்டல்தான். ஆனால், நான்ஜிஎஸ்டி ஹோட்டல். அன்லிமிட்டெட் மீன்குழம்புச் சாப்பாடே 60 ரூபாய்க்குத்தான் பில் போட்டார்கள். ஜிலேபி, அயிலா, கட்லா மீன் வறுவல்கள் 30 ரூபாய் என்றார்கள். நான்வெஜ்ஜை நான்ஜிஎஸ்டி இல்லாமல் ஒரு பிடிபிடித்தேன்.

ஃபிஷ் ஃப்ரை
ஃபிஷ் ஃப்ரை

கோட்டூரில் சட்டெனத் திரும்பிய ஓர் இடத்தில், வரிசையாக வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. ஒரு பாட்டி கடையில் கம்பங்கூழையும் கருவாட்டையும் பார்ட்னர்ஷிப் வைத்து அருந்திக் கொண்டிருந்தார்கள். ஒரு விஷயம் நோட் செய்து கொள்ளுங்கள். ஆத்துப்பாறைக்கு இந்தப் பாட்டி கடைதான் லேண்ட்மார்க். கூழைக் குடித்துவிட்டு வலதுபுறம் ஒரு வயற்காட்டுப் பாதையில் இறங்கி... ட்ரெக்கிங். 400 மீட்டர் இருக்கும். சுற்றிலும் வேலி போட்டிருந்தார்கள். அதாவது, பார்க்கிங்கில் இருந்து கொஞ்சம் தள்ளி இறங்கினால், வேலியில்தான் போய் முட்ட வேண்டும். எனவே, விசாரித்துவிட்டே இறங்குங்கள்.

ஆத்துப்பாறை
ஆத்துப்பாறை

ஆத்துப்பாறை என்ட்ரன்ஸில் இன்னொரு பாட்டி. மாங்காய், சுண்டல், பட்டாணி, பொரிகடலை, வெள்ளரி, இலந்தை, தேன்மிட்டாய் என்று பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது பாட்டி கடை. பாட்டிக்குப் பின்னால், ஒரு கும்பல் சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தது. விறகு மூட்டப்பட்ட அடுப்பில் ஏதோ பறப்பனவோ, நடப்பனவோ வெந்து கொண்டிருந்தது. ‘‘திருப்பூர்ங்க... வாரா வாரம் இங்க வந்துடுவோம். சட்டி பானைலாம் எடுத்துட்டு!’’ என்று சப்புக் கொட்டியபடி சொன்னார் அந்த டீம் லீடர். பணம் கொடுத்து சமையலுக்கு இங்கே முன்கூட்டியும் ஆர்டர் செய்யலாம் என்று தகவல் சொன்னார்கள்.

ஆத்துப்பாறை ஆற்றுச் சமையல்
ஆத்துப்பாறை ஆற்றுச் சமையல்

ஃபெமிலியர் ஆகாத சுற்றுலாத்தலம் என்பதால், சில்லோவென ஆளே இல்லாமல் இருக்கும் என்று நினைத்தால்... ஆத்துப்பாறையில்தான் மொத்த ஊர்காரர்களுமே இருந்தார்கள். திருப்பூர், பொள்ளாச்சி மொத்தமுமே ஆத்துப்பாறையில்தான் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தது. எனக்கென்னவோ லாங் ஷாட்டில் பார்த்ததுமே ‘வின்னர்’ வடிவேலுதான் நினைவுக்கு வந்தார்.

ஆத்துப்பாறை
ஆத்துப்பாறை
ஆத்துப்பாறை அணை வாக்கிங்
ஆத்துப்பாறை அணை வாக்கிங்

காலணியைக் கழற்றிவிட்டு, முழுக்கால் சட்டையை முழங்காலுக்கு மடித்துவிட்டு நடக்க வேண்டும்போல் இருந்தது. பாசி படர்ந்து வழுக்கும் தன்மை அதிகம் என்பதால், கவனமாக நடக்கச் சொன்னார்கள். அப்படியே கால் நனைய நடந்தால், பாரதிராஜா ஹீரோ மாதிரி இருந்ததாகச் சொன்னார்கள். நிறைய ஹீரோக்கள், ஹீரோயின்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

அணையின் நடுவிலும் ஒரு பாட்டி. அன்னாசி–வெள்ளரிக்காய் என்று மிக்ஸட் சாலட் சாப்பிட்டுவிட்டு ஆற்றுக்குள் டைவ் அடித்தால்... ஆழம் 10 அடிதான் இருந்தது. எனவே, டைவ் அடிப்பதில் பிரச்னை இருக்காது. நீச்சல் எக்ஸ்பெர்ட்டுகள் சோமர்சால்ட்டெல்லாம் அடித்து ஆத்துப்பாறையைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். என்ட்ரி லெவல் நீச்சல் பார்ட்டிகளுக்கும் இடது பக்கம் ஒரு பாதுகாப்பான குளியல் ஏரியா இருந்தது. அதில் மல்லாக்கப்படுத்தபடி கோவா கடற்கரையில் மூன்பாத் எடுப்பதுபோல், சிலர் தொப்பையை சூரியனுக்குக் காட்டியபடி ஏதோ ஒரு பரவச நிலையை அடைந்து கொண்டிருந்தார்கள்.

ஆத்துப்பாறை டைவ்
ஆத்துப்பாறை டைவ்
ஆத்துப்பாறை டைவ்
ஆத்துப்பாறை டைவ்

‘அங்கிட்டுப் போகாதீங்க; இங்கிட்டு வராதீங்க’ என்று தடை போடுவதற்கு இங்கு ஆட்களே இல்லை என்பதால், வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்போல் அனைவரும் உல்லாசமாக இருந்தார்கள். அப்படியென்றால், ஆத்துப்பாறை அனைவருக்கும் பாதுகாப்பானது என்றுதான் அர்த்தம். அதேநேரம், அப்படியே கடைசிவரை போனால், மதகைத் திறந்துவிட்ட அணை நீர் போல ‘குபுகுபு’வென குட்டி சுனாமி போல் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. விசாரித்தால், ஆழியாரில் இருந்து வரும் நீர் என்றார்கள். இங்கே தடை தேவையில்லை. பார்த்தாலே பயமாகத்தான் இருந்தது. நீர் விழும் வேகம் அப்படி. பத்தடி தள்ளி நின்றுதான் பார்க்கத் தோன்றும்.

ஆற்றுக்கு அந்தப் பக்கம் உள்ள பெரிய வீட்டைக் காட்டி, ‘ரஜினிமுருகன்’ படத்தில் ஒரு பங்களா வருமே.. அதுதான் என்று தகவல் சொன்னார்கள்.

ஆத்துப்பாறைக் குளியலை விடவே மனசில்லை. அப்படியே ஆழியாருக்குப் புல்லட்டை விரட்டினேன். ஆழியார் வரும் நிறைய பேர் ‘செமையா இருக்குல்ல’ என்று அணைக்கட்டை வாய் பிளந்து பார்த்துவிட்டு, மீன் வறுவலைத் தின்றுவிட்டு, பார்க்கில் போட்டோ ஷூட் பண்ணிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். வெளியூர்க்காரர்கள் நிறைய பேர் ‘இங்க குளிக்க இடமில்லை’ என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆழியாரிலும் குளிப்பதற்கு ஓர் அற்புத இடம் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு டிப்ஸ்.

ஆழியார் ஆறு
ஆழியார் ஆறு

அணைக்கட்டுக்கு எதிரே தெருத் தெருவாக சந்து சந்தாக நுழைந்து போனால்... ஆத்துப்பாறைக்கு அண்ணன் போன்றதொரு லொக்கேஷன் வரும். இதற்குப் பெயர் ஆழியார் ஆறு. சுந்தர்.சி ‘வின்னர் 2’ சீக்வல் படம்கூட எடுக்கலாம். அப்படிப்பட்ட லொக்கேஷன்! ஏகப்பட்ட பேர் ஆழியார் ஆற்றை அதகளம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், கார்கள் இங்கே நுழைவது கஷ்டம். பைக்கில் போகலாம்.

ஆற்றில் இறங்கக்கூட படி இல்லை. மரக்கிளையைப் பிடித்துத்தான் இறங்க வேண்டும். கொஞ்சம் கவனம் தேவை. அல்லது யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டும். ஆற்றில் நூற்றுக்கணக்கான பேர் அப்படித்தான் இறங்கியிருக்க வேண்டும்.

ஆழியார் ஆற்றிலும் ஒரு சின்ன டைவ். மறுபடியும் அருண் மெஸ்... மீன் வறுவல்...!

ஆகவே, பொள்ளாச்சி போயிட்டு ரிட்டன் வரும்போது, ஆத்துப்பாறையை மறந்துடாதீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism