Published:Updated:

`இது ரியாலிட்டி ஷோ இல்ல... ரியல் ஷோ!' - இமயமலையில் ஒரு த்ரில், திகில் பயணம் #HimalayanOdyssey பாகம் 1

ஹிமாலயன் ஒடிஸி

இம்முறை ஹிமாலயன் ஒடிஸியில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் மோட்டார் விகடனும் கலந்துகொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் த்ரில், திகில் அப்டேட்ஸ் ஒரு 'பரபர' தொடராக இங்கே...

`இது ரியாலிட்டி ஷோ இல்ல... ரியல் ஷோ!' - இமயமலையில் ஒரு த்ரில், திகில் பயணம் #HimalayanOdyssey பாகம் 1

இம்முறை ஹிமாலயன் ஒடிஸியில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் மோட்டார் விகடனும் கலந்துகொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் த்ரில், திகில் அப்டேட்ஸ் ஒரு 'பரபர' தொடராக இங்கே...

Published:Updated:
ஹிமாலயன் ஒடிஸி

ஒவ்வொரு பைக் பயண விரும்பியின் கனவும் இமயமலை உச்சிக்கு பைக்கில் சென்றுவரவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இக்கனவை சாத்தியப்படுத்துகிறது 'ஹிமாலயன் ஒடிசி.' பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரிலிருந்து தொடங்கும் இப்பயணம், இந்தியாவின் உயரமான சாலையான கார்துங்லாவில் நிறைவடையும். ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டும் 'ஹிமாலயன் ஒடிஸி' ஜூலை 4-ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை நடைபெறுகிறது.

67 கேமரா, 16 கன்டஸ்டன்ஸ்... அது ரியாலிட்டி ஷோ... ரெண்டே கேமரா, 50+ ரைடர்ஸ் இது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஒடிசியின் ரியல் ஷோ!

சென்னை-டு-இமயமலை பயணத்தை ஆரம்பிச்சிட்டோம். லே-லடாக் போயிட்டு வருபவர்களின் வெற்றிக்கதைகளை நாம கேட்டிருக்கோம். ஆனா, அந்த வெற்றிக்குப் பின்னால எவ்வளவு கஷ்டமும் சந்தோஷமும் இருக்குனு உங்களுக்குக் காட்டப்போறோம்.

ஜூலை 4:

சண்டிகரிலிருந்து ரைடு ஆரம்பிக்கிறது. 850 கி.மீ., தூரத்தை 4 நாள்களில் கடக்கப்போகிறோம். சாதாரண பாதையில்லை, மணாலியைத் தாண்டிவிட்டால் எல்லாமே ஆபத்தான மலைப் பாதை!

ஹிமாலயன் ஒடிஸி: பயணத்தின் தொடக்கம்
ஹிமாலயன் ஒடிஸி: பயணத்தின் தொடக்கம்
"சென்னை போன்ற கடல் மட்டத்திலிருந்து வருபவர்களுக்கு இது சவாலான பயணம். சுமார் 18,000 அடி உயரம் வரை பைக்கில் பயணித்தால் இதயத்துக்கு ஸ்ட்ரெஸ் லெவல் எகிறும்!"
லே'வில் வசிக்கும் டாக்டர் வாங்சுக்

அதுமட்டுமல்ல... இங்கு வரும் 45% மக்கள் Acute Mountain Sickness மூலம் பாதிக்கப்படுகிறார்களாம். லே லடாக் வந்து சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் முதலில் இரண்டுநாள் இங்கு தங்கி இந்தச் சூழலுக்கு ஏற்ப உடலை தயார்படுத்திக்கொண்ட பிறகே என்ஜாய் செய்யலாம் என்கிறார் டாக்டர் வாங்சுக்.

பைக் ரைடு கிளம்ப ஆர்வம், பைக், செலவு செய்ய காசு... இவை மட்டும் இருந்தால் போதாது. நல்ல ரைடிங் கியர் அவசியம். சின்னச் சின்ன ரைடுகளுக்கு ISI ஹெல்மெட் போதுமானது. ஆனால், இமாலயா போன்ற எக்ஸ்ட்ரீம் ரைடுக்கு DOT அல்லது ECE ஸ்டாண்டர்டு ஹெல்மெட் இருப்பது பாதுகாப்பு. ரைடிங் ஜாக்கெட்டில் CE Level ஆர்மர் இருப்பது அவசியம். லெதர் கிளவுஸ் அத்தியாவசியம். வாட்டர் ப்ரூஃப் பூட்ஸ் இருப்பது கூடுதல் பாதுகாப்பு.

ஹிமாலயன் ஒடிஸி
ஹிமாலயன் ஒடிஸி
குளிரில் டீஹைட்ரேஷன் தெரியாது என்பதால் மயக்கம் வரும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். எனர்ஜி ட்ரிங்க் சீக்கிரமே டீஹைட்ரேஷனை உருவாக்கும். அதனால், தண்ணீரே போதும்.

சரி, இமயமலைக்கு எந்த ரூட்டில் போகலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், ரூட் எப்படி இருக்கும், சாலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எந்தப் பகுதியில் பைக் ஓட்டுவது கஷ்டமானது, ஏன்? எனப் பல கேள்விகள் இருக்கும்...படங்கள், வீடியோக்கள் மூலம் ஒரு அட்வென்சர் ட்ரிப்புக்கு உங்களையும் கூட்டிப்போறோம்...எங்களோடு பயணியுங்கள்.

நாள் - 2, காலை - 9:30 மணி

''நாம் எல்லோருமே ராயல் என்ஃபீல்டு குடும்பம் அனைவரும் ஒரு குழுவாகச் சேர்ந்து பயணிக்கிறோம் என்ற மனநிலை இருந்தால் மட்டுமே ரைடு வெற்றிகரமாக முடியும்'' என்றபடி இந்தப் பயணத்தைப் பற்றி விளக்கத்தொடங்கினார் ராயல் என்ஃபீல்டு ரைட்ஸ் டீமைச் சேர்ந்த சந்தோஷ். இமாசலப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே நகரம் லே. இந்த நகரத்தில் வசிக்கும் ஒருவர் நாளொன்றுக்கு 21 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறாராம். ஆனால், இங்கு வரும் டூரிஸ்ட்கள் ஒரு நாளுக்கு 75 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறார்களாம். இதனால் லே-விலேயே தண்ணீர்ப் பஞ்சமாம். தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தவேண்டும் என்பதோடு, பிளாஸ்டிக் பாட்டில்கள் கூடவே கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டார்கள்.

ஹிமாலயன் ஒடிஸி: பைக்கர்ஸ்
ஹிமாலயன் ஒடிஸி: பைக்கர்ஸ்
தண்ணீீர் வேண்டுமா? ரைடர்களுக்கு துணையாக வரும் வாகனத்தில் வாட்டர் ப்யூரிஃபையர் பொருத்தப்பட்டுள்ளது. எங்கு வேண்டுமானாலும் சப்போர்ட் காரை நிறுத்தி தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.

காலை - 11 மணி

சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் முதலுதவி பற்றித்தெரிந்திருக்கவேண்டும். அதிலும் சாலை இருக்குமா இல்லையா என்றே தெரியாத நிலையில் 18,000 அடி உயரத்துக்குப் போகப்போகும் ரைடர்களுக்கு தனது சக ரைடர்களுக்கு உதவத்தெரியாமல் இருந்தால் எப்படி? இதற்குத்தான் ஹிமாலயன் ஒடிசியின் இரண்டாம் நாளில் எல்லோருக்கும் முதலுதவி எப்படி செய்வதென்று கற்றுக்கொடுக்கப்பட்டது.

மாலை - 4 மணி

ரைடிங் கியர்களை எப்படி அலசி ஆராய்ந்தார்களோ அதேபோல ரைடர்களின் பைக்குகளுக்கும் அலுக்க அலுக்க சோதனை செய்யப்பட்டது.

ஹிமாலயன் ஒடிஸி
ஹிமாலயன் ஒடிஸி
தகுதியான பைக் மட்டுமே பயணத்துக்குச் செல்லமுடியும். பிரச்னை இருந்தால் சரிசெய்து நமக்கு ஏற்ப ட்யூன் செய்துவிடுகிறார்கள். சரிசெய்ய முடியாத அளவு பிரச்னை என்றால் டாடா காட்டிவிடவேண்டியதுதான்.

மாலை - 6.30 மணி

ரைடுக்காக தயார்செய்யப்பட்டிருந்த ஹிமாலயன் ஸ்லீட் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு டெஸ்ட் ரைடுக்காக சண்டிகரில் ஊர்சுற்றக் கிளம்பினோம். ஒரு பர்ஃபெக்ட் நகரம் எப்படியிருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி இருக்கும் சண்டிகர்.

இது திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் என்பதால் சென்னை, பெங்களூரு, கொச்சின் போல கிடையாது. எந்த வீடும் சாலையைப் பார்த்தபடி இல்லை. திடீரென்று காரோ, பைக்கோ வீட்டுக்குள் இருந்து சாலைக்கு வராது. சாலையில் ரோட்டுக்கடைகள் அதிகம் கிடையாது. ஏரியாவுக்குப் பெயர் கிடையாது. எல்லாமே எண்கள் (செக்டார்). ஒவ்வொரு செக்டாரிலும் ஒரு கடைத்தெரு, ஒரு மருத்துவமனை, ஒரு பள்ளிக்கூடத்தை நிச்சயம் பார்க்கலாம்.

ரோடு டு மணாலி
ரோடு டு மணாலி

நாளை காலை மணாலி புறப்படுகிறோம். குளிர் பெரிதாக கிடையாது. ஆனால் சாலை கொஞ்சம் அட்வென்சர் அனுபவத்தைக் கொடுக்கும் என்று எச்சரிக்கை வந்துள்ளது!