Published:Updated:

நம்மிடம் உள்ளது நயாகராவில் இல்லை! #MyVikatan

Niagara
News
Niagara

பயணத்தின்போது உடலைப் போதுமான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள புளியும், உடலுக்குத் தெம்பு தர உளுந்தும் ஒன்று சேர்வதால்தான் அக்காலம் முதல் இந்த ‘காம்போ’ பெருஞ்சிறப்புப் பெற்று வருகிறது போலும்!

உயிருள்ள அனைத்தின் வாழ்வுக்கும் தண்ணீரே பிரதானம்! மனித வாழ்வுக்கும் அது பொருந்தும்! அதனால்தான் அரசாங்கமே ‘டாஸ்மாக்’ திறந்து தண்ணியை விக்குதுங்கறீங்களா? நீங்க ரொம்ப குறும்புங்க! நான் அந்தத் தண்ணியைச் சொல்லல! தண்ணீரைச் சொல்றேன்! உலகத்தின் பெரும்பாலான சுற்றுலாத் தளங்களும் தண்ணீர் மூலமே நம்மைக் கவர்கின்றன! அந்த அடிப்படையில் நயாகராவும் நம்மை நயாகரா ஆற்றின் மூலமே கவர்கிறது! நாங்கள் இருக்கும் வெர்ஜீனியாவிலிருந்து சுமார் ஏழு மணி நேர கார் பயணம்தான் நயாகராவுக்கு! இங்கு அமெரிக்காவில், பயண தூரத்தைக் காரில் பயணிக்கும் நேரத்தைக் கொண்டே கூறுகிறார்கள்!

‘ஒங்க ஆபீஸ், வீட்டிலிருந்து எவ்வளவு தூரம்?’ என்று கேட்டால், ‘பிப்டீன் மினிட்ஸ் ட்ரைவ்!’ அல்லது ‘தேர்டி மினிட்ஸ் ட்ரைவ்!’என்றுதான் பதில்கள் வரும்.மேலும் இங்கு நாம் அக்காலத்தில் பின்பற்றிய மைல்கள் முறையையே பின்பற்றுகிறார்கள்! நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் குறிப்பிடப்பட்ட இடங்கள் ¼ - ½ -¾ மைல் தூரத்தில் உள்ளன என்பதைப் பெரிய போர்டுகள் விளம்புவதைக் காணலாம்! அதிகாலை 5:30 மணிக்கே மெக்லீனிலிருந்து காரைக் கிளப்பினோம்! அந்த நேரத்தில் ‘ட்ராபிக்’ அதிகம் இருக்காது என்ற கணிப்பில்! பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 55 மைல் வேகத்தில்தான் செல்ல வேண்டும். சிற்சில இடங்களில் அது 40 ஆகக் குறைவதும்,மிகச் சில இடங்களில் 60,70 என்று கூடுவதும் உண்டு.

கொரோனா காலத்தில் ஓட்டல்களைக் கூடுமானவரை தவிர்த்து விடலாம் என்ற நோக்குடன்,காலை டிபனுக்கு இட்லியையும்,மதியத்திற்குப் புளியோதரையையும் தயார் செய்து கொண்டோம்!இட்லியின் மேலேயே எண்ணெயுடன் கூடிய பொடியைத் தடவி பார்சல் செய்து கொண்டால்,காரில் அமர்ந்தபடியே சாப்பிடுவது எளிதாகி விடுகிறது. புளியோதரையையும், உளுத்தம் துவையலையும் அடித்துக் கொள்வதற்கு இன்னொரு ‘டிஷ்’ இதுவரை வந்ததாகத் தெரியவில்லை! பயணத்தின்போது உடலைப் போதுமான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள புளியும்,உடலுக்குத் தெம்பு தர உளுந்தும் ஒன்று சேர்வதால்தான் அக்காலம் முதல் இந்த ‘காம்போ’ பெருஞ்சிறப்புப் பெற்று வருகிறது போலும். வெர்ஜீனியா,மெரிலாண்ட்,பென்னிசில்வேனியா மாகாணங்களைத் தாண்டி நியூயார்க் மாகாணம் சென்றால், நயாகராவை அடையலாம். இந்தப் பயணத்தின்போது சில கண்டுபிடிப்புகளை யாம் செய்திருக்கிறோம்!

கொஞ்சம் பொறுங்க! கண்டுபிடிப்பு என்றதும் உடனே என் பெயரை நோபல் பரிசுக் குழுவுக்கு ரெகமண்ட் செய்யும் உங்கள் நம்பிக்கை எமக்குப் புல்லரிப்பைத் தருகிறது! இந்தக் கண்டுபிடிப்புக்கெல்லாம் நோபல் பரிசு தர மாட்டார்கள்!

America
America

கண்டுபிடிப்பு: சில வருடங்களுக்கு முன்னர் வாடிகன் நகரில் போய்க் கொண்டிருந்தபோது,எங்களுக்கு முன்னால் சென்ற இரண்டு இளம் பெண்கள் தங்கள் முடிக்கு அழகாக வர்ணம் தீட்டியிருந்தார்கள்! அவர்களின் நீண்ட முடியும்,அதற்கு அவர்கள் தீட்டியிருந்த நேர்த்தியான சாயமும் மனதில் ‘பசக்’கென்று ஒட்டிக் கொண்டது! இவ்வளவுக்கும் அவர்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.கண நேரத்தில் அவர்கள் கூட்டத்தில் கலந்து விட்டார்கள்.அதன் பிறகு முடிக்குத் தங்கள் விருப்பப்படி சாயம் பூசிக்கொள்வது மிகவும் பிரபலமடைந்து விட்டது. நடிகைகள்,கிரிக்கெட் வீரர்கள் என்று ஆரம்பித்து,மிகச் சாதாரணமானவர்களையும் அது தொற்றிக் கொண்டு விட்டது. அப்போதிலிருந்தே இந்தப் பழக்கம் எப்படி உண்டானது, எதனை அடிப்படையாகக் கொண்டது என்ற தேடல் மனதிற்குள்ளாக

அடை காத்துக் கொண்டேயிருந்தது.அடைதான் காத்ததேயொழிய குஞ்சு வெளி வரவில்லை. நல்ல கருமையான முடிக்குத்தான் உலகம் பூராவிலும் மதிப்பு அதிகம் என்றாலும்,அப்படிக் கருமை முடி கொண்டவர்கள் கூடத் தங்கள் முடிக்குப் பழுப்பு வண்ணத்தையோ,சாம்பல் நிறத்தையோ பூசிக் கொள்வதையும் பார்க்கிறோம். ஶ்ரீலங்காவின் பௌலர் மலிங்கா தன் தலைக்குப் பூசி வந்த வண்ணத்தைக் கண்டிருக்கிறோம். அன்று, பென்சில்வேனியாவின் மலைக் காடுகளைக் கடந்த போதுதான் தக்க பதில் கிடைத்தது. நீண்ட அடை காத்தலுக்குப் பிறகு குஞ்சு வெளி வந்தது! ’ஃபால்ஸ்’என்றழைக்கப்படுகின்ற இந்த இலையுதிர்காலத்தில்,இலைகள் மரங்களை விட்டுப் பிரியுமுன்னால் காட்டும் வர்ணஜாலமே, இந்த வண்ணம் பூசலுக்குஅடிப்படை என்றுதெரிய வந்தது. மஞ்சளாக,ஆரஞ்சாக,இளஞ் சிவப்பாக,ப்ரௌனாக அவை காட்டும் அழகே தனி.அதனால்தான் ஃபால்ஸ் சீசன் இங்கு பேமஸ்!

நம்மூர் இலையுதிர் காலத்தில் நம் மரங்கள் ஏனோ இவ்வளவு ஜாலங்கள் காட்ட மறுத்து விடுகின்றன.துளிர்க்கும்போது மட்டும் கொஞ்சம் அழகு காட்டும்… நாணப்படும் நம்மூர் பெண்களைப்போல.

நடுவே கொஞ்சம் இட்லியை உள்ளே தள்ளினோம்.அப்புறம் புளியோதரையும்உளுத்தம் துவையலும் குறைய ஆரம்பித்தன! அழகிய மலைகளையும்,அவற்றைத் தழுவிக் கிடக்கும் மரங்களையும்,அவை காட்டும் வர்ண ஜாலங்களையும்,உயர்ந்த பாலங்களையும் ரசித்தபடி மாலை நயாகரா நகரை அடைந்தோம்.ஏற்கெனவே ரிசர்வ் செய்திருந்த வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்தோம், சிறிது நேரம். நயாகரா நகருக்குள் நுழைந்து நாங்கள் தங்கும் வீட்டிற்குச் சென்றது வரை நோக்குகையில்,திருப்பதி ஏழு மலையான் நகருக்குள் சென்றது போன்ற எண்ணமேதோன்றியது.ஏனெனில் அங்கும் எங்கு நோக்கினும் வெங்கடாஜலபதி பெயரே காண்பதைப் போலவே, நயாகரா நகர் முழுவதுமே நயாகரா என்ற பெயரே பெரும்பாலும் காணப்படுகிறது.ஓய்வுக்குப் பிறகு நீர் வீழ்ச்சியைக் காணக் கிளம்பினோம்.இருள் சூழ்ந்து விட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உயரத்தில் ஓடி வரும் காதலன் கீழே நிற்கும் காதலியைக் கண்டதும் ஆனந்தக் கூத்தாடியபடி கீழே குதிப்பதைப்போல்,அரக்கப்பரக்க ஓடி வரும் அருவி,கீழே குதிக்கிறது ‘ஹோ’ என்ற ஓசையை எழுப்பியபடி.அதைப் பார்க்கையில்தான் மனதுக்குள்எவ்வளவு களிப்பு!எத்தனை உவகை! குதிக்கும் வேகத்தில் காதலனின் உடை காற்றில்பறப்பதைப்போல்,நீர்த்துளிகள் மைக்ரோ துளிகளாகிக் காற்றில் கலக்க,வெண் மேகம் கீழிறங்கியது போல் இருக்கிறது.எதிர்க் கரையிலிருந்து அதன் மேல் ஏவப்படும் வண்ண விளக்கொளியில், வெண்மையாய், நீலமாய், சிவப்பாய், மஞ்சளாய், பச்சையாய், இவையெல்லாம் கலந்த கலவையாய் அந்தத் தூவானம் காட்சியளிக்க, நாம் கிறங்கிப் போகிறோம்! பல இடங்களில் பயமின்றி நின்று நாம் கிறங்க வழி செய்துள்ளார்கள்.

மூன்று அருவிகளாய் நீர் கொட்டுகிறது. இந்த நயாகரா ஆறுதான் அமெரிக்காவையும்,கனடாவையும் பிரிக்கிறது.ஆனாலும் ரெயின்போ ப்ரிட்ஜ்(வானவில் பாலம்) இரண்டு நாடுகளையும் இணைத்து விடுகிறது. அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் காணும் ஒற்றுமை நம் ஆசிய நாடுகளில் இல்லாது போனது ஏன் என்றே தெரியவில்லை!சீனாவும் இந்தியாவும் ஒன்று பட்டுச் செயல்பட்டால், உலகையே ஆளலாம். நயாகராவைப் பொறுத்தவரை, கனடாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து அதனைக்கொண்டாடி வருகின்றன. அமெரிக்க சைடில் ஊற்றும் அருவி நீருக்கு வண்ணம் தருவது, கனடாவின் சைடில் உள்ள வண்ண விளக்குகளே! கனடா சைடில் மிக உயர்ந்த கட்டிடங்களும் பொழுதுபோக்கு நிலையங்களும், இரவில் கலர் லைட்டுகளில் மின்னுகின்றன. உயர்ந்த கட்டிடத்தில், லிப்டில் இருந்தபடி அருவி அழகைக் காணவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வண்ண விளக்கில் நயாகராவின் தூவானத்தை ரசித்து விட்டு,பார்க்கில் சிறிது நேரம்

இருந்து விட்டு வீட்டிற்குச் சென்றோம்- காலையில் மீதியைப் பார்க்கலாம் என்ற முடிவுடன்.

போகும் வழியில்தான் அந்தக் கூத்து நடந்தது.காலையில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் மகளும்,மருமகனும்,’இரண்டு மூன்று முறை தங்கள் காரை நெடுஞ்சாலையிலுள்ள போலீசார் நிறுத்தச் சொல்லி விட்டு,அருகில் வந்து பார்த்ததும் ‘சாரி’ சொல்லி விட்டுச் சென்ற கதையைக் கூறி வந்தார்கள்.கதை பெரிதாய் ஒன்றுமில்லை.ஹை வேயில்,3 பேரோ,அதற்கு மேலோ காரில் இருந்தால்,இ பாஸ் வைத்திருப்பவர்கள் ‘எச் ஓ வி வே’யில் பயணிக்கலாம்.குழந்தையாக இருந்தாலும் மூவரில் அடக்கம்.குழந்தையைக் கவனிக்காமல் காரை நிறுத்தச் சொல்லி விட்டுப் பின்னர் குழந்தை இருப்பதைப் பார்த்ததும் சாரி சொல்லி அனுப்பி விடுவார்களாம்.வீட்டை நெருங்கி விட்ட வேளையில் எங்கள் காரை அங்கு நின்றிருந்த போலீசார் பின் தொடர,காரையோட்டிய மருமகன் ‘என்ன தவறு செய்தோம்!’ என்று தெரியாமல் விழித்துக் காரை ஓரமாக நிறுத்த,தங்கள் காரிலிருந்து இறங்கி வந்த போலீஸ் ஆபீசர்‘உங்கள் கார் ஹெட் லைட் எரியவில்லையே!ஏதும் பிராப்ளமா?’ என்று வினவினார்.அந்தக் காரின் ஹெட்லைட் ஆடோமாடிக்! ‘கீ’ போட்டதும் தானாகவே எரியக் கூடியது.டவுனில் இரு பக்கமும் அதிக ஒளி தரக் கூடிய விளக்குகள் இருந்ததால்,அது எரியாதது எங்களுக்குத் தெரியவில்லை! பேசிக் கொண்டிருக்கையிலேயே அது எரிய ஆரம்பிக்க,அவர் ‘ஓகே! டேக் கேர்!’ என்று சொல்லிச் சென்றார்.’அப்பாடா’ என்றிருந்தது எங்கள் அனைவருக்கும்.

காலையில் 10 மணிக்கு மீண்டும் நயாகரா சென்றோம். ஸ்டேட் பார்க்கில் நடந்து, (இந்த பார்க் 1885 லேயே பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அங்குள்ள வாயில் கூறுகிறது) 56 கி.மீ நீளமேயுள்ள நயாகரா ஆற்றின் கரையையடைந்து,அருவியாகக் கொட்டும்இடத்தை அடைந்தோம்.அருவி மூன்றாகப் பிரிந்து ‘சோ’வெனக் கொட்டுகிறது.கனடா பகுதியில் பெரும்பகுதியும் (85%) அமெரிக்கப் பகுதியில் இரண்டாகப் பிரிந்தும் அழகு காட்டுகிறது.கனடாப்பகுதியின் அருவி குதிரை லாட வடிவில்,(ஹார்ஸ் ஷூ)அழகாகத் தெரிகிறது. அதன் உயரம் 53 மீ என்றும் அகலம் 792 மீ என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கன் அருவிகளோ 55 மீ உயரமும் 305 மீ அகலமும் கொண்டதென்று சொல்லப்படுகிறது.அமெரிக்கன் அருவிகள் விழுமிடங்களில் பெரும்பாலும் பாறைகளே காணப்படுகின்றன.நிமிடத்திற்கு ஆறு மில்லியன் கன அடிக்கு மேலாகத் தண்ணீர் பாய்ந்தோடுவதே நயாகராவின் சிறப்புக்குக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னதான் உலக அளவில் நயாகரா புகழ் பெற்றிருந்தாலும் நமது குற்றாலத்திற்கும் திற்பரப்புக்கும் ஏனையவற்றுக்கும் ஈடாகாது என்றே தோன்றுகிறது!

அருவி,ஆற்றில் கொட்டுமிடத்தைப் பார்க்க ‘க்ரூய்ஸ்’ (Cruise)எனும் பெரும் எந்திரப் படகுகளை விடுகிறார்கள்.அந்தப் பயணத்திற்கு ‘மெய்ட் ஆப் த மிஸ்ட்’ (Maid of the mist),தமிழில், ‘மூடுபனியின் வேலைக்காரி’ என்ற பெயர் சூட்டியுள்ளார்கள்.ஒரு படகில் சுமார் 500 பேர் பயணிக்கலாம்.நாம் டிக்கட் வாங்கிக் கொண்டு, வரிசையில் செல்ல வேண்டும். மேலிருந்து ஆற்றுக் கரையையடைய ‘லிப்ட்’ ஐப் பயன்படுத்துகிறார்கள்.நாம் கீழே சென்றதும்,தூவானத்தில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் ஆடை தருகிறார்கள். அதனைப் போட்டுக்கொண்டு படகில் ஏற வேண்டும். படகில் இரண்டு தளங்கள் உண்டு.நம் வசதிப்படி எத்தளத்திலும் பயணிக்கலாம். நாங்கள் மேல் தளத்திலேயே பயணித்தோம்.முதலில் அமெரிக்க நீர் வீழ்ச்சி அருகிலும்,பின்னர் கனடா நீர் வீழ்ச்சி அருகிலும் படகு செல்ல,நீர்த்துளிகள் வெண் மண்டலமாய் காட்சியளிக்க, ’ஹோ’ என்ற அருவிகள் ஓசையுடன் மக்களின் ஆ..ஊ..ஒலியும் சேர,ஒரே கொண்டாட்டம்தான்.நீர்த் துளிகள் நம் பிளாஸ்டிக் ஆடையையும் தாண்டி உள்ளேசிறிதாக வர,மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது!15 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, புறப்பட்ட இடத்திற்கே படகு வந்து நம்மை இறக்கி விடுகிறது.

இந்தப் பயணம் 1846 ஆம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறதாம். 2007 ஆம் ஆண்டில் 2 கோடிப்பேரும் 2009 ல் 2.8 கோடிப் பேரும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்களாம். எதிரேயே ரெயின்போ பிரிட்ஜ் (Rainbow Bridge) ‘வானவில் பாலம்’ பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. இறங்கிய பிறகு,விரும்புவோர் மீண்டும் அருவியை ஒட்டிச் சென்று பார்க்க,படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள். அதில் சென்றும் தூவானத்தில் நனையலாம்.இல்லையெனில் மீண்டும் லிப்ட் ஏறி மேலே வரலாம். அந்த இடத்திலேயே கழிவறைகள் வைத்துள்ளார்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கழிவறைகளுக்குப் பஞ்சமே இல்லை.அதனாலும் அந்த நாடுகள் தூய்மையாக உள்ளன.பாரீஸ் நகரின் உலக அதிசயமான ஈபிள் டவரின் டாப்பில் நடு நாயகமாக இருப்பது கழிவறைகளே.நமது நாடும் தூய்மையாக வேண்டுமானால் போதுமான கழிவறைகளைக் கட்ட வேண்டும். மீண்டும் லிப்ட் ஏறி மேலே வந்தோம். அங்கிருந்து ‘கேவ் ஆப் த விண்ட்’(Cave of the wind) ‘காற்றின் குகை’ பார்க்க,சுமார் ஒரு கி.மீ., தூரம் உள்ளது. ஆற்றைக் கடந்து போக வேண்டும்.இரண்டு பாலங்கள் உள்ளன.’பார்க் பஸ்’ வசதியும் உண்டு.அந்த இடத்தை ‘லூனா ஐலண்ட்’(Luna Island),லூனாத் தீவு என்று அழைக்கிறார்கள்.பிரைடல் வெய்ல் அருவி கொட்டும் இடமே காற்றின் குகை பகுதியாகும். அங்கும் டிக்கட் வாங்க வேண்டும். மரப்படிக் கட்டுகளில் இறங்கி மீண்டும் தூவானத்தை ரசிக்கலாம்! படகிலிருந்து மட்டுமல்லாமல் அருவிகளின் அழகை ஹெலிகாப்டரிலிருந்தும் ரசிக்க வசதிகள் உண்டு.கனடா பகுதியில் படகுடன், சிப் லைனரும் (Zip Liner) கூடுதலாக உண்டு. இந்தப் பகுதியில் இருந்து அமெரிக்கப் படகுகளும்,எதிர்ப் பகுதியிலிருந்து கனடாப் படகுகளும் நட்புடன் சென்று வருகின்றன.நமது நாட்டுடனான பாகிஸ்தான்எல்லையான ‘வாஹா’ பார்டரில் தினம் நடக்கும் கேட் மூடும் விழாவில்கூட,இரு

நாடுகளுக்கும் இடையேயான வெறுப்பே பரப்பப்படுவதுதான் வேதனை.என்றுதான்நாம் ஒற்றுமையை நிலை நாட்டப் போகிறோம்?

Maid of the Mist
Maid of the Mist

பார்க்கின் பல இடங்களில் வரை படத்துடன் கூடிய விபரப் பலகைகள் வைத்துள்ளார்கள். அருவிக்கு அருகில் நிகோலா டெஸ்லா (1856-1943) என்பவரின் வெண்கலச்சிலை உள்ளது.அல்டர்னேடிங் கரண்ட் இன்டக்‌ஷன் மோட்டார்(Alternating current induction motor)இவரால்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.இவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வரிசையில் காத்திருக்கிறார்கள்.என்பேரன் அவர் மடியில் அமர, போட்டோ எடுத்தோம்!அருவியைப் பார்க்கச் செல்லும் படகுக்கு அவர் பெயரைச் சூட்டி அவருக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

பார்க்கின் அருகிலேயே பரிசுப் பொருட்களுக்கான கடைகளும்,சாப்பிடுவதற்கான ஹோட்டல்களும் உள்ளன.பார்க்கின் புல் தரையில்,மரங்களின் நிழலில் குடும்பம்குடும்பமாக ஓய்வு எடுக்கிறார்கள்.நிச்சயமாக இது சிறந்த பொழுது போக்கிடம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனாலும். நீர் வீழ்ச்சிக்குச் சென்று விட்டு,குளிக்காமல் வருவதென்பது ஒரு குறையாகவே மனதில் நிற்கிறது.சுவையான அறுசுவை உணவைக் கண்முன்னே வைத்து விட்டு,அதன் ஆவியையும்,மணத்தையும் மட்டுமே அனுபவிக்கச் சொல்வதுபோல் இருக்கிறது நயாகராவின் நிலை!அருவியில் குளிப்பதற்குப் பதில் அடிக்கும் தூவானத்தில் மட்டுமே நனைய முடிகிறது.நம் நாட்டு அருவிகளிலோ ஆசை தீரக் குளித்து மகிழலாம்! அதோடு மட்டுமா? மூலிகைகளில் வழிந்தோடி வரும் நீர், உடல் நோய்களைத் தீர்த்து ஆரோக்கியம் தருவதாகவும் கூறப்படுகிறது. என்னதான் உலக அளவில் நயாகரா புகழ் பெற்றிருந்தாலும் நமது குற்றாலத்திற்கும் திற்பரப்புக்கும் ஏனையவற்றுக்கும் ஈடாகாது என்றே தோன்றுகிறது!

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள அருவியில் சென்று குளித்து வாருங்கள்... உடலும் மனமும் ஒரு சேர ஆனந்தப்படுவதை உணர்வீர்கள்!

அமெரிக்கச் சாலைகளும்,ஓட்டுபவர்களின் கவனமும், போட்டியும், பொறாமையுமின்றி நீங்களே முன்பாகச் செல்லுங்கள் என்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் நிம்மதியான போக்குவரத்துக்கு உதவுகின்றன. நெடுஞ்சாலைகளின் ஓரத்திலும் நடுவிலும் பற்கள் போன்ற அமைப்பை நிறுவியுள்ளார்கள். ஓட்டுனர் கவனக்குறைவாக ஓரத்திற்கோ, சாலையின் எதிரே வரும் வாகனப் பகுதிக்கோ செல்லாமலிருக்க இது மிகவும் பயன்படுகிறது. இதன் மீது காரின் சக்கரங்கள் ஏறுகையில் மாறுபட்ட ஒலி தோன்றி, ஓட்டுனரை மட்டுமின்றி உள்ளே உள்ளவர்களையும் அலர்ட் செய்து விடுகிறது. இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

நமது நாட்டில் முன்பெல்லாம்,சாலைகளின் ஓரங்களில் உள்ள மணலைக் கூட்டிச் சுத்தம் செய்வார்கள். தற்போது அதையும் நிறுத்தி விட்டார்கள். இங்கு எங்கும் காணப்படும் தூய்மையும் நம்மை வியக்க வைப்பதுடன், இவையெல்லாம் நம் நாட்டிற்கும் வருவது எந்நாளோ என்று ஏங்கவும் வைக்கின்றன. நம் தமிழ் நாட்டில் மட்டுமே 45 க்கும் மேற்பட்ட அருவிகள் இருப்பதாகவும், அவற்றில் 30 மிகவும் பிரபலம் என்றும், அவற்றில் குளித்து மகிழலாம் என்றும் விபரங்கள் தெரிவிக்கின்றன. குற்றால அருவிக்கு எந்த முன்னுரையும் தேவையில்லை. 9 அருவிகளாகப் பிரிந்துநீர் வந்தாலும்,60 அடி உயரப் பேரருவிக்குத் தனி மவுசுதான்! அகஸ்தியர் அருவி(அம்பாசமுத்திரம்),கிளியூர் அருவி (ஏற்காடு), மங்கி ஃபால்ஸ் (பொள்ளாச்சி), சுருளி அருவி (தேனி), தீர்ப்பரப்பு அருவி (திருவட்டாறு),ஒகேனக்கல் அருவி,திருமூர்த்தி அருவி(உடுமலைப்பேட்டை) என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

-அருவிகளுக்குப் போகும் சாலைகள் அகலப்படுத்தப்பட வேண்டும்.

- குற்றாலம் போன்ற அருவிகளில் வண்ண விளக்குகளின் ஒளியைப் பாய்ச்சி உல்லாசப் பயணிகளைக் கவர வகை செய்ய வேண்டும்.

- சீசன்களில் தாறுமாறாக ஹோட்டல் கட்டணங்கள் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் நம் இந்தியா எங்கே போய்விடும். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள அருவியில் சென்று குளித்து வாருங்கள்! உடலும் மனமும் ஒரு சேர ஆனந்தப்படுவதை உணர்வீர்கள்!

- ரெ.ஆத்மநாதன்

காட்டிகன், சுவிட்சர்லாந்து