கோடை சீசன் உச்சத்தில் இருக்கும் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளைக் கவரும் வகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.

ரோஜா கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாக 35 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு 29 அடி உயரத்தில் ஈஃபிள் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது ஊட்டி 200-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் 'ஊட்டி - 200' லோகோவை ரோஜாக்களால் அலங்காரித்துள்ளனர். மேலும் 50,000 ரோஜாக்களில் யானைகள், கிரிக்கெட் பேட், பால் இறகுப்பந்து, ஹாக்கி, கால்பந்து, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ரோஜா இதழ்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரங்களும், ரங்கோலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இது மட்டுமல்லாது திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறை மூலம் ரோஜா மலர்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களைச் செய்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது.