நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ள 125- வது மலர் கண்காட்சியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊட்டியில் தாவரவியல் பூங்காவின் 175 -வது ஆண்டை முன்னிட்டு பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு சிலை அமைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு அம்சங்களாக 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு 40 அகலம், 12 அடி உயரத்தில் தேசியப் பறவையான பிரமாண்ட தோகை மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, 70 ஆயிரம் மலர்களைக் கொண்டு சிவிங்கிப்புலி, காண்டாமிருகம், டால்ஃபின், பனிக்கரடி போன்றவற்றின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் மாநில சின்னங்களான தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி, மரகதப்புறா, வரையாடு, பனை மரம்,

பரதநாட்டிய நடன மங்கை, செங்காந்தள் மலர் மற்றும் ஊட்டி - 200 மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை மலர்களால் வடிவமைத்துள்ளனர். 35 ஆயிரம் பூந்தொட்டிகளை மலர் மாடங்களில் காட்சிக்கு வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இவற்றைக் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.