கட்டுரைகள்
Published:Updated:

தொடரும் பூவார் புல்லரிப்பு...

பூவார்
பிரீமியம் ஸ்டோரி
News
பூவார்

பயணம்| படங்கள்: ரஜினி பிரதாப்சிங்

சர்ப்ரைஸ் நிறைந்த அந்தக் கடற்கரையை நோக்கி உச்சக்கட்ட ஆர்வத்தோடு தொடர்ந்த எங்கள் கால்வாய்ப் பயணம் முடிவுக்கு வந்தது...

ஆற்றங்கரை ஓரம் படகை நிறுத்தி இறக்கி விட்டார் படகோட்டி. ஏராளமான படகுகள் நிற்க, கோல்டன் பீச் எனும் அந்தக் கடற்கரை மக்களால் திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. படகில் மட்டுமே இந்த பீச்சுக்கு வர முடியும். பூவார்ப் படகுச் சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த எக்ஸ்க்ளூஸிவ் பீச்சுக்கு வேறு யாரும் வர முடியாது. லைஃப் கார்டுகள் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

டன் கணக்கில் ரவையை எடுத்து, டால்டா சேர்த்து இளந்தீயில் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொட்டி வைத்தது போன்ற பொன்மஞ்சள் நிற மணலால் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது கோல்டன் சாண்ட் பீச். மாசுமருவற்றுப் பொலபொலவென க்ரிஸ்டல் துகள்களாகக் கிடந்த மணலில் கால்கள் புதையப் புதைய நடந்து, சிறிய மேடேறி அந்தப் பக்கமாக இறங்கிப் பார்த்தால்... நீலப்பச்சை நிறத்தில் வசீகரமாகக் கடல் நம்மை வரவேற்கிறது.

பூவார்
பூவார்

அலைகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு வந்து நமது காலடியில் கரைந்து காணாமல்போக, உச்சிப்பொழுதிலும் கடற்காற்று ஏசி போட்டது போலக் குளுமையைக் கொட்டித் தீர்க்க, ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு வாழ்நாளின் மிச்சத்தை இங்கேயே கழித்துவிட்டால்தான் என்ன என்று மனசு ஒரு நொடி யோசித்தது உண்மை.

சின்ன சின்ன ஸ்டால்களில் இளநீரும், நன்னாரியும் இன்ன பிற ஃப்ரூட்ஸ், ஸ்நாக்ஸ், டீ, காபி வகையறாக்களையும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருபுறம் கடல், மறுபுறம் ஆறு, இடையில் குதூகலமாகக் குழந்தைகுட்டிகளுடன் குடும்பங்களும், கூட்டம் கூட்டமாக நண்பர்கள் குழாமும் உச்சபட்ச உற்சாகத்தில் கடற்கரையை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாயில் குதிரைச் சவாரிக்கு ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருக்க, எல்லோரையும் பாகுபாடின்றி ஈர்த்துக்கொண்டிருந்த ஒரு விஷயம்... ஒட்டகச் சவாரி!

பூவார்
பூவார்

அழகாகக் குனிந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு அன்னம் போல மென்னடை புரிந்த ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு கடலைப் பார்ப்பதெல்லாம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாத அனுபவம் என நாம் நினைக்க, நண்பர் சதாசிவன் இதை ஒரு வரம் என்று சிலாகித்துக்கொண்டிருந்தார். ஒட்டகத்துக்குச் செல்லமாக ஒரு டாட்டா சொல்லிவிட்டுப் படகில் ஏறி ஃப்ளோட்டிங் ரெஸ்டாரன்ட் வந்து சேர்வதற்குள் பசி கப கபவெனப் பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.

பூவார்
பூவார்

படகை ரெஸ்டாரன்டின் கால் தூண்களில் கயிற்றால் பிணைத்துக் கட்டி வைத்து நம்மைக் கவனமாகப் படிக்கட்டில் ஏற்றி விட்டார். மென்மையான அதிர்வுகளுடன் மிதந்துகொண்டிருந்த அந்த அழகிய மிதவைக் குடிலின் மேசையில் நமக்குத் தயாராக இருந்த மதிய உணவு பரிமாறப்பட்டது. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாத பருக்கைகளைக் கொண்ட பாஸ்மதி அரிசிச் சோறு ஆவியில் அவிக்கப்பட்டு, மூன்று அழகிய கிண்ணங்களில் நிரப்பி மேசையில் வைக்கப்பட்டன. வெறும் சோற்றையே எடுத்து உண்டுவிடலாம் போலக் கிண்ணமும் அன்னமும் கண்ணைப் பறிக்கும் வெண்மையில் எங்களை டெம்ப்டாக்கிக்கொண்டிருந்தன. ரெட் ஸ்னாப்பர் எனப்படும் சங்கரா வகை மீனை நாம் தேர்ந்தெடுத்திருந்தோம். நீள் செவ்வக மரத்தட்டில் அழகாக நறுக்கி அடுக்கப்பட்ட வெங்காய, வெள்ளரி, கேரட் துண்டுகளுக்கு மத்தியில் அடர் பிரவுன் நிறத்தில் வறுத்த மீன் துண்டங்களும், நீள் வட்டமான உலோகப் பாத்திரம் ஒன்றில் பார்த்த உடனே நாவில் நீர் ஊறச் செய்யும் மசாலாவில் ஊறி மிதந்துகொண்டிருந்த குழம்பு மீன்களும் எப்படிக் காலியாகின என்று இன்று வரை எங்களுக்குப் புரியவில்லை. கூட்டு, பொரியல், அவியல், துவையல், அப்பளம், மசியல், உப்பு, ஊறுகாய், ரசம், மோர், பாயசம் என்று எதுவுமே இல்லை. சோறும், மீனும் மட்டும்தான். ஒரு கட்டத்தில் சோற்றைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, மீனை மட்டுமே உண்ண ஆரம்பித்திருந்தோம். ஸ்வீட் சோம்பு கூடச் சாப்பிடத் தோன்றாமல் படகில் ஏறினோம். ஆயுளுக்கும் மறக்காத லஞ்ச்!

பூவார்
பூவார்

திரும்பி வரும் வழியில் குறுகலான நீர்ப்பாதையைக் கொண்ட மாங்குரோவ் காடுகளுக்குள் படகு சென்றுகொண்டிருந்தது. ஆங்காங்கு கிளைகிளையாகப் பிரிகின்ற நீர்வழிகளுள் எப்படி ரூட் கண்டுபிடிக்கிறார்கள் என வியப்பாக இருந்தது. போகும்போது இருந்த அதே உற்சாகமும் ஆர்வமும் திரும்பி வரும்போதும் இருந்தது.

மேகமூட்டம் ஆகிவிட்டதால் சன்-செட் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு இம்முறை கிட்டவில்லை. மெல்லிய ஆரஞ்சுத் தகடாய் மெல்ல மெல்லக் கடலில் விழுந்து, தொடுவானத்துக்குள் சூரியன் இறங்கிக் கொண்டிருக்க, வண்ணக் கலவையான வானத்தின் பின்னணியில் பறவைகள் கூடு திரும்ப, அலைகளின் ஓசைகளைச் செவியில் நிரப்பிக்கொண்டு சன்-செட் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள்.

ஒருவழியாக படகுத்துறை வந்து சேர்ந்தோம். அரபிக் கடலுக்கும் நெய்யாற்றுக்கும் ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலைப் பிடிக்கத் தயாரானோம். அந்தப் படகிலேயே வீடு வரை வரமுடிந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே சுகமாக இருந்தது!

பூவார்
பூவார்

பூவார் செல்வோர்க்கான சில குறிப்புகள்:

பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற மேற்குப் பகுதியிலிருந்து வருபவர்கள் திருவனந்தபுரம் வந்தால் பூவாருக்கு நிறைய பேருந்துகள் கிடைக்கும். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வருபவர்கள் நாகர்கோவில் வழியாக களியக்காவிளை வந்தால் பூவாருக்கு நிறைய பேருந்துகள் உண்டு.

மிதவை காட்டேஜ்கள், கரையோர காட்டேஜ்கள் என ஆப்ஷன்கள் உண்டு. மிதவை காட்டேஜ்கள் சற்று காஸ்ட்லியானவை. வெஜிடேரியன் மெனு மட்டும் உள்ள ரெஸ்டாரன்ட்களும் உண்டு.

படகுச் சவாரிக்குப் பலவித பேக்கேஜ்கள் உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு நான்கு பேருக்கு ரூ. 4000 கட்டணம். நேரத்தை அதிகரித்தால்,கட்டணமும் கூடும். பேரம் கிடையாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆங்காங்கு போஸ்டர் ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஆன்லைன் புக்கிங் வசதியும் உண்டு.