கட்டுரைகள்
Published:Updated:

‘எல்லைப் பிரச்னையால் எந்த வசதியுமில்லை’ - ஐசியூ-வில் புளியஞ்சோலை!

புளியஞ்சோலை
பிரீமியம் ஸ்டோரி
News
புளியஞ்சோலை

புளியஞ்சோலையை மேம்படுத்த நிதி கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்காலிகமாக அடிப்படை வசதிகளைச் செய்வதற்காகவே புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தை மூடியிருக்கிறோம்

‘‘திருச்சி மாவட்டம், துறையூர் அருகிலுள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் எந்த அடிப்படை வசதிகளுமின்றி, கைவிடப்பட்ட நிலையிலிருக்கிறது. இரு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் இயற்கை கொஞ்சும் இந்தச் சுற்றுலாத்தலத்தை வெறுமனே பணம் சம்பாதிக்கும் இடமாக மட்டுமே பார்க்கிறார்கள் அதிகாரிகள்” எனப் புகார்கள் எழுகின்றன.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

இது குறித்து புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தர் பேசும்போது,‘‘கொல்லிமலையின் அடிவாரத்திலுள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலம், திருச்சி, சேலம், நாமக்கல் என மூன்று மாவட்ட மக்களும் சுற்றுலாவுக்காகக் கூடும் ஒரு முக்கியமான ஹாட் ஸ்பாட். ஆண்டு முழுவதும் இங்கிருக்கும் ஆற்றில் நீரோடும் என்பதால், வார இறுதி நாள்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இங்கு ஒரு சுற்றுலாத்தலத்துக்கான எந்த அடிப்படை வசதியுமே இல்லை. கழிப்பறை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பெண்களுக்கு உடை மாற்றும் அறை எதுவுமில்லை. ஏதேனும் மெடிக்கல் எமர்ஜென்சி என்றால்கூட 30 கி.மீ தூரத்திலுள்ள துறையூருக்குத்தான் போக வேண்டும். வனத்துறையினரின் கண்காணிப்பும் இல்லாததால், சில மது போதை இளைஞர்கள் நீரில் மூழ்கி, பலியாகும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் புளியஞ்சோலை அமைந்திருப்பதால், இரு மாவட்ட அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. நுழைவுக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூல் செய்பவர்கள் அதற்கான எந்த அடிப்படை வசதியையுமே செய்து கொடுப்பதில்லை. அதேவேளையில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு நடைபெறும் மின் உற்பத்திப் பணிகளால், மலைப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு, புளியஞ்சோலையின் இயற்கை வளமே சிதைந்துபோய்க் கிடக்கிறது” எனக் கொதித்தார்.

புளியஞ்சோலை
புளியஞ்சோலை

திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, ‘‘பொருள்கள் வைக்கும் அறை, உடை மாற்றும் அறை ஆகியவை கட்டப்பட்டுவருகின்றன. போதுமான இடம் இல்லாத காரணத்தால் பார்க்கிங் வசதி செய்ய முடியவில்லை. கழிப்பிட வசதி, சிறுவர்களுக்காக பூங்கா போன்றவை கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறோம். அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுத்துவிட்டு, பின்னர் நிச்சயமாக புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிரதீப் குமார், ஜெகதீஸ்வரி, ராஜாங்கம்
பிரதீப் குமார், ஜெகதீஸ்வரி, ராஜாங்கம்

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் பேசினோம். ‘‘புளியஞ்சோலையை மேம்படுத்த நிதி கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்காலிகமாக அடிப்படை வசதிகளைச் செய்வதற்காகவே புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தை மூடியிருக்கிறோம். அடிக்கடி உயிர்ப்பலி ஏற்படும் ஆழமான நாட்டாமடுவு பகுதியில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு அதிகப்படுத்தப்படும். மற்றபடி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் மின் உற்பத்தி நிலையம் கட்டப்படுகிறது” என்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ‘‘புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்தில் இருந்தாலும், சுற்றுலாத்தலம் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவை நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கின்றன. எனவே, திருச்சி மாவட்ட நிதியைப் பயன்படுத்த முடியாது. மாவட்ட எல்லை வரை என்னென்ன வசதிகள் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன். புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டுக்கென ஒரு கமிட்டி அமைத்து, தேவையான விஷயங்களை முன்னெடுக்கிறேன்” என்றார்.

ஐசியூ-வில் இருக்கும் புளியஞ்சோலைக்கு ஆக்சிஜன் கொடுக்கவேண்டியது அவசியம்!