Published:Updated:

மதுரை ஹேங்க்அவுட்: திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை... தெய்விக அழகர் மலைக்கு ஒரு சூழல் சுற்றுலா!

அழகர் கோயிலின் அழகிய தோற்றம்

மதுரையிலிருந்து கொஞ்சம் தூரத்தில் அடர் வனத்துடன் தெய்விகத்தன்மையுடன் இருப்பதுதான் திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை அமைந்துள்ள அழகர்மலை! இயற்கையும் தெய்விகமும் நிறைந்த பயணத்துக்கு ரெடியா?

மதுரை ஹேங்க்அவுட்: திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை... தெய்விக அழகர் மலைக்கு ஒரு சூழல் சுற்றுலா!

மதுரையிலிருந்து கொஞ்சம் தூரத்தில் அடர் வனத்துடன் தெய்விகத்தன்மையுடன் இருப்பதுதான் திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை அமைந்துள்ள அழகர்மலை! இயற்கையும் தெய்விகமும் நிறைந்த பயணத்துக்கு ரெடியா?

Published:Updated:
அழகர் கோயிலின் அழகிய தோற்றம்
எப்போதும் பரபரப்புடன் காங்கிரீட் காட்டுக்குள் வாழும் மதுரை மக்கள், வார இறுதி நாளில் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்துகொள்ள விரும்புவார்கள்.
அழகர் மலை
அழகர் மலை

இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலங்களுக்கு நெடுந்தூரம் செல்வது தற்போது சாத்தியமில்லை என்பதாலும், பட்ஜெட் அதிகம் என்பதாலும் வார இறுதி விடுமுறை நாள்களை முன்பு திரையரங்குகளில் செலவிட்ட மக்கள் தற்போது உணவகங்களில் கழிக்கும் நிலையே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், மதுரைக்கு அருகிலேயே மனதுக்கு இதம் தரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய உள்ளன. மதுரை மாநகரின் நான்கு புறங்களிலும் திருப்பரங்குன்றம், ஆனைமலை, நாகமலை, பசுமலை ஆகியவை அரண்போல் அமைந்துள்ளன. இதில் மதுரையிலிருந்து கொஞ்சம் தூரத்தில் அடர் வனத்துடன் தெய்விகத்தன்மையுடன் இருப்பதுதான் திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை அமைந்துள்ள அழகர்மலை!

கள்ளழகர் கோயில்
கள்ளழகர் கோயில்

திருவிழாக் காலங்களில் மட்டும்தான் பெரும்பாலான மக்கள் வருகை தருகிறார்கள். ஆனால், சாதாரண நாள்களிலும் செல்லக்கூடிய அருமையான சூழல் சுற்றுலாவுக்குச் சிறந்த இடம் அழகர்மலை. கிடைக்கும் தெய்விக அனுபவத்துடன் இது போனஸ் எனலாம்.

மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழவும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத்தான் அக்காலத்தில் மலைகளிலும் அடர்வனத்திலும் ஆலயங்களைக் கட்டி எழுப்பினார்கள்.

அழகர் கோயில் நுழைவு வாயில்
அழகர் கோயில் நுழைவு வாயில்

அந்த அடிப்படையில் அழகர் மலை அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலும், மலையின் மீது சோலைமலை முருகன் கோயில், ராக்காயி கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

மக்கள் அதிகம் வருகை தந்தாலும், இம்மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இயற்கை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும், மாட்டுத்தாவணியிலிருந்தும் அழகர் கோயில் செல்லும் பேருந்துகள் அதிகம் உள்ளன.

மதுரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோயிலுக்கு நகரப் பேருந்துகளில் ஒரு மணி நேரப் பயணத்திலும், சொந்த வாகனம் என்றால் அரை மணி நேரத்திலும் சென்றுவிடலாம். புதூர், சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல், அப்பன் திருப்பதியைக் கடந்து சென்றால் ஜிலுஜிலுவென்று குளிர்காற்று தழுவ ஆரம்பிக்கும்.

பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை

சுற்றிலும் வயல்வெளிகள் பசுமையுடன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அழகர் மலை நுழைவு வாசலில் நம் மூதாதையரான குரங்கார்கள் வரவேற்பார்கள்.

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பெரும்கொண்ட மதில் சுவர்களுக்குள் கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள் கோயிலும், அதன் முன்பு பதினெட்டாம்படி கருப்பு கோயிலும் அமைந்திருக்கும். இதன் பாரம்பரிய கட்டடக் கலையை ரசிக்கலாம்.

அங்கிருந்து மலைமேல் செல்ல அழகான சாலை அமைக்கப்பட்டுள்ளது. வழியெங்கும் குரங்கார்கள் காத்திருப்பார்கள். உணவு வைத்திருந்தால் பிடுங்கிச் சாப்பிடுவார்கள் என்பதால் ஜாக்கிரதை. தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் உள்ள வறண்ட பசுமை மாறாக்காடுகள் இங்கு உள்ளன. அந்த வனத்தினுள்ளே செல்லும் அச்சாலை பழமுதிர்சோலையை அடையும். அங்கிருக்கும் முருகனைத் தரிசிக்கலாம்.

மலைமேல் செல்லும் சாலை
மலைமேல் செல்லும் சாலை

இம்மலையில் அரியவகை மரங்கள் மட்டுமல்லாமல், அரிய வகை மூலிகைகளும் அதிகம் உள்ளன. பயன்படக்கூடிய 250 வகையான மூலிகைகளைக் கொண்ட வனம் இந்த மலைமீது வனத்துறை மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது.

அந்தப் பகுதியில் நின்றாலே மூலிகை வாசம் நம் உடலுக்குள் இறங்கிப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

ராக்காயி அம்மன் கோயில் செல்லும் படிக்கட்டுகள்
ராக்காயி அம்மன் கோயில் செல்லும் படிக்கட்டுகள்

பூத்துக்குலுங்கும் பழமுதிர்சோலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. அங்கு சென்றுவிட்டு மலைப்படிகள் வழியே சிறிது தூரம் ஏறினால் பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட ராக்காயி அம்மன் கோயில் வந்துவிடுகிறது.

மக்களை வரவேற்கும் குரங்குகள்
மக்களை வரவேற்கும் குரங்குகள்

அங்கு அமைந்துள்ள இயற்கையின் அதிசயமான தெய்விகமான நூபுரகங்கையைக் காணலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகக் கூறப்படும் இந்நீர் இங்கிருந்து கீழேயுள்ள கள்ளழகர் கோயிலுக்குச் செல்கிறது. அனுமதி கிடைத்தால் அங்கு நீராடலாம். அங்கு சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை ரசிக்கலாம். கொண்டு சென்ற உணவை அங்கு அமர்ந்து சாப்பிடலாம் குப்பைகளை, பிளாஸ்டிக் பைகளைக் கீழே போடாமல், குறிப்பிட்டுள்ள தொட்டிகளில் போட வேண்டும்.

இங்கு சாலை வழியாக மட்டுமல்லாமல் வனத்தின் வழியே நடந்து வருவதற்கும் பாதை உள்ளது. அதில் சென்றால் இன்னும் அருமையான அனுபவம் கிடைக்கும்.

அழகர் மலை
அழகர் மலை

மாலை நேரம் தொடங்கியதும் மலையிலிருந்து இறங்கிவிடலாம். வருகின்ற வழியில் கொடைக்கானல் போன்ற சுழலை அங்கு காணலாம். இதமான குளிருக்குப் பசியெடுக்கும். அப்படியே கீழே வந்தால் அடிவாரத்திலுள்ள உணவகங்களில் திருப்தியாகப் பசியாறலாம்.

சித்தர்கள் உலவுவதாக நம்பப்படும் தெய்விகம் நிறைந்திருக்கும் அழகர் மலை, குடும்பத்துடன் வந்து இயற்கையை அனுபவித்து ரசிக்க வேண்டிய அழகான மலை.

மலைப்பாதை
மலைப்பாதை

எப்படிச் செல்வது?

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

சொந்த வாகனம் உள்ளவர்களுக்குப் பயண நேரம் குறையும்.

கள்ளழகர் கோயிலிலிருந்து மலைக்கு மேலே செல்ல கோயில் நிர்வாகம் பேருந்து வசதி செய்துள்ளது.

உணவுடன் சேர்த்து ஒரு நபர் சென்று வர 200 ரூபாய் ஆகும்.