வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
திண்டுக்கல், தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மாநகராட்சியாகும்.. திண்டுக்கல் பகுதியை சுற்றிலும் மலைகளும் குன்றுகளும் இருப்பினும் திண்டுக்கல் நத்தம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறுமலை தனி முக்கியத்துவம் பெற்று அமைந்துள்ளது.
சிறுமலை மலைதொடர் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இறுதியில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ள இன்னொரு மலைவாசஸ்தலமான மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைகானல் பயணிகள் அதிகம் செல்லும் கோடைவாசஸ்தலமாக ஏற்கனவே உருவெடுத்துவிட்டது.
ஆனால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுமலையோ அழகிய, அமைதியான இன்னும் ப்யணிகளால் களங்கப்படுத்த படாத மலைகுன்றுகளை கொண்டு அமைந்துள்ளது. சிறுமலை உச்சி அடைய 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சிறுமலை செல்லும் பாதையில் உள்ள இரு ஓரங்களும் மனிதநடமாட்டமின்றி பசுமையாய் கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.

அனுமார் சஞ்சீவி மலையை கொண்டு சென்றபொழுது சிதறிய சிறு மண் துகளே சிறுமலையாக உருவெடுத்ததாக உள்ளூர்வாசிகளால் நம்பப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சிறுமலையில் பல்வேறு மூலிகைகள் இன்றும் கிடைக்கின்றன.
சிறுவாழைப் பழம் என்று அழைக்கப்படும் இயற்கை தாதுக்கள் அதிகம் கொண்ட மலை வாழைப்பழங்கள் சிறுமலையில் அதிகம் விளைகின்றன. அதே போல் கொய்யா, மா எலுமிச்சை மற்றும் பலா பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை விளைவிக்கும் விவசாயிகள் இந்த விரைவிலே அழிந்து போகக்கூடிய விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர் இந்த விளைபொருட்களை தங்களது வீடுகளில் நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கமுடியாததால் குறைந்த இலாப விளிம்பு பெறும் கட்டாய நிலைக்கு இந்த விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

சிறுமலையில் கண்ணில் தென்பட்ட தென்படுவதாக சொல்லப்பட்ட விலங்குகள் காட்டெருமை, மான், குரங்கு மற்றும் சிலசமயங்களில் கருப்பு என்றழைக்கப்படும் கரடியுமாகும். சிறுமலையும் அதை சுற்றியுள்ள வனங்களும் மனித நடமாட்டமும் தொந்தரவும் அதிகம் இல்லாது இருந்தாலும் சிறுமலையில் மனித மிருக மோதல் அதிகம் தென்படுவதில்லை.
சிறுமலையை அடுத்து அகத்தியர் மலை உள்ளது. இந்த அகத்தியர் மலையில் உள்ள ஒரு சிறு பாறைகுன்றில் சித்தர்களில் மிக பிரசித்தி பெற்றவரான அகத்தியர் வந்து தங்கி இருந்து தவம் செய்ததாக கருதப்பட்டு வருகிறது. நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அகத்தியர் தவம் செய்த அந்த மலை குன்றின் மேல் உள்ள தெய்வம் விஷ்ணு தனது இரு தேவிகளையும் இருபுறமும் கொண்டுள்ளதாக தென்படுகிறது. வரலாறு சொல்வதின் படி சித்தர்கள் தீவிர சிவ பக்தர்களாகவே கருதப்படுகின்றனர்.

இந்த பாறைக்கு அருகில் இன்னொரு சிறு சித்தர் கோவில் உள்ளது. சித்தர் கோவில்கள் எல்லாம் சிறிய அளவிலேயே இருக்கும். சில நேரங்களில் இந்த சித்தர் கோவில்கள் அங்கு தங்கியிருந்து தவம் செயத சித்தர்களின் சமாதியாகவும் இருக்கும். இந்த குறிப்பிட்ட சித்தர் கோவிலில் உள் வெளிச்சம் அதிகம் இல்லாததாலும் கைபேசி மூலம் புகைபடங்கள் எடுக்கப்பட்டதாலும் சித்தர் கோவிலின் உள் பிரகாரத்தை முடிந்த அளவிற்கு காண்பித்துள்ளோம்.
சாதாரணமாக சித்தர்கள் பிரம்மச்சாரிகளாகவே கருதப்பட்டாலும் இந்த குறிப்பிட்ட சித்தர் திருமணம் முடிந்து துறவற வாழ்க்கை மேற்கொண்டவராக இருக்கிறார். அவர் துணைவியாருடன் இருக்கும் சிலை கண்ணில் படுகிறது.

இப்பொழுது பரவலாக காணப்படும் ஒரு கூற்று அவ்வையார் ஒருவர் அல்ல பலராக இருந்திருக்ககூடும் என்பதே: அதே போல் அகத்தியர் என்ற சொல்லும் துறவற வாழ்க்கை மேற்கொண்ட சித்தர்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இருந்திருக்ககூடும்.
வெகு அருகில் இன்னொரு கோவில் தென்படுகிறது. அங்கு செல்ல முயற்சிக்கும் யாத்ரீகர்கள் பாதுகாப்புடனோ தகுந்த துணையுடனோ செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அந்த பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றுகின்றன. இந்த சித்தர் கோவில் சுய உருவெடுத்து கொண்ட வேலுச்சாமி என்ற பெயர் கொண்ட ஒரு சித்தரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த சித்தர் தனது சொத்துகளை விற்று விட்டு சித்து வாழ்க்கையை மேற்கொண்டாராம். சித்தர் வேலுச்சாமியின் முன்னாள் மனைவி அருகிலேயே ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
வேலுச்சாமி சித்தருக்கு உதவ இன்னொரு இளம் சித்தரும் நாங்கள் சென்றபொழுது அங்கே இருந்தார். அந்த இளம் சித்தர் பெயர் இசக்கி. இசக்கி என்ற பெயர் மலைகளில் வாழும் மலைஜாதி மக்களிடையே பொதுவாக வழக்கில் உள்ளது.

வியாபார நோக்குடன் செய்யப்பட்டதா அல்லது மாறுபட்ட கோணத்தில் கருதி செய்யப்பட்டதா என்று அறிந்து கொள்ளமுடியாதவாறு அந்த சித்தர் கோவிலில் உள்ள லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்து புராணங்கள் சிவசக்தியில் சிவனாகிய ஆண் வலது புறமும் சக்தியாகிய பெண் இடது புறமும் கொண்டுள்ளதாக சித்தரித்தாலும் . இந்த சித்தர்களால் வழிபடப்படும் லிங்கத்தின் உள்ளே சக்தி தேவி இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை வேலைக்கு திரும்ப நேரமாகிவிட்டது. உள்ளே சென்ற பேருந்து திரும்பும் நேரம். விரைந்து திரும்பினேன். ஆனாலும் அவசியம் சிற்றுலா போகவேண்டிய இடங்களில் ஒன்று சிறுமலை.
(சிறுமலை பற்றிய பொது விவரங்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும்)
அன்புடன்
எஃப்.எம்.பொனவெஞ்சர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.