Published:Updated:

மேடம் ஷகிலா - 27: பயணம் போனால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடுமா… ட்ராவலை புனிதப்படுத்துகிறார்களா?!

பெண்கள் பயணம்

செல்போன் கேமராக்களும் சமூக வலைதளங்களும் இன்று பயணங்களை ’ப்ரொஃபைல் படத்துக்கு நான்கு போட்டோ தேற்றலாம்’ என்கிற அளவில் சுருக்கிவிட்டது.

மேடம் ஷகிலா - 27: பயணம் போனால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடுமா… ட்ராவலை புனிதப்படுத்துகிறார்களா?!

செல்போன் கேமராக்களும் சமூக வலைதளங்களும் இன்று பயணங்களை ’ப்ரொஃபைல் படத்துக்கு நான்கு போட்டோ தேற்றலாம்’ என்கிற அளவில் சுருக்கிவிட்டது.

Published:Updated:
பெண்கள் பயணம்
சமீபத்தில் வெளியாகி இருக்கும் ’வாழ்’ திரைப்படத்தையொட்டி பயணம் தொடர்பாக இணையத்தில் பல்வேறு விதமான விவாதங்கள் உருவாகியிருக்கின்றன.

“வருஷத்துல ஒரு முப்பது நாள், வீடு, வேலை, குடும்பம் எல்லாத்தையும் மறந்து தன்னந்தனியா பயணம் செய்...” என்பது படம் சொல்லும் செய்தி.

பிரச்னைகளின் தற்காலிக தீர்வாக அல்லது மனப் போராட்டங்கள் தெளிய பயணம் செய்யுங்கள் என்று சொல்பவர்களும், பயணக் காதலர்களும் படத்தை கொண்டாடுகிறார்கள். கோபமோ, வருத்தமோ அதிகரிக்கும் போது குறைந்தபட்சம் வாகனத்தில் இலக்கில்லாமல் சிறிது நேரம் சுற்றி வருவது மனதை ஆற்றுப்படுத்தும் என்பது இன்று சகஜமாக நாம் எல்லோரும் பேசிக் கொள்வது. தற்போதைய பொருள் சார்ந்த வாழ்க்கை முறையில் வருடத்தில் ஒரு முறையாவது செய்யும் பயணங்கள் மட்டுமே உள்ளத்திற்கும், உடலுக்கும் ஒரே சமயத்தில் புத்துணர்வு அளிக்க வல்லது என்பது சமீப காலமாக பலரும் வலியுறுத்திச் சொல்வது.

வாழ் படக்காட்சி
வாழ் படக்காட்சி

மறுபக்கம் படத்தில் நாயகன் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சுற்றித் திரிகிறான். ”அதுபோல சுற்றித் திரிவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை’’ என பல்வேறு காரணங்களை குறிப்பிடுபவர்கள் பயணங்களை அளவுக்கதிகமாக ரொமான்ட்டிஸைஸ் செய்திருப்பது குறித்து ஆதங்கப்படுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ’பயணம் செய்யுங்கள்’ என்று சொல்வது மேட்டிமைத்தனமாக இருக்கிறது என்கிறார்கள். பயணங்கள் வசதி படைத்தவர்களுக்கானது என்றும் ‘வாழ்’ திரைப்படத்தில் சொல்லியிருப்பது போல 30 நாட்கள் தனியாக பயணம் செய்து திரும்பி வந்தால் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்பது போலவும் கேலி மீம்கள் பகிரப்படுகின்றன.

பயணங்கள் மனித குலத்துக்கு புதிதானது இல்லை. முதல் மனித இனம் ஆப்ரிக்காவில் உருவாகி, பயணம் செய்து செய்து பூமி பந்து முழுவதும் பரவியது என்கிறது வரலாறு. இன்று உலகின் எந்த மூலையில் இருந்தும் அதன் மறுகோடிக்கு ஒரே நாளில் சென்றுவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மனிதர்களுக்கு பயணத்தின் மீது இருக்கும் ஆர்வமும், புதியவைகளை கண்டடையும் தேடலும்தான். பழங்காலத்தில் அறிஞர்கள் பயணம் செய்வதை அறிவை வளர்த்துக்கொள்ளும் விஷயமாக பார்த்தார்கள். பலவற்றையும் கற்று தெரிந்துகொள்ள பயணம் மட்டுமே ஒரே வழி என்றார்கள். மனிதர்களை படிப்பதே சிறந்த கல்வி என்றார்கள்.

நாடோடியாக இருந்த இனக்குழுக்கள் நிலங்களை இறுகப் பற்றிக்கொண்டு எல்லைகளை நிர்ணயித்தனர். பின் சமூகம், திருமணம், குடும்ப அமைப்பு, சாதி, மத பாகுபாடுகள் உருவாகி மனிதர்கள் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்துவிட்டனர். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு வேலை அல்லது படிப்பு எனும் காரணங்கள் தேவைப்படுகின்றன. அப்படியே நகர்ந்தாலும் மனிதர்கள் மறுபடியும் அங்கேயே நின்று போகிறார்கள். இன்று பொருள் ஈட்டும் காரணங்கள் ஏதுமின்றி தேடலுக்காக ஊர் ஊராக சென்று சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாழ்வது நடைமுறைக்கு ஒவ்வாத அதிசயமாக பார்க்கப்படுகிறது. அப்படி வாழ்பவர்கள் இந்த சமூகத்திற்குள் பொருந்திப் போகாதவர்களாகின்றனர்.

வேறு மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு உறவினர்/நண்பர்களுடன் கூட்டமாக ரயில், விமானம், தங்கும் விடுதிகள், உள்ளூரில் சுற்ற கால் டாக்சி வரை முன்பே பதிவு செய்து கொள்வது, கூகுள் மூலம் சிறந்த உணவகங்களை தேடிச் சென்று சாப்பிடுவது, அங்குள்ள கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது, இயற்கையோடு இணைந்த பயணம் என்றால் இன்னும் ஒரு படி மேலே போய் அவ்வூரின் பழங்குடி அல்லது முக்கிய இனக்குழு போல உடைகள் தரித்து (அதற்கென்று இருக்கும் கடைகளில் வாடகைக்கு வாங்கி) புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது, சென்றதற்கு சாட்சியாக ஏதாவது பொருட்கள் வாங்கிக்கொண்டு அதைவிட அதிகமாக உடன் வந்தவர்களுடன் பிணக்குகளுடன் ஊர் திரும்புவதுதான் நவீன பயணமுறையாக இருக்கின்றது.

பெண்கள் பயணம்
பெண்கள் பயணம்
மலைகள் மற்றும் தீவுகளுக்கு 'இயற்கை பயணங்கள்' என்பது அங்குள்ள வாழ்க்கை முறைக்கு பழகி, அம்மக்களையும் மற்ற உயிரினங்களையும் சலனப்படுத்தாமல் சுற்றித் திரிந்து திரும்புவது. ஆனால் இயற்கை பயண பேக்கேஜ்கள் லாப நோக்கில் தற்போது மாபெரும் பொருளீட்டும் தொழிலாகவே மாறி வருகின்றது.

செல்போன் கேமராக்களும் சமூக வலைதளங்களும் இன்று பயணங்களை ’ப்ரொஃபைல் படத்துக்கு நான்கு போட்டோ தேற்றலாம்’ என்கிற அளவில் சுருக்கிவிட்டது.

”மதுரைக்கு வழி வாயில’’ என்றொரு பழமொழி உண்டு. பாதை தெரியாவிட்டால் வழியில் காண்பவரிடம் வாய் திறந்து வழி கேட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அதன்மூலம் வழி மட்டுமல்ல, வழி நெடுகிலும் உள்ள மக்களின் வட்டார மொழி முதற்கொண்டு உணவு வரை தெரிந்துகொள்ளலாம். அறிமுகமில்லாத முகங்களின் புன்னகை, உரையாடல், அக்கறை எல்லாம் சேர்ந்ததுதான் ”வழி கேட்டல்”.

இன்றைய பயணங்களில் புதிய ஊரில் தேவையான எல்லாவற்றையும் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் இணையத்தின் வழியாகவே தேடித் தெரிந்து கொள்கிறோம். கூகுள் மேப்பில் பார்த்து நான்கு, ஆறு வழிச் சாலைகளில் மனிதர்களை காணாமல், மனிதர்களின் குரல்களும், மணமும் இல்லாமல் வாகனத்தில் பறப்பதை பயணங்கள் என்கிறார்கள். பயணம் செய்யுங்கள் என்றதும் உயர் மற்றும் நடுத்தர குடும்பங்களை குறிவைத்து டூர் ஏஜென்சிகளால் இயக்கப்படும் Package Tour-ல் பதிவு செய்து சுற்றுலா செல்வது என நினைத்துக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில் பயணம் செய்ய அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

ஒரே வட்டப்பாதையில் சுற்றிவரும் கோள்களை போல, கான்கிரீட் கட்டடங்களுக்குள் சுற்றிவரும் இந்த வாழ்வு மூச்சு முட்ட செய்யும்போது, புதிய காற்றை சுவாசிக்க பயணம் செய்ய வேண்டும். அதற்கு திட்டமிட்டு வாரம், பத்து நாள் என்று வெளியூர் செல்ல தேவையில்லை. குறைந்தபட்சம் உள்ளூர் பேருந்துகளில் பெரிய இலக்கு எதுவும் இல்லாமல் அரை நாள் நகரத்தை சுற்றி வந்து வழியில் தேநீர் குடித்து, புதியவர்களிடம் எந்த நோக்கமும் இல்லாமல் பேசி அல்லது மௌனமாக சுற்றிலும் நடப்பவற்றை கவனித்து திரும்புவதும் கூட பயணம்தான்.

பெண்கள் பயணம்
பெண்கள் பயணம்

மன அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கை முறையிலிருந்து சில நாட்கள் தற்காலிகமாக ஒரு விடுப்பு கிடைத்தால் நல்லது எனும் நோக்கத்தில்தான் பலரும் எங்காவது பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். தன்னைப்பற்றி சுற்றியிருப்பவர்கள் ஏற்படுத்தியிருக்கும் முன்முடிவுகளிலிருந்தும், தன்னுடைய வாழ்க்கையில் தானே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்களிலிருந்தும் வெளியேற மனித மனம் உந்திக் கொண்டே இருக்கும். எல்லா அடையாளங்களையும் விட்டு வெளியேறும் எண்ணம் அது. இலக்கில்லாத பயணங்கள் ஓரளவு மனதை சரியாக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் ’இலக்கில்லாமல் சில நாட்கள் சுற்றிவிட்டு வருகிறேன்’ என ஒரு ஆண் தன் குடும்பத்தினரிடம் சொல்லும் சூழலே இன்னும் நம் சமூகத்தில் வாய்க்கவில்லை. குடும்பமே ஆணிவேர் என்றும் அதிலிருந்து தற்காலிகமாகப் பிரிந்து செல்வதைகூட குடும்ப அமைப்பிற்கும், சமூகத்திற்கும் எதிரானதாக, அதே சமயம் அப்படி பயணம் செல்பவர்களை இந்த சமூகம் கேலியாகவும் பார்க்கிறது. ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பெண்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.

பெண்களுக்குத் தனியாக செல்லும் பயணங்கள் இன்னமும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. வெளியில் இருக்கும் மற்ற ஆண்களால் பாதுகாப்பில்லை என்பதே காலம்காலமாக சொல்லும் காரணம். பெண்களை வீட்டுக்குள் முடக்குவதற்காக மட்டுமே இந்த உலகம் பெண்கள் தனியாக பயணம் செய்ய பாதுகாப்பில்லாததை போன்ற பிம்பம் நம் வீடுகளில் கட்டமைக்கப்படுகிறது.

பிரச்னைகள் கூடும்போது நாம் எல்லோருமே, ’எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிப்போக வேண்டும் போல் இருக்கிறது’ என ஒருமுறையாவது சொல்லி இருப்போம். அப்படி தோழிகளிடம் வாட்ஸ்அப்பில் சொல்லிய ஒருநாள் அதே மனநிலையுடன் இருந்த மற்றவர்களுடனான உரையாடல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுவது சாத்தியமில்லை. ஆனால் நாம் பெண்கள் மட்டும் எங்காவது போய் வருவோம் என்று முடிவானது. பெரிதாக திட்டங்கள் இல்லாமல் நான்கு பெண்கள், ஐந்து நாட்கள் ரயில் பயணமாக சென்னை – விசாகப்பட்டினம் – புபனேஷ்வர் வரை சென்று திரும்பினோம். பெண்கள் மட்டும் தனியாக செல்வதை குடும்பத்தினர் ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. முதலில் திட்டமிடாத பயணமாக முடிவானது. குடும்பத்தில் உள்ளவர்களின் கட்டாயத்தினால் ரயிலில் இருக்கைகள் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தது. மற்றபடி இன்று நினைத்துக் கொண்டாலும் புத்துணர்வும், தைரியமும் கொள்ளும் அளவு வாழ்வின் மிகப்பெரும் அனுபவங்களை தந்தது தனித்து பயணித்த வெறும் ஐந்து நாட்கள்.

பெண்கள் பயணம்
பெண்கள் பயணம்

ஆனந்த விகடனில் தொடராக வந்த ‘ஆண்பால் பெண்பால் அன்பால்’ கட்டுரைத் தொகுப்பில் ஜெயராணி எழுதியிருக்கும் இரண்டு விஷயங்களை நான் அந்த பயணத்தில் உணர்ந்திருக்கிறேன்.

”தயக்கம் இன்றி தலைநிமிர்ந்து நடக்கும் பெண்ணைச் சீண்ட ஆண்கள் துணிவது இல்லை என்பதை, பயணங்களில்தான் கற்க முடியும்.”

”பயணங்கள், உங்களுக்கு மனிதர்களை அறிமுகம் செய்கின்றன… ஆண்களை அல்ல. ஆம், ஆணோ… பெண்ணோ… நாம் ஒரு பயணியாகும்போது பாலற்றவர் ஆகிவிடுகிறோம்.“

பயணங்கள் பாலற்றவர்களாக மட்டுமல்ல, சாதி, மதம், வர்க்கம் கடந்தவர்களாகவும் ஆக்குகின்றன. வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும்போது அவ்வூரின் மக்கள் அவர்களின் மொழி, உணவு, பண்டிகைகள், வாழ்வியல் முறைகள் நம்மீது பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். நம்மை சுற்றி இருக்கும் குறுகிய வட்டம் உடைந்து நாம் இனம், மதம், சாதி, ஊர் எல்லாவற்றையும் கடந்து ’மானுட நேசத்தை’ மட்டுமே உணர்வோம்.

”எல்லாப் பயணங்களும் மனித நேசத்தைத்தான் தேடுகின்றன” என 'வால்காவிலிருந்து கங்கை வரை' எழுதிய ராகுல் சாங்கிருத்யாயன் கூறியுள்ளார்.

ரயில் நிலையம் செல்லும் போது பலருக்கு மனம் உற்சாகமாவதை உணரலாம். இரயிலுக்கு காத்திருக்கும் நாட்களிலும், யாரையாவது வழியனுப்பிய பின்னும் பல மணிநேரம் கூடுதலாக ரயில் நிலையத்தில் உட்கார்ந்து மனிதர்களை கவனிப்பது எனக்கு பிடித்தமானது. ஒரு நல்ல இசையை கேட்பதை போன்று மனதை ஆற்றுப்படுத்தும் விஷயம் பயணம் செய்யும் மனிதர்களின் முகங்களை காண்பது. பல மகிழ்ச்சியான மனங்கள் ஒன்று கூடும் இடத்தில் அதனுள் செல்லும் நமக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. இதையே நண்பர் ஒருவர் வேறு விதமாக கூறினார். மனித உடலில் இருக்கும் செல்கள் இன்னொரு மனிதனது செல்களை சந்திக்க எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும். ஒரு தொடுதல் அல்லது அருகில் இருக்கும் உணர்வு மனித உடம்பில் இருக்கும் செல்களை மகிழ்ச்சிப்படுத்தும். அதனால்தான் மனிதர்கள் திருவிழா போன்ற கூட்டங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அறிவியல் பூர்வமாக இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால், உணர்வு பூர்வமாக நாம் மனிதர்களை சந்திக்கும் போது, தொடுதலை உணரும் பொழுது மகிழ்ச்சி அடைகிறோம். அதுவே மானுட நேசம் அல்லவா?

வாழ்
வாழ்

குடும்பம், உறவுகள், நண்பர்கள் என தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களிடமே அன்பு குறைந்து பற்றில்லாமல் போய்கொண்டு இருக்கிற காலத்தில் அறிமுகம் இல்லாதவர்களுடனான மானுட நேசம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கலாம்.

நாளை நடக்கவிருப்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் இன்றைய வாழ்வை வாழ் எனும் பொருளில் ”நாளைக்கு....நாளைக்கு...” எனும் வசனத்தை #வாழ் திரைப்படத்தில் நாயகனிடம் ஒரு நாடோடிப் பெண் சொல்கிறாள். இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, கேலி செய்யப்படுவதற்கு அத்தகைய கருத்து தற்போதைய குடும்ப அமைப்பை உடைத்துவிடுமோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். ஏனெனில் குறைந்தபட்சம் அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு, அதை நிறைவேற்ற ஓடிக்கொண்டிருக்கும் சமூகமாக கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக மாறியிருக்கிறோம்.

2015-ல் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் தன் குழந்தையுடன் ஆறு ஆண்டுகள் கதாநாயகன் இந்தியா முழுக்க சுற்றுவார். அந்த திரைப்படம் தமிழ்ச் சமூகத்தில் அனுபவத்திற்காக பயணம் செய்வது பற்றிய கருத்தை பரவலாக்கியது எனலாம். வெவ்வேறு நிலப்பரப்பில் வெவ்வேறு மக்களுடன் வாழ்ந்து திரியும் பயணங்களால் கிடைக்கும் வாழ்வியல் அனுபவங்களுக்கு ஈடான கல்வி வேறெதுவும் இன்றுவரை இல்லை.

என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்

ஐரோப்பிய நாடுகளில் பலரும் குடும்பத்துடன் நாடோடிகளை போல் உலகம் சுற்றிவர ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து நம் நாட்டிலும் குடும்ப அமைப்பு, திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது போன்றவற்றிலிருந்து வெளியேறி பயணம் செய்வது மட்டுமே நோக்கமாகவும் அதற்காக மட்டும் பொருள் ஈட்டுவது எனும் வாழ்க்கை முறைக்கு பலரும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாற்றங்கள் சரியா, தவறா, குடும்ப அமைப்பு மற்றும் மனித இனவிருத்திக்கு எதிரானதா என்கிற கேள்விகளும் ஆராய்ச்சிகளும் இருந்தாலும் பயணம் செய்வது மனித இனத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்று.

திரும்புதல் பற்றிய பிரக்ஞை இல்லாத பறத்தலே சுதந்திரம்!