கடந்த 12 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. மதுரை - போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததது உள்ளிட்ட காரணங்களால் பணி துரிதமாக நடக்காமல் காலதாமதம் ஆனது. அரசியல் கட்சியினர், தேனி மாவட்ட வர்த்தகர் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ரயில் பாதை பணியை விரைவில் முடித்து ரயில் இயக்கப்பட வேண்டும் எனப் போராடி வந்தனர்.

இதையடுத்து இத்திட்டத்துக்கு ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன. முதல்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி - ஆண்டிபட்டி மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி - தேனி எனப் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் முதல் மதுரை - தேனி ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நான்காம் கட்டமாகத் தேனி - போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இன்ஜின் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் உள்ளிட்ட குழுவினர் தேனி - போடி இடையே பெட்டிகளுடன் கூடிய ரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை நடத்தினர். இதையடுத்து மதுரை - போடி வரை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே காலை 8.05 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சி நிறுத்தம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி சென்று தேனிக்குக் காலை 9.35 மணியளவில் சென்றடையும்.

இதேபோல தேனியில் மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை ரயில் நிலையத்துக்கு இரவு 7.50 மணிக்கு வருகிறது. இதனிடையே மதுரையிலிருந்து தேனிக்கும், தேனியிலிருந்து மதுரைக்கும் இருபுறமும் ஒரே சமயத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும், இதனுடன் சேர்ந்து சென்னை ரயிலும் இயக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி முதல் மதுரை - போடி ரயில் காலை 8.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு தேனிக்குக் காலை 9.35 மணிக்கு வந்து, அங்கிருந்து காலை 10.30 மணிக்கு போடி சென்றடையும். இதேபோல போடியில் 5.50 மணிக்குப் புறப்படும் ரயில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை ரயில் நிலையத்துக்கு இரவு 7.50 மணிக்கு வரவிருக்கிறது.
இதுபோக வண்டி எண் 20601, சென்னை சென்ட்ரலில் இருந்து 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து 9.35 மணிக்கு போடி வந்தடையும் எனவும், வண்டி எண் 20602 போடி ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.55 மணிக்குச் சென்னை சென்றடையும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் பேசினோம். "ஏற்கெனவே பரிசீலனையிலிருந்த திட்டத்துக்கு தெற்கு ரயில்வே அப்ரூவல் வழங்கியுள்ளது. இந்தத் தகவல் உறுதியானதுதான் என்ற போதிலும் மதுரைக் கோட்டத்துக்கு இதுவரை முறையான உத்தரவுகள் வரவில்லை. விரைவில் அதற்கான உத்தரவுகள் கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்துவிட்டால் சென்னை டு போடி ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், போடி டு சென்னை ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளிலும் இயக்கப்படும்" என்றனர்.