
பைக்லயே போய் வர்றவங்க உடம்பு அசதி காரணமாகவே விபத்துக்குள்ளாகிறதெல்லாம் நடக்குது.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். இங்கு மழையே விட்டதுபோல் தெரியவில்லை. ‘கொரோனா இருக்கா போயிடுச்சா’ தெரியாத சூழலில், ‘ஊரடங்கு மட்டுமே கொரானாவுக்குத் தீர்வில்லை’ எனக் கொஞ்சம் தாமதமாகவே புரிந்துகொண்ட ஆட்சியாளர்கள், 75 சதவிகிதக்கும் மேல் பணியாளர்களை அனுமதித்து அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் இயங்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.
அலுவலகங்கள் தயாராகிவிட்டன. ஆனால் பணியாளர்கள்? அரசுப் பேருந்துகள், சென்னையைப் பொறுத்தவரை மின்சார ரயில்களெல்லாம் இன்னும் ஓடத்தொடங்காத போது எப்படி வேலைக்கு வந்து செல்கிறார்கள்?
`‘கார் வெச்சிருக்கிறவங்களுக்குக் கவலை இல்லை. மத்தபடி எல்லாருக்குமே பைக்தான் ஒரே வழி. ஆபீஸ் எவ்வளவு தூரத்துல இருக்குங்கிற கேள்வியெல்லாம் கிடையாது. `எப்படி வந்து சேர்வீங்களோ தெரியாது. வராட்டி பிரச்னைதான்’ என்கிற கறார்தான் அநேக இடங்களில்’’ என்கிறார் சென்னையில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த செந்தில்குமார். சென்னையில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் இவர் சனி ஞாயிறு விடுமுறைக்கு திருச்சிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தவர்.
கண்டிப்பாக வந்தே ஆகவேண்டிய ஒரு திங்கட்கிழமை, பைக்கிலேயே திருச்சியிலிருந்து சென்னை வந்தவர், இனி பேருந்து ஓடத்தொடங்கும் வரை ஊருக்குச் செல்வதில்லை என முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்.
தலைநகர் சென்னை நிலவரம் இன்னும் ஒருபடி மேல். அரசு அலுவலகம், தனியார் துறை மட்டுமன்றி, தினசரிக் கூலிகளாகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களில் வந்து சென்றுகொண்டிருந்தனர். இப்போது இவர்களின் நிலை?
‘‘இப்பவும் வந்துதான் போயிட்டிருக்காங்க சார். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், ஏன் விழுப்புரம், திண்டிவனத்துல இருந்தெல்லாம் பைக்லயே வர்றாங்களே. காலையில ஏழு மணியில இருந்து திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில நின்னு பாருங்க’’ என நம் வாசகர் ஒருவர் சோர்ஸ் தர, மழை தூறிக் கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் அந்த `பைக்’சாரிகளைக் காணக் கிளம்பினோம்.
செங்கல்பட்டுக்குக் கூப்பிடுதூரம். மிதமான வேகத்தில் டபுள்ஸ் வந்துகொண்டிருந்த ஒரு பைக்கை நிறுத்தி, ஓட்டி வந்த சுந்தர்ராஜிடம் பேசினோம்.
‘`உதயம்பாக்கம்கிற ஊர்ல இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்திட்டிருந்தேன். ஊரடங்குக்கு முன்னாடி வரைக்கும் ஊர்ல இருந்து செங்கல்பட்டு வரைக்கும் பைக்ல வந்து பைக்கை அங்க போட்டுட்டு மின்சார ரயில்ல பாஸ் வாங்கி சென்னைக்கு வருவேன்.சாயங்காலமும் அதேமாதிரிதான் போக்கு வரத்துக்குன்னு பார்த்தா மாசத்துக்கே 250 ரூபாய்தான் வரும்.
ஊரடங்கு வந்தாலும் வந்தது, என் வாழ்க்கையே மாறிடுச்சு. சிட்டிக்குள் நான் வேலை பார்த்திட்டிருந்த ஆபீஸ்ல பாதிப்பேருக்கு வேலை இல்லை. அதுல நானும் ஒருத்தன். என்ன செய்யறதுன்னு புரியாம இருந்தப்பதான் பக்கத்து ஊர்க்கார ஃபிரண்ட் ஓரகடத்துல மோட்டார் உதிரி பாகக் கம்பெனியில வேலை இருக்குன்னு கூப்பிட்டான். ரெண்டு பேருமா இப்ப அந்த வேலைக்குத்தான் போயிட்டிருக்கோம்’’ என்றார் சுந்தர் ராஜ்.
தொடர்ந்து பேசிய அவரின் நண்பர் மணி, ‘`ஆரம்பத்துல போலீஸ் அங்கங்க நிறுத்தி ‘இப்படியெல்லாம் வரக்கூடாது’ன்னு விரட்டினாங்க. போலீஸுக்கு பயந்தே ஹைவேஸ்ல போகாம காட்டுக்குள்ளகூடிப் போயிட்டிருந்தோம். இப்ப போலீஸ் பிரச்னை இல்லை. ஆனா தினமும் வந்து போறதுல உடம்புல அவ்வளவு வலி. காலையில கிளம்பி ஆபீஸ் வந்தா, வந்த கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுது. கட்டுப்படுத்தி வேலை முடிச்சுட்டு சாயங்காலம் கிளம்பினா பைக் ஓட்டிட்டிருக்கிறப்பவே தூக்கம் வருது. இதை வேடிக்கைக்காகச் சொல்லலை. ராத்திரி வீட்டுல போய் விழுந்தா மறுநாள் காலையில எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு வலிக்கும்’’ என்கிறார்.
தொடர்ந்து பேசிய சுந்தர், ``வீட்டுல வயசான அப்பா அம்மா, நான், அண்ணன்னு நாலு பேர். அண்ணன் விசேஷங்களுக்குப் போட்டோ எடுக்கிற போட்டோகிராபர். அவரும் இப்ப வேலை இல்லாம விட்டுலதான் இருக்கார். என்னுடைய ஒருத்தர் வருமானத்துலதான் நாலு பேர் சாப்பிடணும். இதுல வலியைப் பார்த்திட்டிருந்தா முடியுமா சார்’’ என்கிறார்.
விழுப்புரம் பக்கத்திலிருந்து சென்னை மறைமலை நகருக்கு வந்து செல்லும் மகேஷிடம் பேசியபோது,
`‘லாக் டௌன் ஆரம்பிச்ச புதுசுல வட இந்தியக்காரங்க நிறையபேர் சொந்த ஊருக்கு நடந்தே செத்தாங்க. இப்ப நாங்க நூத்துக்கணக்கான கிலோமீட்டர்கள் பைக்லயே போயிட்டு வர்றோம். ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொடுமைதான். என்ன லாக் டௌன்ங்க இது? பஸ், ரயில் ரெண்டு மட்டுந்தான் இல்லை. மத்தபடி எல்லா வாகனங்களும்தான் போயிட்டிருக்கே. ரோடு எப்பவும் போல ட்ராஃபிக்தான்.
பைக்லயே போய் வர்றவங்க உடம்பு அசதி காரணமாகவே விபத்துக்குள்ளாகிறதெல்லாம் நடக்குது. இதுக்குப் பேசாம பஸ், ரயிலையும் அனுமதிச்சிடலாம். செலவாவது மிச்சமாகும். ஊடங்குக்கு முன்னாடி ஆனதைவிட இப்ப பத்து மடங்கு அதிகமாப் போக்குவரத்துக்குச் செலவழிக்கறோம். சிலர் யாராவது லிஃப்ட் கேட்டா, பணம் தருவியான்னெல்லாம் கேக்கறாங்களாம். கொரோனா நம்மை எப்படியெல்லாம் மாத்திடுச்சு பாருங்க’’ என்றார்.
‘``வேற வழியே இல்லைன்னுதான் பைக்கை எடுத்துட்டுக் கிளம்பிடுறோம் நாங்க. ஆனா எவ்வளவோ பெண்கள் சென்னைப் புறநகர்ல இருந்து சிட்டிக்குள் தினமும் வேலைக்கு வந்து போயிட்டிருந்தாங்க. இவங்க நிலைமை ரொம்ப மோசம். அவசியம் வேலைக்குப் போயே ஆகணும்கிற நிலையில இருந்த பெண்கள் படுகிற பாடெல்லாம் சொல்ல முடியாத துயரம்’’ எனப் பெண்களின் நிலைமை குறித்தும் கவலைப்படுகிறார் மேல்மருவத்தூரைச் சேர்ந்த சங்கர்.
தினசரி இப்படி வந்து போகிறவர்கள் ஒருபுறமென்றால், களைப்பு, செலவு காரணமாக இரண்டு மூன்று நாள்களுக்கொரு முறையே வீட்டுக்குச் செல்கிறவர்களும் இருக்கிறார்களாம்.
வைரஸ் பயத்தைவிட வலிமையானது வயிற்றுப்பசியும் வாழ்க்கைப்பிரச்னையும்.