Published:Updated:

மதுரை: அழகு நிறைந்த வீடு... அமிர்தமான சாப்பாடு... அதுதான் செட்டிநாடு!

செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை

ஹெரிடேஜ் வீடுகளில் தங்கியிருந்து அவர்களின் பாரம்பர்ய உணவுகளை உண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கும் வகையில் பங்களாக்கள் உள்ளன. ஒரு நாள் சுற்றுலாவில் செட்டிநாட்டில் ஒரு முக்கியமான சில ஊர்களுக்கு மட்டுமே சென்று வர முடியும்.

மதுரை: அழகு நிறைந்த வீடு... அமிர்தமான சாப்பாடு... அதுதான் செட்டிநாடு!

ஹெரிடேஜ் வீடுகளில் தங்கியிருந்து அவர்களின் பாரம்பர்ய உணவுகளை உண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கும் வகையில் பங்களாக்கள் உள்ளன. ஒரு நாள் சுற்றுலாவில் செட்டிநாட்டில் ஒரு முக்கியமான சில ஊர்களுக்கு மட்டுமே சென்று வர முடியும்.

Published:Updated:
செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை
சுற்றுலா என்றாலே மலையும் மலை சார்ந்த குளிர்பிரதேசம், குளிக்கும் பிரதேசம் அல்லது கடலும் கடல் சார்ந்த நெய்தல் பிரதேசமும்தான் போக வேண்டுமா என்ன? பாரம்பர்யமும் அழகும் பெருமையும் வளமும் பிரமாண்டமும் நிறைந்து கிடக்கும் பழங்கால நகரங்களையும் பார்த்துவிட்டு வரலாம். அப்படிப்பட்ட பாரம்பர்யமிக்க முக்கிய நகரங்கள் மதுரைக்கு அருகிலேயே உள்ளன.

அதில் முக்கியமானது சிவகங்கை மாவட்டத்திலுள்ள செட்டிநாட்டுப் பகுதி. வெக்கை பூமியான சிவகங்கை மண்ணை தங்களுடைய பங்களிப்பால் சொர்க்க பூமியாக்கிய நகரத்தார்கள் உருவாக்கிய சிற்றூரும் பேரூரும் இன்றும் அழகு மிளிரக் காட்சியளிக்கின்றன.

காரைக்குடியின் ஆயிரம் ஜன்னல் வீடு
காரைக்குடியின் ஆயிரம் ஜன்னல் வீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்கு அருகில் உள்ள அப்படிப்பட்ட பெருமை மிகுந்த பாரம்பர்ய நகரங்களை இக்காலத் தலைமுறை தெரிந்துகொள்ளும் வகையில் காரைக்குடிக்குச் சென்று வருவோம்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகையின் கீழிருந்த சிவகங்கை சமஸ்தானத்துக்குள் ஒரு குட்டி சமஸ்தானமாக இருந்தன செட்டிநாட்டுப் பகுதிகள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
9 தாய் கிராமங்களைத் தலைமையாகக் கொண்டு தேவகோட்டையிலிருந்து தொடங்கி, கல்லல், சொக்கநாதபுரம்,மதகுப்பட்டி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, காரைக்குடி, திருமயம், கீழசெவல்பட்டி, ஆறாவயல், பள்ளத்தூர், கானாடுகாத்தான், நாட்டரசன்கோட்டை என்று விரிந்து கிடக்கிறது செட்டிநாடு.

தமிழ் மரபை எப்போதும் விட்டுவிடாத செட்டிநாட்டு மக்களின் பழக்க வழக்கத்தினாலும், கட்டிக்காத்து வரும் பண்பாடு, தொழில் திறமை இவற்றுடன் மிகச்சிறந்த உணவுப் பழக்கத்தினாலும் உலகெங்கும் பேர் சொல்லக் கூடிய பகுதியாக இது காட்சி தருகிறது.

அழகப்பா பல்கலைகழகம்
அழகப்பா பல்கலைகழகம்

கண்ணுக்கும் மனதுக்கும் மட்டுமல்ல, வயிற்றுக்கும் இதமளிக்கும் சுற்றுலா என்றால் அது சிவகங்கை பாரம்பர்யச் சுற்றுலாதான். அந்த அளவுக்கு சைவ, அசைவ உணவுகளின் உச்ச ருசியை அளிக்கிறார்கள்.

மதுரையிலிருந்து பூவந்தி வழியாகவும், மேலூர் வழியாகவும் சிவகங்கை மாவட்டத்துக்குச் செல்லலாம். நாம் இப்போது செல்வது காரைக்குடி வட்டாரத்துக்கு என்பதால் மேலூர், கீழவளவு, திருப்பத்தூர் வழியாகக் காரைக்குடிக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். செல்கின்ற வழியில் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி கிராமங்களில் உள்ள நீண்ட நீர்நிலைகளில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தைப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.

வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் பருவநிலை மாறும்போது அடை காப்பதற்காக இங்கு வருகின்றன. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேட்டங்குடி சரணாலயத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஏராளமான பறவைகளைக் காணலாம்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

அங்கிருந்து நாம் பயணித்தால் திருப்பத்தூரைக் கடந்ததும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலைக் காணலாம். வழிபட விரும்புபவர்கள் அங்கே சென்றுவிட்டு, மீண்டும் பயணித்தால் காரைக்குடியை நெருங்குவதற்கு முன் குன்றக்குடி வந்துவிடும். முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு குன்றக்குடியின் ரம்மியமான அழகை ரசித்துவிட்டு மீண்டும் பயணித்தால் சில நிமிடங்களில் கோவிலூர் எல்லையைக் கடந்து காரைக்குடி நம்மை வரவேற்கும்.

காரைக்குடியின் பழைய நகரமென்பது ராமநாதபுரம் சாலையில் செஞ்சையிலிருந்து தொடங்கி செக்காலை சாலை, கல்லுக்கட்டி சாலை வரை குறுகலான தெருக்களுடன் பெரிய பெரிய வீடுகளுடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும்.

பிள்ளையார்பட்டி கோயில்
பிள்ளையார்பட்டி கோயில்

அதன் பின்பு அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய அரசின் சிக்ரி (Central Electro Chemical Research Institute) போன்றவை வந்த பின்பு விரிவாக்கப்பட்ட காரைக்குடி நகரமென்பது இப்போது இலுப்பக்குடி, அரியக்குடி, கண்டனூர், பள்ளத்தூர், சாக்கோட்டை வரை நீண்டு கிடக்கிறது.

காரைக்கடியின் நகர அமைப்பு மாஸ்டர் பிளான் போட்டதுபோல் சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.

சோழநாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிக சமூகத்தினரான நகரத்தார்கள் என்றழைக்கப்பட்டவர்கள், அப்போது ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் நகரம் அழிந்து மிஞ்சிய பொருள்களுடன் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் தேடி வந்தபோதுதான் காரைக்குடியைச் சுற்றியுள்ள 76 ஊர்களில் வசிக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்கிறார்கள்.

காரைக்குடி நகரம்
காரைக்குடி நகரம்

இவர்களுக்கு அப்போதைய ராமநாதபுரம் மன்னர்கள் ஆதரவு அளித்தார்கள். அங்கிருந்தபடியே மியான்மர் (பர்மா), மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்று தொழில்களையும், நிதி நிறுவனங்களையும் தொடங்கி சம்பாதித்த பணத்தில் செட்டிநாட்டுப் பகுதிகளில் அழகும் பிரமாண்டமும் நிறைந்த பங்களாக்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். தமிழகத்திலும் பல தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் தமிழ் இசைச் சங்கங்கள் போன்றவற்றை அமைத்தார்கள்.

இன்று பல நாடுகளில் நகரத்தார்கள் வசித்தாலும், தாங்கள் வாழ்ந்த ஊர்களை மறப்பதில்லை. மற்றவர்களும் அவர்களை மறக்காத வகையில் அவர்கள் வாழ்ந்த வீடுகள், உருவாக்கிய கோயில்கள், பல்கலைக்கழகங்கள் இன்று வரலாறாகக் காட்சி தருகின்றன.

காரைக்குடியில் அழகப்ப செட்டியாரால் ஆரம்பத்தில் கல்லூரியாக உருவாக்கப்பட்டு தற்போது 500 ஏக்கர் பரப்பளவில் அழகப்பா பல்கலைக்கழகமாக இருக்கும் அதன் விஸ்தீரணத்தைப் பார்க்க ஆச்சர்யம் தரும். செடி கொடி மரங்களுடன் பச்சைப் பசேல் என்ற சோலையாகத் திகழும் இக்கல்விச்சாலை தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்கது.

ஆயிரம் ஜன்னல் வீடு
ஆயிரம் ஜன்னல் வீடு

அதைப் பார்த்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கண்ணதாசன் மணிமண்டபத்துக்குச் சென்று கவியரசரின் பெருமையைத் தெரிந்துகொள்ளலாம்.

காரைக்குடியின் முக்கிய அடையாளமான ஆயிரம் ஜன்னல் வீட்டைப் பார்ப்பது அளவில்லா ஆனந்தம் உண்டாக்கக் கூடியது. என்னதான் நாம் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் பிரமாண்டத்தையும் அழகியலையும் நேரில் காண ஆயிரம் கண் வேண்டும். தன் மகளின் ஆசைக்காக நகரத்தார் ஒருவர் அந்தக் காலத்திலேயே அதிகம் செலவு செய்து கட்டிய ஆயிரம் ஜன்னல் வீடு என்கிறார்கள். இது போல பல வீடுகள் செட்டிநாட்டுப் பகுதியில் அமைந்து ஆச்சர்யப்படுத்துகின்றன.

இயற்கைச் சீற்றங்களால் வீடுகள் பாதிக்கக்கூடாது என்று முடிவு செய்த நகரத்தார்கள், தங்கள் வீடுகள், மாளிகைகளை உயரமாகவே கட்டினார்கள். அது மட்டுமல்லாமல், வீட்டில் இயற்கையாகக் குளிர்ச்சி தரும் வகையில் சுண்ணாம்புக்கலவை, முட்டை வெள்ளைக்கரு, கருப்பட்டி கலந்து கட்டினார்கள். காற்றோட்டத்துக்காக அனைத்து வீடுகளிலும் முற்றம் வைத்துக் கட்டினார்கள். வெளிநாடுகளில் தொழில் செய்ததால் அங்குள்ள சலவைக்கற்கள், உயர் தர மரங்கள், கண்ணாடிகளைத் தொண்டித் துறைமுகம் வழியாகக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அதனாலேயே அவர்களின் கட்டுமானங்கள் இன்றுவரை ஆச்சர்யப்படுத்துகின்றன. வெளிநாட்டு டைல்ஸ்களுக்கு இணையாக அருகிலுள்ள ஆத்தங்குடியில் டைல்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அடுத்து, காரைக்குடியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானாடுகாத்தானிலுள்ள அரண்மனையும் கட்டடக்கலைக்குக் கட்டியம் கூறக்கூடியது. ராஜா அண்ணாமலை செட்டியார் கட்டிய இந்த அரண்மனையைக் கட்டடக்கலை வல்லுநர்கள் இன்றும் ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வளவு நுணுக்கம், பிரமாண்டம்.

செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை
செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை

அரண்மனையிலுள்ள பல பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஆனால் இன்றும் அவை புத்தம்புதிதாகக் காட்சியளிக்கின்றன. அரண்மனையின் ஒவ்வொரு பகுதியும் வியப்பைத் தரும். காணாடுகாத்தான் அரண்மனை மட்டுமல்ல, அவ்வூரும் சிறியதும் பெரியதுமான அழகிய வீடுகளால் ஆச்சர்யப்படுத்தும்.

செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள ஒவ்வொரு ஊரும் ஒரே மாதிரியாகவே காட்சி தருவது கூடுதல் வியப்பைத் தருகிறது.

இதுபோன்ற ஹெரிடேஜ் வீடுகளில் தங்கியிருந்து அவர்களின் பாரம்பர்ய உணவுகளை உண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கும் வகையில் பங்களாக்கள் உள்ளன.

ஒரு நாள் சுற்றுலாவில் செட்டிநாட்டில் ஒரு முக்கியமான சில ஊர்களுக்கு மட்டுமே சென்று வர முடியும்.

சரி, பாரம்பர்ய ஊரையும் வீடுகளையும் பார்த்தாச்சு, இனி சுவையான செட்டிநாட்டு உணவை ஒரு கை பார்க்கலாம்.

பாரம்பர்ய செட்டிநாட்டு உணவு
பாரம்பர்ய செட்டிநாட்டு உணவு

காரைக்குடி, தேவகோட்டைப் பகுதிகளில் சிறப்பான உணவகங்கள் நிறைந்துள்ளன. ஆர்டர் கொடுத்தால் வீட்டுச் சமையலும் சாப்பிடலாம்.

ஹோட்டல்களில் விறகடுப்பில் செய்யப்பட்ட நாட்டுக்கோழிக் குழம்பு, கோழி திரக்கல், ஆட்டுக்கறி, வீட்டு மசாலாவில் செய்யப்பட்ட நண்டு, இறால், மீன் கிரேவி வகைகள் மட்டுமல்லாமல், சுவையான சைவ உணவுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.

வரும்போது, தேங்காய்ப்பால் முறுக்கு, அதிரசம், தேன்குழல், தட்டை என செட்டிநாட்டுத் திண்பண்டங்களை வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேரலாம்.

மற்ற சுற்றுலாக்களைவிட இந்தப் பாரம்பர்யச் சுற்றுலா நீண்ட நாள்கள் நினைவில் இருக்கும்.

செட்டிநாட்டு பலகாரங்கள்
செட்டிநாட்டு பலகாரங்கள்

எப்படிச் செல்வது?

மதுரை டு காரைக்குடி தூரம் 88 கிலோ மீட்டர்.

பொதுப்போக்குவரத்தில் செல்ல 1.30 மணி நேரம்.

சொந்த வாகனம் என்றால், 1 மணி நேரம்.

உணவுடன் சேர்த்து நபர் ஒருவர் சென்று வர தோராயமாக 500 ரூபாய் ஆகும்.

ரயில், பேருந்துப் போக்குவரத்து வசதி எப்போதும் உள்ளது.

செட்டிநாட்டுச் சமையல் ருசியை அனுபவித்தால்தான் இந்தப் பாரம்பர்யச் சுற்றுலா நிறைவுபெறும் என்பதால், சாப்பாடு கொண்டுசெல்ல வேண்டாம்.