வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான் எழுதிய பயணக் கட்டுரைகள் விகடனில் பிரசுரிக்கப்பட்டது குறித்து வியப்புற்று சிந்தித்து கொண்டிருக்கும் போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. டொரோண்டோவில் நாம் வசிக்கும் பகுதியான North York பற்றி ஏன் எழுதக்கூடாது என தோன்றியதின் விளைவு தான் இந்த கட்டுரை. North York எனப்படும் இப்பகுதிக்கு 2015 ல் முதன் முதலாக வந்த நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை இங்கு வசித்து வந்தாலும் இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்களையும், சுத்தம் பேணி காப்பதையும் கண்டு என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
நெடுஞ்சாலையிலிருந்து வானுயர்ந்த கட்டிடங்கள் தென்படும் போது "North York வந்து விட்டோம்" என என் மனது எனக்கு கூறிவிடும். 50 மாடிகளுக்கு மேலே உள்ள பல கட்டிடங்களை இங்கு சர்வ சாதாரணமாக நம்மால் பார்க்க முடியும். அவ்வளவு ஏன்! நான் வசிப்பதே 27 வது மாடியில் தான். நான் வசிக்கும் North York என்ற இந்த பகுதி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது மட்டுமின்றி, நம் கண்களை கவர்கின்ற சுற்றுலா தலங்களும் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது! அத்தகைய ஒன்றிரண்டு சுற்றுலா தலங்களை உங்கள் கண் முன் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

North York ல் Millionaire's row எனப்படும் இடத்தில் தான் கனடாவின் செல்வந்தர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இங்குள்ள வீடுகளை காணும் போது இது கனடாவிலுள்ள மாளிகையா? அல்லது செட்டிநாட்டு அரண்மனையா? என தோன்றும். செட்டிநாட்டு அரண்மனையையும் மிஞ்சி விடுமளவிற்கு அழகுடன் மிளிர்வதை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நான் நெல்லையிலிருந்து திருமணமாகி காரைக்குடிக்கு புலம் பெயர்ந்த பின் கொத்தமங்கலம், கடியாப்பட்டி, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், காரைக்குடி என பல செட்டிநாட்டு ஊர்களில் அரண்மனைகளை வெளியிலிருந்தும், ஒரு சிலவற்றை உள்ளே சென்றும் பார்த்ததுண்டு. ஏன் சில அரண்மனைகளுக்கு விருந்தினராக உள்ளே கூட சென்றிருக்கிறேன்.

நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்ட ஓரிரு அரண்மனைகளில் தங்கியும் இருக்கிறேன். இவை அனைத்திலும் நான் வெளியிலிருந்து கண்டு களித்த அரண்மனைகளின் அழகு தான் என்னை அதிகம் கவர்ந்தது. North York ன் Millionaire's row விலும் இப்படி வெளியிலிருந்து பார்த்து வியக்குமளவு மாளிகைகள் பல உள்ளன.
கானாடுகாத்தான் அரண்மனை போல ஒரு வீதியில் தொடங்கி அடுத்த வீதியில் முடியும் அளவுக்கு பெரிதாக அமைந்துள்ளது. அதன் நுழைவாயில் நம்மை பிரமிக்க செய்வதோடு நெடிய பாதையில் நடந்து சென்று மாளிகையின் உள்ளே செல்லும்படியாக அமைந்துள்ளது நம்மை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது என்பதை கூறவும் வேண்டுமா! செட்டிநாட்டில் சில அரண்மனைகள் பராமரிக்கப்படாமல் இருப்பதை காணலாம். ஆனால் North York ல் பணியாட்கள் நியமித்து திறம்பட அழகாக பராமரித்து வருவதை பார்க்க முடிகிறது.

செட்டிநாட்டு அரண்மனைகளில் நான் கண்ட உயிரோட்டம் மட்டும் North York ல் எனக்கு தென்படவில்லை. செட்டிநாட்டு அரண்மனைகள் பெரிதாக இருந்ததோடு அங்கு 3-4 தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் இங்கு North York ல் தம்பதியர் இருவர் மட்டும் பணியாட்களுடன் வசிப்பதை காண முடியும். கோடைகால விடுமுறை தினங்களில் உரிமையாளரின் மகன், மகள் தங்களது குடும்பத்துடன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
செட்டிநாட்டு அரண்மனைகளுக்கு பல மாநிலங்களில் இருந்து சினிமா எடுக்க வருவது போல், North York ன் அரண்மனைகளுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து சினிமா எடுக்க வருகிறார்கள். நான் கண்ட செட்டிநாட்டு அரண்மனைகளில் மூதாதையர் பயன்படுத்திய பொருட்களை பழமை மாறாமல் பாதுகாத்து வருவதோடு, அதை குறித்து வருகை தருபவர்களுக்கு விளக்கமும் கூறி தங்கள் பாரம்பரியத்தை காத்து வருகிறார்கள். செட்டிநாடு அரண்மனைகளில் மழை நீரை சேமிக்க குழாயும், காற்றோட்டமும், சூரிய ஒளி வர ஏற்பாடுகளும் செய்தார்கள் என்றால் இங்கு இந்நாட்டிற்கேற்ப நீச்சல் குளம் மற்றும் புல் தரை அமைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் பார்த்த பிறகு North York ன் மாளிகைகளை செட்டிநாடு அரண்மனைகளோடு ஒப்பிடுவது சரி என எனக்கு தோன்றியது.

அடுத்து North York ல் அமைந்துள்ள Ontario Science Centre பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். நெல்லையில் எங்கள் இல்லத்திற்கு அருகாமையில் District Science Centre அமைந்திருந்தாலும் எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிட்டவில்லை என்பது என் மனதில் குறையாகவே இருந்தது. Science Centre ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்பது எனது விருப்பமாகவும் இருந்தது.
நெல்லையில் இருந்தது போலவே டொரோண்டோவிலும் என் வீட்டிற்கு அருகிலேயே Science Centre அமைந்ததால் பல முறை அங்கு சென்றிருக்கிறேன். மாணவர்களுக்கு அறிவியல் பற்றிய அறிவை கொடுக்கும் Science Centre ல் என்னை போன்றவர்கள் கண்டுகளிக்கவும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் பலமுறை சென்று I-MAX Dome திரையில் திரையிடப்படும் ஆவணப்படங்களை கண்டு களித்துள்ளேன். I-MAX Dome எனப்படுவது உலகிலேயே மிகப்பெரிய திரை எனக் கூறுவார்கள்.

I-MAX கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதால் அதை கனடிய மக்கள் அதிகம் விளம்பரப்படுத்துவது மட்டுமின்றி, அதை எண்ணி மிக பெருமிதம் அடைகிறார்கள். வேளச்சேரியிலும், வடபழனியிலும் உள்ள I-MAX திரை, I-MAX Dome திரையின் பாதியளவு கூட இருக்காது. அதனால் தான் இந்தியாவில் உள்ள I-MAX ஐ பொய்-MAX எனவும் பலர் நகைச்சுவையாக கூறுவதுண்டு. I-MAX Dome ல் திரையிடும் ஆவணப்படங்களை நாம் காணும் போது 3-D கண்ணாடி இல்லாமலே முப்பரிமாண மாயை ஏற்படும். டொரோண்டோவில் இருப்பவர்களும், டொரோண்டோ வருபவர்களும் Ontario Science Centre ல் இருக்கும் I-MAX திரையரங்கை கண்டு களிக்காமல் சென்றால் அந்த பயணமே முற்றுப் பெறுவதில்லை எனலாம்.

Edwards Gardens என்ற அழகிய பூந்தோட்டம் இங்கு அமைந்திருப்பது North York ன் இன்னொரு சிறப்பம்சமாகும். Aga Khan என்பவரால் கட்டப்பட்ட கலைநயம் பொருந்திய அருங்காட்சியகம் இருப்பதும் North York ல் தான். Aga Khan அருங்காட்சியகத்தின் வேலைப்பாடு மற்றும் கலைநயம் நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தாலும் சரி, உள்ளே சென்று பார்த்தாலும் சரி நம் கண்களுக்கு விருந்தளிக்க தவறுவதில்லை. பிரபலமான தென்னிந்திய நடிகை ஒருவர் கூட நான் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் தான் குடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறிய மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் டொரோண்டோவின் ஒரு பகுதி தான் North York.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.