Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: மணாலி - பழைமையும் புதுமையும் பகரும் உண்மைகள் | பகுதி 38

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

இலையுதிர்காலத்து மணாலி சொர்க்க பூமியாகக் காட்சியளித்தது. குல்லுவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அச்சிற்றூர் `இந்தியர்களின் சுவிட்சர்லாந்து' என்று அறியப்படுகிறது. தேனிலவு ஜோடிகளின் சரணாலயம் மணாலி.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: மணாலி - பழைமையும் புதுமையும் பகரும் உண்மைகள் | பகுதி 38

இலையுதிர்காலத்து மணாலி சொர்க்க பூமியாகக் காட்சியளித்தது. குல்லுவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அச்சிற்றூர் `இந்தியர்களின் சுவிட்சர்லாந்து' என்று அறியப்படுகிறது. தேனிலவு ஜோடிகளின் சரணாலயம் மணாலி.

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

மழைகாலத்தில் தரம்சாலாவில் காய்கனிகளின் வரவு பெருமளவு பாதிக்கப்படும். குல்லு அருகே மண்டி எனும் இடத்தில் அமைந்திருக்கும் காய்கறிச் சந்தையிலிருந்தே இமாச்சல்பிரதேஷின் பல்வேறு மலை கிராமங்களுக்கான காய்கறிகளும் பழங்களும் கொள்முதல் செய்யப்படும். மழைகாலத்தில் அடிக்கடி நிகழும் மண்சரிவுகளால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தடங்கல் ஏற்படுவதுண்டு.

'அமித் கிரானா' எனும் சிறிய மளிகைக்கடைதான் நாங்கள் வசித்த பள்ளத்தாக்கில் காய்கறி, பால், முட்டை, ரொட்டி, மளிகை , மொபைல் ரீசார்ஜ் என அனைத்துப் பொருள்களும் கிடைக்கும் ஒரே கடை. சுற்றிலும் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு வேறு கடைகள் இல்லாததால் 'அமித் கிரானா ஸ்டோர்ஸ்' அந்தப் பகுதி மக்களின், குறிப்பாக அந்தப் பகுதி பெண்களின் புகலிடமாக இருந்தது.

கடையின் உரிமையாளர் அமித், தன் குடும்பத்தினருடன் கடையின் பின்புறம் வசித்துவந்தார். அவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். அமித், அவரின் மனைவி மக்கள், தாய் தந்தையர், அவரின் தம்பி குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர். அவர்களிடம் இரண்டு மாடுகள் இருந்தன. அமித்தும் அவரின் தம்பி ராகேஷும் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டனர். பெண்கள் குடும்பநலன் பேணினர். ஆடு மாடுகளைப் பேணுவதும் அவர்கள் வேலையாக இருந்தது. பெண்கள் தயிர், நெய் வியாபாரம் செய்தனர். அவர்களது முக தரிசனம் பெறுவது அவ்வளவு எளிதல்ல. முக்காடு விலகாமல் வேகமாக வேலை செய்யும் அவர்களது இயல்பைக் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் இரண்டு மருமகள்களும் முக்காடு விலக்கி அமர்ந்திருப்பர்.

அயலார் யாரேனும் தென்பட்டால் இயந்திர வேகத்தில் தானாக கைகள் முகத்தின் மீது முக்காடிழுத்துக்கொள்ளும்.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

மாலை வேளைகளில் அமித் கிரானாவில் மலை கிராமங்களின் இளவயதினர் அதிகம் கூடுவதுண்டு. அங்கு கிடைக்கும் சிகரெட் வகைகள் அதற்கொரு முக்கியக் காரணம். அமித் மிகவும் புத்திசாலி. எல்லா வயதினருக்கும் தேவையான பொருள்களை வைத்திருந்தார். மாலை நேர நடைப்பயிற்சியின்போது அங்கிருந்து வரும் வித்தியாசமான சிகரெட் மணம் என் புலன்களை ஈர்த்தது. என்றாவது ஒரு நாள் அதை வாங்க வேண்டுமென்ற எண்ணம்கொண்டேன்.

அமித் கிரானாவில் எப்போதும் பக்திப் பாடல்கள் ஒலித்தபடியே இருக்கும். அமித் சாமர்த்தியசாலி. தன் கடையில் இல்லாத பொருளே இல்லை என்று பெருமையாகக் கூறுவார். மழைகாலத்தில் ஒருமுறை ஏதோ பொருள் வாங்கச் சென்றபோது அவர் தலையில் கறுப்புத் துணி அணிந்திருந்தார். பக்திப் பாடல்கள் ஒலிக்கவில்லை. சாமி படங்கள் திருப்பி வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகள் வந்திருக்கவில்லை.

என்னவாயிற்று என்று வினவியபோது மண்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சரக்குகளை ஏற்றி வந்த வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர்களது துயரத்துக்கு வேறு காரணமிருந்தது. முந்தைய இரவு பொழிந்த கனமழையின் தீவிரம் தாளாமல் அவரது இரண்டு மாடுகளில் ஒன்று மடிந்துபோனது. கடையிலும் வீட்டிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

"மனு முனிவர் ஜீவராசிகளைப் பெரும் பிரளயத்திலிருந்து காப்பதற்கு கட்டியெழுப்பிய படகுபோல் நாமும் ஏதாவது செய்து இந்த மழையிலிருந்து தப்பித்தாக வேண்டும்போல" என்று அங்கு அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் அழுது அரற்றினார்.

'மனு', அந்தச் சொல்லை கேட்டதுமே என் மனம் ஒரு நொடி திகைத்து நின்றது.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

சமூகத்தில் பெண்கள் இடம் குறித்த மனு தர்மத்தின் கருத்துகள் மீது கல்லூரிக் காலந்தொட்டே ஆழ்ந்த முரண்பாடிருந்தது.

"பெண்கள் சபையில் பேசத் தகுதியற்றவர்கள். அவர்களது புன்னகை விஷம் நிரம்பியது" என்பதான மனுவின் கருத்துகள் மனதில் நிழலாடின.

சில நாள்கள் கழித்து அமித் கிரானாவில் பொருள்கள் வாங்கச் சென்றபோது அமித் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தார். அறுபதாயிரம் ரூபாய் விலைக்கு எருமை மாடு வாங்கியிருப்பதாகக் கூறினார். எருமைத் தயிரின் அருமை பெருமைகளைப் பற்றி சிறிது நேரம் விவரித்தார். அவருடைய மனைவியை அழைத்து எனக்கு ஒரு கோப்பை எருமைத் தயிர் வழங்குமாறு கூறினார். விஷயங்களைச் சாதுர்யமாக கையாளுவதில் அமித் வல்லவர். தன்னுடைய தயிர் வியாபாரத்துக்கு வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அமித்தின் மனைவி வேகமாக வெளியே வந்ததில் முக்காடு அணிய மறந்திருந்தார். அமித் பார்வையில் அனல் கக்கினார்.

கடை வாசலில் கூடியிருந்த இளைஞர்கள் தன் மனைவியின் முகத்தைப் பார்த்து விட்டார்களென்ற பதற்றம், அதற்கு வழிவகுத்த தன் மனைவியின் மீது வசவுகளை வீசினார்.

அந்தப் பெண் செய்வதறியாது திகைத்தார். அனைவர் முன்னிலையிலும் தான் அவமானப்பட்டதைச் சிறு புன்னகையால் மறைத்துக்கொண்டு, சேலைத் தலைப்பை தலையின் மீது இழுத்து முகத்தை மூடிக்கொண்டார். அந்த முக்காடின் கீழ் மறைந்துகொண்ட கண்ணீர்த்துளிகளை நான் கண்டேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

ஏதோ ஒரு வேகம் என்னை ஆட்கொள்ள, அங்கு கூடியிருந்தவர்களிடம் "பொதுவிடத்தில் புகைப்பிடிப்பது தவறென்று தெரியாதா... நீங்கள் படித்தவர்கள்தானே"என்று ஆங்கிலத்தில் கடிந்துகொண்டேன். மீண்டும் ஒரு பெண்ணின் அத்துமீறல் செயலாக அதை உணர்ந்த அவர்கள் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தனர்.

"மதராஸிபோல் தெரிகிறது ஆங்கிலத்தில் பிதற்றுகிறாள். நமது எருமைகளின் நிறமும் இவளது நிறமும் ஒன்றல்லவா..."என்று ஒருவன் தன் தாய்மொழியில் கூறவும், மீண்டும் கூடியிருந்த அனைவரும் சிரித்தனர் அமித் உட்பட. எனக்கு அவர்களது மொழி புரியாது என்று எண்ணியிருந்தார்கள்போலும். அந்தப் பெண்ணும் நானும் ஒரே புள்ளியில் நின்றிருந்தோம். அவமானம் எனும் புள்ளி அது. சிறுமை எனும் புள்ளி அது.

மழைக்காலம் முடிந்து இலையுதிர் காலத்துக்கான அறிகுறிகள் தென்பட்டன. முதிர்ந்த இலைகள் பழுத்து, உதிரத் தொடங்கியிருந்தன. நான் அமித் கிரானாவுக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். மனு ஆலயத்துக்குச் சென்று வருவது வாழ்வில் நற்பலன்களைத் தரும் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அப்போது நான் அவரிடம் சினமன் நறுமண சிகரெட் வாங்கினேன். அதனால்கூட அவ்விடத்தைச் சுட்டி என்னிடம் பேசியிருக்கலாம் என்பது பிறகுதான் புரிந்தது. மனு தர்மத்தின் விதிகளைப் பின்பற்றுபவர், தன் இல்லாளை ஆயிரம் பேர் முன்னிலையில் கேள்விக்குட்படுத்தலாம்.

ஒரு பெண் கேள்வியெழுப்பினால் அதற்காக அவள் பொதுவில் அவமானப்படுத்தப்பட்டால்

அதைக் கண்டும் காணாததுபோல் செல்லலாம் என்பற்கான உதாரணமாக அமித் தெரிந்தார்.

இலையுதிர் காலத்து மணாலி சொர்க்கபூமியாக காட்சியளித்தது. குல்லுவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அச்சிற்றூர் `இந்தியர்களின் சுவிட்சர்லாந்து’ என்று அறியப்படுகிறது. தேனிலவு ஜோடிகளின் சரணாலயம் மணாலி. 'நியூ மணாலி', 'ஓல்டு மணாலி' என்று மணாலி இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. நியூ மணாலி முழுதும் புதுமையின் சாயல்கொண்டிருந்தது. மணாலியின் இரவு நேரங்கள் கண்கொள்ளாக் காட்சிகளை வழங்கின. இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் ஆண் பெண் பேதமின்றி கூடிக் களித்திருந்தனர். குளிருக்கு இதமான இசை நிகழ்ச்சிகளும், நடன அரங்குகளும் மனதுக்கு இளைப்பாறுதல் அளித்தன.

காயத்ரி என்கிற தமிழரை அங்கு சந்தித்தேன். லதாக் வரை சுற்றுப்பயணம் சென்று திரும்புவதாக அவர் கூறினார். வழியில் ரோதாங் பாஸ் அருகே வண்டி பழுதடைந்ததால் ஓர் இரவு பேருந்தினுள்ளேயே தங்கியதாகக் கூறினார். "யாருடன் பயணிக்கிறீர்கள்?" என்றேன். "தனியாக, நான் மட்டும்" என்று கண்கள் விரியப் புன்னகைத்தார். அன்றிரவு நானும் காயத்ரியும் ஒன்றாகக் கழித்தோம். மரபணு பொறியியல் பட்டதாரியான அவர், பயணங்களை மிகவும் விரும்புவதாகக் கூறினார். என்னிடம் இலக்கியம் குறித்து நிறைய சந்தேகங்கள் எழுப்பினார். புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டார். நான் அவரது துறையின் நுணுக்கங்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்டேன். இரவு கழிந்து பகல் புலர்ந்தது. இருவரும் அவரவர் வழியே முன்னேறினோம். அவர் தமிழகம் திரும்புவதாகக் கூறினார். நான் மணாலியின் ஆழங்களுக்குள் பயணிக்கப் புறப்பட்டேன். அமித் கூறிய மனு ஆலயத்தைக் கண்டு வர வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.

பெண்களுக்கு நிறைந்த சபையில் பேச உரிமையில்லை என்று எழுதிவைத்த மனுவின் இருப்பிடத்தைக் காண ஆவல் மிகுந்தது.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

புது மணாலிக்கு சிறிதும் தொடர்பில்லாதிருந்தது பழைய மணாலி. சில தெருக்கள் இடைவெளி மட்டுமே இருந்தபோதும் புது மணாலியின் எந்தத் தாக்கமுமில்லாதிருந்தது எனக்கு ஆச்சர்யமூட்டியது.

மரப்பலகைகளும் செம்மண்ணும் கலந்து கட்டப்பட்டிருந்த வீடுகள். மாட்டுத் தொழுவங்கள், குறுக்குச் சந்துகள் என பழைமையின் சாயல் அகலாதிருந்த பழைய மணாலியில் மீண்டும் முக்காடணிந்த பெண்கள் தென்பட்டனர். அவர்களிடம் மனு ஆலயத்துக்கு வழி கேட்டபோது அவர்களுக்கு அப்படியோர் இடம் இருப்பது தெரியாதென்று மறுத்தனர். வெகுநேரம் சுற்றியலைந்த பின்னர் முதியவர் ஒருவரின் வழிகாட்டுதலில் பாதி சிதிலமடைந்திருந்த ஒரு மண்டபத்தைக் கண்டுபிடித்தோம்.

`மனுவின் ஆலயம்’ என்று எழுதப்பட்டிருந்த பலகையில்

`பிரம்மனிடமிருந்து பெறப்பட்ட விதிகளைத் தொகுத்து மனிதகுலத்துக்கு வழங்கிய உலகத்தின் முதல் மனிதன் மனு’

என்றும், மனிதகுலம் தோன்றிய கதைச்சுருக்கம் ஒன்றும் அதில் எழுதப்பட்டிருந்தன. `மனு தர்ம சாஸ்திரம்’ எழுதப்பட்ட இடம் என்று அம்புக் குறியிட்டு ஓர் இடம் சுட்டப்பட்டிருந்தது. அவ்வறையினுள் எட்டிப்பார்த்தேன். ஒருவர் மட்டுமே அமரக்கூடிய அளவிலிருந்த அவ்வறையில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. வேறு எந்தச் சிலையோ, உருவ வழிபாட்டுக்கான அறிகுறியோ இருக்கவில்லை. நான் அங்கு நெடுநேரம் நின்றிருந்தேன். இனம் புரியாததோர் இறுக்கம் என் மனதை அழுத்தியது. சடங்குகள், சாத்திரங்கள், விதிகள் என்ற பெயரில் ஒட்டுமொத்தப் பெண்ணினமும் காலங்காலமாக சந்தித்து வந்திருக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு அது என்றுணர்ந்தேன்.

அவ்விடத்திலிருந்து கிளம்பும் நேரம் நெருங்கியது. புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதற்கு தேவையான குறிப்புகளும் எழுதிய பிறகு, மனுவின் அறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கை மலர் இதழ்கள் கொண்டு குளிரச் செய்தேன். பெண்ணினத்தின் மனங்குளிர்ந்திட அவ்விளக்கை மலையேற்றினேன்.

ஊர் திரும்பியதும் மறவாமல் அமித் கிரானாவுக்குச் சென்றேன். "நீங்கள் கூறியபடி மனு ஆலயத்தைக் கண்டு வந்தேன்" என்றேன்.

"நல்லது, அனுபவம் எப்படியிருந்தது?" என்றார்.

"அங்கு வெளிச்சமில்லாமல் இருண்டிருந்தது" என்றேன். அமித் அதற்கு மேல் என்னிடம் ஏதும் பேச முற்படவில்லை. அவருக்கான செய்தி கிடைத்த அமைதி அது.

தேவதைகள் உலவும் வனங்களுக்குள் பயணங்கள் தொடரும்...