Published:Updated:

மதுரைக்கு அருகில்... அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! காரங்காடு போலாமா?!

காரங்காடு படகுப் பயணம்

மதுரையிலிருந்து சாலை வழியாக சிவகங்கை, திருவாடனை, மணக்குடி வழியாகச் சென்றால் 3 மணி நேரத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு மீனவ கிராமத்தை அடைந்துவிடலாம்.

மதுரைக்கு அருகில்... அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! காரங்காடு போலாமா?!

மதுரையிலிருந்து சாலை வழியாக சிவகங்கை, திருவாடனை, மணக்குடி வழியாகச் சென்றால் 3 மணி நேரத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு மீனவ கிராமத்தை அடைந்துவிடலாம்.

Published:Updated:
காரங்காடு படகுப் பயணம்

மதுரை மாவட்டமே இயற்கை அழகும் வரலாறும் நிறைந்து கிடக்கும் அற்புத பூமி என்றால், மதுரையின் அருகிலுள்ள மாவட்டங்களோ மலையும் வனமும் கடலும் நிறைந்து இயற்கை அன்னை தாலாட்டும் தொட்டிலாகக் காட்சியளிக்கின்றன.

மதுரையைச் சுற்றியுள்ள கொடைக்கானல் போன்ற பிரபலமான மலைப்பிரதேசங்களுக்கும் ராமேசுவரம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளுக்கும் நாம் சென்று வந்திருக்கிறோம்.

காரங்காடு சூழல் சுற்றுலா மையம்.
காரங்காடு சூழல் சுற்றுலா மையம்.

அதேநேரம் கடலுக்குள் பயணித்து கடலுக்குள் உள்ள அற்புதங்களைக் கண்டு களித்தால் எப்படி இருக்கும்..?அப்படியொரு இயற்கை எழில் நிறைந்த கடல் பயணத்துக்குத்தான் இப்போது செல்லப்போகிறோம்.

காரங்காடு அலையாத்திக்காடுகள்..!

மதுரையிலிருந்து சாலை வழியாக சிவகங்கை, திருவாடனை, மணக்குடி வழியாகச் சென்றால் 3 மணி நேரத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு மீனவ கிராமத்தை அடைந்துவிடலாம்.

கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடுகளையும், சென்னைக்கு அருகேயுள்ள முட்டுக்காட்டைப் பற்றியும்தான் நம்மில் பலருக்குத் தெரியும். அதற்கு இணையாக ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடும் மிக அழகானது.
காரங்காடு அலையாத்தி காடுகள்
காரங்காடு அலையாத்தி காடுகள்

மலையிலும், நன்னீர் நிலத்திலும்தான் காடுகள் உருவாகும் என்ற நிலையில் அதற்கு மாறாக உப்பு நீர் சூழ்ந்த கடலில் உருவாகி பிரமிப்பூட்டுவதுதான் அலையாத்திக்காடுகள்.

உலகில் மூன்று பங்குள்ள கடலே ஒரு அதிசயம்... அதில் வாழும் பலவகையான உயிரினங்கள் அதைவிட அதிசயம்... அதிலும் ஒரு பேரதிசயம் கடலுக்குள் பரந்து விரிந்த அலையாத்திக்காடுகள்!

கடல் உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வரும் இக்காடுகள் கடலோர மக்களை புயல், சூறாவளி, ஆழிப்பேரலை (சுனாமி) போன்ற கடல் சீற்றங்களிலிருந்து காக்கும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறது.

தில்லைவனம், சுரப்புன்னை, கண்டன் காடுகள் எனப் பலவகைப் பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நில அலையாத்திக் காடுகள் மாங்ரோவ் காடுகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
காரங்காடு
காரங்காடு

பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய தொண்டியைக் கடல் சீற்றத்திலிருந்து காரங்காட்டிலுள்ள அலையாத்திக் காடுகளே காத்துவந்ததாகச் சொல்கிறார்கள்.

மணக்குடியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கிளைச்சாலையில் காரங்காட்டுக்குப் பயணிக்கும்போதே இதமாக வீசும் கடல் காற்று நம் முகத்தைப் புத்துணர்ச்சியாக்கி விடுகிறது.

காரங்காட்டிலிருந்து 75 ஹெக்டேர் பரப்பளவில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் கடலுக்குள் வளர்ந்து நிற்கின்றன அலையாத்திகள்.

இதன் உள்ளே சென்று கடல் வனத்தின் அழகை ரசிக்க 3 கி.மீ தூரம் படகில் பயணம் செல்ல வேண்டும். கடல் வளம் கொள்ளை போகாமல் தடுக்க மீன்வளத்துறையிடமிருந்த கடலோரப்பகுதிகள், தமிழக வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் இயற்கை அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.

காரங்காடு சுற்றுலா மையம்
காரங்காடு சுற்றுலா மையம்
சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவதற்காக வனத்துறையினரும் காரங்காடு கிராம மக்களும் இணைந்து 'காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு' என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.

இவ்வமைப்பின் மூலம் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுகிறது. இதில் படகுச் சவாரி, கயாக்கிங் (Kayaking) எனப்படும் துடுப்புப் படகுச் சவாரி, Snorkeling எனப்படும் கடலுக்கடியில் உள்ள உயிரினங்களைக் காண்பது போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வெளிநாடுகளில் மட்டுமே அனுபவிக்க முடிந்த இந்த ஏற்பாடுகள் மதுரைக்கு அருகே கிடைப்பது மகிழ்ச்சியானது.

கரையோரம் தொடங்கி பாக் நீரிணைப்புப் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்ப பாதுகாப்புடன் கூடிய படகுப் பயணம் அருமையாக இருக்கும். இப்படிப் படகில் செல்லும்போது அலையாத்திக் காடுகளுக்கு இடையே இரை தேடியபடி செல்லும் சதுப்புநிலக் காட்டுப் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, குதிரைத் தலைக் கோட்டான், கோட்டான், ஆலாக்கள், கடற்புறாக்கள், செந்நாரை, பவளக்காலி மற்றும் கொக்குகளையும் கடலுக்கு மேல் எட்டிப் பார்க்கும் மீன்களையும் காணலாம்.

காரங்காடு தொலை நோக்கு கோபுரம்
காரங்காடு தொலை நோக்கு கோபுரம்
உ.பாண்டி

பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளின் அழகினை அங்கு அமைக்கப்பட்டுள்ள உயரமான கோபுரத்தின் மீதிருந்து கண்டு ரசிக்கலாம்.

அதன்பின்பு திரும்பி வரும்போது கடலுக்கு அடியில் வளரும் கடற்செடிகள், நட்சத்திர மீன்களை கடலுக்குள் மூழ்கியபடி காணலாம். இதற்காக வடிவமைக்கப்பட்ட முகக்கண்ணாடி, மூச்சு விடும் கருவிகள் வழங்கப்படுகின்றன. மீன் தொட்டியில் மட்டும் உயிருள்ள மீன்களைப் பார்த்தவர்களுக்கு கடலுக்கடியில் கடல் தாவரங்களையும், அதன் உள்ளே வாழ்கின்ற மீன் இனங்களையும் காண்பது வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

அலை அதிகமில்லாமல் அமைதியான ஏரி போன்று காட்சியளிக்கும் நீலக்கடல் மீது நாமே இயக்கும் துடுப்புப் படகுகளும் உள்ளன. அதேநேரம் பாதுகாப்பு மிதவைகளை அணிந்துகொண்டுதான் துடுப்புப் படகுப் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

கடல் கொண்டாட்டத்துக்குப்பின் கடுமையான பசி எடுக்கும். உணவு கொண்டு வந்திருந்தால் கவலையில்லை. படகுப் பயணத்திற்கு முன் கிராம மக்களிடம் ஆர்டர் கொடுத்துவிட்டுச் சென்றால் வெரைட்டியான ப்ரெஷ் கடல் உணவுகளை சுடச்சுட ஒரு வெட்டு வெட்டலாம்.

காரங்காடு படகுப் பயணம்
காரங்காடு படகுப் பயணம்

அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் படகுச் சவாரி செய்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருமையான இந்தக் கடல் பயணத்துக்கு ஒருமுறை வந்து பாருங்கள்.

எப்படிச் செல்வது?

மதுரையிலிருந்து பொதுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மூலம் தொண்டி அல்லது திருவாடாணைக்கு வந்து அங்கிருந்து மணக்குடி செல்லும் பேருந்தில் மாறி காரங்காட்டுக்குச் செல்லலாம். சொந்த வாகனத்தில் வந்தால் நேரடியாக காரங்காடு செல்லலாம்.

பயண தூரம்: 117 கி.மீ.

பயண நேரம்: அதிகபட்சம் 3 மணி நேரம்.

தனியாக ஒருவர் சென்று வர, உணவுடன் 700 ரூபாய் செலவாகும்.

நல்ல மீன் உணவகங்கள் திருவாடாணை, உப்பூர், தொண்டியில் உள்ளன.

காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழுவின் 7598711620 என்ற எண்ணில் முன்பதிவு செய்தும் வரலாம்.