Published:Updated:

திருச்சி உலா: பார்த்தால் மரம், தொட்டால் கல் - திகைப்பூட்டும் பெரம்பலூர் தேசிய கல்மரப் பூங்கா!

கல்மரத்தைப் பார்வையிடும் மாணவிகள்

பெரம்பலூர் தேசிய கல்மரப் பூங்கா - "இயற்கையையும் தாண்டி, வரலாறு, புவியின் அமைப்பு, அதுல ஏற்பட்டிருக்கும் மாற்றம்னு ரொம்ப அருமையா தெளிவா உணர முடியுது. முக்கியமா குழந்தைகளுக்கு இயற்கை மேலான ஆர்வத்தைத் தூண்டி விடுற மாதிரி இருக்கு."

திருச்சி உலா: பார்த்தால் மரம், தொட்டால் கல் - திகைப்பூட்டும் பெரம்பலூர் தேசிய கல்மரப் பூங்கா!

பெரம்பலூர் தேசிய கல்மரப் பூங்கா - "இயற்கையையும் தாண்டி, வரலாறு, புவியின் அமைப்பு, அதுல ஏற்பட்டிருக்கும் மாற்றம்னு ரொம்ப அருமையா தெளிவா உணர முடியுது. முக்கியமா குழந்தைகளுக்கு இயற்கை மேலான ஆர்வத்தைத் தூண்டி விடுற மாதிரி இருக்கு."

Published:Updated:
கல்மரத்தைப் பார்வையிடும் மாணவிகள்

பெரம்பலூரை மிகவும் வறட்சியான பின்தங்கிய மாவட்டம் என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், 'ரஞ்சன் குடிகோட்டை' ,'டைனோசர்கள் வாழ்ந்த ஊர்', 'தேசிய கல்மரப்பூங்கா' எனப் புவியியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உற்றுநோக்கும் மாவட்டமாக அது மாறியிருக்கிறது என்றால் மிகையில்லை. பெரம்பலூர், தேசிய கல்மரப்பூங்காவைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் வரலாற்றைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்குத் தெரிய வைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக அழைத்து வருகிறார்கள். ஆனால், இந்தப் பூங்கா தற்போது கொரோனா ஊரடங்கால் களையிழந்து காணப்படுகிறது.

காவிரிப் பாலம்
காவிரிப் பாலம்

10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மரம், நத்தை, ஆமைகளின் அடையாளம் இன்றும் வரலாறாய் நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்க கோட்டைகள், மலைகள், கோயில்கள் என எக்கசக்கமான வரலாற்றைத் தனக்குள் வைத்திருக்கும் பெரம்பலூருக்கு விசிட் அடித்தோம். 'வரலாற்றைத் தேடலாம்' என நாம் போகிற இந்த விசிட்டில் 'தேசிய கல்மரப் பூங்கா'வை விட்டுவிட முடியுமா?

பெரம்பலூர் டைனோசர்
பெரம்பலூர் டைனோசர்

சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலுக்கு மிக அருகில் இருந்த ஊர்தான் இந்தப் பெரம்பலூர் மாவட்டம், 'கிரிடேஷன் காலம்' எனச் சொல்லப்படுற அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போன்ற உயிரினங்கள் அப்போதும் காணப்பட்டிருக்கின்றன.

இந்த உயிரினங்கள் இறந்த பிறகு மணல் மற்றும் களிமண்ணால் கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்டன. அதேபோல, நீரினால் அடித்து வரப்பட்ட மரங்களும் கடலுக்குள்ளே மூழ்கி காலப்போக்கில் கல்லுருவாக மாறியுள்ளன. இந்த 12 கோடி வருடத்துக்கு முன்பான வரலாற்றை, புவியியல் அமைப்பைத் தனக்குள்ளே வைத்திருக்கும் சாத்தனூரில் உள்ள கல்மரப் பூங்கா மிகப்பெரிய ஆச்சரியம்தான்.

பெரம்பலூர் கல்மரம்
பெரம்பலூர் கல்மரம்

திருச்சியிலிருந்து 62 கிலோமீட்டரிலும், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது சாத்தனூர் கல்மரப் பூங்கா. நமது போட்டோகிராபருடன் பயணத்தைத் தொடங்கினோம். வரலாற்றுச் சின்னத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலும், ஆச்சர்யமும் நம்மை விரட்ட, நாமும் வண்டியை விரட்டிக் கொண்டு பூங்காவிற்கு வந்தடைந்தோம். நம்மை அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு கல்லுருவாகக் காட்சியளித்துக்கொண்டிருந்த மரம், நத்தை, ஆமை குறித்து அறிவதற்கான ஆவலில் அங்கிருந்தவர்களிடம் பேசினோம்.

பூங்காவைப் பராமரிக்கும் நிர்வாகிகள், "ஆரம்பத்துல இதைப் பத்தின எந்த விவரமும் தெரில. 1940-ல தான் இந்தியப் புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் கல்லுருவைப் பத்தி முதல்ல சொன்னாரு. அதுக்கப்பறம்தான் பெரம்பலூர் சுத்தி இருக்குற கிராமங்களான வரகூர், அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம், அனைப்பாடின்னு நெறைய கிராமத்துல இருக்குற ஓடைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளம் இருக்குற மரங்கள் (கல்மரம்) இருக்குன்னு தெரிய வந்துச்சி.

பெரம்பலூர் கல்மரப் பூங்கா
பெரம்பலூர் கல்மரப் பூங்கா

இங்க சாத்தனூர்ல இருக்குற கல்மரம் சுமார் 10 கோடி வருசத்துக்கு முன்னாடி திருச்சில உள்ள பாறையினத்துல உருவானது. முக்கியமா இந்த அடிமரம் 'ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ்'ன்னு இப்போ நாம பாக்குற பூக்கள் இருக்குற தாவர இனம் தோன்றியதற்கு முன்னாடி இருந்தது. அதாவது அப்போ பூ இல்லாத, நிலத்துல தோன்றுன தாவர இனமான 'கோனிபர்ஸ்' வகையைச் சேர்ந்தது. இங்க இது மட்டும் இல்லாம நத்தை, ஆமை, கடல் வாழ் உயிரினம்னு பலவற்றோட படிமங்கள் இருக்கு" என்றனர்.

இப்போது கொரோனா காலம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பார்க்க மரம் மாதிரியும், தொட்டால் கல்லாகவும் இருக்கும் கல் மரம் உண்மையிலேயே இயற்கையை நினைத்து நம்மை மலைக்க வைத்தது. கல்மரம் அருகிலேயே புவியியல் படிக்கும் மாணவர் ஒருவர் படிமங்கள் குறித்தான தகவலை அறிய வந்திருந்தார். அவரிடம் கல்மரப் பூங்காவைப் பற்றிக் கேட்டோம்.

கல்மரம்
கல்மரம்

"நான் தஞ்சாவூர்ல முதுநிலை புவியியல் படிக்கிறேன், என்னோட படிப்புக்குத் தேவையான சில விஷயங்கள் இந்தப் பூங்கால இருக்குதுன்னு தெரிஞ்சிதான் இதைப் பார்க்க வந்தேன். உண்மையிலேயே இங்க நெறைய புவியியல் விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. 12 கோடி வருசத்துக்கு முன்னாடி இருந்த கடல் பல்வேறு காரணத்தால உள்வாங்கினதனால ஏற்பட்ட பல மாற்றங்களை இந்த இடத்துல நம்மளால தெரிஞ்சிக்க முடியும். இன்னும் நெறைய பல்வேறு உயிரினத்தோட வாழ்க்கைச் சூழ்நிலையை இங்க தெரிஞ்சிக்கலாம். பூகோள ரீதியா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததா இந்தப் பூங்கா இருக்கு. வர வழிலயும் நெறைய சுண்ணாம்புப் பாறையும் நமக்கு நெறைய கத்துக்கொடுக்கும். இந்தப் பகுதியில கிடைக்குற ஒவ்வொரு பொருளும் நமக்கு ஏதாவது உயிரினங்களோட வாழ்க்கையைக் கத்துக் கொடுத்துட்டுதான் இருக்கும்" எனச் சொல்லி முடித்தார்.

மேலும், கல்மரப் பூங்காவிற்குத் தன் குழந்தைகளை அழைத்து வந்திருந்த சண்முகசுந்தரம் குடும்பத்தாரிடம் பேசினோம், ”நான் பக்கத்துல இருக்குற அரியலூரைச் சேர்ந்தவன், எப்போதுமே என் குழந்தைங்களுக்கு லீவு கிடைக்கும் போது வெளில கூட்டிட்டுப் போய்டுவேன், அது அதிகபட்சமா இயற்கை சார்ந்து இருக்கணும்னு யோசிப்பேன், அதுனாலதான் இந்த முறை இந்தக் கல்மரப் பூங்காவுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன்.

டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன்
டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன்

இங்க இயற்கையையும் தாண்டி, வரலாறு, புவியின் அமைப்பு, அதுல ஏற்பட்டிருக்கும் மாற்றம்னு ரொம்ப அருமையா தெளிவா உணர முடியுது. முக்கியமா குழந்தைகளுக்கு இயற்கைமேலான ஆர்வத்தைத் தூண்டி விடுற மாதிரி இருக்கு. வெளியூர், வெளி மாநிலம்னு மக்கள் இங்க வரத பாக்குறப்போ இன்னும் சந்தோசமா இருக்கு. என் குழந்தைகளுக்கும் இந்த இடம், இங்க இருக்குற படிமங்கள், கல் மரம்னு எல்லாமே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கு" எனக் கூறி முடித்தார்.

கல்மரம்
கல்மரம்
ஆராய்ச்சிகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து வரலாற்றைத் தேடி எடுத்துக்கொண்டே உள்ளனர். வரலாற்றை, புவி அமைப்பை, காலநிலையை என அறிய முக்கியமான இடமான சாத்தனூர்ப் பூங்காவை ஒரு முறையேனும் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்.