Published:Updated:

`தவறுதலாக' ராணுவம் சுட்ட பழங்குடிகள்; கறுப்புக்கொடி எதிர்ப்பு; நாகாலாந்தை வருத்திய சம்பவம்! - 5

Back பேக்

கருப்புக்கொடி ஏற்றுதல் எதிர்ப்பின் வெளிப்பாடு. இதுவும் ஒரு வகையிலான போராட்ட வடிவம். எதற்காக இங்கு கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன என்று சாலமனிடம் கேட்டேன். அவன் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

`தவறுதலாக' ராணுவம் சுட்ட பழங்குடிகள்; கறுப்புக்கொடி எதிர்ப்பு; நாகாலாந்தை வருத்திய சம்பவம்! - 5

கருப்புக்கொடி ஏற்றுதல் எதிர்ப்பின் வெளிப்பாடு. இதுவும் ஒரு வகையிலான போராட்ட வடிவம். எதற்காக இங்கு கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன என்று சாலமனிடம் கேட்டேன். அவன் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

Published:Updated:
Back பேக்

குளிக்க வேண்டும் என்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது. அழுக்குத்தீர குளிக்க முடியாது என்றாலும் ஆசை தீர குளிக்க வேண்டும் என ஹீட்டர் வாங்கி வெந்நீரில் குளித்து முடித்து வேறு உடை மாற்றிக்கொண்டேன். அந்த விடுதியில் தங்கியிருப்பவர்களுக்காக மட்டுமே அங்கு உணவகம் நடத்தப்படுவதைப் போல அங்கு வாடிக்கையாளர் என்று எவரும் இல்லை. நான் சென்று பூரி, சப்ஜி ஆர்டர் செய்தேன். உயர்தர உணவகங்களைப் போலவே பீங்கான் தட்டில் பூரியை வைத்து, பீங்கான் கிண்ணத்தில் சப்ஜி கொடுத்தனர். 50 ரூபாய்க்கு அற்புதமான காலை உணவாக அது இருந்தது. உணவகத்தில் உள் அரங்க வடிவமைப்புப் பணிகளை விடுதி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர். அந்த நாகாமிப்பெண் சார்ட் பேப்பர் கொண்டு ஒரிகாமியில் பல வடிவங்களை வெட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் போலிருந்தது. நான்கைந்து முறை அவள் மீது பார்வையை படரவிட்டும் அத்தருணம் வாய்க்கவில்லை. அவள் ஒரிகாமியில் மும்முரமாக இருந்தாள். எவ்வித கவனச்சிதறலும் இல்லாமல் அவள் சார்ட் பேப்பரை வெட்டிக் கொண்டிருந்ததும் அழகாகவே பட்டது. அவள் மீதான ஈர்ப்பின் விசையை ஒரு படி உயர்த்தியது.

கிசாமா
கிசாமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த மும்முனைச் சந்திப்புக்கு வந்தேன். கிசாமா கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது அன்றைய திட்டமாக இருந்தது. நாகாலாந்தின் புகழ்பெற்ற ஹார்ன்பிள் திருவிழா கிசாமா கிராமத்தில்தான் நடைபெறும். நாகாலாந்தில் வசிக்கும் பழங்குடிகள் நாகாமி என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அந்த நாகா மக்களில் 16 பழங்குடி சமூகங்கள் உள்ளன. அவற்றில் அங்கமி சமூக மக்களே நாகாலாந்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஹார்ன்பிள் திருவிழாவின்போது இப்பழங்குடிச் சமூக மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வேட்டைச்சமூகமாக இருந்தபோது உடுத்திய ஆடைகளை அணிந்து கொண்டு அவர்களது பாரம்பர்ய நடனத்தை ஆடுவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. வடகிழக்கின் மிக முக்கியமான திருவிழா என்று இதனைச் சொல்ல முடியும். அக்கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கான கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் குடில்களைக் காண வேண்டும் என்பதற்காக கிசாமா செல்லத் திட்டமிட்டிருந்தேன்.

நாகாலாந்து
நாகாலாந்து

கோஹிமாவிலிருந்து 12 கிமீ தொலைவுகொண்ட கிசாமா கிராமத்துக்குச் செல்ல பொதுப்போக்குவரத்து கிடையாது என்பதால் டாக்சி அல்லது பைக் டாக்சியில்தான் செல்ல வேண்டும். கோஹிமா நகரைச்சுற்றி எங்கு செல்ல வேண்டுமென்றாலும் நகரின் இதயப்பகுதியான அம்மும்முனைச் சந்திப்பில்தான் டாக்சி மற்றும் பைக் டாக்சி கிடைக்கும். டாக்சியில் 1500, - 2000 வரை கேட்டார்கள். பைக் டாக்சிதான் குறைந்த பட்ஜெட்டுக்கு உகந்தது என்பதால் பைக் டாக்சி ஓட்டுநர்களை அணுகினேன். அவர்கள் 700 ரூபாய் கேட்டார்கள். கட்டுப்படியாகாது என்று நினைத்துக்கொண்டு மேலும் சில பைக் டாக்சி ஓட்டுநர்களை அணுகினேன். அப்படியாகத்தான் சாலமனைச் சந்தித்தேன். பேச்சிலர் டிகிரி படித்திருந்த சாலமன் தற்காலிகமாக பைக் டாக்சி ஓட்டிக்கொண்டிருக்கிறார். 500 ரூபாய்க்கு என்னை கிசாமா கிராமத்துக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். அவர் படித்தவர் என்பதால் அவரிடம் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிந்தது. அவரிடம் நாகாமிக்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டே சென்றேன். நாகாலாந்து பழங்குடி மக்கள் முழுவதும் கிறித்துவ மதத்துக்கு மாறி விட்டனர். அங்கே 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக கிறித்துவர்கள்தான். இந்துக்களும், இஸ்லாமியர்களும் அங்கே சிறுபான்மையினர் என்பதை அவர் சொல்லத் தெரிந்து கொண்டேன். அவர் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற இலக்கைச் சுமந்தபடிதான் பைக் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மணி நண்பகல் 12- ஐத் தொட்டிருந்தாலும் கையுறை அணியாமல் கையை வெளியே நீட்டமுடியாத அளவு குளிரடித்துக் கொண்டிருந்தது. முதலில் கையுறை வாங்கியாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். கிசாமா கிராமத்தை அடைந்தோம். குளிருக்கு இதமாக டீ குடிக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கு ஒரு கடை தென்பட, டீக்கடையோ என்று விசாரிக்கச் சென்றேன். அங்கொரு பெண் மதுபானப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அங்கு டீ கிடைக்காது என்பது தெரியவே கலாசாரக் குடில்களைப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தோம்.

மொராங்
மொராங்

நாகாமி மக்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தாங்கிய 16 குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சமூகத்தின் பெயரோடும் மொராங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கமி மொராங், மோன் மொராங் என்று அனைத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவே மொராங்கின் பொருள் என்னவென்று சாலமனைக் கேட்டேன். அவருக்கும் அது தெரியவில்லை. அனைத்து குடில்களும் மரத்தால் அமைக்கப்பட்டிருந்தன.

ஹார்ன்பிள் என்கிற இருவாட்சிப் பறவை மற்றும் காட்டெருமையின் தலையின் ஓவியம் அல்லது மரச்சிற்பத்தை அனைத்துக் குடில்களிலும் காண முடிந்தது. அச்சமூக மக்களின் பாரம்பர்ய உடை அணிந்த ஆண், பெண் சிற்பங்களும் நிறைய குடில்களில் இடம்பெற்றிருந்தன. காட்டெருமை நாகாலாந்தின் பண்பாட்டோடு தொடர்புடைய விலங்கு. நாகாலாந்து அரசின் முத்திரையில் காட்டெருமை இருப்பதைக் காண முடியும். சில குடில்களில் இறந்த காட்டெருமையின் தலையே மாட்டப்பட்டிருந்தன.

மோன் மொராங்குக்குள் சென்ற போது அங்கே கறுப்புக்கொடி ஏற்றியிருந்தனர். சுற்றிலும் பார்த்தபோது அடுத்தடுத்து இருந்த சில மொராங்குகளிலும் கறுப்புக்கொடி ஏற்றியிருந்தனர். கறுப்புக்கொடி ஏற்றுதல் எதிர்ப்பின் வெளிப்பாடு. இதுவும் ஒரு வகையிலான போராட்ட வடிவம். எதற்காக இங்கு கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன என்று சாலமனிடம் கேட்டேன். அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட மொராங்குகள்
கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட மொராங்குகள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹார்ன்பிள் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது மோன் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹார்ன்பிள் திருவிழா நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார். இந்திய ராணுவத்தின் இச்செயலைக் கண்டிப்பதற்காகவே இக்குடில்களில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அரசியல் சிக்கல் என்னவெனில் அவை வங்கதேசம், சீனா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் இந்திய எல்லையாக இருப்பதுதான். இதன் விளைவாக இந்திய ராணுவம் எல்லைகளைக் காப்பாற்ற வேண்டி கடுமை காட்டுகிறது. அந்நிய நுழைவுக்கு எதிரான அக்கடுமை சில வேளைகளில் அப்பூர்வகுடிகள் மீதான மோதலாகவும் மாறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 13 மோன் சமூக மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தவறுதலாக இச்சம்பவம் நடந்து விட்டதாக ராணுவம் அறிவித்திருக்கிறது. 13 உயிர்களைப் பறிகொடுத்த பிறகு எப்படி ஒரு திருவிழாவைக் கொண்டாட முடியும்?

திரிவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism