Published:Updated:

ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

ஜோதி விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதி விக்னேஷ்

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஊர் சுற்றும் மதுரைக்காரர்!

ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஊர் சுற்றும் மதுரைக்காரர்!

Published:Updated:
ஜோதி விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதி விக்னேஷ்
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

பெயர்: ஜோதி விக்னேஷ்

பிறந்த ஊர்: மதுரை

புகுந்த ஊர் : பெங்களூரு

தெரிந்த பாஷைகள் : கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளும்

வாகனம் : மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோ

பயணிக்க வேண்டிய தூரம் : சுமார் 20,000 – 25,000 கிமீ வரை

இதுவரை பயணித்தது : சுமார் 19,000 கிமீ (7.5 மாதங்களுக்குள்)

சிங்கிள் சார்ஜிங் ரேஞ்ச் : 80–100 கிமீ

ஒரு மாதத்துக்கான சுமாரான பயண தூரம்: 2,750 கிமீ

ஒரு நாளில் பயணித்த அதிகபட்ச தூரம்: 314 கிமீ

மாதச் செலவு : 20,000 – 25,000 வரை (உணவு, தங்கும் இடம், ஏனைய செலவுகள்)

நோக்கம் : நீண்ட பயணத்துக்கான கின்னஸ் சாதனைக்கு முயற்சி, சுற்றுச்சூழல் மாசு

ஜோதி விக்னேஷுக்குப் போன் செய்தால்… ‘‘ராஜஸ்தானில் இருக்கேன்.. அமிர்தசரஸில் இருக்கேன்… குஜராத் பார்டரில் இருக்கேன்!’’ என்று வெரைட்டியாகச் சொல்வார்.

ஓவர் பில்டு அப்பெல்லாம் இல்லை; நிஜம்தான் – ஜோதி விக்னேஷ் இப்போது ஒரு ஆல் இந்தியப் பயணத்தில் இருக்கிறார். பெங்களூருவில் பணிபுரியும் ஜோதி விக்னேஷ், ஒரு சுத்தத் தமிழர். இது அவருக்கு 3–வது ஆல் இந்தியா பயணம். இதுவரை இரண்டு முறை ட்ரிப் அடித்து விட்டார். அவையெல்லாம் சும்மா ஒரு கேஷுவல் ட்ரிப்பாகவோ… ஜாலி ட்ரிப்பாகவே இருந்திருக்கிறது. முதல் பயணம் – பைக்கில். இரண்டவாது – மாருதி சுஸூகி பெலினோவில். ஆனால், இந்த ட்ரிப் அப்படி இல்லை. ‘வெட்டியா சுத்துறதுக்கு எதுனா சாதனை பண்ணிப்புடலாமே’ என்று அவர் மண்டையில் ஸ்பார்க் அடிக்க… தனது மஹிந்திரா ட்ரியோ எனும் 3 வீலரில்.. அதாவது ஆட்டோவில் சத்தமே இல்லாமல் கிளம்பிவிட்டார். சத்தமே இல்லாமல் என்றால்… கொஞ்சம்கூட சத்தமே இல்லாமல்… ஆம், ஓர் எலெக்ட்ரிக் ஆட்டோவில்!

சாதாரண பெட்ரோல்/டீசல் வாகனங்களில் ஊர் சுற்றுவது என்றாலே பல நேரங்களில் சோதனை சுழன்றடிக்கும். எலெக்ட்ரிக் வாகனம் என்றால்… சார்ஜிங்தான் பெரிய சவாலே! அதையெல்லாம் சமாளித்து, இப்போது பயணம் புரிந்து கொண்டிருக்கிறார் ஜோதி விக்னேஷ். தனது புகுந்த ஊரான பெங்களூருவில் இருந்து ஜோதி கிளம்பி நான் போன் செய்தவரை 7 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. கடைசியாக நான் போன் செய்தபோது, ராஜஸ்தானில் உள்ள பிக்கானேரில் ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொன்னார் ஜோதி.

சாதனைப் பயணம் என்கிறீர்களே என்றால்… சாதா சாதனை இல்லை; கின்னஸ் சாதனை! ஆம், கின்னஸில் இடம் பெற வேண்டுமென்றால், ஒருவர் எலெக்ட்ரிக் வாகனத்தில் 19,000 கிமீ–களைக் கடந்திருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு அவர் லடாக்கில் இருந்தபோது போன் செய்தேன். 17,000 கிமீ–யைக் கடந்திருந்ததாகச் சொன்னார்.

ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

ஏற்கெனவே நாம் சொன்னபடி, சார்ஜிங்தான் பெரிய பிரச்னையே! அதுவும் ஆட்டோ எனும்போது பயணத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உண்டு. ஒரு சிங்கிள் சார்ஜுக்கு 100 கிமீ–க்கு மேல் எலெக்ட்ரிக் ஆட்டோவின் ரேஞ்ச் இருக்காது. அதுவும் காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும், மலையேற்றங்களிலும் 75 கிமீதான் ரேஞ்ச் கிடைக்குமாம். அப்படி கிடைக்கிற ஒவ்வொரு கேப்பிலும் சார்ஜரைத் தூக்கிக் கொண்டு… ஆட்டோவில் பவர் ஏற்றி… ‘எங்க நிக்குமோ’ என்கிற பீதியுடன் பயணிப்பது… அதுவும் கின்னஸ் சாதனை புரிவதெல்லாம் ஜோதி விக்னேஷ் போன்ற வெறித்தனமான வாண்டர்லஸ்ட்களால் மட்டும்தான் முடியும்!

அந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் பயணிப்பதிலும் குட்டிக் குட்டிச் சாதனைகள் புரிந்திருக்கிறார் ஜோதி. ஆம், ஒரே நாளில் … ஒவ்வொரு 100 கிமீ–க்கும் ஒரு முறை… தொடர்ந்து 3 தடவை சார்ஜ் போட்டு சுமார் 315 கிமீ கடந்து.. ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் வந்தடைந்திருக்கிறார். கூடவே ஆட்டோமொபைலில் ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்வார்களே… அதுபோல், பயணத்தில் ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லக் கூடிய பல சாதனைகளையும் புரிந்திருக்கிறார் ஜோதி விக்னேஷ். சீன எல்லைக்குப் பக்கத்தில் உள்ள பம்லா பாஸ் எனும் இடம் வரை எந்த ஆட்டோவின் டயர் தடங்களும் பதிந்ததே இல்லை; அங்கே ஆட்டோவில் தடம் பதித்த முதல் தமிழர் – ஜோதி விக்னேஷ். இதை வியந்து பாராட்டி, அங்குள்ள நம் ஆர்மி பிரிகேடியர் ஒருவர், ஜோதியின் எலெக்ட்ரிக் ஆட்டோவுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டதைப் பெருமையாகச் சொன்னார்.

பெங்களூரு… KA ரிஜிஸ்ட்ரேஷன் ஆட்டோ… கன்னடம் என்றதும் ஜோதி விக்னேஷை கன்னடர் என்று பலர் நினைத்திருக்கக் கூடும். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஜோதி விக்னேஷை முதலில் கஷ்டப்பட்டு போனில் பிடித்து… ‘‘நானு ஜோதி ஜொத்தே மதனதுத்தினேனனே’’ என்று அரைகுறைக் கன்னடத்தில் பேசினால்… ‘‘ஹலோ... நான் சுத்தத் தமிழ். சொந்த ஊர் மதுரை. கோரிப்பாளையத்தில்தான் படிச்சேன். அப்பா CISF ஆபீஸர். அதனால், அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆவாரு. கிட்டத்தட்ட இந்தியாவோட அத்தனை பாஷையும் தெரியும். இப்போ காஷ்மீர்ல இருக்கேன். செம குளிரு!’’ என்றார் ஜோதி விக்னேஷ் நடுங்கிக் கொண்டே!

சாதா பயணம் என்றாலே அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும். எலெக்ட்ரிக் பயணம்… அதுவும் கின்னஸ் சாதனைப் பயணம் என்றால் சும்மாவா!

நாகலாந்தில் ஒரு தடவை போராளிகளிடம் மாட்டிக் கொண்டபோது, மயிரிழையில் உயிர் தப்பிய கதையைச் சொன்னார். ‘பெட்ரோல் போடவே காசு இல்லை; அதான் எலெக்ட்ரிக் ஆட்டோவில் ஊர் சுத்திக்கிட்டிருக்கேன்’ என்று தனது நெற்றியில் வைக்கப்பட்ட துப்பாக்கி முனையிலும் ஜோதி காமெடி செய்ததைப் பார்த்து.. அவர்களே பாவம் பார்த்து அனுப்பி விட்டார்களாம்.

ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!
ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

மேலும் அசாம் வெள்ளத்தில் உயிர் தப்பியது… அருணாச்சலப் பிரதேச அவலாஞ்சியில் மாட்டியது… உபியில் உச்சபட்ச வெயிலில் சூட்டுக்கட்டிகள் வந்து தவித்தது… அசாமில் பூகம்பத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது.. புத்த பிட்சுக்கள் கருணையுடன் உதவியது… ஒரு ஆர்மி பிரிகேடியரின் கவனிப்பில் விஐபி சூட் ரூமெல்லாம் கிடைத்து ராஜ மரியாதையுடன் உபசரிப்பில் திளைத்தது… என்று ஏகப்பட்ட அனுபவங்கள் உண்டு ஜோதி விக்னேஷிடம்.

4 வீல் டிரைவ் கார்களே போகக் கஷ்டப்படும் பாதைகளிலும், தனது எலெக்ட்ரிக் ஆட்டோவில் அவர் ஒரு பெரிய ஆஃப்ரோடு செய்ததை – தனது, Indiaon3Wheels எனும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவாகப் பார்த்தபோது… நமக்கே மூச்சு முட்டியது. அருணாச்சலப் பிரதேசத்தில் 14,700 அடி உயரத்தில் உள்ள தவாங் எனும் இடம். அங்கே 4வீல் டிரைவ் கார்கள் போவதே கஷ்டம். பனி மேடு பள்ளங்களில் டயர்கள் புதைய அவர் ஆட்டோ ஓட்டுவது … வாவ்! மஹிந்திரா நிறுவனத்துக்குத் தனது பயணத்தை டேக் செய்து வீடியோ வெளியிட்டதைப் பார்த்து… மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவே இவரது பயணத்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் என்றால் பெருமைதானே!

ஆரம்பத்தில் இந்தப் பயணத்துக்காக ஸ்பான்சர் தேடி பல இடங்களுக்கும் அலைந்தவருக்கு, கடைசியில் மஹிந்திராவே உதவி செய்திருக்கிறது. ஷோரூம் சர்வீஸ் என்ற வகையில் மஹிந்திராவிடமிருந்தே பல உதவிகள் கிடைத்திருக்கின்றனவாம்.

உணவு, தங்கும் இடம், ஏனைய செலவுகள் என்று மாதம் ஒன்றுக்கு சுமார் 25,000 ரூபாய் வரை செலவாகிறதாம் ஜோதிக்கு. இது வரை 2.5 லட்சத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. நல்லவேளையாக – ஐசி இன்ஜின் என்றால், எரிபொருளுக்கும் சேர்த்து கூடுதல் செலவாகியிருக்கும்.

செலவு, சார்ஜிங்கைத் தாண்டி இந்த ஆட்டோவில் இன்னொரு பெரிய சவால் இருக்கிறது. அது ஆட்டோவின் ரைடு அண்ட் ஹேண்ட்லிங். கார்கள் என்றால்… நல்ல சீட்டிங் பொசிஷன் இருக்கும். ஜம்மென்று சஸ்பென்ஷன் வேலை பார்க்க… சொகுசுப் பயணம் கிடைக்கும். ஆனால், ஆட்டோக்கள் லாங் ரைடுக்காக வடிவமைக்கப்பட்டவை இல்லை. மேலும், சொகுசுப் பயணம் என்பதை ஆட்டோக்களில் எதிர்பார்க்க முடியாதுதானே! மேடு பள்ளங்களில் பல நாட்கள் முதுகுவலியில் அவதிப்பட்டதையும், பிசியோதெரபி ட்ரீட்மென்ட் எடுத்ததையும் சொன்னார் ஜோதி. இன்னொரு சிக்கல், இது ஓப்பன் டைப் என்பதால்… கேமராக்கள், துணிமணி போன்ற முக்கியமான விஷயங்களைப் பாதுகாப்பதும் கஷ்டமாக இருப்பதாகவும் சொல்கிறார்.

ஜோதி விக்னேஷுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்டு பார்சேல்!

இப்போது கடைசியாக ஜோதி ஆன்லைன் காலுக்கு வந்தபோது, ‘‘19,000 கிமீ–யை முடிச்சுட்டேன் பாஸ். எப்படியும் கின்னஸில், ‘அது ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெட்ச்… இந்த கிமீ–யைக் கழிக்கிறோம்; இது செல்லாது’னு சொல்லி பல கிமீ–யைக் கழிச்சுடுவாங்க. இன்னும் நான் வீட்டுக்கு வர சில மாதங்கள் ஆகிடும். அப்போ நான் 25,000 கிமீ–யைக் கடந்திருப்பேன்! கின்னஸ் ரெக்கார்டுல பேர் பதிஞ்சுட்டு உங்களுக்கு கால் பண்றேன்!’’ என்றார் நம்பிக்கையுடன் ஜோதி.

சாதனைத் தமிழன் ஜோதிக்கு, ஒரு கின்னஸ் பார்சேல்!