Published:Updated:

காவிரிக்கரையில் காலார நடந்து! - கிராமத்தானின் பயணம் - 19

Scenes in and around resort – Coorg / Kabini

அதிகமாகச் சாப்பிட்டதால் அடுத்த வேளை சாப்பிடக் கூடாது என்று உறுதியெடுத்து, ஐந்தே மணி நேரத்தில் அதை முறியடித்து, அதை ஈடு செய்வதற்காக நடந்தே தலைக்காவிரியை (காவிரி தொடங்கும் இடம்) அடைந்தோம். காவிரிக் கரையோரம் நிறைய நடந்தோம், கால் நினைத்தோம். துபாரேவில் யானைகளைக் குளிப்பாட்டினோம்.

Published:Updated:

காவிரிக்கரையில் காலார நடந்து! - கிராமத்தானின் பயணம் - 19

அதிகமாகச் சாப்பிட்டதால் அடுத்த வேளை சாப்பிடக் கூடாது என்று உறுதியெடுத்து, ஐந்தே மணி நேரத்தில் அதை முறியடித்து, அதை ஈடு செய்வதற்காக நடந்தே தலைக்காவிரியை (காவிரி தொடங்கும் இடம்) அடைந்தோம். காவிரிக் கரையோரம் நிறைய நடந்தோம், கால் நினைத்தோம். துபாரேவில் யானைகளைக் குளிப்பாட்டினோம்.

Scenes in and around resort – Coorg / Kabini

(இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-18 படிக்காதவர்கள் படிக்கலாம்.)

1986-ம் ஆண்டில் மும்பை பயணம் பற்றி முன்பே சொன்னேன். வேலையில் சேர்ந்த முதல் நாள். சம்பிரதாயங்கள் முடிந்து என் துறை இருக்கும் இடத்துக்கு வழி சொன்னார்கள். மும்பை நரிமன் பாயிண்ட் அப்போதே நிறைய வானுயர்ந்த கட்டிடங்கள் (Sky Scrapers) நிறைந்த இடம். அவற்றைப் பார்த்து வியந்துகொண்டே என் அலுவலகத்தில் நுழைந்தேன், சற்றே கவலைகளுடன். என் இருக்கைக்கு சென்று நானே என்னை அறிமுகம் செய்துகொண்டேன். பெயர்கள் எல்லாம் பாலேக்கர், நிம்பல்கர் என்று. கூடவே சில பல மலையாளிகள், தமிழர்கள் என்று மினி இந்தியா. நான் புது வரவு என்பதாலோ என்னவோ, என்னை தொலைபேசி அருகிலேயே அமர்த்தினார்கள். அப்போதெல்லாம் மொத்த பிரிவுக்குமே பொது தொலைபேசிதான்.

Nariman Point / Marine Drive
Nariman Point / Marine Drive

இரண்டாவது நாள் தொலைபேசி ஒலித்தது. அருகிலேயே என் இருக்கை என்பதால் நான் பதிலளித்தேன். மறுமுனையில் இருந்து ஹிந்தியில் "நான் அல்லாவுதீன் காதருடன் பேசலாமா" என்று விழுந்தது. நான் சற்றே தயக்கத்துடன் குரலை உயர்த்தி ஆங்கிலத்தில் "அல்லாவுதீன் காதருக்கான அழைப்பு. எங்கே அவர்?" என்று கேட்டேன். மற்ற பணியாளர்கள் தலையை உயர்த்தி, 'அப்படி யாரும் இல்லையே' என்றார்கள். நான் எனக்குத் தெரியாத ஹிந்தியில் "நஹின்" என்று சொல்லி வைத்துவிட்டேன்.

சில நிமிடங்களிலேயே மீண்டும் ஒலித்தது அதே கேள்வியுடன். நான் சற்றே முழிக்க என் சக பணியாளர் (தமிழர்) வாங்கிப் பேச, அடுத்த நிமிடம், ''ஷங்கர் இந்த அழைப்பு அல்லாவுதீன் காதருக்கு இல்லை, தலாவடேகருக்கு'' என்று, சிரித்துக்கொண்டே அவரை அழைக்க, மற்ற பணியாளர்களும் சிரிக்க, நான் குறுகிய காலத்திலேயே எல்லோருக்கும் சற்றுப் பிடித்தவனானேன். 'பாவம் சின்ன பையன்' கணக்கில் என்னைப் பார்ப்பார்கள்.

Commercial Street, Bangalore
Commercial Street, Bangalore

அந்த 'தலாவடேகர் அல்லாவுதீன் காதர்' விவகாரத்தை தீர்த்துவைத்த தமிழர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார். 35 வருடங்களாகியும், நட்பு நிலைக்கிறது. போன வருடம் குடும்பத்துடன் துபாயில் என் வீட்டில் சில நாட்கள் தங்கி சுற்றிப்பார்த்தார். எங்களையும் அழைத்தார். நாங்கள் பெங்களூரு செல்வதற்கு முக்கிய காரணம் அவர்.

அடுத்த முக்கிய காரணம்... நான் பெங்களூருவில் இருந்தபோது அடிக்கடி சென்று வந்த பிரிகேட் மற்றும் கமர்ஷியல் சாலைகள். நான் வசித்த இடம் வசந்த் நகர் என்ற இடம்... மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரிக்கு எதிரில். பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகில் கல்லூரி வாசல். ஆனால் பாருங்கள், கல்லூரி நாட்களில் நான் வேலைக்கு செல்லவேண்டும். காலையில் சில பெண்கள் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். நான் மிகவும் ஆர்வத்துடன் பார்ப்பேன்.

தப்பாக நினைக்காதீர்கள். பொதுவாகவே எனக்கு விளையாட்டு பிடிக்கும். வரக்கால்பட்டில் நிறைய கோலி குண்டு மற்றும் கோட்டிப்புள் விளையாடியிருக்கிறேன். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது பெண்கள் பயிற்சியில் இருக்கமாட்டார்கள். எனவே, கிளம்பி பேருந்தில் ஏறி மெஜஸ்டிக் சர்க்கிள் அல்லது எம். ஜி, பிரிகேட் மற்றும் கமர்ஷியல் சாலை என அலைவேன். அந்தப் பரபரப்பு, பலவிதமான மனிதர்கள், நல்ல கடைகள் எனக் களைப்பே வராது. நானும் என் மனைவியிடம் நிறைய ’பில்டப்’ (ஏறக்குறைய தமிழ் வார்த்தைதான்!) கொடுக்க, மனைவி சந்தர்ப்பம் கிடைக்கும்போது செல்லலாம் என்று சொல்லியிருந்தார். இப்போது அந்தச் சந்தர்ப்பம் வந்தது.

மூன்றாவது காரணம் என்னை மிகவும் கவர்ந்த 'பேலூர்' மற்றும் 'ஹளபீடு' சிற்பங்கள். 1980-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கல்லூரி சுற்றுலாவாக பெங்களூரு, மைசூர், பேலூர் மற்றும் ஹளபீடு சென்று வந்தோம்.

அப்போதே நினைத்தேன், என் வருங்கால மனைவியை அழைத்து வரவேண்டும் என்று. ஏறக்குறைய 40 வருடம் கழித்து நிறைவேறியது அந்த நாள் ஆசை!

அந்தச் சுற்றுலாவில் இன்றும் ஞாபகம் உள்ள விஷயம்... பிருந்தாவன் பூங்காவில் ஒரு சக மாணவன் சற்றே போதையில் கன்னட பெண்களை கிண்டல் செய்ய, நம்ம (?) விஷால் மாதிரி 10-15 கன்னடர்கள் அந்த மாணவனையும் தடுக்கப்போன அப்பாவி பேராசிரியரையும் நன்கு பின்னி பெடலெடுத்து, விஷயம் போலீஸ் வரை போனது.

அந்தச் சம்பவத்திற்கு பின் சுற்றுலா முடியும்வரை, எல்லோரும் பெண்கள் செல்லும்போது மரியாதையாக பூமியை ஆராய்ச்சி செய்தோம்!

என்ன காரணம் என்று நேராக சொல்லாமல் ஏன் இப்படிச் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும். இனி நேராக வருகிறேன்.

முதலில் பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூருக்கு வாகனத்தில் செல்லலாம் என்றே நினைத்தோம். எனினும், ரயிலில் பயணம் செய்து பல வருடங்களாகி விட்டது என்ற காரணத்தினால் ரயிலில் பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இறங்கி முதலில் விடுதி பின் அன்று மதியமே எம் ஜி, பிரிகேட் மற்றும் கமர்ஷியல் சாலைகள் சென்றோம். சந்தோஷம், நிறைய செலவு. மனைவி மட்டும்தான் செலவு செய்யவேண்டுமா, என்ன? நானும் அடம்பிடித்து ஒரு ஸ்படிக மாலை வாங்கினேன். ரூபாய் நாலாயிரம் சொல்லி அப்படி இப்படி என்று இரண்டாயிரத்துக்குக் கொடுத்தார்கள். வாங்கி மாட்டிக்கொண்டேன்.

Karnataka Vidhana Soudha
Karnataka Vidhana Soudha
Photo by Vivek Chugh from Pexels

அடுத்த நாள் காலை அந்த நண்பருடன் செலவழிந்தது. வீட்டில் உணவருந்தி கிருஷ்ணா கோவில் (ISKCON), மற்றும் சில கோவில்கள் சென்று வந்தோம். கிருஷ்ணா கோவிலில் அதே ஸ்படிக மாலை அறுநூறுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். என் மாலையை கழற்றி, 'இது என்ன விலை போகும்' என்று கேட்க, 'இரண்டும் ஒரே மாதிரிதான்' என்று கூறி மனதை நோகடித்தார்கள். சரி ஏமாந்துவிட்டோம் (முதல் முறையா என்ன?) என்று மாலையை திருப்பி போடும்போது என் தோள்பையின் கொக்கியில் மாட்டி ஸ்படிகங்கள் சிதறி... மனைவி என்னை பார்த்து 'ஏதோ' கையில் பூமாலை என்று சொல்லாமல் சொல்ல, நான் வழிந்துகொண்டே, 'அது எனக்கு உண்டானது இல்லை போல' என்று கூறி தோற்றேன்.

இந்த சோகத்தில், விடுதி வந்து நல்ல 'தட்டு சேவை' (Buffet) உண்டு நன்றாகவே உறங்கினேன். சாப்பாடு என் பலகீனம்!

அடுத்தநாள் முக்கிய வேலை, எம் ஜீ சாலையின் சற்றே உள்ளே உள்ள KSIC என்ற கடையில் மைசூர் சில்க் புடவைகள் வாங்க வேண்டும். மனைவி நிறைய சிநேகிதிகளை அழைத்து எல்லா விவரங்களையும் கேட்டறிந்து பின்பே முடிவு செய்தார். நான் கட்டிடம் கட்டும்போது மட்டும் இந்த அளவுக்கு மெனக்கெட்டிருந்தால், ஒரு 'ஏமாற்றுப் பேர்வழி' கான்ட்ராக்டரிடம் மாட்டியிருக்கமாட்டேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என் மனைவியிடம்.

பெங்களூருவில் மூன்று நாட்கள் சென்றதே தெரியவில்லை. நண்பரைப் பார்த்தது ஹைலைட் என்றால், ஸ்படிக மாலை மெகாலைட்!

பெங்களுருவில் இருந்து அதிகாலை கிளம்பினோம். பேலூர் ஹளபீடு, கூர்க், கபினி பார்த்துவிட்டு, மைசூரு வழியாக பெங்களூருவுக்குத் திரும்ப நண்பர் மூலம் வாகனம் ஏற்பாடு செய்துகொண்டோம். சம்பத் என்ற பெங்களூரு தமிழர்தான். மிகவும் நல்ல பிள்ளை. கவனமாக அதே நேரம் கனிவாக நடந்துகொண்டார். நம் பயணத்தை சந்தோஷமாக மாற்றுவதில் நம் ஓட்டுனரின் பங்கும் மிக முக்கியமானது.

சம்பத் பற்றி பேசும்போது, அய்யப்பனை பற்றிக் கூறாவிட்டால் அது பெரிய தவறு. நாங்கள் பாண்டிச்சேரி செல்லும்போதெல்லாம் எங்களுக்கு அய்யப்பன்தான் துணை. என் மகள்கள் தனியாகச் செல்லும்போதும் அய்யப்பனை நம்பி அனுப்பிவைக்கலாம். என் உறவினர்கள் வீடுகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. பொது அறிவும் மிக அதிகம். இந்த 15 வருடத்தில் ஏறக்குறைய எங்கள் குடும்ப நபர் மாதிரிதான். நல்ல காரியங்களுக்கு அய்யப்பன் நிச்சயம்.

சம்பத் எங்களை தும்கூர் ஹஸன் (வழியில் ஷ்ரவணபெலகோலா) வழியாக பேலூர் ஹளபீடு அழைத்து சென்றார். ஷ்ரவணபெலகோலா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இங்குதான் உலகிலேயே மிக உயரமான 'ஒரே கல்'லில் செதுக்கப்பட்ட கோமதேஷ்வரர் சிலை உள்ளது. ஏறக்குறைய 60 அடி. விந்தியகிரி என்று சிறிய குன்றின் மேல் உள்ள ஜைன கோவிலினுள் இந்த சிலை உள்ளது. 30 கிமீ தொலைவில் இருந்தும் பார்க்க கூடியது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டது என்பதை நினைக்கவே வியப்பாக உள்ளது. மின்சாரம் இல்லை, உபகரணங்கள் இல்லை. ஆனால், முயற்சி மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு மட்டுமே இருந்திருக்கவேண்டும்.

சற்றே சிரமப்பட்டு குன்றின் மீது ஏறவேண்டும். ஆனால், மேலிருந்து மிதமான காற்றை அனுபவித்துக்கொண்டே சுற்றிலும் அழகிய கிராமங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும்.

பேலூரில் உள்ள சென்னகேஷவா மற்றும் ஹளபீடுவில் உள்ள ஹொய்சலேஸ்வர கோவில்கள் பார்க்க வேண்டிய தலங்கள். கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக் கோவில்கள் இன்றும் நிறைய சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. அப்படியான வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களைப் பார்த்து வியந்தோம். இந்த மாதிரி இடங்களை நாம் பொக்கிஷமாக பாது்காக்கத் தவறுகிறோம் என்றே தோன்றுகிறது.

இவை புகழ்பெற்ற ஹோய்சால காலத்தின் சின்னங்கள். 900-1000 வருடங்கள் புராதனமானவை. நுட்பமான மற்றும் கைதேர்ந்த கல் வேலைப்பாடுகள், மனிதத் திறமையின் பிரமிக்கத்தக்க அடையாளங்கள். எண்ணற்ற வெளிநாட்டுச் சிற்பிகள் இன்றளவும் வியக்கும் இந்த இடத்தை மற்ற நாட்டுக்காரர்கள் கண்போல பாதுகாப்பார்கள். நம்மவர்களோ, செருப்புக்கும் கார் நிறுத்தத்துக்கும் 'காண்ட்ராக்ட்' விட்டு ஊழல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் புராதன சின்னங்கள் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!

Belur / Halabeedu
Belur / Halabeedu

செருப்பை கோவிலின் அருகில் அங்கே இங்கே சிதறி விட்டு செல்வதற்கு மூன்று ரூபாய் என்று அறிவிப்பு சொல்ல, அந்தக் கண்காணிப்பாளர் எல்லோரிடமும் 5 ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தார். நான் அறிவிப்பைக் காட்டி, 'ஏன் அதிகம் வசூலிக்கிறீர்கள்' என்று கேட்க "தும்ஹாரா தஃலீப் க்யா ஹை" (உனக்கு என்ன பிரச்ினை) என்று அடிப்பதுபோல கேட்டார்.

2 ரூபாய் என்பது பிரச்னை இல்லை. ஆனால், இந்த ஊழல் எந்த அளவுக்கு செருப்பு வரை வந்து, அனைவரும், 'இதெல்லாம் ஒரு மேட்டரா' என்று சகித்துக்கொள்ளும் அளவுக்கு நாம் ஒரு சந்ததியையே உருவாக்கி வைத்துள்ளோம். எனக்கு அவரிடம் சண்டை பிடிக்கும் எண்ணம் இல்லை. பிருந்தாவனத்தில் பேராசிரியர் அடி வாங்கிய நிலை எனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து நானும் பின்வாங்கினேன். இந்தக் கசப்பான அனுபவம் தவிர்த்து மற்றதெல்லாம் நலமே.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தச் சின்னங்கள் அப்போதைய மன்னர்களின் மற்றும் மக்களின் கலைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இப்போது நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. திரும்ப மன்னராட்சிக்கே சென்றுவிடலாமா? வாய்ப்பே இல்லை ராஜா!

அன்று இரவு குர்க் என்ற காபி எஸ்டேட்டினுள் உள்ள ஒரு உல்லாச விடுதியில் (Resort) தங்கினோம். நல்ல வசதியான அறைகள். அளவுக்கு அதிகமான உபசரிப்பு. ஒவ்வொரு வேளையும் அதிகமாகச் சாப்பிட்டதால் அடுத்த வேளை சாப்பிடக் கூடாது என்று உறுதியெடுத்து, ஐந்தே மணி நேரத்தில் அதை முறியடித்து, அதை ஈடு செய்வதற்காக நடந்தே தலைக்காவிரியை (காவிரி தொடங்கும் இடம்) அடைந்தோம். காவிரிக் கரையோரம் நிறைய நடந்தோம்; கால் நினைத்தோம். துபாரேவில் யானைகளைக் குளிப்பாட்டினோம்.

கூர்க்கில் பார்க்கவேண்டிய மற்றொரு இடம், நம்ட்ரொலிங் என்ற திபெத் மக்கள் பராமரிக்கும் புத்த ஆலயம். வித்தியசமான அனுபவம். இவை தவிர்த்து அந்த உல்லாச விடுதிக்குள்ளேயே எண்ணற்ற சுற்றுலா அனுபவங்கள், கலாசார நடனங்கள், விளையாட்டுகள் என நம்மை நன்றாகவே பிஸியாக வைத்திருந்தார்கள்.

குழம்பி (Coffee - காபி) கொட்டை பற்றி நிறைய விவரங்கள் கற்றுக்கொண்டேன். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. ஒரு ஆடு மேய்ப்பவர் அவருடைய ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியை மேய்ந்தால் மட்டும் மிகவும் சுறுசுறுப்பாகவும் தூங்காமல் இருப்பதையும் பார்த்து ஆராய, இன்று அது ஸ்டார்பக்ஸ் (Starbucks) என்று அறியப்படுகிறது.

மூன்று நாட்கள் கழித்து 120 கிமீ தொலைவில் கபினி என்ற இடத்துக்கு மாறினோம். அங்கு வனவிலங்குகளைத் தேடி நாள் முழுக்க சுற்றி சில ஆடுகளை மட்டும் பார்த்தோம். மற்றபடி ஆற்றங்கரை ஒட்டியுள்ள அந்த விடுதியில் நல்ல ஓய்வு.

காவிரியில் பரிசல் பயணம் செய்தோம். மாட்டு வண்டி பயணம் என் மனைவிக்கு மிகவும் பிடித்தது. நான் அதெல்லாம் பத்து வயதிலேயே செய்து முடித்துவிட்டேன். இருந்தாலும் அந்த மாடுகளுக்குத் துணையாக நானும் வண்டியில் சென்றேன். ஓட்டினேன். கொஞ்சம் பழக்கம் விட்டுவிட்டது.

கடைசி நிறுத்தம் மைசூர். நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. மைசூர் அவ்வளவு சுத்தம். ஊர் வெகு அமைதியாக அழகாக இருந்தது. மைசூர் சென்று அரண்மனை பார்க்கவில்லை என்றால்? நன்றாகச் சுற்றிப் பார்த்து, இரவில் 'ஒளியும் ஒலியும் காட்சி'யும் பார்த்து அனுபவித்தோம்.

நம் மக்களின் உழைப்புக்கும் உன்னதமான கலைக்கும் அரண்மனை ஒரு சாட்சி. அடுத்த சாட்சி பிரமாண்டமான 'விதான் சவுதா' கட்டிடம். இரவில் ஒளியூட்டி நன்றாகவே இருந்தது. பெங்களுருவில் KSIC கடையில் புடவை வாங்கினோமே... அந்த புடைவைகள் நெய்யப்படுவது மைசூரில்தான். அந்தச் தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தோம். சுரத்தேயில்லாமல் சுற்றி காட்டினார்கள்.

பின்னர் அருகிலுள்ள சில கோவில்களைப் பார்த்துவிட்டு, 12 நாள் கழித்து பெங்களூரு வழியாக சென்னைக்கு வண்டிபிடித்து வந்தோம்.

சம்பத் பற்றி சொன்னேன் அல்லவா? தலைக் காவிரியில் ஒரு கோவிலுக்கு சென்று திரும்புகையில் நாங்கள் வெறும் காலுடன் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டி சம்பத் கோவிலுக்கு அருகில் வர முயற்சித்தார். நாங்கள் நடந்து வருகிறோம் என்று சொல்லியும்கூட... ஒரு குறுகிய திருப்பத்தில் சம்பத் தவறு செய்ய, வண்டிக்கு சிறிய சேதம். எங்களுக்கு மிகவும் வருத்தம். சம்பத், “அது என் தவறு நீங்கள் வருந்த வேண்டாம், எனக்கு காப்பீடு கிடைக்கும். நஷ்டம் எதுவுமில்லை” என்றார். அந்த ஒரு சிறு நிகழ்வு தவிர, சம்பத்தின் ஓட்டுதல் டாப் கிளாஸ். அவருக்கு நன்றி சொல்லி அவர் பிள்ளைக்கு சிறு அன்பளிப்பு கொடுத்து ரயில் ஏறினோம்.

நம் மக்கள் நினைத்தால் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கு இந்தச் சுற்றுலாவில் இன்னும் பல உதாரணங்கள். ரயில்வே துறை மிகவுமே சிறப்படைந்துள்ளது. ஸ்டேஷன் மற்றும் ரயில்களும் நல்ல சுத்தம். நல்ல வசதிகள். நேரம் தவறாமல் வந்து சேர்ந்தோம்.

சென்னையில் அய்யப்பன் 'அ'யம் வைட்டிங்' என்பது போலக் காத்திருந்து எங்களைப் பத்திரமாக பாண்டி கொண்டுவந்து சேர்த்தார். 12 நாட்கள் நீள் பயணம். கொஞ்சம் ஓய்வு தேவை. எடுத்தோம்!

அடுத்து செட்டிநாட்டு பயணம். என் அலுவலகத்தில் சில நண்பர்கள் (நாட்டுக்கோட்டை சார்ந்தவர்கள்) என் ஆவலைத் தூண்டினார்கள். கூடவே, என் அண்ணனின் நெருங்கிய நண்பர், 'நான் சுற்றிக் காட்டுகிறேன்' என்று அழைத்தார். எல்லாம் சேர்ந்து ஒரு மூன்று நாட்கள் கானாடு காத்தானில். அடுத்த வாரம், எப்படி இந்தப் பயணம் மீண்டும் என்னை வரக்கால்பட்டிக்கு மனப் பயணம் செய்ய வைத்தது என்று பார்ப்போம்.

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism