Published:Updated:

ஆச்சர்யப்படுத்திய விவசாய நிலங்கள்! - இத்தாலியப் பயணக்கதை-1 | My Vikatan

Solferino Sanmartino

ஆங்காங்கே ட்ராபிக் ஜாமும் உண்டு என்றாலும், நிதானமாக, அவசரம் காட்டி ட்ராக் மாறாமல், அவரவர் ட்ராக்கிலேயே காரோட்டிகள் பொறுமை காப்பது, நம்மைப் போன்ற அவசரக்காரர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.

Published:Updated:

ஆச்சர்யப்படுத்திய விவசாய நிலங்கள்! - இத்தாலியப் பயணக்கதை-1 | My Vikatan

ஆங்காங்கே ட்ராபிக் ஜாமும் உண்டு என்றாலும், நிதானமாக, அவசரம் காட்டி ட்ராக் மாறாமல், அவரவர் ட்ராக்கிலேயே காரோட்டிகள் பொறுமை காப்பது, நம்மைப் போன்ற அவசரக்காரர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.

Solferino Sanmartino

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மூன்று புறமும் கடலால் சூழப்பட்டு, வால் போல் நீண்டு கிடக்கும் இத்தாலியில், ஏரிகளுக்கும் குறைவில்லை. கடற்கரையும் மலையுமென்று ஏற்கெனவே பல இடங்களைப் பார்த்து விட்டதால்,

இந்தமுறை ஏரிக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமவெளிப் பகுதிகளைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம். இத்தாலியின் மிகப்பெரிய ஏரியாகிய கார்டா (Garda)வும், அதனைச் சுற்றியுள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டுகளும் கவனத்தை ஈர்க்க, அங்கேயே சென்றோம்.

ஜூரிக் நகரிலிருந்து சுமார் 6 மணி நேரக் கார்ப் பயணத் தூரத்தில் உள்ளது ‘டெசன்சானோ டெல் கார்டா’(Desenzano del garda)என்ற இத்தாலிய நகரம்.அதாவது இத்தாலியின் மிகப்பெரிய ஏரியான ‘கார்டா’வுக்கு அருகில் உள்ள நகரமிது. 370 ச.கி.மீ.,பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியின் கரைகளில் பல நகரங்கள் அமைந்துள்ளன.

6 மணி நேரப் பயணம் என்றாலும், அதிக நேரம் சுவிட்சர்லாந்தின் உள்ளேயே பயணிப்பதால், இரு புறமும் உள்ள பசுமை போர்த்திய மலைகளும், அவற்றின் நடுவே ஆங்காங்கே மானாவாரியாகக் குதித்தோடும் அருவிகளும்,சரிவான உயர்ந்த மலைகளில் மேயும் பசுக்களும் நம் கண்களுக்கு விருந்து படைத்துப் பயணக் களைப்பைக் காணாமல் போகச் செய்து விடுகின்றன.

சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து
படம் 1

நடுநடுவே மலைகளைக் குடைந்த சுரங்கப் பாதைகளில் 80-100 கி.மீ.,வேகத்தில் பயணிப்பது மேலும் உற்சாகம் அளிக்கிறது.(படம்-1)

ஆங்காங்கே ட்ராபிக் ஜாமும் உண்டு என்றாலும், நிதானமாக, அவசரம் காட்டி ட்ராக் மாறாமல், அவரவர் ட்ராக்கிலேயே காரோட்டிகள் பொறுமை காப்பது, நம்மைப் போன்ற அவசரக்காரர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. கார்களில் உள்ள ஹார்ன் பட்டனைத் தொடுவதில்லையென்று உறுதி எடுத்தவர்கள் போல் ஓட்டுனர்கள் செயல்படுகிறார்கள்.

அப்படியும்,ஹைவே க்கு அருகில் ரெசிடென்ஷியல் பகுதிகள் உள்ள இடங்களில் சாலையின் இரு புறமும் சப்தத்தைக் குறைக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளார்கள். சாலைகளின் அருகில் வசிப்பவர்களுக்கும் அமைதியான வாழ்வைத் தரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் ஆட்சியாளர்களுக்கு உள்ளதே இதற்குக் காரணம்.

மாலை 7.30 மணிக்கு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ள வீட்டை அடைந்தோம். 7.30 மணிஐ முன்னிரவு என்றல்லவா சொல்ல வேண்டும் என்கிறீர்களா? இங்கு 8.30 மணி வரையில்கூட சூரியன் இருப்பதால்தாங்க அப்படிச்சொன்னேன்.

 சுரங்கப் பாதை
சுரங்கப் பாதை

இப்பொழுதெல்லாம் ஹோட்டல்களில் தங்குவதை விட,இது போன்று வீடுகளில் தங்குவதையே பலரும் விரும்புகின்றனர். ஹால், கிச்சன், தேவையான அளவுக்கு பெட்ரூம்கள் என்று இந்த வீடுகள் மிக வசதியாக உள்ளன.குழந்தைகள் விளையாடத் தனியிடம்,ப்ளே அயிட்டம்ஸ் என்று நம் சொந்த வீட்டில் இருக்கும் நிறைவை,இந்த வீடுகள் தருகின்றன.

நமக்கு விருப்பமான உணவுகளை நம் ஓய்வு நேரங்களில் நாமே தயாரித்துக் கொள்ளலாம்.என்ன ஒன்று…சில ஆண்டுகளுக்கு முன்னர் குறைவாக இருந்த வாடகைக் கட்டணம் இப்பொழுது கூடி விட்டது.ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இந்த முறை அதிகமாக வழக்கத்தில் உள்ளது.அப்படி ஒரு வீட்டில் வந்து தங்கினோம்.

கார்டா லேண்ட்
கார்டா லேண்ட்
படம் 3

பழங்கால அமைப்பில் சாய்தளக் கூரையுடன் கூடிய ஐரோப்பிய வீடுகள் நம் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன.இம்மியளவு இடத்தையும் வீணாக்காத அந்தக் கட்டிட அமைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.கீழே ஒரு தளம்.உள்ளுக்குள்ளேயே அமைந்த நடுத்தளம்.கூரையை ஒட்டிய மேல் தளம் என்று வீடுகள் கம்பீரம் காட்டுகின்றன.மரத்தாலான தளங்கள் காலத்தைக் கடந்தும் சிறப்புடன் நிற்கின்றன.

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே பல நாகரீக ஒற்றுமைகள் உண்டு.காபியில் ஆரம்பித்துக் கழிவறை வரை அது தொடர்கிறது.பில்டர் காபி இங்கு ரொம்பவும் பிரபலம்.இங்குள்ள பில்டர், நீருக்குப் பதிலாக ஆவியில் காபிப் பொடியைக் கலந்து,டிகாக்‌ஷன் தருகிறது.எனவே காபியின் சுவை அதிகமாக உள்ளது.அது போலவே,ஐரோப்பாவின் பல நாடுகளிலும் கழிவறைகளில் தண்ணீரால் கழுவும் வசதி இல்லாதபோது இங்குள்ள கழிவறைகளில் கால் கழுவ வென்றே தனியான குழாயும் அதற்கான அமைப்பும் உள்ளது.மர வகைகளில் கூடப் பலவகை நமது மரங்களை ஞாபகப் படுத்துகின்றன.நம்மூர் அரளி போன்ற செடிகள் இங்கு அதிகம்.நம் நாட்டைப் போலவே உயிர் வேலிகளாக அவற்றைப் பயன் படுத்துகிறார்கள்.

கார்டா லேண்ட்
கார்டா லேண்ட்
படம் 2

நம்மூர் வாழை மரத்தை, தீம் பார்க்கின் உள்ளே பார்த்தபோது, மனது பரவசப்பட்டது. சாலையின் ஓரத்தில், ஓரிடத்தில் பனை மரங்களைப் பார்க்கையில், ரோமானியப் பேரரசு நம்முடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததன் அடையாளமாக இவையெல்லாம் இருக்கலாமோ என்று தோன்றியது.(படம்-2)

அடுத்த நாள். கார்டா லேண்ட்(Garda Land) என்ற தீம் பார்க் சென்றோம்.நல்ல கூட்டம்.இங்குள்ளவர்கள் அன்றாடம் ‘வெதர் ரிப்போர்ட்’பார்த்து,அதற்குத் தகுந்தாற்போலவே லோகல் ட்ரிப்புகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.அன்று ‘சன்னி டே’ என்பதால் கூட்டம் அலை மோதிற்று.வெதர் ரிப்போர்ட்களின் துல்லியம் நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.நகரின் பல பகுதிகளுக்கும் தனியான ரிப்போர்ட்கள் உண்டு.4 மணிக்கு உங்கள் பகுதியில் மழை என்றால்…பெய்கிறது.

இந்தத் தீம் பார்க்கில் சிறுவர்கள்,பெரியவர்கள்,நடுத்தர வயதினர் என்று எல்லோரும் என்ஜாய் பண்ணும் விதமாக அத்தனை ரைடுகள் உள்ளன.சிறுவர்களுக்கான சில ரைடுகள்,நம்மூரின் அந்தக்கால குடை ராட்டினத்தை ஞாபகப் படுத்துவதாக இருந்தன.உயரமான ஸ்டாண்டுகளில் தாறுமாறாக உருண்டு,அசுர வேகத்தில் ஓடும் ரைடுகளை இளைஞர்கள் வெகுவாக ரசித்து,அனுபவிக்கிறார்கள்.ஸ்பேஸ் ஷிப் போன்றவற்றைப் பெரியோர்கள் அமைதியாக அணுகி ஆனந்தப்படுகிறார்கள்.குடும்பத்துடன்,ஒரு நாளையல்ல,இரண்டு,மூன்று நாட்களைக் கூட அனுபவிக்க ஏற்ற இடம் இது. (படம்-3,4,5)

கார்டா லேண்ட்
கார்டா லேண்ட்
படம் 5

‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’என்ற பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. சின்ன வயதில் இலுப்பைப் பூவைச் சுவைத்தது இப்பொழுதும் ஞாபகத்தில் உள்ளது.அதைப்போலவே இங்கு பெரிய ஏரிகளின் கரைகளில் வசிப்பவர்கள்,அந்த இடங்களை ‘பீச்’ என்றே அழைக்கிறார்கள். நம்மூரைப் பொறுத்தவரை, கடற்கரைகளைத்தான் பீச் என்று அழைப்பது வழக்கம். அதுமாதிரி,பெரிய ஏரியான கார்டா ஏரியின் பீச்சுக்குச் சென்றோம்.

அன்று செவ்வாய்க் கிழமை என்பதால் அந்த பீச்சை ஒட்டியுள்ள சாலையில் நீண்ட தூரத்திற்குக் கடைகள் போட்டிருந்தார்கள். ஆடைகள்,அழகு சாதனப் பொருட்கள்,சமையலறைப் பொருட்கள்,ரெஸ்டாரண்டுகள் என்று அத்தனைக்கும் பல கடைகளைத் திறந்து வைத்திருந்தார்கள்.

அவை அனைத்தும் காலையிலிருந்து நண்பகல் ஒன்றரை மணி வரையில்தானாம். ஒன்றரை மணிக்குப் பிறகு பார்த்தால் அங்கு கடைகள் இருந்ததற்கான அடையாளமே இல்லை.வழக்கம்போல் சாலைப் போக்கு வரத்தைத் தொடங்கி விடுகிறார்கள்.நமக்கோ ஆச்சரியமாக இருந்தது. நம்மூரில் என்றால் கடை போடுபவர்கள், பூமியைத் தோண்டி மரக்கால்கள் இட்டு,மேலே கிராமப்புறம் என்றால் கீற்றும், நகர்ப்புறம் என்றால் டெண்டும் போடுவார்கள். இங்கோ… எல்லாம் கார், வேன் போன்றவற்றில்தான்.

ஆச்சர்யப்படுத்திய விவசாய நிலங்கள்! - இத்தாலியப் பயணக்கதை-1  | My Vikatan
படம் 6

பொருட்களையும்,ஸ்டாண்ட் போன்ற தளவாடப் பொருட்களையும் காரிலோ,வேனிலோ கொண்டு வந்து கடையை விரிக்கிறார்கள். விற்பனை நேரம் முடிந்த பிறகு முன்பு போலவே வாகனங்களில் அடைத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். நம்மூர் சிறு வியாபாரிகள்,குறிப்பாக புதுப்புது இடங்களில் கடை போடுபவர்கள் இதனைச் சிந்திக்க வேண்டும். கார்,வேன் என்று ஆரம்பத்தில் முதலீடு அதிகம் தேவைப்பட்டாலும் அதன் மூலம் பல சங்கடங்கள் குறைக்கப்படுகின்றன என்பது கண்கூடு.

கார்டா லேண்ட்
கார்டா லேண்ட்

காலையில் கிளம்பும் போதோ நல்ல வெயில். ஆனால் 3 மணிக்கு மழை என்று வெதர் ரிப்போர்ட் சொல்லியதை,அப்பொழுது நம்ப முடியவில்லை.2.30 மணி வாக்கில் மேகம் கறுக்க,மூன்று மணிக்கோ ஆலங்கட்டி மழை.நான் அனுபவித்த மூன்றாவது ஆலங்கட்டி மழை அது.டெல்டாகாரனுக்கு ஆலங்கட்டி மழையெல்லாம் புது அனுபவந்தானே.1976ல் திருச்சி தேசீயக் கல்லூரி விடுதி மாணவனாக இருந்தபோது முதல் ஆலங்கட்டி மழையை அனுபவித்த நான்,2 வது ஆலங்கட்டி மழையை கடந்த மாதம் ஜூரிக்கில் கண்டேன்.விடுதியின் மூன்றாவது திறந்த மாடியில் இடுப்பில் துண்டைச் சுற்றியபடி முதல் ஆலங்கட்டி மழையை ஆனந்தமுடன் ரசித்ததே அலாதியான இன்பந்தான்.

பீச்
பீச்

மீண்டும் 5 மணிக்கு நல்ல வெயில் அடிக்க ஆரம்பிக்க, பக்கத்திலுள்ள சால்பெரினோ & சான் மார்டினோ (Salferino & Sanmartino) என்ற டவர் ஒன்றுக்குச் சென்றோம். உயரமான, வட்டமான இந்த டவரில், உச்சியை அடைய ஏறித்தான் செல்ல வேண்டும். படிகள் இல்லாமல் சாய்தளப் பாதை அமைத்துள்ளதால் எல்லா வயதினராலும் எளிதில் ஏறிட முடியும். உயரே ஏறி, திறந்த வெளியில் நின்று சுற்றிலும் பார்க்க வசதி செய்துள்ளார்கள். அப்படிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வீடுகளும், தள்ளியுள்ள பகுதியில் முழுவதும் திராட்சையைப் பயிர் செய்திருப்பதும்.

மியூசியம்
மியூசியம்
படம்-8

அதாவது விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களை முழுவதுமாக விவசாயத்திற்கே பயன்படுத்துகிறார்கள். அங்கு வீடுகளைக் கூடக் கட்டுவதில்லை. இதன் மூலம் நாட்டின் உற்பத்தி முழுதுமாகப் பாதுகாக்கப்படுகிறது. நமது டெல்டா மாவட்டங்களைக் கூட இது போலத் தேர்வு செய்து, வேறு எந்தப் பணியையும் அங்கு மேற்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்.குறிப்பாக,விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதையும்,ஆயில்,காஸ்,நிலக்கரி ஆய்வு என்று பேர் சொல்லிக் கொண்டு கொத்திப் போடுவதையும் நிறுத்தி வைக்கலாம்.

சால்பெரினோ & சான் மார்டினோ
சால்பெரினோ & சான் மார்டினோ
படம்-7

 டவரின் மேலே ஏறுகையில்,சுவற்றில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் நம்மைக் கவர்கின்றன.அக்காலத் தலைவர்கள்,வீரர்கள்,போராட்டங்கள் ஆகியவற்றைச் சித்திர வடிவில் தருகிறார்கள். மிகப் பழைய கட்டிடமான இது காலத்தைக் கடந்து நிற்பது வியப்பளிக்கிறது. (படம்-7)

பக்கத்தில் ஒரு மியூசியமும் உண்டு. அதில் பழங்காலத் துப்பாக்கிகள்,வாட்கள்,நாணயங்கள்,வீரர்கள் உபயோகித்த பாதுகாப்புக் கவசங்கள், தலைக் கவசங்கள்,வீர்ர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள்,

விருதுகள், என்று அத்தனையையும் பார்வைக்கு வைத்துள்ளார்கள். (படம்-8)

கட்டுரை நீண்டு கொண்டே போவதால் இத்துடன் நிறுத்துகிறேன்.சஃபாரி சென்றதையும்,நீர் நகரமான வெனிஸ் சென்றதையும்,பிரேசியாவின் கோட்டையைப் பார்த்ததையும் அடுத்து எழுதுகிறேன்.

அது வரை…

-என்றும் மாறா அன்புடன்,

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.