Published:Updated:

`உலகுக்குத்தான் ஊரடங்கு..ஆனால், பாலி தீவுக்கு!' - ஆச்சர்யப்படவைக்கும் மக்களின் நம்பிக்கை

பாலி
பாலி

இந்தோனேஷியாவின் பாலி தீவில் எல்லா வருடமும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது... காரணம் தெரியுமா?

கொரோனா வைரஸ் தீவிரத்தால் அனைத்து நாடுகளும் முடங்கியுள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஊரடங்கானது உலக நாடுகள் அனைத்துக்கும் புதிதான ஒன்று. ஆனால், இந்தோனேசியாவில் இருக்கும் பாலி தீவிற்கு, இது புதிய நடைமுறை இல்லை.

அங்கு ஒவ்வோர் ஆண்டும் நைபி என்கிற புது வருடத்திற்காக முழுநாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் பாலி மக்கள் அமைதியாக தங்கள் வீடுகளிலேயே முடங்குகிறார்கள். புயலுக்குப் பின் ஏற்படும் அமைதிபோல, ஒரு வருடம் முடிந்த பின் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அமைதியைப் பின்பற்றுகிறார்கள் பாலி மக்கள். இந்த நைபி பண்டிகையானது இந்தியாவில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் அதே நாளில்தான் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பாலி இன மக்களின் புத்தாண்டு தினமானது வேறுபடும். இது நிலவின் கட்டங்களை வைத்து இயற்றப்பட்டுள்ள 'சாகா ' நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது.

Bali temple
Bali temple
Photo by Stijn Dijkstra from Pexels

பாலி தீவில், நைபி புத்தாண்டின்போது பொதுமக்கள் யாரும் வெளியில் வர முடியாது. அன்றைய தினம் எல்லா வணிகங்களும் நிறுத்தப்படுகின்றன. மேலும் பாலி தீவின் விமான நிலையமும் அன்று ஒருநாள் முழுவதும் மூடப்படுகிறது. அன்றைய தினத்தை பாலி இன மக்கள் நெருப்பு அல்லது ஒலி இல்லாமலேயே கடக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் உணவருந்துவதில்லை. இன்னும் சிலர் தங்களது கைப்பேசிகளையும் அணைத்து விடுகின்றனர். அருகில் இருப்பவர்களிடமும் குறைந்த ஒலியில் ரகசியம் போலவே பேசுகின்றனர். மக்கள் பீச் மற்றும் இதர பொது இடங்களுக்கு வெளியில் வராமல் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

புத்தாண்டை இப்படிக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் பாலி இன மக்களின் பழைமையான நம்பிக்கையே. இவர்கள் பல  நூற்றாண்டுகளாக இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களின் நம்பிக்கையின்படி தீவு காலியாக இருப்பதைக் கண்டு பேய்கள் இன்னும் ஒரு வருடம் அந்தத் தீவிற்கு வராது என நம்புகின்றனர்.

இது பழைமையான மூடநம்பிக்கை போல இருந்தாலும் இதில் சிறிதளவு நன்மையும் இருக்கிறது. இந்த நாளை அடுத்த வருடத் திட்டமிடுதலுக்கும் பாலி இன மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு வருடம் முழுவதும் கடுமையாக உழைத்தபின் சற்றே இளைப்பாறவும் இந்த நாளைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தோனேஷியாவில் மிக முக்கியமான சுற்றுலா தளம் பாலி ஆகும். ஆனாலும் இன்னமும் அந்த மக்கள் தங்களது பழைய நம்பிக்கையை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழலிலும் மாற்றம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு இந்தோனேஷிய வானிலை மையம் நடத்திய ஆய்வின்படி நைபி தினத்தன்று மட்டும் நகர்ப்புறப் பகுதிகளில் 73 சதவிகிதம் முதல் 78 சதவிகிதம் வரை காற்று மாசு துகள்கள் குறைந்துள்ளன.

இதோடு இந்தோனேஷிய இடை அரசின் வானிலை மாற்றக் குழு (intergovernmental climate change agency) நைபி தினத்தன்று கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் 33 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறுகிறது. தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஊரடங்கையும் இவர்கள் இயல்பாகவே கடக்கிறார்கள். வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்குத் தங்களின் பழக்கவழக்கங்களையும் கலைகளையும் கற்றுத் தருகிறார்கள். ஒருநாள் முழுவதும் அமைதியாக வாழப் பழக்கப்பட்டவர்கள் தற்போது அதையே நீண்ட நாள்களுக்குச் சலனமுமின்றிக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Bali
Bali

எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும் பாலி தீவி இப்போது நைபி பண்டிகையைப் போலவே அமைதியுடன் காட்சியளிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு