Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: காஷ்மீரை ஏன் அனைவரும் சொந்தம் கொண்டாட எண்ணுகின்றனர்?! | பகுதி 27

நாடோடிச் சித்திரங்கள்

அன்றிரவு உணவு முடித்த பிறகு அனைவரும் விடுதியின் வளாகத்தில் விறகுகளுக்கு தீ மூட்டிக் குளிர்காய்ந்து அமர்ந்திருந்தோம். பேச்சும் பாட்டுமாக களைகட்டியது அவ்விரவு. பேசுவதையே பெரும் சிரமமாகக் கருதிய திலகன் அண்ணனை அன்று பாடல் பாடுமாறு வற்புறுத்தினேன்.

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: காஷ்மீரை ஏன் அனைவரும் சொந்தம் கொண்டாட எண்ணுகின்றனர்?! | பகுதி 27

அன்றிரவு உணவு முடித்த பிறகு அனைவரும் விடுதியின் வளாகத்தில் விறகுகளுக்கு தீ மூட்டிக் குளிர்காய்ந்து அமர்ந்திருந்தோம். பேச்சும் பாட்டுமாக களைகட்டியது அவ்விரவு. பேசுவதையே பெரும் சிரமமாகக் கருதிய திலகன் அண்ணனை அன்று பாடல் பாடுமாறு வற்புறுத்தினேன்.

நாடோடிச் சித்திரங்கள்

துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் காஷ்மீரின் ஷாலிமார் தோட்டம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் பார்வையாளர்களுக்காகத் திறந்துவைக்கப்படும். காஷ்மீரை சுற்றுலாப்பயணிகள் தேனீக்களாக மொய்க்கத் தொடங்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வந்துவிட்டாலே மனதுக்குள் இனம்புரியாததொரு கலக்கம் என் மனதை ஆட்கொள்ளத் தொடங்கிவிடும்.

"புதிய வானம்... புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகின்றது" என்று குதூகலத்தோடு வயது முதிர்ந்தவர்களும், "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" என்று மோகம் ததும்பும் இளைஞர்களும் என அனைவரது படையெடுப்பால் நான் அங்கு வாழ்ந்த மூன்று வருடங்களும் கோடைகாலச் சரணாலயமாகவே எங்கள் வீடு மாறியிருந்தது.

"நம்ம சாலினி அங்கதானப்பா இருக்கு... அவ அங்க இருக்கப்பவே காஷ்மீர ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வந்துருவோம்" என்று தங்களது பெருமையைப் பறைசாற்றும்விதமாக புகுந்த வீடும், பிறந்த வீடும் மாறி மாறிச் சுற்றுலாப் பிரியர்களுக்கு எங்கள் முகவரி கொடுத்து அனுப்பிவிடுவர். 'விருந்தோம்பல் தமிழர் மரபு' என்று மனதுக்கு ஊக்கமளித்துக்கொண்டு வருபவர்களையெல்லாம் வரவேற்று, உணவளித்து அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டியாகச் சென்று, அவர்களது உடல்நலன் பேணி பாதுகாத்து, குங்குமப்பூ, ஸ்வெட்டர், சால்வை, ஆப்பிள் கூடைகள் என அவர்களது ஷாப்பிங் ஏக்கங்களைப் பூர்த்தி செய்து ஒருவழியாக வழியனுப்பிவிட்டுத் திரும்பும்போதே அடுத்த சுற்றுலாக்குழு வருவதாகத் தகவல் கிடைக்கும்.

சிலர் நாகரிகமாகப் பேசுவார்கள், "உங்களுக்கு சிரமமில்லையென்றால் இரண்டு மூன்று நாள்கள் மட்டும் சுற்றிப்பார்க்க எங்களுடன் வர முடியுமா... இந்தி தெரியாதுல்ல எங்களுக்கு..." அவர்களது அழைப்பை ஏற்கவும் மனமில்லாமல், மறுக்கவும் முடியாமல் இப்படி எத்தனையோ முறை ஷாலிமார் தோட்டத்தையும், தல் ஏரியையும், குல்மார்க் மலைகளையும், முகல் தோட்டங்களையும் சுற்றிக் காண்பித்தே எனக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நலம் விசாரிக்குமளவு நெருக்கமோ அல்லது பரிச்சயமோ இல்லாத தூரத்து உறவினர்கள்கூட செவிவழிச் செய்தியாக நாங்கள் ஜம்முவில் வசிப்பது தெரிந்த பிறகு எங்களுக்கு நெருக்கமாகிவிடுவதுண்டு. பருவம் தவறாமல் வலசைவரும் பறவைகள்போல் கோடைக்காலத்தில் மட்டுமே தென்படும் உறவினர்களும் நண்பர்களும் இன்பச்சுற்றுலா முடிந்து திரும்பியதும் ஆளரவமின்றி மறைந்துவிடுவர்.

எத்தனையோ இளம் தம்பதியருக்கு எங்கள் வீடு தேனிலவு விடுதியாக இருந்திருக்கிறது. நானுமே அப்போது இளம் வயதினள்தான் என்றாலும், என்னைவிட இளையவர்களும் முதியவர்களும் காதல் பறவைகளாகப் பறந்து வரும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும் தாய்ப் பறவையாக மாறிய அனுபவங்களில் பல வேடிக்கையானவையாகவும், சில உணர்வுபூர்வமானவையாகவும் இருந்திருக்கின்றன.

திலகன், எங்கள் நட்பு வட்டத்தில் வயதில் மூத்தவர். அப்போதே அவருக்கு வயது நாற்பதை நெருங்கியிருந்தது. தமிழகத்தின் தென்மாவட்டமொன்றை பூர்வீகமாகக்கொண்ட விவசாய குடும்பத்தின் மூத்த மகன் திலகன். அவருக்குப் பிறகு மூன்று தங்கைகளும், ஒரு தம்பியுமிருந்தனர். நண்பர்கள் கூடியிருக்கும் நேரத்திலெல்லாம் திலகனை வம்பிழுத்து அவரைப் பகடி செய்வது வழக்கம். "யோவ் திலகா, உன்னைவிட பத்து பதினஞ்சு வயசு சின்னவங்கல்லாம் கல்யாணம் முடிச்சு செட்டில் ஆகிட்டோம், இப்படியே போனா நேரா அறுபதாம் கல்யாணம்தான் உனக்கு" என்று யாராவது ஒருவர் தவறாமல் கூறுவார். திலகன் எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்துவிடுவார். திலகனுடனான எனது உறவு எவ்வித முயற்சிகளுமின்றி இயல்பிலேயே ஆழமானதாக அமைந்திருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

காதல் திருமணத்தின் விளைவாக, உற்றார் உறவினர் என அனைவரையும் பகைத்துக்கொண்டு புதுடெல்லிக்கு வந்த எங்களை ஆதரித்து, பல உதவிகள் செய்தவர் திலகன். ``பெற்றோர், உடன்பிறந்தோர் என அனைவரையும் துறந்து தனது காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பெண்ணின் சுயநலத்தைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவளது மனம் தடுமாறிக்கொண்டே இருக்கும், நாளை அவளால் குடும்பத்துக்குப் பல அவமானங்கள் நேரிடலாம். அதனால் தொடக்கமுதலே அவளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்" என்று எண்ணற்ற அறிவுரைகள் என் செவிபடும்படியாகவே என் கணவருக்கு வழங்கப்பட்டன.

நண்பர்கள் என்றாலே நல்லவர்கள் என்பது போன்ற சினிமாத்தனமான நம்பிக்கைகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்தன. நண்பர்களெனும் பெயரில் நம் வாழ்க்கையை சாவித்துவாரம் வழியாகக் கண்டு ரசிக்கும் மனிதர்களே அதிகம் என்று புரியத் தொடங்கிய பிறகு நான் எனது நட்பு வட்டத்தை மிகவும் குறைத்துக்கொண்டேன். ஆனால் எப்போதும் தன்னிலையிலிருந்து பிறழாமல் பக்குவமான நட்புடன் பழகியவர் திலகன் மட்டும்தான்.

அவரை மட்டுமே இதுவரை `அண்ணே...’ என்று வாயார அழைத்திருக்கிறேன். அதன் பிறகு இரத்தினம் என்ற மனிதரையும். உறவுகள் உணர்த்தாத அன்பை எனக்குத் தந்தவர்கள் அவர்கள்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நான் எப்போது கலங்கினாலும் என்னைத் தேற்றியவர் திலகன். "பாப்பா, இந்த உலகம் ஆயிரம் சொல்லும், அதையெல்லாம் நீ காதுல போட்டுக்கவே கூடாது. நாம வகுத்துக்கிட்ட பாதையிலதான் நாம போகணும். என்னையக்கூடத்தான் எல்லாரும் பேசுறாங்க. நான் அதுக்கெல்லாம் யோசிக்க முடியாது. என் தங்கச்சிங்களை, தம்பியைக் கரை சேர்த்த பிறகுதான் நான் என்னையப் பத்தி யோசிக்கணும்னு முடிவு செஞ்சுருக்கேன். அதுமாதிரி நீயும், உன் மனசும், வாழ்க்கையும் எப்படி இருக்கணும்னு நீதான் முடிவு பண்ணணும். படிச்ச புள்ள நீ, இப்படில்லாம் கலங்கக் கூடாது" என்று அவர் கூறியபோது என்னையுமறியாமல் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன். "இருங்கண்ணே சாப்பிட்டுட்டுப் போலாம்" என்று முதன்முறையாக அவருக்கு மனதார உணவு சமைத்துப் பறிமாறினேன். உணவு சமைத்தல் அன்பின் வெளிப்பாடு என்பதை உணர்வுபூர்வமாக அறிந்துகொண்ட நாள் அது. அன்றிலிருந்து இன்றுவரை உணவு சமைப்பதை உழைப்பாக, வெறும் வேலையாக மட்டுமே அணுகாமல் அதில் அன்பும் ரசனையும் கலந்து படைக்கும் கலையையும் பழகிக்கொண்டேன்.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களையும், இனிமேல் நாம் சந்திக்கப்போகும் மனிதர்களையும் இதுவரை நாம் சந்தித்திராததற்குக் காரணம் நாம் அச்சந்திப்புகளுக்குத் தயாராக இருக்கவில்லை என்பதுதான்.

மனிதர்கள் எப்போதும் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படும் நேரம் நம் மனதின் பக்குவத்தைப் பொறுத்து அமைகிறது. திலகன் அண்ணன் அப்படி என்னைச் சுற்றியிருந்தவர், தனது குணத்தின் வெளிப்பாட்டால் என் வாழ்வின் முக்கியமான பக்கங்களை அலங்கரித்தவராக மாறிப்போனார்.

டெல்லிக்குப் பிறகு அனைவரும் வெவ்வேறு பாதைகளில் பிரிந்தோம். திலகன் அண்ணன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரின் திருமண அழைப்பிதழ் வந்திருந்தது. எளிமையான மஞ்சள் நிற சுபமுகூர்த்த பத்திரிகை அது. அப்போது நாங்கள் ஜம்முவில் இருந்தோம். திலகன் அண்ணனின் திருமணத்துக்கு வர முடியாத சூழலிருந்ததால் அவரை அலைபேசியில் அழைத்து மன்னிப்புக் கேட்டேன். "அதெல்லாம் ஒண்ணுமில்லை பாப்பா. நான் எதுவும் நெனச்சுக்க மாட்டேன். நீ ஊருக்கு வர்றப்ப வீட்டுக்கு வா. அண்ணி உன்னையப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. உன்னைப் பத்தி நெறைய சொல்லியிருக்கேன் அவகிட்ட" என்று அவ்விஷயத்தை லகுவாகக் கையாண்டார். மற்றவர்களின் நிலைமையிலிருந்து விஷயங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் அவரிடமே கற்றேன். அதுவரை நான் சந்தித்த மனிதர்கள் யாரும் அப்படியிருக்கவில்லை. நானுமே அப்படியிருந்தேனா என்றும் தெரியவில்லை.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

திலகன் அண்ணனுக்கும், மாலதி அண்ணிக்கும் திருமணம் நிகழ்ந்து முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. "அண்ணிக்கு ஊர் சுத்திக் காட்டலாம்னு ஆசையாயிருக்கு. அவ எங்க கிராமத்தைவிட்டு எங்கேயுமே போனதில்லை. கடலைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. அதான் மெட்ராஸுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு யோசிக்குறேன்" என்று வெள்ளந்தியாகப் பேசினார் திலகன். எனக்கு மூளையில் பளீரென்று மின்னல் வெட்டியது. "அண்ணே கடலை அப்புறம் பார்த்துக்கலாம். அண்ணியைக் கூட்டிக்கிட்டு இங்க வாங்க. நாம அவங்களுக்கு பனிமலையையும், ரோஜாத் தோட்டங்களையும், பெரிய பெரிய நதிகளையும் காட்டுவோம்" என்று உற்சாகமாகக் கூறினேன்.

திலகன் அண்ணன் தடுமாறினார். முதலில் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். நான் விடாமல் கட்டாயப்படுத்தினேன். அன்பின் கட்டளைகளுக்கு அவர் நிச்சயம் இணங்குவார் என்பது தெரியுமென்பதால் அவர் சம்மதிக்கும்வரை வற்புறுத்தினேன். திலகன் அண்ணனை எந்த விஷயம் யோசிக்கவைக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. திருமணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டதாக அவரே ஒரு முறை கூறினார். "அண்ணே எதுவும் யோசிக்காம வாங்க. நாம பார்த்துக்கலாம். நாங்க சாப்பிடுறதுல கூட ரெண்டு பிடி சமைக்கப் போறேன் அவ்வளவுதான். அண்ணியைக் கூட்டிக்கிட்டு வாங்க" என்று கூறி அலைபேசி அழைப்பைத் துண்டித்தேன்.

அண்ணனின் வருகைக்கான நாள் குறிக்கப்பட்டது. அதற்கு சரியாகப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே நான் திட்டங்கள் வகுக்கத் தொடங்கினேன். துலிப் மலர்களும் ரோஜா மலர்களும் ஷாலிமார் தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய ஒரு மார்ச் மாத இறுதியில் திலகன் அண்ணனும், மாலதி அண்ணியும் எங்கள் இல்லம் வந்தடைந்தனர். விருந்தோம்பல் எனும் பண்பின் முழு மனநிறைவை உணர்ந்த நாள்கள் அவை. மனதுக்குப் பிடித்தவர்களுக்காகச் செய்யும் யாதொரு காரியத்திலும் அலுப்போ சுமையோ தெரியாது என்று அப்போது விளங்கியது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

குடும்பக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டிருந்த அவர்களிருவருக்கும் அந்நாள்களின் தனிமையும் அமைதியும் எவ்வளவு தேவையாக இருந்ததென்பது மணிக்கணக்கில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உரையாடல்களே உறவுகளின் நெருக்கத்தைக் கூட்டும் விஷயமாகும்.

இரண்டு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு திலகன் அண்ணனின் தேன்நிலவுப் பயணம் தொடங்கியது. நாங்கள் அவர்களுடன் பயணித்தோம் அவ்வளவே.

தாவி நதியோரம் சிறுகுன்றின் மேல் பிரமாண்டமாக நின்றிருந்த அமர் மஹால் என்றழைக்கப்பட்ட ஹரிநிவாஸ் அரண்மனையிலிருந்து எங்களது பயணம் தொடங்கியது. அரண்மனையைச் சுற்றியெங்கிலும் ரோஜா மலர்ச்செடிகள் பூத்துக் குலுங்கின. மலர்களின் வனப்பு, மண்ணின் வளமையை உணர்த்தியது. ரோஜா மலர்களின் வாசம் தாவி நதிக் காற்றோடு கலந்து மதுர மணம் வீசியது. திலகனும் அண்ணியும் ஆர்வமாகச் சுற்றிப் பார்த்தனர். அவர்களைப் படம்பிடிக்கும் செயலை மிகவும் ரசித்துச் செய்தேன். அரண்மனை வளாகத்திலிருந்து தாவி நதியின் முழு நீட்சியையும் காண முடிந்தது. முழு நிலவு இரவுகளில் அவ்விடம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். திலகனும் அண்ணியும் அதற்குள் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தார்கள். திலகனுக்கு வரலாறு, அரசியல், தத்துவம் ஆகிய விஷயங்களைக் குறித்து அதிக தெளிவிருந்தது. அவருடனான அறிவுசார்ந்த உரையாடல்கள் எனக்குப் பிடித்தமானவை.

அங்கிருந்து எங்களது அடுத்த பயணம் ஶ்ரீநகர் நோக்கித் தொடர்ந்தது. எட்டு மணி நேர மலைவழிப் பயணத்தைக் கடந்து ஶ்ரீநகரை அடைந்தபோது மாலை வேளையாகியிருந்தது. பயண அசதி மிகுந்திருந்ததாலும், திடீரென்று வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டதாலும் அனைவரும் அன்றிரவு உணவருந்திவிட்டு வேகமாக உறங்கச் சென்றோம். திலகனும் அண்ணியும் முதல்தளத்திலும், நாங்கள் தரைத்தளத்திலும் தங்கினோம். அதிகாலை விடியும்போது அவர்கள் இருவருக்கும் தல் ஏரியும், பனிமலைச் சிகரங்களும் தெரியுமாறு Snow Peak View கிடைக்கும் அறையை ஏற்பாடு செய்திருந்தோம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

மறுநாள் அதிகாலை சூரியன் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தான். விடியல் மெல்லப் படர்ந்தது. எங்கள் அறையை யாரோ வேகமாகத் தட்டும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். உறக்கமும் குளிரும் போர்வையிலிருந்து வெளிவரவே முடியாதபடி செய்தன. கதவு தட்டும் சப்தம் அதிகரித்தது. ஒருவழியாக மனதிடத்தோடு கதவைத் திறந்தால் மறுபுறம் மாலதி அண்ணி காஞ்சிபுரத்து பட்டுச்சேலை உடுத்தி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்ப நின்றிருந்தார். அவருக்குப் பின்னே திலகன் அண்ணன் மிடுக்கான சட்டை, பேன்ட் அணிந்து நின்றிருந்தார். "அண்ணி உங்களுக்கு குளிரலையா?” என்றேன், உறக்கம் கலையாமல்.

``அட நீங்க மேல வாங்கப்பா, எங்க ரூம்லருந்து பனிமலை தெரியுது. கடல் மாதிரி ஏரி தெரியுது. நீங்க வாங்க” என்று எனது கையைப் பிடித்து இழுத்தார். "அண்ணி நீங்க பார்க்கணும்னு அந்த அறையை ரெடி பண்ணினதே நாங்கதான்" என்றதும் மாலதி அண்ணியின் முகத்தில் சிரிப்பு கண்ணீராகப் பெருக்கெடுத்தது. திலகனும் உள்ளம் நெகிழ்ந்தார். பல வருடங்களாக அவருக்கு நன்றி செலுத்த நினைத்தது அன்று நிகழ்ந்ததாக எனக்கும் நிறைவாக இருந்தது. நம்மை நமக்கே அடையாளம் காட்டுபவர்களை இறுகப் பற்றிக்கொள்வது வாழ்வில் அவசியமாகிறது.

தல் ஏரியின் ஹவுஸ் போட் படகு சவாரியில் மறுநாள் முழுதும் கழிந்தது. படகிலேயே தேநீர் தயாரித்து அருந்தினோம். சுற்றிலும் சிறு சிறு படகுகளில் வியாபாரிகள் மலர்கள் விற்றுக்கொண்டும், திண்பண்டங்கள் விற்றுக்கொண்டும் எங்களைச் சுற்றி வந்தனர். தல் ஏரி குறித்து பல கதைகள் கூறினார் எங்களுடன் வந்த படகோட்டி. டிசம்பர் மாதத்தில் தல் ஏரி முழுவதும் பனியாக உறைந்துவிடுமாம். `அப்போது நாங்கள் பனிப்பலகைகள் மீது நடந்துசெல்வோம். பனித்தகடுகளை உடைத்து கீழிருக்கும் நீரில் மீன்பிடிப்பது எங்களது பொழுதுபோக்கு’ என்றார்.

காஷ்மீரை ஏன் அனைவரும் சொந்தம் கொண்டாட எண்ணுகின்றனர் என்பதற்கான காரணம் அங்கு சென்று வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

மூன்றாம் நாள் முற்பகல் வேளையில் முகலாயர்களின் தோட்டக்கலை மற்றும் நீர் மேலாண்மையின் மகுடமென அறியப்படும் ஷாலிமார் தோட்டத்தைச் சென்றடைந்தோம். திலகனும் மாலதி அண்ணியும் குதூகலத்தில் குழந்தைகளாக மாறிப்போயிருந்தனர். மாலதி அண்ணி பட்டுப்புடவை மட்டுமே அணிந்தார். தமிழ் மணம் கமழும் முகம் அவருக்கு. துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கிய தோட்டத்தின் நடுவே அவரை நிற்கவைத்து படமெடுத்தபோது அவரே வானவில் வண்ண துலிப் மலர்போல் தெரிந்தார். திலகன் மெதுவாக என்னருகே வந்து "அவளை நான் படமெடுக்கிறேன், கேமராவைக் கொடு பாப்பா" என்றார். மாலதி அண்ணியின் முகத்தில் நாணம் படர்ந்து பூத்துக் குலுங்கியது. அவரால் கேமராவைப் பார்க்கவே முடியவில்லை. கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு சிரித்தார். திலகன் விடாமல் அவரை படமெடுத்தார். அவர்களிருவரின் காதல் கனிவில் துலிப் தோட்டத்தின் அழகு அன்று பன்மடங்கு கூடியிருந்தது.

அன்றிரவு உணவு முடித்த பிறகு அனைவரும் விடுதியின் வளாகத்தில் விறகுகளுக்குத் தீ மூட்டி குளிர்காய்ந்து அமர்ந்திருந்தோம். பேச்சும் பாட்டுமாக களைகட்டியது அவ்விரவு. பேசுவதையே பெரும் சிரமமாகக் கருதிய திலகன் அண்ணனை அன்று பாடல் பாடுமாறு வற்புறுத்தினேன். முதலில் சிறிது தடுமாறினார். பின் ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின்னர் " அல்லிக் கொடியே உந்தன் முல்லை இதழும் தேனாறுபோல பொங்கி வர வேண்டும்..அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் என்னை அள்ளிச்சூடிக்கொண்டு விட வேண்டும்... மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்..." என்று பாடினார். அவருடைய குரலின் இனிமை எங்களனைவரையும் வியப்பிலாழ்த்தியது. மாலதி அண்ணி தலை நிமிரவேயில்லை. அவர் நாணம் சூடியிருந்தார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

குல்மார்க் சோனாமார்க் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதாகத் திட்டமிட்டு, மறுநாள் காலையில் ஹோட்டல் அறைகளை காலி செய்துகொண்டு கிளம்பினோம். குல்மார்க் பனிமலைகளை வசந்தகாலத்தின் கதிர்க் கீற்றுகள் பொன்மலையாக மின்னச்செய்தன. வெண்பனிப் பரவலைப் பார்த்ததும் அனைவரும் மனதால் குழந்தைகளாகிப் போனோம். பனிக்கட்டிகளை உருட்டி, பந்துகளாகச் செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினோம். மாலதி அண்ணியின் வெள்ளந்தியான பேச்சு எங்களுக்கு வழிகாட்டிய ஆண்களையெல்லாம் வெகுவாக ஈர்த்தது. அவர்கள் எங்களுக்கு தேநீர் தயாரித்துத் தந்தனர், முட்டைகள் அவித்துத் தந்தனர்.

திடீரென்று மாலதி அண்ணிக்கு ஏதோ யோசனை தட்டியதுபோல் என்னை அருகில் இழுத்து முணுமுணுத்தார்... "யப்பா சாலினி, இவனுகள்ல யாரும் தீவிரவாதியா இருக்க மாட்டானுவளே?"

நான், "இருந்தா என்ன அண்ணி, நம்ம ரெண்டு பேரையும் கடத்திட்டுப் போவாங்க அவ்ளோதானே? எவ்ளோ நாள்தான் கறுப்பனுங்களோடவே வாழுறது, இந்த வெள்ளக்காரனுகளோடவும் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்பமே" என்று கூறினேன். "அடிப்பாவி மவளே, என்ன பேச்சு பேசுற" என்று செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளினார்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

நாங்களிருவரும் பேசிக்கொண்டிருந்தபோதே ஒரு காஷ்மீரி இளைஞர் வண்ணக் கண்ணாடி அணிந்துகொண்டு எங்களை நோக்கி வந்தார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் `ரோஜா’ திரைப்படத்தில் வரும் தீவிரவாதிபோல் அழகாகவும் ஆபத்தானவராகவும் தெரிந்தார். மாலதி அண்ணி வேகமாக என்னை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார். அவ்விளைஞர் விடாமல் எங்களைப் பின்தொடர்ந்து வந்து தனது கடையின் பெயரட்டையைத் தந்துவிட்டுச் சென்றார். `Moonstar Kashmiri Kahwah’ என்று அதில் எழுதியிருந்தது.

காஹ்வாஹ் என்பது ஒரு வகை தேநீர். தால்சினி எனப்படும் பட்டையுடன் சிறிது குங்குமப்பூவும், ஏலமும், பாதாம் பருப்பும், வால்நட் பருப்பும் கலந்து கொதிக்கவைத்துத் தயாரிக்கப்படும் தேநீர் அது. அதன் சுவையும் மணமும் மனதை ஆற்றுப்படுத்தி, ஆழ்ந்த அமைதியை மனதில் விதைத்தது. நான் கூட்டதிலிருந்து விலகிச் சென்றேன். எனக்கான தனிமையை தேடிக்கொள்வதில் நான் எப்போதும் கவனமாயிருப்பதுண்டு.

மாலைச்சூரியன் சிகரங்களில் மாய விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தான். நான் மேற்கே பார்த்து வெகு நேரம் நின்றுகொண்டிருந்தேன். தொடக்கங்கள் போல் முடிவுகளும் அழகானவையே என்பதற்கு சூரிய அஸ்தமனமே சான்று என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

எங்களது பயணமும் அன்றுடன் முடிவடைந்து அனைவரும் ஜம்மு திரும்பினோம். இனம் புரியாததோர் அமைதி அனைவரின் மனதையும் ஆட்கொண்டிருந்தது. அது பயணம் தந்த நிறைவா அல்லது எதிர்நோக்கியிருக்கும் பிரிவின் வெறுமையா என்று புரியாமல் அனைவரும் தத்தமது வேலைகளில் ஈடுபட்டிருந்தோம்.

ரயில் நிலையத்தில் திலகன் அண்ணனுக்கும், மாலதி அண்ணிக்கும் விடையளிக்கும்போது நான் மகிழ்ந்தேன். மாலதி அண்ணியும் நானும் கட்டித் தழுவி கண்ணீர்மல்க விடையளித்துக்கொண்டோம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

"அப்படியென்ன செய்து விட்டேன் நானுனக்கு, இவ்வளவு அன்புக்கு நான் பாத்திரமானவன்தானா..." என்பதுபோல் திலகன் என்னைப் பார்த்துக்கொண்டே ரயிலேறினார்.

அன்பை உணர்த்தியவர்களுக்கு அன்பால் மட்டுமே நன்றி தெரிவிக்க முடியும். சொற்களுக்கும் கண்ணீருக்கும் அங்கு வேலையில்லை. வாழ்வில் ஒருமுறை அவர் எனக்கு அன்பை உணர்த்தினார். நான் அன்பால் அவருக்கு மறுமொழி கூறினேன்.

"பாப்பா, வீட்டுக்கா வா" என்று தலையில் வருடிவிட்டுச் சென்றார் திலகன் அண்ணன்.

வாழ்வின் ஆழங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்..!