Published:Updated:

மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?

சின்ன சுருளி அருவி

மதுரையிலிருந்து ஒருநாளில் சென்று வருவதற்கு ஏற்ற ஓர் அழகான சுற்றுலாத் தலம் சின்ன சுருளி அருவி!

மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்... குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?

மதுரையிலிருந்து ஒருநாளில் சென்று வருவதற்கு ஏற்ற ஓர் அழகான சுற்றுலாத் தலம் சின்ன சுருளி அருவி!

Published:Updated:
சின்ன சுருளி அருவி

மதுரையிலிருந்து ஏதேனும் ஜில் பிரதேசத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் கொடைக்கானலும், ஜில்லென்ற அருவிக் குளியலுக்குக் குற்றாலமும் கும்பக்கரையும் சுருளி அருவியும்தான் நினைவுக்கு வரும்.

இந்த இரண்டு அனுபவத்தையும் ஒருங்கே பெற்ற, குறைவாகச் செலவு வைக்கும், அதே சமயம் ஒருநாளிலே சென்று வரக்கூடிய ஒரு பிக்னிக் ஸ்பாட்தான் இந்தச் சின்ன சுருளி!

அழியாத இயற்கையால் மனதுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் சின்ன சுருளிக்குப் போய் வருவோமா?

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏஞ்சலாகக் குறிப்பிடப்படும் மேகமலை அடிவாரப்பகுதியில்தான் சின்ன சுருளி அருவி அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவை ஒட்டியிருக்கும் கோம்பைத்தொழு என்ற கிராமம்தான் சின்ன சுருளி அருவியின் நுழைவாயில்.

சின்ன சுருளி
சின்ன சுருளி

மதுரையிலிருந்து 95 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சின்ன சுருளிக்கு சொந்த வாகனம் மூலம் 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்ல ஆண்டிபட்டி சென்று அங்கிருந்து கடமலைக்குண்டுக்குச் சென்று சின்ன சுருளியை அடையலாம்.

மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆரம்பக் காலகட்டத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமே அருவிக்குச் சென்று வந்தனர். ஆனால், தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள், சின்ன சுருளியைத் தேடி வரும் அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது உள்ளது.

ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் 'சுருளி அருவி' பிரபலமாக உள்ளதால் அது பெரியது என்பதால், இதை 'சின்ன சுருளி' என்றும் அதேபோல கூடுதல் இயற்கை அழகுடன் இளமையாக இது இருப்பதால் 'சின்ன சுருளி' என்றும் அழைக்கிறார்கள்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்குச் சென்று குளிக்கலாம். வனப்பகுதி வழியே நடந்து சென்று அருவியை அடைவதாலும் அருவியைச் சுற்றி பிரம்மாண்ட வனப்பகுதி அமைந்திருப்பதாலும், சின்ன சுருளியை சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

சில நேரங்களில் மலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள் அருவியையும் தழுவிச் செல்லும். அப்போது அருவியில் குளிக்கும் அனுபவம் வேறெங்கும் கிடைக்காத ஒன்று. அதனால்தான் சின்ன சுருளி அருவியை ‘Cloud Land Falls' எனவும் அழைக்கின்றனர்.
சின்ன சுருளி
சின்ன சுருளி

ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம்!

திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்ட மக்கள் குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் சின்ன சுருளி. பிரச்னை என்னவென்றால், பெண்களுக்கு உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

உணவு எடுத்துவந்து குடும்பத்தோடு சாப்பிடலாம். ஆனால், அவ்விடத்தின் அழகை ரசிக்கும்போது பசி எடுக்காது. அருகிலுள்ள கடமலைக்குண்டு, ஆண்டிபட்டியில் கிராமத்து மண்வாசனையுடன் ருசியான உணவகங்கள் உண்டு.

மெல்ல வளர்ந்துவரும் சுற்றுலாத் தலம் இது! அருவிக்குச் செல்லக் கட்டணம் வசூல் செய்வதால் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோம்பைத்தொழு கிராம மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்குத் தமிழகச் சுற்றுலாத்துறையும் அக்கறை காட்ட வேண்டும்.

சீசன் எப்போது?

கோடைக்காலத்தில் பெரும்பாலான அருவிகள் வறண்டுவிடும் நிலையில், சின்ன சுருளி அருவி மட்டும் விதிவிலக்கல்ல. மேகங்கள், சாரல், குளிர் காற்று என ரம்மியமான சூழலை அனுபவித்துக்கொண்டே அருவியில் குளிக்க வேண்டும் என்றால், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம்வரை அருவிக்கு வரலாம். அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும், அருவியில் நீர் வரத்து அதிகரித்தே காணப்படும்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் அருவி உள்ளதால், பொதுமக்களில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் நீர் வரத்து அதிகரிக்கும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும். எனவே, ஒருமுறை அருவிக்கு வந்தால், கோம்பைத்தொழு கிராம வாசிகளிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அருவி நிலவரத்தைத் தெரிந்துகொண்டு வருவது நல்லது.

நல்ல காற்றை சுவாசிக்கவும், இயற்கையோடு இயந்து வாழவும், மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகக் குளிக்கவும் சின்ன சுருளி நல்ல அனுபவத்தைத் தரும்.

சின்ன சுருளி அருவி
சின்ன சுருளி அருவி

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தளர்த்தப்படும் என்கிறார்கள். இப்போது இல்லாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும்போது சின்ன சுருளிக்குச் சென்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?

  • மதுரையிலிருந்து சின்ன சுருளி செல்ல தூரம்: 95 கி.மீ

  • 2.30 மணி நேரத்தில் சென்று சேரலாம்.

  • சொந்த வாகனத்தில் செல்வோருக்குப் பயண நேரம் மிச்சமாகும்.

  • பொதுப் போக்குவரத்தில் செல்ல நினைப்பவர்கள் மதுரையிலிருந்து ஆண்டிபட்டி, அங்கிருந்து கடமலைக்குண்டு செல்ல வேண்டும். தேனியிலிருந்தும் கடமலைக்குண்டுக்கு பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து மினி பஸ்கள், ஆட்டோக்களில் சின்ன சுருளிக்குச் செல்லலாம்.

  • பொதுப் போக்குவரத்தில் செல்பவர்களுக்கு உணவுடன் சேர்த்து ரூ.500 செலவாகும்.

  • சாப்பாடு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டிபட்டி, கடமலைக்குண்டில் மட்டும் நல்ல உணவகங்கள் உள்ளன.