Published:Updated:

இலங்கை, கென்யா மற்றும் சைப்ரஸ் | ஒரு கிராமத்தானின் பயணக் கதை - 23

Sri lanka

நான் கீழே படுக்க அன்புடன் பணிக்கப்பட்டேன். எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம் இந்த பல்லி. இரவு எத்தனை பல்லி, கரப்பான்கள் என் பக்கத்தில் படுத்து தூங்கப்போகின்றனவோ... பல்லிகள் வரவில்லை. ஆனால், அந்தக் காட்டுப் பன்றிகள் ஏதோ ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல ஒரே ஓட்டமும் சத்தமும்.

இலங்கை, கென்யா மற்றும் சைப்ரஸ் | ஒரு கிராமத்தானின் பயணக் கதை - 23

நான் கீழே படுக்க அன்புடன் பணிக்கப்பட்டேன். எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம் இந்த பல்லி. இரவு எத்தனை பல்லி, கரப்பான்கள் என் பக்கத்தில் படுத்து தூங்கப்போகின்றனவோ... பல்லிகள் வரவில்லை. ஆனால், அந்தக் காட்டுப் பன்றிகள் ஏதோ ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல ஒரே ஓட்டமும் சத்தமும்.

Published:Updated:
Sri lanka

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-22 படிக்காதவர்கள் படிக்கலாம்.)

நான் விவேகானந்தா கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது, காலை உணவு முடித்து அவரவர் கல்லூரிக்கு கிளம்ப தயாராகும்போது, நான் மட்டும் படியேறி மேலே உள்ள "படிக்கும் அறைக்கு" (Reading Room) செல்வேன். 20 நிமிடத்தில், ஹிந்து (The Hindu) செய்தித்தாளை வேகமாக படிப்பேன். வெளிநாட்டு விவகாரங்கள் எனக்கு மிகவும் விருப்பம். நான் மும்பை சென்றபோது இன்னும் அதிகரித்தது. வேலை முடிந்து சர்ச் கேட் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கல்லூரி விடுதியில் இரவு உணவுக்கு செல்வேன். மிக குறைந்த விலையில் நல்ல சப்பாத்தி தால் (Daal - பருப்பு) கிடைக்கும். அந்த கல்லூரியில் நிறைய இரானி, இராக்கி மற்றும் ஆப்பிரிக்க மாணவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அவ்வப்போது பேச்சுக்கொடுத்து அவர்கள் நாட்டைப்பற்றி, இந்தியாவைப்பற்றி அவர்கள் எண்ணம் என பேச்சு கொடுப்பேன். மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும். பின்னர் நான் எமிரேட்ஸ் விமான கம்பெனியில் சேர்ந்தபோது என் சர்வதேச ஆர்வம் றெக்கை முளைத்து பறந்தது. இங்கே அங்கே என்று செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக வாயிலாக மற்றும் என் நட்பு வட்டாரத்தில் பேசி என் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன்.

2013, ஏப்ரல் மாதம். என் வீட்டிற்கு அவ்வப்போது வரும் விருந்தினர் வந்திருந்தார். சொந்த வியாபாரம் காரணமாக ஆப்பிரிக்கா - அமெரிக்கா என்று அடிக்கடி செல்பவர். சமயத்தில் துபாயில் நிறுத்தி 1-2 நாட்கள் இருந்து அடுத்த பயணம் செல்வார். இந்த முறை காங்கோவில் (Congo) கொரில்லாக்கள் இருக்கும் வனத்தில் நீண்ட நடை சென்ற அனுபவத்தை விவரித்து, நீங்களும் சென்று வாருங்கள் என்றார். அதற்கு மனைவி, கொரில்லாவைதான் வீட்டிலேயே (?) பார்க்கிறேனே, வேறு இடம் சொல்லுங்கள் என்று விளையாட்டாக சொல்ல, அவர் உடனே, அவருடைய கென்யா நாட்டு மேலாளரை அறிமுகப்படுத்த, எங்கள் கென்யா பயணம் உருப்பெற்றது. அங்குள்ள ஒரு நிறுவனம் மூலம் திட்டம் உறுதி செய்தோம். 6 நாட்கள். முக்கியமாக மசாய் மாரா தேசிய பூங்காவில் (Masai Mara National Reserve) "சஃபாரி", இரண்டு நாட்கள் நக்குரு ஏரி (Lake Nakuru) அருகில் வாசம். இரண்டு நாட்கள் நைரோபி மற்றும் போக்குவரத்து.

2013 ஆகஸ்ட் – கென்யா

ஆகஸ்ட் 6 காலை கிளம்பினோம். கென்யா கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. மக்கள் தொகை 5 கோடி போல். ஒரு சமயத்தில் இந்திய வியாபாரிகள் செழித்த இடம். இப்போதும் ஏறக்குறைய 1 லட்சம் இந்திய வம்சாவழியினர், இப்போது கென்ய குடிமகன்கள், வாழும் இடம்.

NAIROBI – MASAI MARA – LAKE NAKURU - NAIROBI
NAIROBI – MASAI MARA – LAKE NAKURU - NAIROBI

நைரோபி விமான நிலையம் இறங்கி அன்று இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலை ஜீப்பில் "மசாய் மாரா" நோக்கி பயணம். வசதியான வண்டி நேரத்திற்கு வந்திருந்தது. அமர்ந்து ஓட்டுனரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். 6 நாள் கூடவே இருக்கப்போகிறவர். நல்ல தோழமையோடு பழகினார். நைரோபி தான் தலைநகர். ஆனால், அவ்வளவாக பெரிய முன்னேறிய இடம் இல்லை. ஏதோ விழுப்புரம் போல சிறிய ஊர்போலவே தோன்றியது. சுத்தமும் இல்லை. இங்கேயும் அங்கேயும் சிறு பெறு பெட்டி கடைகள், நிறைய "தோலின் நிறம் மாற்றும்" வஸ்த்துகள் மற்றும் இயேசு பற்றிய கூட்டங்கள் பற்றிய பதாகைகள்.

சற்று தூரத்தில் வெப்பம் அதிகரிக்க, நான் அவரை குளிரூட்டியை (A/C) துவக்க சொன்னேன். சற்று தயங்கியவர் அது வேலை செய்யவில்லை என்றார். துபாயில் வாகனத்தில் கண்ணாடியை இறக்கும் பழக்கமே இல்லை. இங்கோ வெப்பம் அதிகமாக உள்ளது. 260 கிமீ செல்லவேண்டும். குளிரூட்டி இல்லாமல் வாய்ப்பே இல்லை. அந்தப் பயண நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். என்ன இப்படி குளிரூட்டி இயங்காத வண்டியை அனுப்பியுள்ளீர்கள் என்று கடிந்து கொண்டேன். அந்த உரிமையாளர், (இந்தியா வம்சாவழியினர், என்னுடன் மின்னஞ்சல் மூலம் சற்றே பழகியிருந்தார்) மிகவும் நிதானமாக "சஃபாரி" வாகனங்கள் அனைத்துமே அப்படித்தான் என்றும், "சஃபாரி" ஆரம்பித்த பிறகு கண்ணாடிகளை மூடி மேல் பக்கம் திறந்து அந்த வனவிலங்குகளை நன்கு பார்க்க, புகைப்படம் எடுக்க ஏதுவாக குளிரூட்டிகள் இயக்கப்படுவதில்லை என்றார். எதுவாகியினும், அன்று கற்றுக்கொண்டேன், சஃபாரியில் என்ன எதிர்பார்க்கக்கூடாதென்று. பயணத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன்.

செல்ல செல்ல சாலையின் தரமும் மோசமாகிக்கொண்டே போனது. ஒரு 6 மணி நேரம் கழித்து மதிய உணவுக்கு "ரிசார்ட்" அடைந்தோம். உணவு முடித்து அறைக்கு அழைத்து சென்றார்கள். அறை என்பது சொகுசு "டென்ட்" தான். அதுவும் அந்த காடு போன்ற இடத்தில். பாதுகாப்பு கருதி ஒரு "டென்ட்"டில் இருவர்தான். மகள்கள் தாங்கள் தனியாக இருப்பது பிரச்னை இல்லை என்று கூற, நாங்களும் சரியென்று சொன்னோம். பெட்டிகளை போட்டுவிட்டு வாகனத்தில் அந்த "மசாய் மாரா"வை சுற்றிவர ஆரம்பித்தோம். சற்றே சென்றவுடன் கண்களில் ஒவ்வொன்றாக வன விலங்குகள் தென்பட ஆரம்பித்தன. வரிக்குதிரைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் ஏதோ நம்மூர் கிராமங்களில் ஆடு மாடு மேய்வதுபோல் திரிந்துகொண்டிருந்தன. முதல் முதல் பார்த்தபோது ஒரே பரவசம். அந்த கருப்பு வெள்ளை, அதுவும் அந்த வனாந்தரத்தில் அந்த கருப்பு வெள்ளை கோடுகள், பளிச்சென்று தெரிந்தன. அந்த ஒட்டகச்சிவிங்கிகள் அனாவசியமாக ஏதோ "அழகிப்போட்டியில்" நடப்பது மாதிரி அவ்வளவு உயரமான கால்களை தூக்கி தூக்கிப்போட்டு நடப்பது தனி அழகு. ஆனால் போக போக கண்கள் வேறு மிருகங்கள் கிடைக்காதா என்று தேட ஆரம்பித்தன. ஓட்டுநர் கண்களை எப்போதும் தயாராக வைத்து ஒவ்வொரு புது மிருகம் வரும்போதும் காட்டினார். காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் (Wildebeest) நிறைய கண்ணில் பட்டன. மனைவிக்கு எப்படியாவது சிங்கங்களை பார்க்கவேண்டும். ஆனால், அதற்கு நாளைதான் திட்டம் என்று ஓட்டுநர் சொன்னார். சரி ஓரளவுக்கு மிருகங்களை பார்த்தாயிற்று. இருட்டவும் ஆரம்பிக்க விடுதிக்கு திரும்பினோம்.

நாள் முழுவதும் சுற்றி நிறைய யானைகள், நீர் யானைகள் (Hippos), மான்கள் (Antelope), குரங்குகள் (Baboon), முதலைகள், சில சிங்கங்களையும் மிக மிக அருகிலேயே பார்த்தோம்.

உணவு உண்டுகொண்டே கலை நிகழ்ச்சி கண்டு களித்தோம். இந்த மசாய் மக்கள் மிகவும் உயரமாக ஒல்லியாக இருப்பார்கள். தேக்கு மரத்தில் செய்த தேகம். உடைகள் பெரும்பாலும் சிகப்பு நிறம்தான். கையில் ஒரு ஈட்டி போன்ற நீண்ட கோலை வைத்துக்கொண்டு உயரே எகிறி எகிறி குதித்து ஆடுவார்கள். அவர்கள் ஆடட்டும். கூடவே நம்மையும் அழைப்பார்கள். நான் அதிக பட்சம் 1 இன்ச் குதிக்கமுடியும். அதை ஏன் எல்லோருக்கும் காண்பித்து? எனக்கு தற்பெருமை பிடிக்காது. ஆகவே மறுத்து "எருது வால்" (Ox Tail) சூப் குடித்துப்பார்த்தேன். புது அனுபவம்.

டென்டுக்கு திரும்பியபோது, மகள்கள் தனியாக தங்குவது உசிதமில்லை என்று தோன்றியது. காரணம், தொலைவில் யானைகளும், காட்டுப்பன்றிகளும் அவ்வப்போது சத்தம் கொடுக்க அந்த "உல்லாச டென்ட்" அவ்வளவு உல்லாசமாக தெரியவில்லை. சற்றே பயமாக இருந்தது. மகள்களை எங்களோடு தங்க சொல்லி, நான் கீழே படுக்க அன்புடன் பணிக்கப்பட்டேன். எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம் இந்த பல்லி. இரவு எத்தனை பல்லி கரப்பான் பக்கத்தில் படுத்து தூங்கப்போகின்றனவோ. பல்லிகள் வரவில்லை. ஆனால் இரவு முழுவதும் அந்த காட்டு பன்றிகள் ஏதோ ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல ஒரே ஓட்டமும் சத்தமும்.

மறுநாள் கிளம்பி நாள் முழுவதும் சுற்றி நிறைய யானைகள், நீர் யானைகள் (Hippos), மான்கள் (Antelope), குரங்குகள் (Baboon), முதலைகள், சில சிங்கங்களையும் மிக மிக அருகிலேயே பார்த்தோம். மனைவி ஹேப்பி. வழிதோறும் நிறைய விலங்குகளின் எலும்புக்கூடுகள். இயற்கையின் சமநிலைப்படுத்தும் நியதி.

kenya forest
kenya forest

அந்த மசாய் மாரா ஒரு 1500 சதுர கிலோமீட்டர். அது வனவிலங்குகள் புகலிடம் என்றாலும் அடர்ந்த காடு கிடையாது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த சமவெளி. கண்ணுக்குக்கெட்டிய தூரம் வரை தங்க நிற புல்வெளி (Savannah). மனித தடயமே கிடையாது. ஆங்காங்கே உயர்ந்த "காட்டு ஈச்சம்பழ" மரங்கள். யானைகளுக்கும் ஒட்டகசிவிங்களுக்கும் அக்க்ஷயபாத்திரம் இதுதான். பார்ப்பதற்கு ஆங்காங்கே ஒரு ராட்சத "மத்தை" நட்டு வைத்த மாதிரி இருக்கும்.

அந்த மசாய் மாரா புகலிடத்தின் ஒரு அங்கமான "மாரா" ஆற்றை நோக்கி சென்றோம். ஒன்று நிச்சயமாக சொல்வேன். கென்யா சென்றால், மசாய் மாரா சஃபாரி அவசியம் பார்க்க வேண்டும். அதுவும் அந்த "காட்டெருமை கடக்கும்" சீசனில் (ஆகஸ்ட் - செப்டம்பர்). லட்சக்கணக்கில் "காட்டெருமைகள்" அந்த ஆற்றை கடந்து நல்ல புல்வெளிகளை நாடி அண்டை நாடான தன்சானியா நோக்கி செல்லும். இந்த ஓட்டுனர்கள் ஒவ்வொரு சீசனிலும் பார்ப்பவர்கள். அவர்கள் உங்களை சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் அழைத்து செல்வார்கள். இந்த காட்டெருமைகள் என்ன "நெட்ஒர்க்" உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தகவல் மிக துரிதமாக அனுப்பப்பட்டு எங்கெங்கிருந்தோ வந்து கூடுவார்கள். முதலில் ஒரு ஐந்து பின்னர் இருபது முப்பது பின்னர் ஆயிரம் என்று எங்கிருந்தோ வந்து கொண்டே இருப்பார்கள். கூடி ஏதோ உத்தரவுக்கு காத்திருப்பதுபோல் கரையில் நிற்பார்கள். அவர்களுடைய தலையோ தளபதியோ, சூப்பர் ஸ்டாரோ, யாரோ அது நமக்கு தெரியாது, ஒரு காட்டெருமை முதலில் குதிக்க திடீரெனெ ஆயிரக்கணக்கில் தொடர்ந்து குதித்து மறு கரையில் ஏறி அந்த பக்கம் ஓட ஆரம்பிப்பார்கள். இதிலென்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம். அந்த ஆற்றின் கரையோரம், தண்ணிக்குள் முதலைகள் படுத்துக்கொண்டு இருக்கும். சில காட்டெருமைகளுக்கு கட்டம் சரியிருக்காது. ஏறமுடியாமல் வழுக்கி வழுக்கி கால் முதலையின் வாயில் மாட்டி வாழ்க்கையை முடிக்க, சுற்றி இருந்து வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள் உன்னிப்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள். இயற்கை. யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த "மாரா" தாண்டுதல் உண்மையில் ஒரு தனித்துவமான (Unique) அனுபவம்.

சில வருடங்களுக்கு முன், சிங்கப்பூரில் IMax ல் அந்த வட்ட வடிவ திரையில் தலைக்கு மேல் "காட்டெருமைகள்" ஓடுவதை பார்த்த நாங்கள், அதை நேரில் பார்ப்போம் என்று நினைக்கவில்லை. நாம் நினைத்தே பார்க்காத நிறைய விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பது இயற்கை. அவை, நல்லதாக இருக்கும்பட்சத்தில் வரவேற்க வேண்டும். நல்லதாக இல்லாத பட்சத்தில், பாடம் கற்கவேண்டும். என்ன சரிதானே?

மாசாய் மாராவில் இருந்து கிளம்பி நக்குரு ஏரியில் 2 இரவுகள். அருமையான விடுதி, ஏரியை எப்போதும் பார்க்கும் வண்ணம். ரம்மியமான சூழல். மேலும் சில மிருகங்கள் பார்த்தோம். காண்டா மிருகம், குறிப்பாக.

இதற்கிடையில், நைரோபி விமான நிலையத்தில் 7ம் ஆகஸ்ட் பெரிய தீ விபத்து என்றும், விமான சேவைகள் வெகுவாக பாதித்து உள்ளதாகவும் இணையத்தில் படித்தோம். பயண தேதிகளை மாற்றவேண்டுமா முடிவெடுக்கமுடியவில்லை. எமிரேட்ஸை தொடர்பு கொள்ள, அவர்கள் இன்னும் 2 நாட்களில் சரியாகிவிடும் என்று உறுதியளிக்க சற்றே நிம்மதி.

எல்லாம் முடித்து விமான நிலையம் போகும் வழியில் நன்யூகி (Nanyuki) என்ற இடத்தில பூமத்திய ரேகை (Equator) தாண்டி விமான நிலையம் வந்தோம். அந்த குறிப்பிட்ட ரேகை செல்லும் இடத்தில நிறுத்தி அந்த வட துருவம் மற்றும் தென் துருவம் இடையில் காந்த சக்தி எப்படி வித்தியசமாக செயல்படுகிறது என்று செயல்முறை விளக்கம் பார்த்தோம்.

விமான நிலையம் வந்தோம். பிரதான கட்டிடம் இயங்கமுடியவில்லை. தற்காலிக குடில் அமைத்து நிலைமையை சமாளித்து விமானம் கிளம்பியது. இது மிகவும் முக்கியமான சுற்றுலா காலம். கென்யா சுற்றுலாவை வெகுவாக சார்ந்துள்ளது. ஆகவே, துரிதமாக நிலைமையை கையாண்டார்கள். நாங்களும் வீடு வந்தோம்.

2016 டிசம்பர் – சைப்ரஸ்

LARNACA – LIMASSOL – PAPHOS - LARNACA
LARNACA – LIMASSOL – PAPHOS - LARNACA

நான் மேலே சொன்ன மாதிரி ஹிந்து செய்தித்தாள் மூலமாக நான் அறிந்து கொண்ட ஒரு விஷயம், இந்த சிப்ரியட் மோதல் (Cypriot Conflict). பல வருடங்களாக நடந்த இன்றும் முற்றும் பெறாத மோதல் இது. அடிப்படையில் கிரீக் மக்களுக்கும் துர்கிஷ் மக்களுக்கும் உள்ள சண்டைதான் அது.

சைப்ரஸ் மத்திய தரைக்கடலில் (Mediterranean Sea) உள்ள ஒரு குட்டி தீவு. மக்கள் தொகை ஏறக்குறைய 12 லட்சம். அதில் 75% கிரீக். 25% துர்கிஷ். அங்கேதான் பிரச்னை. வட சைப்ரஸ் துர்கிஷ் கட்டுப்பாட்டுக்குள். தனி அரசு. கிரீக் பாகத்தில் இருந்து செல்வது கடினம். கிரீக் சைப்ரஸின் தலைநகர் நிகோசியா (Nicosia). துர்கிஷ் சைப்ரஸின் தலைநகரம் வட நிகோசியா.

அங்க என்னதான் பார்க்க இருக்கு என்று நினைக்கலாம். உங்களுக்கு புராதன / சரித்திர இடங்களை பார்ப்பது பிடிப்பதென்றால், சைப்ரஸ் பிடிக்கும். இல்லை, நிறைய கடற்கரையில் ஓய்வெடுப்பது பிடிக்குமா, சைப்ரஸ் நிச்சயம் பிடிக்கும். எங்களுக்கு இரண்டும் பிடிக்கும். மகள்கள் வேலையில் பிஸி. ஒரு 8 நாள் அங்கே சுற்றி மற்றும் ஓய்வெடுப்பதுதான் திட்டம். லர்நாகா, லிமசொல் மற்றும் பஃபோஸ் பார்ப்பதாக திட்டம். மூன்றுமே கடற்கரை இடங்கள்.

லர்நாகா (Larnaca)

விமான நிலையத்தில் இறங்கி இரண்டு நாட்கள் சுற்றி பழைய தேவாலயங்கள், குறுகிய கற்களால் ஆன சாலைகள் சுற்றி நல்ல உணவுகள் உண்டோம். டிசம்பர் என்பதால் நல்ல சீதோஷ்ணம். லர்நாகாவின் சிறப்பே அந்த குறுகிய சாலைகளும் புராதன தேவாலயங்களும்தான். எனக்கு பிடித்த கடல் உணவுகள். அப்புறம் அந்த கடற்கரை. முடிந்தவரை நடந்து சுற்றினோம்.

அறையில் இருந்து கடலை பார்க்கும் விதமாக. நல்ல காற்று, நல்ல வெளிச்சம். காலையில் எழுந்து நல்ல சிற்றுண்டி. பின் சாப்பிட்ட பாவத்துக்கு அந்த விடுதியின் உள்ளேயே நீண்ட நடை.

சைப்ரஸ் நிலப்பரப்பே மிகவும் ஏற்ற இறக்கங்கள் உள்ளது. நிறைய குன்றுகள், மலைகள். அந்த சாலைகளில் பயணிப்பதுகூட நன்றாகவே இருக்கும். அப்படிதான் பயணித்து 80 கிமீ தூரத்தில் உள்ள லிமசொல் (Limassol) என்ற கடற்கரை நகரம் சென்றோம். லிமசொல் சைப்ரஸின் தென் கரையோரம். நிஸ்ஸி (Nissi) என்ற அழகிய கடற்கரை. வசதியான விடுதி. அருமையான உணவு. இரண்டு நாட்கள் நல்ல ஓய்வு முடிய அடுத்து கடைசி நிறுத்தம், பஃபோஸ் (Paphos). கடற்கரை கடற்கரை மற்றும் நீண்ட கடற்கரை மட்டும்தான்.

தங்கிய விடுதி கடற்கரையை ஒட்டி மிகவும் திறந்த வெளியில் அழகான உல்லாச விடுதி. (Luxury Resort). 1 ரூம் அபார்ட்மெண்ட், அறையில் இருந்து கடலை பார்க்கும் விதமாக. நல்ல காற்று, நல்ல வெளிச்சம். காலையில் எழுந்து நல்ல சிற்றுண்டி. பின் சாப்பிட்ட பாவத்துக்கு அந்த விடுதியின் உள்ளேயே நீண்ட நடை. பின் அறைக்கு வந்து சிறிது நேரம் சீட்டாட்டம். பின் 1-2 மணி நேரம், வாசிப்பு. பகல் உணவுக்கு நேரம் ஆகிவிடும். ஆனால் கவனமாக உணவை குறைத்து 4 மணிவரை காத்திருந்து பின்னர் அந்த 2-3 கிமீ கடற்கரை ஓரம் நடந்து பின் நல்ல இடம் பார்த்து அமர்ந்து, காற்று வாங்கி அங்கு வரும் பல்வேறு விதமான மக்களை பார்த்து நேரம் போவதே தெரியாது.

நிறைய சுற்றுலாவாசிகள். இந்தியர்கள் மிக மிக குறைவே. இருந்தும், அந்த ஊரிலும் நல்லதோர் இந்திய உணவகத்தை என் மனைவி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். சென்றோம். ராஜ் என்ற இங்கிலாந்திய இந்தியர்தான் உரிமையாளர். அருமையான உணவு. மூன்று நாட்கள் தினமும் அங்கேதான். நன்கு பழக ஆரம்பித்தார். ஆனால், நாங்கள் கொஞ்சம் பார்த்து போடுங்க என்று டிஸ்கவுன்டெல்லாம் கேட்கவில்லை. மூன்றாவது நாள், நாங்கள் கிளம்புவதாக சொல்ல அவரே டிஸ்கவுன்ட் போட்டு கொடுத்தார். நம்புங்கள். நான் டிஸ்கவுன்டுக்காக அதை சொல்லவில்லை.

டிசம்பர் 8ம் தேதி காலை பஃபோஸ் நகருக்கு நன்றி சொல்லி அந்த கடற்கரை வழியாக சென்று லர்நாகா விமான நிலையம் வந்து துபாய் சேர்ந்தோம். 5 மணி நேரத்திற்கு கீழேதான் பறக்கும் நேரம். வசதியான பயணம். நல்ல ஓய்வான விடுமுறை. நிகோசியா (தலைநகரம்) செல்ல நினைத்தும் எதற்கு மற்றவர் (கிரீக்/துர்கிஷ்) பிரச்னையில் மூக்கை நுழைக்க வேண்டும் என்று போகவில்லை!

சைப்ரஸ் ஒரு "பார்க்க வேண்டிய" (Must See) நாடு என்று சொல்லமாட்டேன். ஆனால் நீங்கள் அழகான அமைதியான கடற்கரையில் சற்றே ஓய்வான விடுமுறையை கழிக்க விரும்பினால் சைப்ரஸ் நல்ல தேர்வு. நம்மூரிலியே அந்த மாதிரி இடங்கள் இருக்கலாம். 2023 அல்லது 2024 இந்தியா சுற்றி பார்க்க திட்டம். அப்போது செல்லவேண்டும்.

துபாயில் இறங்கி அடுத்த நாளே மனைவி எல்லாவற்றையும் ஏறக்கட்டி அடுத்த வாரம் இறக்கக் கட்டினோம் (Opposite of ஏறக்கட்டி!). ஏனெனில், 23-31 இலங்கைக்கு என் மகள்கள் திட்டம் போட்டுப் பதிவும் செய்திருந்தார்கள்.

2016 டிசமபர் – ஸ்ரீலங்கா

Sri Lanka | COLOMBO – KANDY – NUWARA ELIYA – GALLE - COLOMBO
Sri Lanka | COLOMBO – KANDY – NUWARA ELIYA – GALLE - COLOMBO

விவேகானந்தாவுக்கும் இலகைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதாகப்பட்டது என் இரண்டாவது வருடத்தில் என் அறை நண்பர்கள் (Room Mates) இருவர். அதில் ஒருவர் ஈரோட்டை சேர்ந்த பணக்கார மாணவர். கால் சட்டையை அணியும்போது கூட கட்டிலில் அமர்ந்து கால் சட்டையின் நுனி தரையில் படாவண்ணம் மிக சுத்தமாக செயல்படும் பணக்காரர். இன்னொருவர் இலங்கையை சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர். என்னடா மச்சான் என்று அன்பாக அழைப்பார். அவர் அந்த இலங்கை துணிமணிகளை, காலணிகளையும், நறுமண திரவியங்களையும் சர்வ சாதாரணமாக உபயோகிப்பார். இது சரியில்லை மச்சான் என்று தூக்கி வீசிவிடுவார். நல்ல ஸோப், ஷேவிங் கிரீம், கோல்கேட் பேஸ்ட் என்று மணக்கும் அவர் பொருட்கள் எல்லாமே. இலங்கையில் அப்போது எல்லா பொருட்களுமே இறக்குமதி செய்யப்பட்டவை. "Made in UK" / "Made in USA" தான். சீப்பான சைனீஸ் பொருட்கள் இல்லை. அப்போதிருந்தே அந்த இலங்கைப்பற்றி ஒரு விதமான மயக்கம். அப்புறம் துபாயில் எமிரேட்ஸில் / ஷெல்லில் நிறைய இலங்கை நண்பர்கள். இப்படியாக இலங்கை நெருக்கமாக, என்னடா பக்கத்து நாடு, இன்னும் போகவில்லையெனில் எப்படி என்று நானும் மனைவியும் மகள்களின் திட்டத்துக்கு பச்சை கொடி காட்டினோம்.

துபாயில் இருந்து கொழும்பு வழியாக கண்டி (Kandy) சென்று அங்கிருந்து நுவர எலியா (Nuwara Eliya) மற்றும் கல்லே (Galle) பார்த்து கொழும்பு வழியாக துபாய் திரும்ப திட்டம்.

Sri lanka
Sri lanka

23ம் தேதி கிளம்பி கொழும்பு விமானநிலையம் சென்றடைந்தோம். ஏறக்குறைய சென்னை விமான நிலையம் மாதிரி வெளியே நிறைய தேவை இல்லாத குழப்பங்கள். அந்த பயணத்திற்கு முற்றிலுமாக வாகனம் முன்பதிவு செய்து அந்த ஓட்டுனரை தேடினேன். எங்கோ இருந்து ஓடிவந்தார். வாகனம் சற்று தள்ளி நிறுத்தியிருந்ததாகவும் மன்னிக்குமாறும் கூறி பெட்டிகளை வண்டியில் ஏற்றினார். அவர் சிங்களவர். ஆங்கிலம் பேசினார்.

அவரிடம் முதலிலே கூறிவிட்டேன். இது நான் எப்போதும் செய்வது. என்னவென்றால் ஓட்டும்போது நிச்சயம் தொலைபேசி உபயோகிக்கக்கூடாது. அவரும் மதிக்கும் விதமாக நடந்துகொண்டார். ஒரே பிரச்னை அவருக்கு 20-30 நிமிடத்துக்கு ஒரு முறை அழைப்பு வரும். நிறுத்துவார். பேசுவார். எல்லாம் சிங்களத்தில். அவர் பேசும்போது என் கற்பனை குதிரை ஏறும். என்ன பேசுகிறார். கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த தமிழ் குடும்பத்தை கடத்த ஏதாவது திட்டம் போடுகிறாரா? ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பத்திரமாக கண்டி அடைந்தோம்.

கண்டியில் 2 நாட்கள். ஏறக்குறைய நம்மூர் போலவே ஒரு உணர்வு. அங்கிருந்து முக்கியமாக பார்க்க வேண்டிய இடம் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள கோவில். நீண்ட வரிசையில் நின்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம். பல் இருக்குமிடம் பார்த்தோம், பல்லை பார்க்க முடியவில்லை. மறுநாள் அங்கிருந்து கிளம்பி பின்னவளா (Pinnawala) என்ற யானைகள் சரணாலயம் சென்று 50-60 யானைகள் அணிவகுத்து குளிப்பாட்ட சென்று அங்கேயே இருந்து அவைகள் குளிப்பதையும் சாப்பிடுவதையும் பார்த்து அறைக்கு திரும்பினோம். தங்கியிருந்த இடம் ஒரு எஸ்டேட்டினுள். நல்ல அருமையான சூழல். உணவு அங்கேயே. சுற்றி பார்த்த நேரம் போக, மீதி நேரம் உள்ளேயே சுற்றி அனுபவித்தோம்.

மகள்களோ எங்களை வெறுப்பேற்ற முடிவு செய்து மீண்டும் மீண்டும் விளிம்பின் மிக அருகில் சென்று பயமுறுத்தினார்கள். ஒரு வழியாக அவர்களை கையை பிடுத்து இழுக்காத குறையாக இழுத்து திரும்பினோம். இறங்குவதும் அவ்வளவு சுலபமில்லை.

அடுத்த நிறுத்தம் நுவர எளிய (Nuwara Eliya). முக்கிய இடங்கள் "உலகத்தின் முடிவு" (World's End) என்ற 9 கிமீ நீண்ட நடை. அடுத்து சீதா பிராட்டியார் கோவில். ஹர்ட்டன்ஸ் (Hortons) என்ற அழகிய விடுதியில் தங்கினோம். இந்த "உலகத்தின் முடிவு" நீண்ட நடை மிகவும் மறக்க முடியாத ஒன்று. ஏறக்குறைய 9 கிமீ கொஞ்சமும் சமனில்லாத கரடு முரடான ஒழுங்கற்ற பாதை. ஏறவேண்டும் பின்னர் இறங்க வேண்டும். 4,000 அடி உயரம். 5 கிமீ நடந்து உடம்பு ஆடி போய்விடும். ஆனால் முடிவில், ஒரு செங்குத்தான பாறையின் விளிம்புதான் "உலகத்தின் முடிவு". சற்றே கிலிதான். மகள்களோ எங்களை வெறுப்பேற்ற முடிவு செய்து மீண்டும் மீண்டும் விளிம்பின் மிக அருகில் சென்று பயமுறுத்தினார்கள். ஒரு வழியாக அவர்களை கையை பிடுத்து இழுக்காத குறையாக இழுத்து திரும்பினோம். இறங்குவதும் அவ்வளவு சுலபமில்லை.

ஒரு மடத்தனமான காரியம்... நாங்கள் தேவையான அளவு தண்ணீர் கொண்டு செல்லாதது. சிறிது கஷ்டப்பட்டோம். அந்த 9 கிமீ முழுக்க மலையில்தான். கடைகளே கிடையாது. என் மகள்கள் நன்றாகவே ஈடுகொடுத்து இந்த மொத்த நடையையும் ஒரு 5 மணி நேரத்தில் முடித்தோம். கீழே உள்ள கடையில் குளிர் பானம் வாங்க சென்றால் அவர்கள் கடன் அட்டை வாங்க மறுத்துவிட்டார்கள். நுழைவுசீட்டுக்கும் அதேமாதிரி கடன் அட்டை வாங்காத காரணத்தினால் கையில் மீதமிருந்த சில்லறையில் ஒரு பாட்டில் மட்டும் வாங்கி எல்லோரும் தொண்டை நனைத்தோம். இந்த கடன் அட்டை விவகாரமும், கையில் உள்ளூர் பணம் இல்லாததும் உண்மையில் எனக்கு புதிது. பாடம் கற்றேன்.

நுவர எளிய - கல்லே செல்லும் சாலை. முழுக்க முழுக்க கடற்கரை ஒட்டியே. அழகோ அழகு. கல்லே - கொழும்பு சாலையும் அழகுதான். அனுபவித்து பயணித்து கொழும்பு தாஜ் விடுதி வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் சீதா கோவில். அங்கே அனுமாரின் பாதம் பதிந்து உள்ளதாக ஒரு இடம் உள்ளது. நிறைய உள்ளூர் தமிழ் குடும்பங்கள் வந்திருந்தனர். எனக்கு ராமாயணம் பற்றிய வியப்பு ஒரு பக்கம். மறு பக்கம் இந்த தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக பல் வேறு காரணங்களினால் பாரெங்கும் சென்று குடியமர்ந்து சரித்திரம் எழுதியுள்ளார்கள், மியான்மார் (பர்மா), மௌரிஷியஸ், ரீயூனியன், செஷல்ஸ், கோமோர் என பல நாடுகளில். பார்க்கவேண்டும். ஒரு நாள் நிச்சயமாக.

கடைசி நிறுத்தம் கல்லே (Galle). இந்த இடம், நிறைய டச் (Dutch) தாக்கம் உள்ள இடம். மிக அழகான கடற்கரை நகரம். நல்ல பங்களாவில்தான் வாசம். உரிமையாளர் வெள்ளையர். சமையல்காரர் நம்மூர்க்காரர். சாப்பாடு தினமும் கேட்டு கேட்டு செய்வார். சுற்றிலும் பெரிய தோட்டம். மனைவி வெளியே வர மனமில்லாமல் நானும் மகள்களும் மற்றும் சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானம் இங்கு உள்ளது. பார்த்தோம்.

குறிப்பிட்டே ஆகவேண்டும், அந்த நுவர எளிய - கல்லே செல்லும் சாலை. முழுக்க முழுக்க கடற்கரை ஒட்டியே. அழகோ அழகு. கல்லே - கொழும்பு சாலையும் அழகுதான். அனுபவித்து பயணித்து கொழும்பு தாஜ் விடுதி வந்து சேர்ந்தோம். ஓர் இரவுதான். மிகவும் அழகான விடுதி. அவ்வளவு சொகுசு. அடடா இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே இருக்கலாமா என்று தோன்றியது. மகள்கள் புது வருடத்தை துபாயில் வரவேற்க திட்டம் வைத்திருந்தார்கள். கடைசி நிமிடத்தில் குழப்பம் வேண்டாம் என்று ஒழுங்கு மரியாதையாக துபாய் வந்து சேர்ந்தோம்.

2016 நல்ல விதமாக முடிந்தது.

அடுத்த வாரம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா பாப்போம்.

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)