Published:Updated:

ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேஷியா| கிராமத்தானின் பயணம் - 24

Singapore
News
Singapore

இறகுப் பந்தாட்டம் ஆடலாம் என்று ஆரம்பித்த பத்து நிமிடத்தில், ஓர் உத்வேகத்தில் எம்பி அடிக்க முயல, முட்டியில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம். எனக்கு ஒன்று நன்றாக உணரமுடிந்தது, இது ஏதோ பெரிய பிரச்னை என்று.

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-23 படிக்காதவர்கள் படிக்கலாம்.)

இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது 5 - 6 வாரம் வரை தாக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். எதிர்பார்த்ததை விட 20 வாரத்திற்கு மேல் தாண்டி வந்தாகிவிட்டது. மறக்கவே முடியாத நான் பிறந்த வரக்கால்பட்டை பற்றி சொல்லிவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்கா மற்றும் கனடா பற்றி விரிவாக சொல்லிவிட்டேன். வாழ்ந்த ஈரான், போலந்து மற்றும் வாழுகின்ற துபாய் பற்றியும் பார்த்தாகிவிட்டது. அப்புறம் அந்த ஐக்கிய ராஜ்யம் (UK), அயர்லாந்து, துருக்கி, ஜோர்டான், ஈராக், பாகிஸ்தான், ஓமான், சவூதி, இத்தாலி பற்றி ஓரளவுக்கு சொல்லிவிட்டேன். ஆனால் இன்னும் நிறைய நாடுகள், நிறைய அனுபவங்கள். எழுதினால் இன்னும் 10-15 வாரம் போகும். ஆனால் வேண்டாம்.

சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் வரக்கால்பட்டில் ஒரு சுற்று சுற்றுவோம். அதற்கப்புறம், நானும் என் புதிய பயணங்களை ஆரம்பிக்க வேண்டும். 2022 பயணங்களுக்கு ஏதுவாக அமையும் என்று நம்புகிறேன். முக்கியமாக செர்பியா 2021லிருந்து சில முறை தள்ளிப்போட்டாகிவிட்டது.

காரணம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. சென்ற ஆகஸ்ட் மாதம் செல்வதற்கு எல்லா ஏற்பாடும் செய்து எதிர்பார்த்திருந்தோம். ஜூலை மாதம் ஒரு நாள் இறகுப் பந்தாட்டம் ஆடலாம் என்று ஆரம்பித்த 10 நிமிடத்தில், ஒரு உத்வேகத்தில் எம்பி அடிக்க முயல, முட்டியில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம். உள்ளுணர்வு சொல்லியது ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று. ஓரமாக அமர்ந்து சற்று நேரத்தில் சரியாகிவிட்டமாதிரி தோன்ற, மீண்டும் சாதாரணமாக அடிக்க முயல, இந்த முறை முட்டி ஒரு பிடிப்பே இல்லாமல் இங்கேயும் அங்கேயும் ஆடியது. எனக்கு ஒன்று நன்றாக உணரமுடிந்தது, இது ஏதோ பெரிய பிரச்னை என்று. விளையாடும் இடத்திலிருந்து வாகனத்திற்கு நடப்பது சிரமமாகப்பட்டது. நல்ல வேலை, மனைவியும் கூடவே இருந்ததால், உடனே மருத்துவமனைக்கு. மருத்துவர் சோதனை மற்றும் எம் ஆர் ஐ (MRI) செய்து தசை நார் (ligament, partial tear) அறுந்துவிட்டதாகவும், 3-4 மாதம் ஓய்விலிருந்து காலுக்கு பயிர்ச்சி அளித்து மீண்டும் ஏறக்குறைய சுமூக நிலைக்கு திரும்ப முடியும் என்று வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். நல்ல வேலை காலுக்கு வந்தது முட்டியோடு போயிற்று. முதல் வேலை செர்பியா பயணத்திட்டங்களை மாற்றினோம். அக்டோபர் செல்ல முடியும் என்று நினைத்து பின்னர் கோவிட் பயத்தால் மீண்டும் தள்ளிப்போட்டு இப்போது ஏப்ரல் 22-ல் செல்ல திட்டம். சென்று வந்த பிறகு அதைப்பற்றி எழுதலாம். இடையில் வேறு சில பயணங்கள் திட்டத்தில் உள்ளன.

Australia
Australia

ஆஸ்திரேலியா

இந்த 2021 ஜூலை மாதம் ஏற்பட்ட இந்த விபத்து, வலது முட்டியில். சரியாக 21 வருடங்களுக்கு முன், 2000, ஜூலை மாதம் ஆஸ்திரேலியா சென்றோம். குழந்தைகள் மிகவும் குட்டிகள். நானும் இளைஞன். நிறைய தொலைநோக்கு திட்டங்கள். ஆஸ்திரேலியா குடியேறுவது அதில் ஒன்று. சும்மா முடிவெடுக்க முடியுமா? போய் ஒரு எட்டு பார்த்து முடிவெடுப்போம் என மெல்போன் (Melbourne) சென்றோம். நீண்ட பயணம். துபாய் - சிங்கப்பூர். பின்னர் சிங்கப்பூர் - மெல்போன். எமிரேட்ஸ்தான். விடுதியில் ஓய்வெடுத்து அடுத்த நாள் முதல் நிறுத்தம் மெல்போன் விலங்கியல் பூங்கா (Zoo). குடும்பம் நல்ல விடுமுறையை எதிர் நோக்கி இருக்க, நான் மிக சாதாரணமாக ஒரு சிறிய (1 அடிக்கும் குறைவே) வேலியை தாண்ட காலை தூக்கி அந்த பக்கம் வைக்க அடுத்த நிமிடம், கீழே கிடந்தேன். என்ன காரணம் என எனக்கும் என் குடும்பத்துக்கும் தெரியவில்லை. சரி எழும்பலாம் என முயற்சிக்க, இடது காலை மடக்க முடியவில்லை.

கால் சட்டையை சற்றே உயர்த்தி பார்க்க என் கால் தொடைக்கும் கீழ் பகுதிக்கும் தொடர்பே இல்லாது மாதிரி கீழ் பகுதி L வடிவில் வளைந்து கிடந்தது. முட்டியின் மேல் இருக்க வேண்டிய சிறிய எலும்பு (Knee Cap) இடம் மாறி பக்கவாட்டில் சரிந்து கிடந்தது. எங்கிருந்து எனக்கு உத்தரவு வந்தது என்று தெரியவில்லை. என் கை தன்னிச்சையாக அந்த சிறிய எலும்பை (Knee Cap) அதனுடைய இடத்திற்க்கு நகர்த்த ஒரு கிளிக் சத்தத்துடன் அந்த எலும்பு இடத்தில் அமர்ந்தது. உடனே எழும்ப முயற்ச்சித்து வெற்றி பெற்று நிற்க, அனைவரின் முகத்திலும் கவலை. நான் எல்லாம் சரியாகிவிட்டது, எதற்கும் மருத்துவமனை செல்லலாம் என்று செல்ல, அவசர சிகிச்சையில் பார்த்து எலும்பு நிபுணரிடம் அனுப்ப அவர் நான் மருத்துவரா என கேட்டார். இல்லையென்று சொல்ல, நீ செய்த காரியம் மிகவும் சமயோசிதமானது. மிகவும் தாமதமாகியிருந்தால், உள்ளேயே நிறைய இரத்தம் கசிந்து சில கூடுதல் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். எதுவாகினும், இப்போதைக்கு பயம் ஒன்றும் இல்லை. நடப்பதற்கு "ஊன்று கோல்" கொடுக்கிறேன். மெல்போன் சுற்றிப்பார்த்து பின் துபாய் சென்று சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். பூரண குணமடைய ஒரு தடையும் இல்லை என உறுதி அளித்தார், அந்த பெண் மருத்துவர். எல்லாம் முடிந்து நான் மருத்துவ செலவைப்பற்றி எங்கே செலுத்துவது என கேட்க, முற்றிலும் இலவசம், இது இங்கே உள்ள முறை என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நன்றி சொல்லி, அடுத்த நாள் முதல் "ஊன்று கோலை" வைத்துக்கொண்டு ஊரை சுற்றி வந்தோம். ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது அந்த ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் பேசுவது பாதி புரியாது, எனக்கு. மெல்போனில் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு, முதல் நாள் வெளியே செல்ல நினைத்து ஒருவரை அணுகி எங்கே பேருந்து கிடைக்கும் என்று கேட்க அவர் முதலில் "சகல்லக்கா" சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடித்து செல்லவேண்டும் என்றார். என்னடா இது பெயர் ஒரு மாதிரியாக உள்ளதே என்று புரியாமல் விழிக்க அந்த பெயர் பலகை என் கண்ணில் பட்டது. அதில் "சர்குலர் க்வெ" (Cricular Quay) என்று போட்டிருந்தது. சரிதான் இந்த ஆஸ்திரேலியன் ஆங்கில உச்சரிப்பு சற்றே வித்தியாசம்தான் என்று புரிந்தது. அதற்கப்புறம் ஒரு முறைக்கு இரு முறை கேட்டு புரிந்துகொண்டு சுற்றிவந்தோம்.

ஒரு நாள் 90 கிமீ தொலைவில் உள்ள "பிலிப் தீவு" (Philip Island) சென்று அங்குள்ள பென்குயின்கள் அணிவகுப்பை பார்த்தோம். மிக சிறிய அளவிலே ஆன அந்த பென்குயின்கள், அந்தி சாயும் வேலை, உணவு தேடலை முடித்து தங்கள் வீடுகளுக்கு செல்லும் அணிவகுப்பை பார்க்க நான்றாக இருந்தது. ஆண் பென்குயின்கள் தங்களுக்கு என்று தனி வீடு வைத்துக்கொண்டு துணையை தேடுமாம். துணை கிடைத்தவுடன் இனவிருத்தியில் ஈடுபடுவார்களாம். அந்த இனவிருத்தி காலம் மற்றும் முட்டை இட்டு அடைகாக்கும் காலம் பூராவும் சின்ன வீடு என்ற பேச்சுக்கே இடமில்லையாம். அதற்கப்புறம் "ஏக பத்தினி விரதம்" கைவிடப்படும். மற்றபடி விடுதியை சுற்றி உள்ள இடங்களும் ஒரு பூங்காவும் சென்று வந்தோம். புகழ் பெற்ற கங்காரு மற்றும் "கோலா" கரடிகளை மிக அருகில் சென்று பார்த்தோம்.

எல்லாம் பார்த்து, சரி, ஆஸ்திரேலியா குடியேறலாம் என்று முடிவு செய்து பின்னர் செலவு செய்து "குடியுரிமை" வாங்கி அடுத்த வருடம், சிட்னி சென்று வந்தோம். அந்த ஒபேரா (Opera House) கட்டிடம் மற்றும் ஹார்பர் பாலம் (Harbour Bridge) பார்த்தோம்.

சிட்னி சென்ற பிறகு என் நண்பர் ஒருவர் அவருடைய நண்பரை பார்க்க சொல்ல, நாங்கள் அவர் வீட்டுக்கு சென்றோம். பேச்சு வாக்கில் எங்கே தங்கியிருக்கீர்கள் என்று கேட்க, நாங்கள் சொன்னோம். அதற்கு அவர் அந்த இடம் மிகவும் குற்றங்கள் நிறைந்த இடம் என்றும், ஆஸ்திரேலியர்கள் அந்த இடத்துக்கு அதிகமாக செல்ல மாட்டார்கள் என்று சொன்னார். முக்கியமாக, போதை வஸ்துக்களுக்கு அடிமையான பழங்குடியினர் (Aborigines) அங்கு இருப்பதாகவும் அடிக்கடி வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் சொன்னார். நல்ல வேளை நாங்கள் அடுத்த நாள் கிளம்பிவிட்டோம்.

Australia
Australia

ஆஸ்திரேலியாவின் சரித்திரம் சற்று சுவாரஸ்யமானது. ஏறக்குறைய 65,000 வருடங்களாக "பூர்வகுடியினர்" (Aborigines) வாழும் பூமி. ஆனால் 1700 போல் நெதெர்லாந்துக்காரர்கள் காலெடுத்து வைத்து "நியூ ஹொலண்ட்" (New Holland) என்று பெயரிட்டு குடியேற ஆரம்பிக்க 60-70 வருடங்கள் கழித்து அப்போது ஊரிலியே பெரிய "அபகரிப்பு" கும்பலான ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறினர். அதே சமயம், அந்த பெரிய தீவு "குற்றவாளிகளை" தனிமைப்படுத்த சிறந்த இடம் என்று கருதி, குற்றவாளிகளை அங்கே தொடர்ந்து குடியேற்ற ஆஸ்திரேலியா ஒருவாறாக உருவாயிற்று. வந்து இறங்கிய உடன் முதல் வேலை, பூர்வக்குடியை மொழி மற்றும் கலாச்சார மாற்றம் மூலம் அழிக்க முயன்றது. மற்ற ஆஸ்திரேலியர்களை ஒப்பிடும்போது பூர்வக்குடி மக்களிடையே குற்றங்கள், போதைப்பழக்கங்கள் மற்றும் தற்கொலைகள் மிக அதிகமாக உள்ளன.

மிக நீண்ட நாட்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பில் இருந்து 1901 இல் ஆஸ்திரேலியா சுதந்திர நாடாகியது. இன்று மிகவும் முன்னேறிய நாடு. பெரிய நிலப்பரப்பாகினும் (இந்தியாவை விட இரு மடங்கு பெரியது) மக்கள் தொகை 3 கோடிக்கும் கீழே. நிறைய மற்ற நாட்டிலிருந்து குடியேறியவர்கள் (கிரீஸ், சீனா, லெபனான், இந்தியா, பாக்கிஸ்தான் என் பல நாட்டினரும்) வாழும் நாடு. எல்லா நகரங்களும் / மக்களும் நாட்டின் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில்தான். உட்புறம் பெரும்பாலும் வாழ்வதற்கு ஏதில்லாத பாலைவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடப்பது நம் திட்டப்படி இல்லையெனினும் அதை ஏற்றுக்கொண்டு அதன் ஊடே மிகச் சிறந்த விளைவுகளை அடைவதே நாம் செய்யக்கூடியது.

ஒரு கட்டத்தில், அங்கே சென்று குடியேறவேண்டாம் என்று முடிவு செய்து துபாயிலே தொடர்ந்து பின்னர் கனடா குடியுரிமை வாங்கி அதையும் திருப்பியது வேறு கதை. ஒன்று மட்டும் நிதர்சனம். நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் நடப்பது நடக்கும். அதற்காக திட்டமிடல் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடப்பது நம் திட்டப்படி இல்லையெனினும் அதை ஏற்றுக்கொண்டு அதன் ஊடே மிகச் சிறந்த விளைவுகளை அடைவதே நாம் செய்யக்கூடியது. என் வியாக்கியானம் எல்லோருக்கும் சரிப்படும் என்று சொல்ல முடியாது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்பது நான் 4-5 வயதிலிருந்தே எனக்கு பரிச்சயப்பட்ட ஊர். ஏனெனில் வரக்கால்பட்டின் (எங்கள் ஊரில்) ஒரே "முடி திருத்தும்" குடும்பத்தின் தலைவர் பெயரே "சிங்கப்பூரான்". உண்மை பெயர் தெரியாது. முடி வெட்ட வேண்டுமா? சிங்கப்பூரானை கூப்பிடு. கை குழந்தைக்கு குளிப்பாட்ட வேண்டுமா "சிங்கப்பூரான்" அம்மாவை கூப்பிடு. நல்ல காரியங்களுக்கு நாதஸ்வரம், மேளம் வேண்டுமா, சிங்கப்பூரான் அண்ணனை கூப்பிடு என்று எங்கள் கிராமத்தின் இன்றியமையா ஆள் "சிங்கப்பூரான்". கடைத்தெருவில் ஒரு "முடி திருத்தும் நிலையம்" வைத்திருந்தார். நாங்கள் "ஹோம் சர்வீஸ்" தான். ஓரிரு முறை அந்த கடைக்கு சென்றிருக்கிறேன். கூரை வேய்ந்த சிறிய இடம். அதில் அந்த சுழலும் நாற்காலி. சிவப்பு நிற இருக்கை. (Cushion). சற்றே பெரிய கண்ணாடி. ஒரு நீண்ட கண்ணாடி பாட்டில். அதனுள் இருந்து வினோதமான வடிவில் ஒரு குழாய். அதன் வளைவில் அவர் விரல் விட்டு அழுத்த சில்லென்று தண்ணீர் முகத்தில் அடிக்கும். அப்புறம் அந்த "வெட்டும் சாதனம்", கத்தி, தீட்ட ஒரு கல் மற்றும் தோலால் ஆன பட்டை. 4-5 வண்ண சீப்புக்கள். சுவர் முழுவதும் வண்ண வண்ண "காலெண்டர்கள்". எம்ஜியார் தான் பிரதானம். அப்புறம் சட்டம் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள், அந்த கால அரசியல்வாதிகளுடன் சிங்கப்பூரான் எடுத்துக்கொண்டது.

பார்த்தீர்களா, எவ்வளவு நெருக்கம், எனக்கும் சிங்கப்பூருக்கும். பின்னர், துபாய் வந்த சில வருடங்களில் எமிரேட்ஸ் சலுகை விலை பயணம் ஆசை காட்ட குழந்தைகள் 5 மற்றும் 3 வயதில் இருந்தபோதும் அவர்கள் பெயரை வைத்து, 1995-ல் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் சென்று வந்தோம்.

அவர்கள் இருவருக்கும் ஒன்றும் ஞாபகம் இல்லை. செண்டோசா தீவில் நிறைய கேளிக்கைகள் இருந்தும் சின்ன பெண் 3 வயது கூட நிரம்பாததால் எல்லாம் வேடிக்கை மட்டுமே. ஆனால், அந்த சிங்கப்பூர் சுத்தம், ஒழுங்கு முறை மற்றும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் உண்மையில் அசத்தின. அப்போதுதான் துபாய் மெதுவாக வளர்ந்து கொண்டு வந்தது. மற்றுமொரு மறக்க முடியாத இடம், முஸ்தபா கடை. கடை அல்ல கடல் என்று சொல்லுவார்கள். அந்த மாதிரி ஒரு கடல். அங்கே சற்று ஷாப்பிங் செய்து பக்கத்திலியே "கோமள விலாஸ்" உணவகத்தில், வாழை இல்லை சாப்பாடு, நெய்யோடு. மகள்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். முஸ்தபாவும் கோமள விலாஸும் இருக்கும் இடம் செரங்கூன் சாலை 'லிட்டில் இந்தியா' என்றழைக்கப்படும் இடத்தில் அடங்கும். நிறைய இந்திய கடைகள், இந்திய மக்கள், இந்திய வாசனை என கிறங்கடிக்கும். போதாதற்கு அங்கேயே வீரமாகாளியம்மன் கோவிலும் உண்டு.

எல்லோரும் பார்க்க சொல்லும் 'ஆர்ச்சட் ரோடு' என்ற வணிக ஏரியா. நிறைய கடைகள், வணிக வளாகங்கள். உண்ணுமிடங்கள். எல்லாம் பார்த்தோம். கூடவே எங்கள் மகள்களின் புரியாத எதிர்பார்ப்புகள், சிணுங்கல்கள், அழுகைகள் எல்லாம் சமாளித்தோம்!

முஸ்தபாவும் கோமள விலாஸும் இருக்கும் இடம் செரங்கூன் சாலை 'லிட்டில் இந்தியா' என்றழைக்கப்படும் இடத்தில் அடங்கும். நிறைய இந்திய கடைகள், இந்திய மக்கள், இந்திய வாசனை என கிறங்கடிக்கும்.

அதற்கப்புறம் நான் சில முறை சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறேன். வேலை நிமித்தம். ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் இன்னும் மேலே மேலே என்று மெருகு ஏறிக்கொண்டே போகிறது.

ஹாங்காங்

1992-ம் வருடம். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் குறுகிய காலத்தில் ஓரளவுக்கு நல்ல பெயர் வாங்கி மேலாளர் என்னை "ஹாங்காங்" சென்று வர பரிந்துரைத்தார். எனக்கு தலை கால் புரியவில்லை, "ஃபாரின்" போகப்போகிறேன். இருப்பது “ஃபாரின்" தான் என உதிக்கவில்லை. முகவர் முன்பே சென்றுவிட நான் 3-4 நாட்கள் கழித்து சென்றேன். "ஓ மை காட்" (Oh My God) தான்.

முதலில் விமானம் ஏறி அமர்ந்த பிறகு, நான் "ஹாங்காங்" விமானத்தில்தான் அமர்ந்தேனா இல்லை வேற ஊருக்கு போகிற விமானமா என்ற பயம். தேவை இல்லைதான். இருந்தாலும், முதல் முறை. அப்புறம் அங்கிருந்து "நியூ வேர்ல்ட் ஹார்பர் வியூ" என்ற 5 ஸ்டார் விடுதி. மயக்கமே வந்தது. உள்ளேயே தவழும் நறுமணம், அழகான பணியாளர்கள், பளிங்குக்கற்கள் வானைத் தொட்டுக்கொண்டு. அப்போதே முடிவு பண்ணினேன். குடும்பம் பார்க்கவேண்டும் என்று. அதன்படியே, 1995இல் சிங்கப்பூர் முடித்து ஹாங்காங் சென்றோம். அங்குள்ள் "ஓஷியன் பார்க்" (Ocean Park) தண்ணீர் பூங்கா பார்த்தே ஆகவேண்டிய ஒரு இடம். சென்று பார்த்தோம். துரதிஷ்டவசமாக மழையின் காரணம் பூங்காவின் பெரும்பகுதி பார்க்க முடியவில்லை. இருந்தும், என் மனைவிக்கும் சிங்கப்பூர்/ஹாங்காங்தான் முதல் பயணம், துபாயில் இருந்து.

உண்மையில், பெரிய வணிக வளாகங்கள் (Malls) நான் முதல் முதல் பார்த்தது கவ்லூன், ஹாங்காங்கில்தான். கவ்லூன் பகுதி மிக நெரிசலான இடம். அவ்வளவு மக்கள். அவ்வளவு வானுயர கட்டிடங்கள். அப்போதே, ஒவ்வொரு கட்டிடங்களை அடுத்த கட்டிடத்துடன் ஒரு பாலம் போல போட்டு இணைத்திருப்பார்கள். சாலை தவிர்த்து கட்டிடங்கள் மூலமாகவே கடக்க முடியும். "கோயில் தெரு" (Temple Street) என்ற சாலை சைனீஸ் உணவுக்கு பெயர் போனது.

நானும் நிறைய முறை சைனீஸ் அல்லது ஜப்பனீஸ் உணவகங்களில் முயற்சித்திருக்கிறேன். கடைசியில் "ஒரு ஸ்பூன் குடுங்க" என்று வாங்கி குச்சிகளை ஓரம் வைத்துவிடுவேன்.

ஹாங்காங் மிக செலவீனமான ஊர். மக்களும் கடுமையாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் அடித்து பிடித்து ரயிலில் பயணம் செய்து அலுவலகத்தில் 7-8 வரை வேலை செய்து சிறிய பெட்டி போன்ற வீட்டிற்குள் அடங்கவேண்டும். இதில் சமைக்க நேரம் எங்கே? எனவே நிறைய குடும்பங்கள் வார நாட்களில் சமைப்பது இல்லை என்று என் சக ஊழியர் சொல்வார். குடும்பமே விலை மலிவான உணவகங்களில் உணவை முடித்து வீடு செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த "கோயில் தெரு" உணவகங்களில் மக்கள் வழிவார்கள்.

ஒவ்வொரு மேஜை மீதும் ஒரு பெரிய சட்டி மாதிரியான பாத்திரம். கீழ் ஒரு சிறிய அடுப்பு போன்ற ஒன்றை வைத்து அந்த சூடு பறக்கும் சட்டியில் இருந்து மீனோ, ஏறாவோ, நண்டோ ஒவ்வொருவரும் எடுத்து சாப்பிடுவார்கள். அப்புறம் ஒரு சிறிய கோப்பையில் சாதம். அந்த இரண்டு குச்சிகளை வைத்து கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று சாதத்தை உள் தள்ளுவார்கள். நானும் நிறைய முறை சைனீஸ் அல்லது ஜப்பனீஸ் உணவகங்களில் முயற்சித்திருக்கிறேன். கடைசியில் "ஒரு ஸ்பூன் குடுங்க" என்று வாங்கி குச்சிகளை ஓரம் வைத்துவிடுவேன்.

அந்த ஊரில், ஷாப்பிங், பேருந்து பயணம் மற்றும் சுற்றுலா ரயில் பயணம் என சுற்றி அனுபவித்தோம். ஆனால் பாருங்கள் குழந்தைகளுக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை. எனக்கும் இன்னொரு முறை சென்று வரவேண்டும் என்ற ஆவல் உள்ளது. பார்க்காத இடங்களை பார்த்து நேரம் இருந்தால் பார்க்கலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது அடுத்த ஜென்மம்.

மலேசியா

மலேசியா சென்றது வேலை நிமித்தமாக மட்டுமே. அதிகம் சுற்றியதில்லை. மனைவி அவர்களின் ஸ்நேகிதிகளுடன் "மகளிர் மட்டும்" சுற்றுலா சென்று வந்தார். நான் அவ்வளவு தூரம் சென்றதால் குறைந்தபட்சம் "ட்வின் டவர்ஸ்" மட்டும் பார்க்கலாம் என்று பார்த்து வந்தேன். மலேசியாவில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த பச்சை பசேல், எங்கு காணினும். மிகவும் பிடிக்காதது டூரியன் பழம். பார்க்க பலாப்பழம் மாதிரி இருந்தாலும் சுவை மற்றும் மணம்.....வேண்டாம். எல்லா டூரியன் பழத்தையும் அவர்களே சாப்பிடட்டும்.

ஒரு முறை அண்ணன் பணி புரிந்த "மிர்ரி" என்ற ஊருக்கு சென்று வந்தேன். மிர்ரி இன்னும் சற்று அதிகம் பச்சை பசேல், காரணம் அது ஏறக்குறைய காட்டினுள் அமைந்த ஊர்.

2022 இல் மலேஷியா செல்ல வேண்டும். அண்ணன் இப்போதும் மலேசியாவில். அழைத்துக்கொண்டிருக்கிறார். சுற்றிபார்க்கவேண்டும். பின்னர் முடிந்தால் விவரமாக எழுதவும் வேண்டும்.

Malaysia
Malaysia

அடுத்த வாரம் வரக்கால்பட்டை இன்னொரு முறை காட்டி சில பேரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு: இந்த பயணங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன். ஆகவே புகைப்படங்கள் தாளில்தான் உள்ளன. ஸ்கேன் செய்தால் சரி வராது. ஆகவே இணையத்தில் இருந்து சில புகைப்படங்களை இங்கே உபயோகித்திருக்கிறேன். அவை என் புகைப்படங்கள் அல்ல.

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)