Published:Updated:

கின்னஸின் பிறப்பிடம்! - கிராமத்தானின் பயணம் 18

Typical street in Dublin, Ireland
News
Typical street in Dublin, Ireland

காஸை மூடினேனா, கதவை பூட்டினேனா போன்ற சந்தேகங்கள் காரில் பாதி தூரம் சென்ற பிறகு வரக்கூடும். ஆனால், இந்த மாதிரி பாதிப் பயணத்தில் விசா செல்லுமா என்கிற சந்தேகம்..?

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-17 படிக்காதவர்கள் படிக்கலாம்)

போன வாரம் சொன்னேன், 'UK விசா அயர்லாந்துக்கு செல்லுமா என என் மனைவி கேட்டார்கள்' என்று. சாதாரணமாக நமக்கு தெரிந்த விஷயத்தைப் பற்றி ஒருவர் சந்தேகம் எழுப்பினால் சில நேரம் அந்த சந்தேகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அப்படித்தான் இந்த விஷயத்திலும். சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு UK விசா வைத்திருப்பவர்கள் அயர்லாந்துக்கு என்று தனி விசா வாங்காமல் சென்று வரலாம். நான் அப்படி சென்றும் வந்திருக்கிறேன். ஆனால், என் மனைவி இப்படி கேட்ட பிறகு ஒரு சிறிய பயம்.

நினைத்துப்பாருங்கள்... இந்த சந்தேகத்துடன் நான் கார்டிஃபில் இருந்து லிவர்பூலுக்கு 300 கிமீ ஓட்டிவரவேண்டும். ஒட்டி வந்தேன். லிவர்பூல் (Liverpool) சென்றவுடன் முதல் வேலை விமான நிலையம் சென்று ரயன் ஏர் (Ryan Air) சிப்பந்தியைச் சந்தித்து விளக்கம் கேட்டேன். அந்தப் பெண்மணி மிகவும் தெளிவாகச் சொன்னார், நாங்கள் அயர்லாந்து செல்வதில் விசா சம்பந்தமான தடங்கல் ஒன்றும் இல்லை என்று. நன்றி கூறி விமான நிலையம் அருகிலேயே முன் பதிவு செய்த விடுதியை அடைந்தோம்.

Half Penny Bridge
Half Penny Bridge

காஸை மூடினேனா, கதவை பூட்டினேனா போன்ற சந்தேகங்கள் காரில் பாதி தூரம் சென்ற பிறகு வரும். புரிந்து கொள்ளக்கூடியது. இந்த மாதிரி பாதி பயணத்தில் விசா செல்லுமா என்ற சந்தேகங்கள் சற்றே கவனத்தில் கொள்ள வேண்டும். இது கூட பரவாயில்லை. சமயத்தில் நான் பட்டய கணக்காளனுக்கு (CA) உண்மையிலேயே படித்திருக்கிறேனா என்ற சந்தேகத்தையும் எழுப்புவார். இப்போது லிவர்பூல் விடுதியில் மருத்துவரை பார்ப்பது கடினம். நிச்சயம் துபாய் சென்று நல்ல மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விடுதியில் அறையை ஏற்றுக்கொண்டு (Check-In) முதலில் உணவைக் கோரினோம். மனைவி சாலட் போதும் என்று சொல்ல நானும் தலையாட்டினேன். 15 நிமிடங்கள் கழித்து சிப்பந்தி தோன்றி, 'மன்னிக்கவும் சாலட் இருப்பில் இல்லை' என்று சொல்ல, நான் இதற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று வினவினேன். மன்னிக்கவும் (Sorry) தான் பதில். மன்னித்தோம் (வேறு வழி?). பீட்சா தருவித்தோம். 5 நிமிடம்தான். நன்றாக இருந்தது. நான் எதுவும் கேட்பதற்கு முன்னே அந்த சிப்பந்தி சாலட் விஷயம் தன்னுடைய தவறு என்றும், இந்த பீட்சா விடுதியின் அன்பளிப்பு என்றும் கூறினார். மனைவி நாங்கள் இன்னொரு முறை சாலட் தருவிக்க முடியுமா என்று சிரித்துக்கொண்டே கேட்க நன்றி சொல்லி இருவரும் அறைக்கு வந்தோம். நாளை காலை 8:00 மணிக்கு விமானம்.

9 ஜூலை. எல்லாம் நேரப்படி. டப்ளின் அடைந்தாகிவிட்டது. இன்று ஒன்றும் வெளியில் செல்லும் திட்டம் இல்லை. திட்டப்படி முதல் சில நாட்கள் டப்ளின்தான். ஆகவே வாடகை வாகனம் எடுக்கவில்லை. மற்ற இடங்களை விவரிப்பதற்கு முன் அயர்லாந்தைப்பற்றி சற்று பார்ப்போம்.

St. Stephen’s Green (Park)
St. Stephen’s Green (Park)

பிரிட்டனைப் போலவே அயர்லாந்தும் ஒரு தீவு. தீவின் வடபகுதி பிரிட்டனின் கையில், வட அயர்லாந்து என்ற பெயருடன். மீதி பாகம்தான் அயர்லாந்து (Republic of Ireland). மொத்த பரப்பளவு தமிழ்நாட்டில் பாதிக்கு சற்றே மேல். இந்த 'விகிதத்தில்' பார்த்தால் அயர்லாந்தில் குறைந்த பட்சம் 4 கோடி மக்கள் இருக்கலாம். (தமிழ்நாட்டில் மக்கள் தொகை 8 கோடி). ஆனால், மொத்த மக்கள் தொகையே 50 லட்சம்தான். தலைநகரம் டப்ளின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கின்னஸ் மது பான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சர் பீவர் என்பருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை தீர்க்க சில ஆட்களை அணுக அதுவே கின்னஸ் சாதனை புத்தகமாக உருவெடுத்தது!

புகழ் பெற்ற டிரினிட்டி கல்லூரி இங்குதான் உள்ளது. மேலும் கின்னஸ் மதுபான ஆலையும் இங்குதான் உள்ளது.

கின்னஸ் என்றவுடன் உங்களுக்கு கின்னஸ் சாதனை புத்தகம் மனதுக்கு வரலாம். தொடர்பு உள்ளது. 1950களில் கின்னஸ் மது பான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சர் பீவர் என்பருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை தீர்க்க சில ஆட்களை அணுக அது கின்னஸ் சாதனை புத்தகமாக உருவெடுத்தது, 1954-ல். அதன்பின் இது வருடாந்திர பதிப்பாக உருவெடுத்தது.

ஹியூஸ்டன் ரயில் நிலையமும் இங்கு பிரபலமான சந்திப்பு. இந்த இடங்களை எல்லாம் நான் தனியாக 2016இல் பார்த்திருக்கிறேன். 2019-ல் மீண்டும் சென்றபோது அந்த நாட்கள் பசுமையாக நினைவுக்கு வந்தன. மூளை எப்படி எந்த இடத்திலிருந்து அவற்றை மீண்டும் 'காட்சிகளாக' (Visuals) அளிக்கிறது என்பது என் சிறிய மூளைக்கு எட்டாத ஒன்று.

அடுத்த நாள் (11 ஜூலை) சற்று அதிகம் சுற்றினோம். முதலில் ஹா பென்னி (Ha 'Penny) பாலம். லிஃபெய் (Liffey) ஆற்றின் குறுக்கே 1816-ல் கட்டப்பட்ட இரும்பு பாலம். அதுவரை அந்த ஆற்றை கடக்க சிறு படகுகள் உபயோகிக்கப்பட்டன. அவை பழுதடைந்தபோது இந்த பாலம் ஒரு மாற்றாக அமைக்கப்பட்டது. அமைத்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு 1/2 பென்னி (Half Penny) கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. அந்த Half Penny மருவி Ha 'Penny பாலமானது. 145 அடி நீளம்தான். ஆனால் முக்கிய இணைப்பு, வெலிங்டன் க்வெய் (Quay) மற்றும் ஓர்மண்ட் க்வெய் (Quay) இடையில் மிகவும் பரபரப்பான இடத்தில். சுற்றுலா பயணிகள் நிறைய வரும் இடமும்கூட. 1919-ம் ஆண்டில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. நம்மூரிலும் சாலை கட்டணங்கள் ஒரு நாள் நிறுத்தப்படும் என்று நம்புவோம்.

அங்கிருந்து டெம்பிள் பார் தெரு (Temple Bar Street). இந்த தெரு ஒரு கலாச்சார அடையாளம். நிறைய கலைத்துறை சார்ந்த அமைப்புகள் இங்கு அமைந்துள்ளன. ஆனால் என் கணிப்பில் இங்கு வருபவர்கள் அங்குள்ள பப்களுக்கு (Pub) தான் முக்கியத்துவம் தருவதாக தோன்றியது. நிறைய பச்சை குத்தும் இடங்களும் (Tattoo Studios) கண்ணில் பட்டன. அங்கு காலாற நடந்து எதற்கு இந்த தெரு இவ்வளவு புகழ் பெற்றுள்ளது என்று புரியாமலேயே சுற்றி முடித்தோம். குடிக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். ஆகவே, அந்த பப் (Pubs) பக்கம் கால் வைக்கவில்லை.

அங்கிருந்து ஸ்டீபன் க்ரீன் (St Stephen's Green) என்ற 22 ஏக்கரில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்காவுக்குள் சென்று சற்றே ஓய்வெடுத்து பின் மதிய உணவு உண்டு முடித்தோம்.

அடுத்த நிறுத்தம் கின்னஸ் மதுபான ஆலை. இந்த இடத்தை 1759இல் 9000 வருட குத்தகைக்கு எடுத்து ஆர்தர் கின்னஸ் என்பவர் ஆரம்பித்தார்.

இன்றுவரையும் ஓயாமல் 'பீர்' தயாரித்து கொண்டு வருகிறது இந்த நிறுவனம். இங்கே கட்டணம் செலுத்தி வழிகாட்டப்பட்ட சுற்றுலாவில் இணைந்துகொண்டோம். என்ன இடு பொருட்கள், எங்கிருந்து வளர்ந்து வருகின்றன, எப்படி உரு மாற்றம் பெற்று 'பீர்' ஆகிறது, எப்படி இவற்றை மற்ற நாடுகளுக்கு சுவை குறையாமல் அனுப்புகிறார்கள் என்று அனைத்தையும் விளக்கி சொல்லி கடைசியில் ஒரு கோப்பை கின்னஸும் தருவார்கள். சற்றே கசப்பான பீர் என்று சொல்லுவார்கள். ஆனால் பழக்கப்பட்டால் மற்ற பீர் குடிக்கமாட்டார்கள் என்று என் ஸ்காட்டிஷ் நண்பர் சொல்லுவார்.

இங்கே ஒன்று குறிப்பிட்டே ஆகவேண்டும். நிறைய நாடுகளில் இந்த வழிகாட்டப்பட்ட சுற்றுலாக்கள் மிகவும் பிரபலமானவை. நிறுவனங்களுக்கும் ஒரு வருமானம் பார்க்கும் வழி. அது போயிங்கோ, CNN ஓ, கோகோ கோலாவோ, கின்னஸோ மிக திட்டமிட்டு நேர்த்தியாக நல்ல வர்ணனையுடன் சுற்றி காட்டுவார்கள். எல்லோருக்கும் இது புது விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும். என் அப்பா வேலை செய்த சர்க்கரை ஆலையை சுற்றி பார்த்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களும் இதுபோல பார்த்து தெரிந்துகொள்ள எதுவும் வழியில்லை. ஏன் செய்யக்கூடாது? அப்படி செய்தால், எனக்கு பார்க்க ஆசையுள்ள இடம் நம் சாலை ஒப்பந்ததார்களின் அலுவலகங்கள். என்ன மாதிரி (!) சாலை போடுகிறார்கள். போன வாரம் சென்னையில் சாலைகளை பார்த்து வியந்து நொந்து போனேன். மேலும் பதிவு அலுவலகங்களில் பட்டா, சிட்டா, வில்லங்கம், சர்வே, பத்திரம் என பல விஷயங்கள் பற்றியும் இந்த ஜென்மத்தில் அறிந்து கொள்ள ஆசை!

கின்னஸ் முடித்து அடுத்த நிறுத்தம் 'ரிவெர் டான்ஸ்' (River Dance) என்ற நடனம். கெய்ட்டி அரங்கில். கண்ணை கவரும் உடையில், மனதை மயக்கும் இசைக்கு 10-15 ஆண்களும் பெண்களும் நடனமாடி உங்களை ஒரு மயக்கத்தில் கட்டிப்போடுவார்கள். மொத்தம் 2 மணி நேரம். மொத்த அரங்கமும் முடிவில் எழுந்து நின்று பாராட்டியது மறக்கமுடியாதது.

அந்த மயக்கத்தில் அறைக்கு வந்து நன்று உறங்கினோம். மறுநாள் அயர்லாந்தில் மற்ற இடங்களை பார்க்க வாகனம் வாடகைக்கு எடுத்தோம். வோக்ஸ் வகன். மீண்டும் சிறிய வாகனம். டப்ளினிலிருந்து கில்கென்னி என்ற அழகிய சிற்றூரில் உணவு அருந்தி கிலோன்மேல் என்ற ஊரை அடைந்தோம். நினைத்து பாருங்கள். மொத்த மக்கள் தொகையே 50 லட்சம். அதில் எத்தனை பேர் சிறிய கிராமங்களில் இருப்பார்கள் என்று. எங்கு சென்றாலும் இயற்கை அழகு வழியும் கிராமங்கள், சாலைகள் மற்றும் என் கணிப்பில் மிக அழகான வீடுகள். நிறைய இடங்களில் நிறுத்தி வீடுகளை புகைப்படம் எடுத்தேன். மனைவிக்கு சற்றே அயர்ச்சி. திரும்ப திரும்ப ஒரே மாதிரிதான் உள்ளன, இதில் ஏன் இத்தனை படங்கள் என்று!

அடுத்த நாள் கிளிஃப்ஸ் ஆஃப் மொஹெர் (Cliffs of Moher) என்ற இடத்தை சுற்றி பார்த்தோம். 13 கிமீ நடைபாதைகள். ஏறக்குறைய ஒரு நாள் முழுக்க அங்கே செலவிட்டோம். என் உறவினர்கள் எங்களை அழைத்துச்சென்று காட்டினார்கள். க்ளேர் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த இயற்கையின் அதிசயம் மலைகள் மற்றும் செங்குத்தான பாறைகளின் ஓரத்தில் இருந்து அட்லாண்டிக் சமுத்திரத்தை பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

நான் முதலே சொன்ன மாதிரி இது சற்றே பரபரப்பில்லாத பயணம். ஆகவே மிகவும் நிதானமாக அழகான கிராமங்கள், இயற்கை அழகுகள், ஆரவாரம் இல்லாத சாலைகள் என நிறைய இடங்களுக்கு சென்று வந்தோம். காச்சல் ராக் (Rock of Cachel), கில்கென்னி கோட்டை (Killkenny Castle), ஆர்ட்மோர் கிளிஃப் நடை (Ardmore Cliff Walk) என பார்ப்பதற்கு நிறைய இடங்கள். இந்திய உணவகங்கள். உறவினர்களும் சேர்ந்துகொண்டார்கள். இரட்டிப்பு மகிழ்ச்சி.

Cliffs of Moher, a view
Cliffs of Moher, a view

இந்த பயணத்துக்கு முத்தாய்ப்பு வைக்கும் விதமாக கடைசியாக கில்லெரனே (Killerney) என்ற இடத்திற்கு சென்றோம். பிரபலமான சுற்றுலாத்தலம். கோல்ப் மற்றும் குதிரை பந்தயங்களுக்கு பெயர் போன இடம். இயற்கை அழகு சொல்லவே வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக 'ரிங் ஆஃப் கெர்ரி' (Ring of Kerry) என்ற 180 கிமீ சுற்றுப்பாதை. கண் கவரும் பள்ளத்தாக்குகள், சமவெளிகள், செங்குத்துப் பாறைகள், கடற்கரைகள், குன்றுகள், மலைகள் என ஏறக்குறைய அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டியே செல்லும் பாதை.

இந்த கில்லெரனே அடைய கிலோன்மேல்லில் இருந்து 140 கிமீ பயணம்... இயற்கை அழகின் துணையுடன். மனைவி வாகனத்தை செலுத்த நான் கண்ணை எடுக்காமல் இயற்கை அழகை ரசித்து முடிந்தவரை படமெடுத்து, இரண்டு மணி நேரத்தில் இலக்கை அடைந்தோம். வழியில் என் உறவினரின் பரிந்துரைப்படி ஹெதர் (Heather) என்ற உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட நிறுத்தினோம். சிறு கிராமம். லேசான மழை. கூடவே மிதமான காற்று. தாங்கக்கூடிய குளிர். சுற்றி பசுமை. தொலைவில் மலைகள். உள்ளே செல்லவே மனமில்லை. சற்று நேரம் கழித்து உள்ளே சென்றோம். மிகவும் இன்முகத்துடன் வரவேற்ற பெண், எங்களைப் பற்றி நிறையவே விசாரித்தார், மனைவியின் நெற்றிப்பொட்டு உட்பட. எங்கள் குளிரைப் பார்த்து அரங்கத்தின் வெப்பத்தை சற்றே கூட்டி அமர வைத்து சுட சுட உணவு பரிமாறினார், சிரித்த முகத்துடன். இருந்த சூழ்நிலை மற்றும் சந்தோஷமான மனநிலையில் சிற்றுண்டி பேருண்டி ஆனது.

(பிளாக் புட்டிங், சாப்பிட்டே ஆகவேண்டிய ரத்தத்தால் செய்யப்படும் ஒரு வஸ்து).

பின்னர் ரிங் ஆஃப் கெர்ரி பயணம் ஆரம்பித்து ஏறக்குறைய 180-200 கிமீ சுற்றி இயற்கையின் பேரழகையும் அதை அந்த மக்கள் பாராட்டி பராமரிப்பதையும் எண்ணி வியந்து எங்களுக்கு இந்த அனுபவத்தை கொடுத்த எல்லாம் வல்லவனுக்கு நன்றி சொல்லி முடித்து, நேராக இரவு உணவு இந்திய உணவகத்தில் முடித்து விடுதி வந்து உறங்கினோம்.

பின் இரண்டு நாட்கள் அங்கே இங்கே என்று சிறு சிறு ஊர்கள் மற்றும் உறவினர் வீட்டிற்கு சென்று விடைபெற்று 20 ஜூலை துபாய் வந்து சேர்ந்தோம்.

Quiet road in Dublin
Quiet road in Dublin

விமானத்தில் அமர்ந்த என் மனதில் ஓடிய எண்ணம் என்னவென்றால், இந்த உலகம் எவ்வளவு அழகானது. எவ்வளவோ இடங்கள் பார்த்து ரசிக்க, உணவுகள் உண்டு மகிழ, இலக்குகள் அடைந்து மகிழ, இசை கேட்டு மகிழ, சந்தர்ப்பங்கள் மற்றவர்க்கு உதவ. ஆனால் சிலர் ஏன் 'தான்' என்ற அகந்தையுடன் அல்லது 'ஒரு சிறு வட்டத்துக்குள்' தங்களை அடக்கிக்கொண்டு (அல்லது இரண்டுமே) வாழ்க்கையின் பெரும்பகுதியை தனக்கும் மற்றவர்க்கும் கடினமாக்குறார்களோ?

அனுபவிப்பது என்பது மற்ற நாடுகளுக்கு செல்வதுதான் என்று தவறாக எண்ணவேண்டாம். அது மிக சாதாரணமான விஷயங்களில் கூட கிடைக்கும். நல்ல இசை (ராஜா மற்றும் ரவீந்திரன் மாஸ்டர் மலையாள பாடல்கள்), நல்ல உணவு (ரவா தோசை?), மனம் விட்டு பேசுதல் (நண்பனுடன்), அவ்வப்போது உதவுவது என எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. ஏன், நம் சந்தோஷங்களை மற்றும் அனுபவங்களை அதுபோன்ற விருப்பமுள்ளவர்களுடன் பகிர்வது கூடத்தான்.

அடுத்த வாரம் பகிர்கிறேன், 2019 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நான் சென்ற பெங்களூர், மைசூர், பேலூர், ஹளபேடு, கபினி மற்றும் தமிழ்நாட்டில் பார்த்த செட்டிநாடு (கானாடுகாத்தான்) பற்றி!

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)