
‘‘நான் ரோடுவழியா சுத்திப் பார்க்கப் போறோம்னுதான் நினைச்சேன். ஆனா நடுவுல என் பையன் என்னை ப்ரைவேட் ஜெட்ல கூட்டிட்டுப் போய் சர்ப்ரைஸ் பண்ணினான்.
ரோஹன் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில், எல்லாக் குழந்தைகளும் அவர் வீட்டில்தான் சுற்றுகிறார்கள். காரணம், அவர்கள் வீட்டில் வசிக்கும் அந்த அழகான பெர்ஷியன் பூனை.
‘‘இந்த ஏரியாவுல எட்டு வருஷத்துக்கு மேல இருக்கோம். எங்களுக்கு ரொம்ப சிறிய நண்பர்கள் வட்டம்தான். ஆனா இந்த சூசூ வந்த கொஞ்ச நாள்லயே இந்த ஏரியாவுல எல்லாரும் எங்க நண்பர்களாகிட்டாங்க” என்று 63 வயதிலும் இளமையாகச் சிரிக்கிறார் ரோஹனின் அம்மா கஸ்தூரி.
ரோஹன், அம்மா, பூனைக்குட்டி மற்றும் இவர்களுடைய கறுப்பு கேம்பர் வேன். இந்த காம்பினேஷன் சென்னையில் பிரபலம். சமீபத்தில் இவர்கள் இந்தியா முழுக்கச் சென்று வந்த கேம்பர்வேன் பயணம்தான் யூடியூபில் ட்ரெண்டிங். பொதுவாக இளைஞர்கள் தம் நண்பர்களுடனோ அல்லது காதலி/மனைவியுடனோ, ஏன் சோலோவாகக்கூட ட்ராவல் போவார்கள். ஆனால் ரோஹன் தன் அம்மாவையும் பூனைக்குட்டியையும் அழைத்துக்கொண்டு இந்தியாவையே சுற்றி வந்தது ஆச்சர்ய பிரேக்கிங் நியூஸ்.


‘‘நான் சென்னைக்கு வேலைக்காக வந்து பத்து வருஷம் ஆச்சு. ஒரு ஆட்டோமொபைல் கம்பெனியில வேலை செஞ்சுட்டு வந்தேன். திடீர்னு அந்த நிறுவனத்தை இன்னும் ஒரு வருஷத்துல மொத்தமா மூடப்போறதா சொன்னாங்க. எல்லோருக்கும் அதிர்ச்சி. எனக்கும் ஆரம்பத்துல குழப்பமாதான் இருந்தது. ஆனா, பல வருடங்களாக தள்ளிப்போட்டு வந்த ஒரு ஆசைய நிறைவேத்த, இதுதான் நல்ல வாய்ப்புன்னு தோணுச்சு” என்றவர், பூனைக்குட்டியைக் கொஞ்சியபடி இருந்த தன் அம்மாவைப் பார்த்தார்.
‘‘எங்களுக்குக் கும்பகோணம் பக்கத்தில் துஹிலி கிராமம். அம்மா எப்போ கல்யாணம் முடிச்சு அங்க வந்தாங்களோ அப்போ இருந்து அவங்க தினமும் உழைச்சிட்டுதான் இருக்காங்க. பரம்பரையா கைத்தறித் தொழில்தான் செஞ்சிட்டு வந்தோம். அப்பா இருந்தும், அம்மா தலையிலதான் எல்லாப் பொறுப்பும் விழுந்துச்சு. காலையில் 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை வேலை செஞ்சிட்டே இருப்பாங்க. என்னையும் என் அக்காக்களையும் பார்த்துப் பார்த்து வளத்தாங்க. அவங்களுக்கு லீவும் ஓய்வும் கிடையாது.


பசங்க எல்லாரும், அவங்க அம்மா அப்பாவுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும், வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போணும், கார் வாங்கணும்னு எல்லாம் ஆசைப்படுவாங்க. எனக்கும் அந்த ஆசை எல்லாம் இருந்துச்சு. ஆனா மொதல்ல ஒரு நல்ல வேலைக்குப் போய் அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். அதனால சென்னைக்கு வேலைக்கு வந்த ரெண்டே வருஷத்துல, அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.
எனக்குச் சென்னையில வேலை கிடைச்சதும், நண்பர்களுடன் சேர்ந்து வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ எல்லாம் ‘அம்மாவை இந்த இடங்களுக்குக் கூட்டிட்டு வரணும்’னு ஏக்கம் மனசுல இருக்கும்.
ஆனா, மிடில் க்ளாஸ் குடும்பத்துல வீடு, நிலம்னு ஒவ்வொரு ரூபாயையும் பார்த்துப் பார்த்துதான் செலவு பண்ணுவாங்க. ட்ராவல் போறது எல்லாம் பெரிய கனவு மாதிரி. அடிப்படையில இருந்து ஆரம்பிக்கலாம்னு நாங்க இருந்த பழைய வீட்டைப் புதுசா கட்டினேன். அதுல அப்பா இப்போ இருக்காரு. அடுத்து வீடு கட்ட வாங்கிய கடன்களை அடைச்சோம்.

அம்மா எங்களுக்காகப் பல தியாகங்கள் பண்ணியிருக்காங்க. பல கனவுகளை இழந்திருக்காங்க. அவங்க இழந்ததை எல்லாம் என்னால மொத்தமா திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனா முடிஞ்ச வரைக்கும் அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்தணும்னு நினைச்சேன். அம்மாவை ஒரு முறை அவங்க நண்பர்களோடு ஷீரடி போக ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். சந்தோஷமா போயிட்டு வந்தாங்க. அப்பவே அவங்களுக்கு இந்த உலகம் முழுக்க சுத்திக் காட்டணும்னு நினைச்சேன். அம்மாவுக்குத் துணையா ஒரு பூனைக்குட்டி வாங்கிக்கொடுத்தேன். அந்தப் பூனை வந்ததும் எங்க உலகமே மாறிடுச்சு. அம்மாவுக்கு ‘சூசூ’ கூட விளையாடவே நேரம் சரியா இருக்கும்.
நடுவுலதான் என் வேலைக்குப் பிரச்னை வந்தது. எனக்கு இன்னொரு வேலை நிச்சயம் கிடைச்சிடும். ஆனா இப்படி ஒரு விடுமுறை இன்னொரு முறை கிடைக்காது. அதனால அம்மாவை இந்தியா முழுக்கச் சுற்றிக் காட்ட முடிவு பண்ணினேன். சூசூவையும் கூட்டிட்டுப் போலாம்னு முடிவு பண்ணினோம். அம்மாவை ரெண்டு மாசப் பயணத்துக்கு மனசளவில தயார்படுத்தினேன்.
அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போனா, உடனே ட்ரிப்பை நிறுத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துரணும்னு முடிவு பண்ணினேன். அதனால இதுக்கு ஃப்ளைட், ட்ரெயின் எல்லாம் செட் ஆகாது. அப்போதான் இந்த கேரவன் ட்ராவல் பத்திப் பார்த்தேன். புதுசா கேரவன் வாங்க பல லட்சம் செலவாகும். அதனால ஒரு பழைய மினி வேனை எடுத்து, அத எங்களுக்குத் தேவைப்படுற மாதிரி ரீமாடல் பண்ணினோம். எனக்கு கார் ஓட்டவே தெரியாது. 16 நாள்கள்ல இந்த வண்டியை ஓட்டக் கத்துக்கிட்டேன். ஒரே ஒரு முறை அம்மாவை இதுல கும்பகோணம் வரை கூட்டிட்டுப் போனேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். இந்தியா முழுக்க இந்த வண்டியிலயே ட்ராவல் பண்ணலாம்னு தைரியம் வந்துடுச்சு.
நான் ஏற்கெனவே வெச்சிருந்த யூடியூப் சேனல்ல, ட்ராவல் வண்டி தயார் பண்ணுறது தொடங்கி முழு வீடியோவையும் பதிவிட்டேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. எல்லாரும் எங்க ட்ராவலையும் பாக்கணும்னு சொன்னாங்க. அதனால எங்க பயண அனுபவங்கள் முழுக்க யூடியூப்ல பதிவிட்டேன்” என்று கூறும் ரோஹனின் சேனல் 9 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் தொட்டுவிட்டது.
‘‘நான் ரோடுவழியா சுத்திப் பார்க்கப் போறோம்னுதான் நினைச்சேன். ஆனா நடுவுல என் பையன் என்னை ப்ரைவேட் ஜெட்ல கூட்டிட்டுப் போய் சர்ப்ரைஸ் பண்ணினான். அடுத்து மும்பையில, தாஜ் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தான். சுட்டெரிக்கும் ராஜஸ்தான், பனியில உறைஞ்சிருக்கும் லடாக்னு 18 மாநிலங்கள் போனோம். வெறும் படங்கள்ல பார்த்த இடங்களை நேர்ல பாப்பேன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல. இந்த வயசுல ஒரு நதியில குதிச்சு நீச்சல் போட்டேன், டென்ட்ல தூங்கி, காலையில சூரியன் உதிக்குறத பாத்தேன். அருவியில குளிச்சேன். இதுக்கு மேல என்ன வேணும். என் எல்லா ஆசைகளையும் என் மகன் நிறைவேத்திட்டான்” என்கிறார் கஸ்தூரி பெருமையாக.
‘‘இன்னும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நாங்க போகல’’ என்று சொல்லும் ரோஹன், அம்மாவுடன் பகுதி-2 பயணத்தை விரைவில் மேற்கொள்ளவிருக்கிறார்.