மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதல் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்துப் பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக்கொள்வதுபோல் கிறீச்சிட்டு, பேசின. வானம் முழுவதுமாக வெளுத்துவிடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் தொடங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பதுபோல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால் கதிரொளி பிரகாசத்தில் அப்பறவை மட்டும் மாயப் பறவைபோல் மிளிர்ந்தது. அது நிஜப் பறவைதானா அல்லது எனது கற்பனை வீச்சின் பிம்பமா என்று ஐயமுறும்விதத்தில் அதன் தோற்றமும் பொலிவும் இருந்தன. தேவதாரு மரம் ஒருவழியாக அமைதி கண்டது. இனி அந்தி சாயும் வரை அது இளைப்பாறிக்கொள்ளலாம் போன்றதோர் அமைதி அங்கு நிலவியது. பொன்னிறப் பறவை மட்டும் அதே கிளையில் அப்படியே அம்ர்ந்திருந்தது. பறப்பதற்கான ஆயத்தம் அதனிடம் தெரிந்தது. ஏதோ ஒரு சமிக்ஞை அல்லது ஏதோ ஒரு அழைப்புக்காக அது காத்திருந்தது. வெகுநேரமாக அதையே பார்த்துக்கொண்டிருந்த நான், அறைக்குத் திரும்ப எண்ணியபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

தூரத்து மலையிலிருந்து ஓர் அழைப்பொலி. நானும் அந்தப் பறவையும் ஒரே நேரத்தில் ஒலி வந்த திசையை ஏறெடுத்துப் பார்த்தோம். அவ்வொலி நீண்டு குறைவதற்குள் பொன்னிறப் பறவை கிளையில் காலூன்றி வானில் ஏகியது. அதன் சிறகுகள் செந்நிறம் கொண்டிருந்தன. நான் அப்பறவையின் சிறகு விரித்தலை அணு அணுவாக ரசித்துப் பார்த்தேன். காத்திருப்பின் மொத்த வலியையும் அது தனது பறத்தலுக்கான விசையாக மாற்றிக்கொண்டு பறந்ததை உணர முடிந்தது. பறவையை வழியனுப்பிவிட்டுத் திரும்பினேன். அப்போது காற்றில் தவழ்ந்து வந்த செந்நிற இறகொன்று என் தோள்மீது அமர்ந்தது.
அந்த இறகை கவனமாக இரண்டு கைகளுக்குள்ளும் அமர்த்திப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன். விடுதிப் பணியாளர் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். நான் இறகை கவனமாக புத்தகத்துக்குள் வைப்பதைப் பார்த்த அவர் "இது ஹடிம்பாவின் தூதுவனின் இறகு" என்றார்.

'ஹடிம்பா', அப்பெயரை முதன்முறையாக அப்போதுதான் கேள்வியுற்றேன். ஹடிம்பா யாரென்று அவரிடம் வினவினேன். "எங்கள் வன தேவதைகளின் மூதாட்டி அவள். பீமனின் காதல் மனைவி. மணாலி அருகே ஹடிம்பா வனத்தில் அவளது கால்தடம் பதிந்த பாறை இருக்கிறதே... நீங்கள் அதைக் கண்டு வரவில்லையா" என்று ஏமாற்றம் கலந்த தொனியில் கேட்டார். பீமனின் காதல் மனைவி என்கிற அடையாளம் ஹடிம்பா தேவியை இடும்பி என்று எனக்கு உணர்த்திற்று.
"சரி, அந்தப் பறவையை ஏன் இடும்பியின் தூதுவன் என்றீர்கள்?" என்றேன்.
"ஆம்... அது அவளுடைய தூதுவன்தான். துயரம் தாக்கிய மனிதர்களை இடும்பிக்கு அடையாளம் காட்டுவதுதான் அந்தத் தூதுவனின் பணி. அடையாளம் கண்ட இடத்துக்கு இடும்பி சென்று அந்த மனிதர்களின் துயர் போக்குவாள்" என்றார் அவர்.
"அப்படியென்றால் இடும்பி மாயவித்தைகள் அறிந்த மந்திரகாரியா?" என்றேன்.
"அல்ல, அவள் ஒரு கதைசொல்லி. அவள் தனது கதைகளால் மனிதர்களின் துயர் துடைப்பாள். சமயங்களில் அக்கதைகளை தாலாட்டுப்போல் பாடி குழந்தைகளின் மூளைக்குள் முளைக்கும் துர்க்கனவுகளை ஒவ்வொன்றாகக் களைந்தெறிவாள். இடும்பியின் கதை கேட்டு உறங்கும் குழந்தைகள் அதன் பிறகு எதன் நிமித்தமும் வாழ்வில் கலங்குவதில்லை. அவளது கதைகளுக்கு வல்லமையை விதைக்கும் இயல்புண்டு" என்று வாஞ்சையாக அவர் கூறியதைக் கேட்கையில் இடும்பி வனத்துக்கு செல்ல மனம் ஆவல்கொண்டது.

இடும்பி மகாபாரத பீமனின் மனைவியாகப் பரவலாக அறியப்பட்டாலும், மணாலி மற்றும் அப்பகுதியின் மலைவாழ் மக்கள் அனைவரும் தங்களது குலத்தின் மூத்த தாயாகவே அவளை வணங்குகின்றனர். மலைக் கிராமங்களின் மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட தீராத நோயை குணப்படுத்திய வன மக்களின் தலைவியான இடும்பிக்கு மன்னர் தங்களது அரியணைக்குச் செலுத்தும் முதல் மரியாதையை இடும்பியிடமிருந்தே பெற்றதாகவும், பருவமழை முடிந்து நடவு தொடங்கும்போது இடும்பியின் நெற்கலனிலிருந்தே முதல் விதைநெல் பெறப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மணாலியின் மையப் பகுதியில் ஓர் அடர்ந்த வனத்தினுள் இடும்பியின் கோயில் இருக்கிறது. அந்த இடத்தைச் சென்றடைவதில் சிரமம் ஏதுமிருக்கவில்லை. வனத்தின் ஒரு பகுதி, பாதைகள் செப்பனிடப்பட்டு இடும்பி கோயிலுக்கு வழியமைந்திருந்தது. வனப்பகுதியின் நுழைவிடத்தில் சில பெண்கள் காட்டு முயல்களைக் கைகளில் அணைத்துப் பிடித்து நின்றிருந்தனர். அடர்ந்த மயிற்பரப்புடைய அம்முயல்கள் நாட்டு முயல்களைவிட பெரிதாகவும், அவற்றின் பார்வை கூர்மையாகவும் இருந்தன. சுற்றுலா வருபவர்கள் முயல்களுடன் படமெடுத்துக்கொள்ள அப்பெண்கள் உதவினர். அதற்குச் சிறிதளவு கட்டணமும் வசூலித்துக்கொண்டனர்.

இடும்பி வனத்துக்குள் பிரவேசித்ததும் மனம் பல்வேறு உணர்வு விசைக்கு ஆட்படுவதுபோல் எனக்குத் தோன்றியது.
"இடும்பி எங்கள் மலைகளின் மூதாட்டி. வழிபோக்கனாக இங்கு வந்த பீமனிடம் காதல்கொண்டு அதன் சாட்சியாக ஒரு மகவையும் சுமந்தவள். அவனையும் பீமனையும் காக்கும் பொருட்டு தியாகம் செய்யத் துணிந்தாள். "மகனே என் காதலனின் உயிர் காக்க அவனுடைய நினைவாகப் பெற்றெடுத்த உன்னையும் இழக்க நானொரு நாள் துணிவேன். அன்று நீ இந்தத் தாயை மன்னித்தருள வேண்டும்" என்று மன்றாடிய பேதை எங்கள் இடும்பி. அவளுக்குக் காக்கவும், ரட்சிக்கவும் மட்டுமே தெரியும். பறவைகள் அவளுடைய தூதுவர்கள். முழுநிலவின் அழைப்பை யாசித்து ஓநாய்கள் அழும் நாளில் அவள் பாதங்கள் பனித்தகடுகளின் மீது நடந்து செல்லும். உருகிய பனித்தகடுகள் சுனையாக மீண்டும் பிறந்து, ஓடையாகத் தவழ்ந்து பேரருவியாகப் பாய்ந்து வீழ்ந்து, நதியாகப் பிரவாகித்து நாகரிகங்கள் அமைத்து, மனிதர் தம் தலைமுறைகள் பல்கிப் பெருக வழிவகை செய்து கொடுத்த பிறகு கடலோடு சங்கமிக்கும் அச்சிறு சுனையின் பிறப்பிடம் இடும்பியின் பாதம்" என்று என் செவிகளுக்கு மட்டும் கேட்பதுபோல் யாரோ உரைப்பதுபோலிருந்தது.

`இடும்பியின் உறைவிடம்’ என்று எழுதப்பட்டிருந்த குகையினுள் `பிரவேசிக்க அனுமதியில்லை’ என்று அங்கு எழுதப்பட்டிருந்தது. இடும்பியின் கால்தடம் அங்கிருப்பதால் அவ்விடம் அப்பகுதி மக்களால் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குகையைச் சுற்றி மர வேலைப்பாடுகளால் ஆன வழிபாட்த்டு தலம் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு மிருகங்களின் தலைகள் பதனிடப்பட்டு அவளது வசிப்பிடத்தின் மீது தோரணமாக வைக்கப்பட்டிருந்தன. அவ்விடத்தில் அமானுஷ்யத்தின் வெப்பம் படர்வதை என்னால் மட்டுமே உணர முடிந்ததுபோலிருந்தது. மற்றவர்கள் புகைப்படம் எடுப்பதும், காட்டு முயல்களுடன் விளையாடுவதுமாக இயல்பாகவே இருந்தனர். அச்சூழலின் அழைப்பை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த எனது தவிப்பைக் கண்ட கோயில் பணியாளர் என்னை அருகே அழைத்து "நீங்கள் மட்டும் குகையினுள் செல்லுங்கள். யாரையும் உடனழைக்க வேண்டாம்" என்று சன்னமான குரலில் கூறினார். அவருக்கு நன்றி கூறும்விதமாக அவரை வணங்கிவிட்டு குகையினுள் பிரவேசித்தேன்.

வெளியுலகின் வெளிச்சமும் இரைச்சலும் சட்டென மறைந்து ஒரு நிரந்தர அமைதி மனதை ஆட்கொண்டது. கண்கள் குகையின் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடின. ஒரு பாறையிலிருந்து மெல்லிய ஓடையொன்று சுரந்தபடி இருந்தது. அந்நீரை தலையில் தெளித்துக்கொள்ளுமாறு பூசாரி சைகையில் உணர்த்தினார். நான் குனிந்து சுனையின் நீரை இரு கைகளாலும் அள்ளியெடுத்துப் பருகினேன். நீரின் குளுமையும் இனிமையும் நொடி நேரத்தில் குருதியின் நாளங்களில் கலந்து பாய்வதுபோலிருந்தது. நான் ஓரிரு முறை நீரை அள்ளிப் பருகினேன். பல நூற்றாண்டுகளாக தாகம் தவித்த ஆன்மாவின் வேட்கை தணிவதுபோலிருந்தது. மனம் தெளிவடைந்த பிறகு அங்கு அச்சுனையின் கீழே, பாறைகளின் நடுவே பூமியில் ஆழப்பதிந்திருந்தது கால் தடம் ஒன்று தெரிந்தது. கண்கள் அத்தடத்தை உள்வாங்க மறுத்தன. நான் பாறையின் அருகே அமர்ந்து தாழ்ந்து கவனித்தேன். அது சாதாரண மனிதனின் பாத அளவைக் காட்டிலும் சில மடங்குகள் நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. 'இடும்பியின் பாதம்' என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

ஒரு பாதத்தை தரையில் ஊன்றியவளது மற்றொரு பாதம் எங்கு பதிந்திருக்கிறது என்று தேடினேன். ஆனால் அங்கு ஒரு பாதத்தடம் மட்டுமே இருந்தது. தெளிந்த மனம் மீண்டும் குழம்பியது. மனதுக்குள் பல்லாயிரம் கேள்விகள் முளைத்தன. நான் கோயில் பூசாரியிடம் வினவலாம் என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. வெகு நேரம் ஆராய்ந்து பார்த்த பிறகு குகையைவிட்டு வெளியேறினேன். இடும்பியின் குகையைச் சில முறை சுற்றி வந்தேன். அந்தி சாய்வதற்கான அறிகுறியாக பனிப்போர்வை கோயிலின் கூரைவரை படர்ந்துவிட்டிருந்தது.
அவள் தனது மற்றொரு பாதத்தடத்தை எங்கு பதித்திருப்பாள் என்கிற கேள்வியுடன் இடும்பி வனத்திலிருந்து வெளியேறினேன். வனத்தின் வாயிலில் ஒரு மூதாட்டி காட்டு முயல்களை குளிருக்குப் பாதுகாப்பாக மூங்கில் கூடைகளுக்குள் கிடத்திக்கொண்டிருந்தாள். மனதில் குழப்பத்தின் அலைகள் மோதியபடி இருந்தன. மூதாட்டி எனக்காகக் காத்திருந்தவள்போல "என்ன ஆயிற்று... மனதில் என்ன குழப்பம்?’’ என்றாள்.

"அதில்லை தாதிமா, இடும்பியோட ஒரு பாதத்தடம்தான் பார்க்க முடிஞ்சுது. இன்னொரு தடம் எங்கிருக்கும்னு யோசிக்குறேன். உங்களுக்கு தெரியுமா?" என்றேன்.
"ஓ... தெரியுமே. அது உன் மனசுல இருக்கும். அவளோட பாதத்தடம் யார் கண்ணுக்கும் தெரியாது. உனக்குத் தெரிஞ்சிருக்குன்னா இடும்பி தேவி உன்கிட்ட தன்னை வெளிப்படுத்தியிருக்கான்னு அர்த்தம். அவளோட பாதத்தடத்தை இனி உனக்குள்ள நீ தேடு" என்றாள்.
நான் அவ்விடத்திலேயே சிலையாக உறைந்து நின்றேன். அங்கு நிகழ்ந்தவை யாவும் இன்றளவும் எனக்குப் புதிரான நிகழ்வுகளாகவே தோன்றுவதுண்டு. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். மூதாட்டியும் மறைந்துபோனாள்.
இடும்பியின் கதைகள் என்பு தோற்போர்த்திய நிர்வாணத்தைக் காட்டிலும் நிர்வாணமானவை. அவளது கதைகள் எலும்பினுள் ஊடுருவும் சக்திகொண்டவை. நிண நாளங்களின் திண்மையைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவை. அக்கதைகள் இரவு நேரத்தில் குழந்தைகளின் மனதில் முளைக்கும் துர்க்கனவுகளை கிள்ளியெறியும் தன்மை பொருந்தியவை.

இடும்பியின் பாதத்தடம் எனக்குள் பதிந்ததை அந்நேரத்தில் கூடடைந்த பறவைகளின் கீச்சொலிகள் பறைசாற்றின. அந்நாளின் உதயத்தில் நான் கண்ட பறவை இடும்பி வனத்தின் நெடுமரத்தின் மீது வந்தமர்ந்திருந்தது. என்னை அவ்விடம் அழைத்து வரவே அப்பறவை காத்திருந்ததுபோல் எனக்கு அப்போது தோன்றியது. மீண்டும் ஒரு செந்நிற இறகு காற்றில் மிதந்து வந்தது. இம்முறை அந்த இறகை நான் என் கைகளை நீட்டிப் பெற்றுக்கொண்டேன். இடும்பியின் தூதுவன் பகர்ந்த செய்தியுடன் அவ்விடம்விட்டு வெளியேறினேன்.
தேவதைக் கதைகளின் விதைநெல் சிலவற்றோடு இடும்பி என்னை வழியனுப்பினாள்.