Published:Updated:

மதுரை ஹேங்கவுட்: மாரியம்மன் தெப்பக்குளம் - நம்ம மக்களுக்கு இதுதாங்க மெரினா பீச்! ஏன் தெரியுமா?

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

பொழுதுபோக்க பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் குடும்பத்துடன் உற்சாகமாகக் களிக்க மாரியம்மன் தெப்பக்குளம்தான் விருப்பமானதாக உள்ளது.

மதுரை ஹேங்கவுட்: மாரியம்மன் தெப்பக்குளம் - நம்ம மக்களுக்கு இதுதாங்க மெரினா பீச்! ஏன் தெரியுமா?

பொழுதுபோக்க பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் குடும்பத்துடன் உற்சாகமாகக் களிக்க மாரியம்மன் தெப்பக்குளம்தான் விருப்பமானதாக உள்ளது.

Published:Updated:
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

கடலே இல்லாத மதுரையில் மக்கள் அலை எழும்பும் வகையில் எழுகடல் தெரு இருக்கிறது. அதுபோல் தினமும் மெரினா பீச் போல மக்கள் குவியும் பிக்னிக் ஸ்பாட் ஒன்று இருப்பது தெரியுமா?

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

மாலை நேரமானால் குடும்பத்தோடு வெளியில் சென்று உலாவி விட்டு, பலகாரம் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் பெரும்பாலான மதுரைக்காரர்கள்.

அதிலும் விடுமுறை நாள், வார இறுதி நாள்களென்றால் சொல்லவே வேண்டாம். பூங்காக்களையும் தியேட்டர்களையும் ஹோட்டல்களையும் நிரப்பிவிடுவார்கள். இது தெரிந்துதான் என்னவோ, மதுரை மக்களுக்குப் பயன்படட்டுமே என்று யோசித்து மன்னர்கள் உருவாக்கியதுதான் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
'எல்லா ஊரிலும்தான் தெப்பக்குளம் இருக்கு, அதெல்லாம் ஒரு பிக்னிக் ஸ்பாட்டா?' என்று பொத்தாம்பொதுவாகக் கேட்பவர்கள் ஒருமுறை மதுரை வந்து மாரியம்மன் தெப்பக்குளத்தைப் பார்த்தால் அசந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு பிரமாண்டமும் அழகும் நிரம்பியது.

இதுதான் மதுரை மக்களின் மெரினா பீச் போல நீண்ட காலமாக இருந்துவருகிறது. காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உபயோகமாகவும், மதியம் முதல் உள்ளூர் மக்களுடன் சுற்றுலாப் பயணிகளும் வந்து அனுபவித்துச் செல்லும் சொர்க்கமாகவும் மாறி ஜனத்திரளால் நிரம்பி வழிகிறது.

தெப்பக்குளம் நடுவே விநாயகர் கோயில்
தெப்பக்குளம் நடுவே விநாயகர் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கட்டுவதற்கு திருமலை மன்னர் ஆட்சியில் இங்கு மண் எடுத்தபோது உருவான பெரும் பள்ளம்தான் 304 மீட்டர் நீளமும், அதே அளவு அகலமும் கொண்ட பிரமாண்ட தெப்பக்குளமாக மாறியது என்று வரலாறு சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குளத்தின் பக்கவாட்டுச் சுவரின் உயரம் 15 மீட்டர், நான்கு பக்கமும் மொத்தம் 12 இடங்களில் பிரமாண்ட படிக்கட்டுகளும் பெரிய அளவில் அமைந்துள்ளன. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும், ஒரு இஞ்ச் அளவு கூடாமலும் குறையாமலும் கேக்கை வெட்டியது போல் அவ்வளவு அழகாக நுணுக்கமாகக் குளம் வெட்டியுள்ளார்கள்.

இந்தப் படித்துறையிலிருந்து பார்த்தால் அத்துறையில் உள்ளவர்கள் அடையாளம் தெரிய மாட்டார்கள், அவ்வளவு விஸ்தீரணம்.

குளத்தின் மையத்தில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் அழகான மரங்களுடன் செடிகொடிகள் பூத்துக் குலுங்க அதன் நடுவே விநாயகர் கோயில் அழகாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தெப்பத்திருவிழாவில் இன்னும் ஜெகஜோதியாகக் காட்சியளிக்கும் தெப்பக்குளம்.

தெப்பக்குளத்தை ரசிக்கும் மக்கள்
தெப்பக்குளத்தை ரசிக்கும் மக்கள்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை நகருக்குள் ஓடிவரும் வைகை ஆறு வண்டியூர் அருகே செல்லும்போது தெப்பக்குளத்துக்கு நீர் வருவதற்காக பூமிக்கு அடியில் அக்காலத்திலயே சுரங்கக் கால்வாய் அமைத்துள்ளனர். சமீபகாலத்தில் அதன் வழியாகத் தண்ணீர் வராமல் தூர்ந்துபோக, மழை இல்லாத காலங்களில் கிரிக்கெட் மைதானமாகக் காட்சியளித்த தெப்பக்குளம், சுரங்கக் கால்வாய் சரி செய்யப்பட்டு கடந்த 3 வருடமாக முழுமையாக நீர் நிரம்பி அழகாகக் காட்சியளிக்கிறது.

விரகனூர் முதல் கோச்சடை, அவனியாபுரம் முதல் ஆனையூர் என 20 கிலோ மீட்டர் சுற்றளவில் விரிந்து பரந்துள்ள மதுரை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல, மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கொட்டாம்பட்டி, பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் வட்டார மக்களுக்கு அதிக செலவில்லாமல் வந்து செல்லக்கூடிய பிக்னிக் ஸ்பாட் மாரியம்மன் தெப்பக்குளம்தான்.

தெப்பக்குளம்
தெப்பக்குளம்
அரவிந்தன் (மாணவ புகைப்படக்காரர்)

பொழுதுபோக்க பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் குடும்பத்துடன் உற்சாகமாகக் களிக்க மாரியம்மன் தெப்பக்குளம்தான் விருப்பமானதாக உள்ளது.

மதியத்துக்கு மேல் மெல்ல வருகின்ற கூட்டம், தெப்பக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள விசாலமான மார்பல் தளத்தில் பட்டறையைப் போட அப்படியே நாலா பக்கமும் திருவிழாவுக்கு வந்ததுபோல் மனிதர்கள் குவியத் தொடங்கிவிடுவார்கள். மாலை 4 மணி முதல் சுற்றியுள்ள கட்டடங்களுக்குள் சூரியன் மறைந்துவிட தெப்பத்திலிருந்து குளிர் காற்று மேலெழும்பி வந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்கும். சுற்றி நடந்து நடந்து தெப்பத்தின் அழகை ரசிப்பவர்களும், பெட்ஷீட் விரித்துப் படுத்துக்கொண்டு ரசிப்பவர்களையும் காணலாம்.

தெப்பக்குளத்தின் சுற்றுச்சாலை முழுவதும் அமைந்துள்ள பல்வேறு வகையான சிற்றுண்டி, பலகாரக் கடைகள், பலவகையான சூப் மற்றும் கூழ், பழச்சாறு கடைகள் அனைத்தும் பசியாற்றும்.

குழந்தைகள் விளையாட பொழுது போக்கு மையங்களும் உண்டு. விளையாட்டுப் பொருள்கள் உட்பட பல்வேறு கடைகள், ஷாப்பிங் பிரியர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சௌராஷ்டிர மக்களின் கைவண்ணத்தில் உருவான தேங்காய் போலி, முள்ளு முருங்கை வடை, மசாலா சுண்டல் நீங்கள் இருக்கும் இடத்துக்கே தேடி வரும்.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

தற்போது படகு சவாரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஜாலியாக அதிலும் ஒரு ரவுண்ட் வரலாம். இரவு நேரத்தில் மின்னொளியில் தெப்பக்குளத்தைப் பார்ப்பது அவ்வளவு அழகாக இருக்கும். இரவு 11 மணி வரையானாலும் வீட்டுக்குத் திரும்ப மனமிருக்காது. மாட்டுத்தாவணி - பெரியார், விரகனூர்- பெரியார் சாலை வழித்தடத்தின் முக்கிய மையமாக உள்ளதால் எல்லா நேரமும் போக்குவரத்து இருக்கும்.

பக்கத்திலயே தரமான சுவையான சைவ, அசைவ உணவகங்கள் உள்ளன. முழுக்கட்டு கட்ட விரும்புவர்கள் அங்கு செல்லலாம்.

மதுரையைச் சுற்றிப் பார்க்க விரும்புவர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு ஒரு நாள் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் இதைச் சுற்றிப் பார்த்தால் மட்டும் போதாது. இருந்து அனுபவிக்க வேண்டும்.

மதுரை மாநகருக்குள்ளேயே இருக்கும் மக்கள் செல்லும் ஹேங் அவுட் பிக்னிக் ஸ்பாட்டாக மாரியம்மன் தெப்பக்குளம் இருப்பது ஆச்சரியமானது.

மதுரைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களும் தெப்பக்குளத்துக்கு ஒருமுறை வருகை தந்து அதன் பிரமாண்டத்தையும், அழகையும் ரசிக்கலாம். அந்த அனுபவம் வாழ்க்கை முழுவதும் மறக்காது.

தெப்பக்குளம் நடுவே விநாயகர் கோயில்
தெப்பக்குளம் நடுவே விநாயகர் கோயில்

எப்படிச் செல்வது?

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார், அண்ணா, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களிலிருந்து எப்போதும் தெப்பக்குளத்துக்குப் பேருந்து வசதி உள்ளது. ஆட்டோ வசதிகளும் உள்ளன. மதுரைப் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்து வசதி உள்ளது.

உள்ளூர் மக்கள் சென்று வர ஒரு நபருக்கு உணவுடன் சேர்த்து 150 ரூபாய் செலவாகும். பக்கத்து ஊர் மக்களுக்கு 250 ரூபாய் செலவாகும்.

சொந்த வாகனத்திலும் வரலாம்.

10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ஸ்நாக்ஸ், சிற்றுண்டிகள் தாராளமாகக் கிடைக்கின்றன. அருகில் அசைவத்துக்கு ரியாஸ், கிருஷ்ணன் ஹோட்டல்களும், சைவத்துக்கு சபரீஸ் உட்பட பல ஹோட்டல்களும் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism