கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

கோவை to இலைவீழாப்பூஞ்சிற to கட்டிக்கயம் அருவி
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை to இலைவீழாப்பூஞ்சிற to கட்டிக்கயம் அருவி

கோவை to இலைவீழாப்பூஞ்சிற to கட்டிக்கயம் அருவி / ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: நிஸான் மேக்னைட்

பெயர்: ஆர்.கணேசன், ரஜினி பிரதாப் சிங்

தொழில்: செஞ்சேரிப்புத்தூர் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்

ஊர்: காளிவேலம்பட்டி– பல்லடம் மற்றும் கோவை

கார்: நிஸான் மேக்னைட் XV ப்ரீமியம் மேனுவல் NA

பயணம்: கோவை to இலைவீழாப்பூஞ்சிற, இல்லிக்கல்கல்லு, கட்டிக்காயம் அருவி

பயணத் தொலைவு : 510 கிமீ

பெட்ரோல் செலவு : ₹ 5000

மைலேஜ் : 14 - 16 கிமீ (ஆவரேஜாக)

அனுமதி : தேவையில்லை

அட்ராக்‌ஷன்ஸ்: விதவிதமான அருவிகள், வியூ பாயின்ட்கள், சில்லென்ற கிளைமேட்

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

ஒரு நல்ல விஷயம் ரொம்ப நாட்களாகத் தள்ளிக் கொண்டே போவதும் நல்லதுக்காகத்தான் இருக்கும்போல! அப்படி இந்த கிரேட் எஸ்கேப் ரொம்ப மாதங்களாகத் தள்ளிக்கொண்டே போனதும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. கேரளாவில் உள்ள… அட சில கேரள சேட்டன்களுக்கே தெரியாத.. ஒரு சொர்க்க பூமியில் செல்ஃபிகளாகக் குவித்து வந்து விட்டோம்.

கோவையில் நிஸான் ஷோரூமில் மேக்னைட் புக் செய்ததில் இருந்து… நம்பர் வாங்கி டெலிவரி எடுத்ததில் இருந்து.. ‘‘சார் நாங்க ரெடி; நீங்க எப்போ ரெடி’’ என்று ஆண்ட்ராய்டு போன் வழியாக அன்புத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள் கணேசனும் ரஜினியும். செஞ்சேரிப்புத்தூர் ஊ.ஒ.தொ.பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், கோவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்கள் இருவரும். தொடக்கப் பள்ளி மாணவர்கள் ட்ரிப் அடித்தால் குதூகலமாக இருப்பார்களே.. அதைவிட இந்த கிரேட் எஸ்கேப்பில் இருவரும் என்ஜாய் செய்தார்கள். ‘‘நாங்க இப்போ ஆசிரியர்கள் இல்லை!’’ என்று நிஜமாகவே சிறுவர்களாக மாறியிருந்தார்கள். கூடவே தனது மகன் ஜெரில்டோவையும் அழைத்து வந்திருந்தார் ரஜினி.

‘சுற்றிலும் உள்ள அடர்ந்த மரங்களில் இருந்து இலைகள்கூட உதிர்ந்து விழுந்து விடாதவாறு பூக்களாலான மலைகள் சூழ்ந்த ஏரி’ ஒன்று கடவுளின் சொந்த நாட்டில் இருப்பதாகவும், அதன் பெயர் ‘இலைவீழாப்பூஞ்சிற’ என்றும்... அங்கே போவதென்றும் ரொம்ப நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம் அமுலுக்கு வந்தது. டெலிவரி எடுத்து 2,000 கிமீகூட ஓடி இருக்காத நிஸான் மேக்னைட்கூட ஜாலியாக இருந்தது.

இலைவீழாப் பூஞ்சிறயுடன் அதன் அருகில் உள்ள இல்லிக்கல்கல்லு என்ற மலை முகடு, கட்டிக்கயம் அருவி என மொத்தம் மூன்று இடங்களைக் குறிவைத்து கோயம்புத்தூரில் இருந்து, இதமான காலை ஒன்றில் 250 கிமீ பயணம் தொடங்கியது. இனி ஓவர் டு இலவீழாப் புஞ்சிற மற்றும் கட்டிக்காயம். (‘இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் கட்டுரை என்னுடையதாக்கும்’ என்று ரஜினி பிரதாப்சிங்கே எழுதி அனுப்பியிருந்தார்.)

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!
மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

கேரளத்தில் பாலக்காடு , திருச்சூர் கடந்து அங்கமாலி வரை நான்கு வழிச்சாலையில் பெட்ரோல் இன்ஜினின் ஜிவ்வென்ற ரெவ்வில், ஜில்லென்ற கிளைமேட்டில் நிஸான் மேக்னைட் சொகுசாக மிதந்தபடி சென்றுகொண்டிருந்தது.

கேரள நெடுஞ்சாலைகளில் கார்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உச்சவேகம் மணிக்கு 90 கிமீ. இது தெரியாமல், சென்ற மாதம் நான் 100 கிமீ வேகத்தைத் தாண்டிச் சென்று 1,500 ரூபாய் அபராதம் கட்டியது நினைவுக்கு வந்தது. நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கேமராக் கத்திகளைக் கண்டு அடக்கி வாசித்தபடியே செல்ல வேண்டி இருந்தது. பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ வகையறா ஓனர்களை நினைத்துப் பாவமாக இருந்தது.

திருச்சூருக்கும் பாலக்காட்டுக்கும் இடையே குதிரான் மலையைக் கடப்பது முன்பெல்லாம் வாகன ஓட்டிகளுக்குப் பெருந்தலைவலியாக இருக்கும். மணிக்கணக்கில் சர்வசாதாரணமாக டிராஃபிக் ஜாம் ஆகக்கூடிய ஏரியா என்பதால், ஒவ்வொரு முறையும் அவ்விடத்தை நெருங்கும்போது, கிலி அடிக்கும். ஆனால் தற்போது மலைகளைக் குடைந்து 1.3 கிமீ தொலைவுக்கு நான்கு வழிச் சுரங்கச் சாலை அமைத்து பயணிகளின் மனம் குளிரப் பண்ணியிருக்கிறார்கள்.

அங்கமாலி என்ற அழகிய நகரத்தில், நான்கு வழி நெடுஞ்சாலையிலிருந்து விலகித் தொடுபுழ செல்லும் வழி சபரிமலைப் பயணிகளுக்குப் பழக்கமான ஒன்று. ‘பெருமலை விலங்கிய பேரியாறு’ என இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் புகழப்பட்ட பெரியாறு, இச்சாலையைக் கடந்து அரபிக் கடலில் நோக்கிப் பாய்கிறது.

பெரும்பாவூரில் நல்லதொரு கோழிக்கோட்டுச் சமையல் கொண்ட ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம். மிருதுவான கோழிக்கறித் துண்டங்களால் நிரம்பி இருந்த மலபார் வெண்பிரியாணிக்கு, சுள்ளென்று நடுநாக்கில் உறைக்கும் எலுமிச்சை ஊறுகாயும், கேரட் துண்டுகளும், வெள்ளரிக்கீற்றுகளும், ஊற வைக்கப்பட்ட வெங்காயத் தயிர்ப் பச்சடியும் அத்தனை பொருத்தமாக இருந்தன.

மூவாற்றுப்புழ நகரைக் கடந்து சபரிமலை ரூட்டில் தொடுபுழைக்கும் ஈராட்டுப்பேட்டைக்கும் இடையே முட்டம் என்ற இடத்திலோ, மேலுக்காவு என்னும் இடத்திலோ இடப்புறமாகப் பிரிந்து வாகமன் செல்லும் சாலையில் 12 கிமீ பயணித்தால் காஞ்ஞார் என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து ஜீப் சஃபாரி மூலம் இலைவீழாப்பூஞ்சிறைக்கு ஒரு அசத்தல் ட்ரிப் அடித்தோம். ஆஃப் ரோடு என்பதால், 4வீல் டிரைவ் அல்லது பைக்குகள் என்றால் நமது வாகனத்திலேயே சென்று விடலாம். ஜீப்புக்கு 800 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். நியாயமான தொகைதான்.

கிளம்பியதில் இருந்தே பசுமையும் குளுமையும் நம்மைச் சுற்றிப் பரவி இருக்க, காஞ்ஞாரிலிருந்து மலைச் சாலையில் திரில்லும் நம்முடன் கூடிக் கொண்டது. ஜீப்பில் இருந்து இறங்கிப் பார்க்கும்போது, நாலாபுறமும் விரியும் காட்சியானது, நீண்ட நேரத்துக்குக் கண்களை மூடினாலும் ஸ்கிரீன் சேவராக இமைகளுக்குள் ஒட்டிக் கொள்கிறது.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

மலைவாசனையும், செழும்பசுமையும், இளங்குளிரும், மலைமுகட்டுக் காற்றின் இசையும் நமது நான்கு புலன்களை நிறைவாக்க, அங்கிருந்த பூஞ்சிற ரிசார்ட் என்ற அழகிய சிறுகுடிலில் அமைந்திருந்த பேக்கரியில் ஆளுக்கொரு குவளை இதமான கருந்தேநீர் பருக, ஐந்தாவது புலனும் ஆனந்தம் அடைந்தது.

பாண்டவர்கள் இங்கும் சிலகாலம் வனவாசம் இருந்ததாகவும், அப்பொழுது திரௌபதி இந்த ஏரியில் குளிக்கச் சென்றபோது அவளது அழகில் மயங்கிய தேவர்கள் சிலர் அவள் குளிப்பதைப் பார்க்க மறைந்து நிற்க, இந்திரன் பூக்களாலான மலைகளை அரணாக அமைத்து, அவர்கள் பார்வையிலிருந்து ஏரியை மறைத்ததாகவும், பூக்களால் ஆன மலைகளால் சூழப்பட்டதால், இலைகள் எதுவும் அதைத் தாண்டி இந்த ஏரியில் விழுவதில்லை என்றும் நம்பப்படுகிறது.

சூரியனை மேற்குத் திசை விழுங்கத் தொடங்க, அழகிய மலைச்சாரலில் அமைந்த ரிசார்ட்டை அடைந்தபோது, இரவு கவிழத் தொடங்கி இருந்தது. செமத்தியான கேரள அசைவு உணவு வகைகளுடன் இரவு உணவு இனிதே கழிய, மறுநாள் காலை இளம் மழைத்தூறல்.

காலைச் சிற்றுண்டி ஆவி பறக்கக் காத்துக் கொண்டிருந்தது. வெண்ணப்பங்களும் புட்டும், கடலைக்கறியுடன் இயல்பாகப் பொருந்திப் போகின்றன. முட்டைக் கறி, மீன்கறி, மாம்பழச் சாறு, தர்ப்பூசணிப் பழத் துண்டுகள், ப்ரட் சாண்ட்விச், கப்கேக்குகள், உருளைக்கிழங்கு குல்ச்சா, பூரிக் கிழங்கு, கட்டங்காஃபி.. ஆஹா! நாங்கள் வயிறாறியதில் நீங்கள் வயிறெரிந்தால் கம்பெனி பொறுப்பல்ல!

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!
மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!
மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

அங்கிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள கட்டிக்கயம் அருவிதான் நமது முதல் தேர்வு. செங்குத்தான வளைவுகளில் ஏறி இறங்கிச் செல்லும் மலைச்சாலைகளில், மேக்னைட்டின் 1 லிட்டர் இன்ஜின் அவ்வப்போது திக்கித் திணறிக் கொண்டிருந்தது. ஆனால் இதன் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், மேடு பள்ளங்களை அசால்ட்டாக டீல் செய்து கொண்டிருந்தது. உள்ளடங்கிய அடர்ந்த மலைவனப்பகுதி என்பதால், இணைய வசதி அலைபேசியில் துண்டிக்கப்பட, ஒரு வழியாய் கட்டிக்கயம் அருவியை அடைந்தோம்.

நுழைவுக் கட்டணம், சோதனைச் சாவடி என எதுவும் இல்லாத, ஆள் நடமாட்டமுமற்ற அதிரவைக்கும் அழகு அது. கார் பார்க்கிங்கிலிருந்து இரண்டு குறுகிய பாதைகள் உள்நோக்கிச் சென்றன. எதில் செல்வது எனத் தெரியாமல், சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருக்க, அதன் கரையோரம் சென்றால் அருவியை அடைந்து விடலாம் எனக் கணித்து செடிகொடிகள் , மூங்கில் புதர்கள் அடர்ந்த பாதையில் த்ரில்லிங்கான ட்ரெக்கிங்.

ஓரிடத்தில், பாறைகளுக்கு இடையில் சரிந்து கொட்டிக் கொண்டிருந்தது ஆறு. பாதையும் அத்துடன் முடிந்ததுபோலத் தெரிந்தது. இதுதான் அருவி என நினைத்து கேமராக்களை அலெர்ட் செய்தோம் . மலைச்சரிவின் கீழிருந்து நடைபாதைக் கல் தூண் ஒன்றின் மேல்முனை லேசாகத் தெரிய, ‘அட இனிமேதான் இருக்கு’ என்பதுபோல் இயற்கைப் பாதை, போதையோடு நம்மை அழைத்தது.

ஒவ்வொரு அடியையும் நிதானித்து வைத்துக் கீழே செல்லச் செல்ல, அருவியின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே வந்தது. சில நிமிடங்களில் அமைதியின் உருவாக எங்களுடன் பாதை ஓரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்த ஆறு, 200 அடி உயரத்தில் பேரிரைச்சலும் பெருமுழக்கமுமாக ஆக்ரோஷத்துடன் அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்த அழகைப் பார்த்தால்… எவரும் குழந்தைதான்!

நேரடியாக அருவியில் குளித்தால், நீரின் வேகத்தில் முதுகெலும்பு முறிந்துவிடும் என்பதால், சற்றுத் தள்ளி நீந்திக் குளிக்கலாம். அருவியாக வீழும் நீர், மீண்டும் ஆறாக ஓடி, ஐம்பதடி தொலைவில் மீண்டும் கீழே அருவியாகக் கொட்டுகிறது. இப்படியே அதல பாதாளம் வரை அருவியாகவும் ஆறாகவும் மாறி மாறி ஓடிக் கொண்டிருப்பதை மேலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. அதற்கும் கீழாக நடந்து செல்ல வாய்ப்பே இல்லை.

ஏறத்தாழ 3 கிமீ சுற்றளவில், வேறு மனித நடமாட்டமே இல்லாத ஏகாந்த வெளியில் நாங்கள் மட்டுமே இயற்கையின் பேரழகில் திளைத்து மெய்மறந்து நெடுநேரம் அமர்ந்திருந்தோம். அது ஒரு ஜென்நிலை.

அடுத்த லொகேஷன் இல்லிக்கல்கல்லு. அழகான மலைகளின் ஊடாக 5 கிமீ பயணித்தால் என்ட்ரி பாயின்ட் வருகிறது. அங்கிருந்து தலைக்கு 30 ரூபாய் கொடுத்து ஜீப்பில் செல்லலாம்; நடந்தும் செல்லலாம். ஜீப்பும் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் நின்று விடுகிறது. அங்கிருந்து இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட தடுப்புகளைப் பிடித்துக் கொண்டு, கவனமாக மேலே ஏறினால் இல்லிக்கல் கல்லு மலைமுகடு நம்மைப் பிரம்மாண்டமாக வரவேற்கிறது.

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

கூன்கல்லு, குடைக்கல்லு, சாத்தான்கல்லு என மூன்று மலை உச்சிகள் நெடிதுயர்ந்து நிற்கின்றன. சாத்தான்கல்லை கொல்லியம்பாறை என்றும் சொல்கிறார்கள். மின்னல் அடிக்கடித் தாக்குவதாலும், இதன் அபாயகரமான தன்மையாலும் இப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மூன்றாவது மலை உச்சி செங்குத்துவாக்கில் இரண்டாக உடைந்து நிற்பதால், சிங்கம் ஒன்று ஆக்ரோஷமாக வாயைப் பிளந்து கொண்டு நிற்பதுபோலத் தோற்றமளிக்கிறது. கூன்கல்லையும். குடைக்கல்லையும் அந்தரத்தில் ஒன்றரை அடி அகலத்தில் ஒரு பாலத்தால் இணைத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்கு நரகப் பாலம் என்று பெயர். பெயர்க் காரணம் சொல்ல வேண்டியதில்லை. இப்பொழுது அந்தப் பாலம் இல்லை.

சுற்றிலும் தடுப்பு அமைக்கப் பட்டிருப்பதால், பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்து அழகின் உச்சத்தை அனுபவிக்க முடிகிறது. நண்பகல் பொழுதில் பனிப் புகையும், இளவெயிலும். மென்மழைச் சாரலும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.

சுற்றி 360 டிகிரியிலும் இயற்கையின் அசுரத்தனமான அழகு வியாபித்திருந்தது. பச்சையான வெல்வெட் போர்வை போர்த்தினாற்போல மலைத்தொடர்கள் ஒளி வீசுகின்றன. கிளம்ப மறுத்த மனதை, அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டும் கிளம்பினோம்.

காலையிலிருந்து நடையோ நடையென நடந்தததால், பசியும் பற்றியெரிய ஆரம்பித்திருந்தது. மெல்லக் கீழே இறங்கி வந்து சேர்ந்தோம். தொடுபுழயில் ஆற்றங்கரையோர உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்து விட்டு, காம்பவுன்ட் சுவரில் மோதி முத்தமிடும் நீரலைகளைப் பார்த்த வண்ணம் காத்துக் கொண்டிருந்தோம்.

அக்மார்க் கேரளச் சமையலில் தயாராகிப் பரிமாறப்பட்ட மட்டை அரிசிச் சோறும், மீன் குழம்பும் நிறைந்த தட்டுகள் வேகமாகக் காலியாகிக் கொண்டிருந்தன. வயிறும் மனமும் நிரம்பிக் கொண்டிருந்தன. வெளியே மழையும் வேகம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

மனதைக் கட்டிப்போடும் கட்டிக்கயம் அருவி!

பார்க்க வேண்டிய இடங்கள்: (இல்லிக்கல் கல்லுவில் இருந்து)

கண்ணாடிப்பாற: (5 கிமீ)

 சூரியக் கதிர்களைக் கண்ணாடிபோல எதிரொளிக்கும் பாறைகளைக் கொண்ட வியூபாயின்ட். ‘கழுகன் குளிமலையருவி’ என்னும் அருவி இங்கு பார்க்க வேண்டிய ஒன்று. உச்சியிலிருந்து எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழ, பத்தனம்திட்ட என ஆறு மாவட்டங்களைப் பார்க்க முடியும்.

மர்மல அருவி : (15 கிமீ)

 மீனச்சில் ஆற்றில் உள்ள இந்த அருவியில் குளிக்க வாய்ப்பில்லை. ஆனால் இஃதொரு மறைந்து கிடக்கும் பொக்கிஷம். ஃபோட்டோகிராபர்களின் சொர்க்கம். ட்ரெக்கர்களின் ஃபேவரைட்.

அய்யம்பாற : ( 15 கிமீ)

 காலாற நடந்து சென்று, சூரியன் மறைவதைப் பார்க்க இதமாக மலை மேல் அமைந்துள்ள தட்டையான பரப்பு. செல்ஃபி பிரியர்களுக்கு நல்ல சாய்ஸ்.

அருவிக்கரச்சல் : (26 கிமீ)

 குடும்பத்துடன் பிக்னிக் சென்று குளித்து மகிழ வேண்டிய அருவி.

உலுப்பூனிப் புல்வெளிகள்: (15 கிமீ)

 மலைமுகட்டில் இருந்து சூரியன் உதிப்பதை அதிகாலை ட்ரெக்கிங் மூலம் பார்ப்பது ஆகப்பெரும் அனுபவமாக இருக்கும். அட்டகாசமான ஆஃப் ரோடு அனுபவத்துக்குக் கண்ணை மூடிக் கொண்டு டிக் அடிக்கலாம்.

வாகமன்: ( 15 கிமீ)

 நேஷனல் ஜியோகிராஃபிக் ட்ராவலர்ஸ் டைரக்டரியின், இந்தியாவில் பார்த்தே ஆக வேண்டிய வசீகரமான 50 இடங்களின் பட்டியலில் வாகமன் இடம் பெற்றுள்ளது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவும் இந்த மலைவாழிடம் ஹனிமூனர்ஸ் பேரடைஸ் எனவும், குயின் ஆஃப் த மிஸ்ட் எனவும் செல்லமாக அழைக்கப்படுகிறது. முழுவதும்‌ அனுபவித்துப் பார்க்க குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும் .

உரும்பிக்கர : ( 25 கிமீ)

 மிரட்டும் அருவிகளும், முரட்டு ஆஃப்ரோடுகளும், மயக்கும் வியூ பாயின்ட்டுகளும் கொட்டிக் கிடக்கும் இடம். ஒரு முழுநாள் தேவைப்படும். ஃபோர் வீல் ட்ரைவ் கொண்ட எஸ்யூவிகளில் மூன்றரை மணிநேரம் ஆஃப் ரோடில் அவ்வப்போது இறங்கி, பாதையை நாமே சரிசெய்து பயணிக்க வேண்டிய அட்டகாசமான அட்வென்ச்சர் லொக்கேஷன்.

இதைக் கவனிங்க!

* ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்றவற்றுக்கு வாய்ப்புகள் அதிகம். சோதனை முக்கியம்.

* குடை, நல்ல கிரிப்பான ஷூக்கள், குடிநீர் பாட்டில்கள் எப்பொழுதும் கைவசம் வைத்துக் கொளவது நல்லது. சரிவும் செங்குத்துமான மலையேற்றங்களில் செல்ஃபி முயற்சிக்க வேண்டாம்.

* ஃபேமிலியோடு வந்து என்ஜாய் பண்ணவும், நண்பர்களோடு வந்து அதகளம் செய்யவும் ஏகத்துக்கும் இங்கு டூரிஸம் அட்ராக்‌ஷன்கள் இருக்கின்றன. எல்லாத் திசைகளிலும் அதிகபட்சம் அரைமணிநேரத் தொலைவில் எல்லா விலைகளிலும் ரிசார்ட்டுகளும் , ரெஸ்ட்ரான்ட்டுகளும் கொட்டிக் கிடக்கின்றன.

* கோட்டயம் - குமுளி சாலைக்கு வடக்கிலும், இடுக்கி - தொடுபுழ சாலைக்குத் தெற்கிலும் இருக்கும் இந்த மலைத்தொடர்களில் விலங்குகள் கிடையாது

* இலவீழாப் பூஞ்சிறவுக்கு 4வீல் டிரைவ் கார்கள் அல்லது பைக்குகளில் நீங்களாகவே போகலாம். அல்லது ஜீப் சவாரி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சவாரிக்கு 800 ரூபாய்.

* இல்லிக்கல் கல்லுக்கும் ஜீப் சவாரி உண்டு. 30 ரூபாய்தான் கட்டணம்.

* கட்டிக்கயம் அருவிக்கு சோதனைச் சாவடிகள், கட்டணம் எதுவும் கிடையாது. அட, விசாரிப்பதற்குக்கூட ஆள் நடமாட்டம் இல்லாத அருவி கட்டிக்கயம். ஓடை போகும் பாதையோரமே சென்றால் அருவியின் பிரம்மாண்டத்தைத் தரிசிக்கலாம்.

 நீச்சல் தெரிந்தால் மட்டுமே இங்கு இறங்குவது நல்லது. அட்டைப் பூச்சிகள் கவனம். ஆள் நடமாட்டமே இல்லாததால், ஆபத்தும் அதிகம். வழுக்கும் பாறைகளில் கவனம் சிதறினால்… மன்னிச்சூ!