கட்டுரைகள்
Published:Updated:

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 3

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை

அருவிகளின் ஆரவாரமும் நிலச்சரிவுகளின் அதகளமும்!

‘நாம ஒரு பிளான் பண்ணியிருப்போம்; ஆண்டவன் ஒரு பிளான் வெச்சிருப்பான்!’ – இது ட்ராவல் யோகி சொன்னது. இது பயணத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பொருந்தும் பாஸ். ‘என்னடா இது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ என்று உட்காராமல், சட்டுபுட்டுனு வண்டியைக் கிளப்ப வேண்டும். அவன்தான் உண்மையான வாண்டர்லஸ்ட் என்றும் சொல்கிறார் யோகி.

இதுவே பயணத்தைப் பொறுத்தவரை – இங்கே ஆண்டவன் என்று சொல்வது – இயற்கையை! பொதுவாக, உத்தரகாண்ட் என்றால், ஜோவென்ற மழை… அம்மாம்பெரிய சிவன் சிலையையே அடித்துப் போகிற வெள்ளப் பெருக்கு என்றுதான் நம் மனதில் பதிந்திருக்கும். உண்மையில் உத்தரகாண்ட் ஒரு ஆத்மார்த்த ஏரியா.

இது மழைக்காலமாக இருந்தாலும், நாம் நீலகண்டப் பெருமானை தரிசித்துவிட்டு மாலை கங்கை ஆரத்தி பார்க்கும்வரை மழை வரவில்லை. எல்லாம் சுமுகமாகவே, சூப்பராகவே முடிந்தது. ‘அடுத்து வரும் பயணங்களையும் இதேபோல் சிறப்பா முடிச்சுக் கொடுப்பா சிவபெருமானே’ என்று கங்கைக்கரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிவனிடம் வேண்டிவிட்டு, அடுத்த பயணமாக ‘கேதார்நாத்’ யாத்திரைக்குத் திட்டம் தீட்டினோம்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 3

மறுநாள் கார்த்திகேயா ஆசிரமத்தில் இருந்து அதிகாலையில் புறப்படத் தயாரானபோது ஆசிரம நிர்வாகிகள்், ‘போற வழில மழை, வெள்ளம், நிலச்சரிவு அங்கங்கே இருக்கு பார்த்து’ என்று எச்சரித்தார்கள்.

அதைக் கேட்டவுடன் மருது ப்ரோ, ‘ஐயா நாங்கெல்லாம் மதுரக்காரங்க… எங்களுக்கு வைகையில் வெள்ளம் வந்தாதான் திருவிழாவே! நாங்க பாக்காத மழையா… வெள்ளமா... ஸோ, டோன்ட் ஒர்ரி!’ என்று சவடாலாகச் சொல்ல, அந்த இடமே சிரிப்பில் கலகலப்பானது. எனக்கு மட்டும் ‘ரஜினிமுருகன்’ வாழைப்பழ காமெடிதான் ஞாபகத்துக்கு வந்தது. ‘ஒரு பழத்தைப் பிய்க்க முடியாமல், வாழைக்குலையையும் சரித்துக் கடையையே காலி செய்வானே மதுரைக்காரன், அவனாடா நீ’ என்று கேட்கத் தோன்றியது!

காரில் ஏறினோம். ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன், விவேக் அண்ணன் ‘வெற்றிவேல்’ என்று முழங்க, நாங்கள் ‘வீரவேல்’ என்று முழங்க, உற்சாகத்துடன் கேதார்நாத் பயணம் தொடங்கியது.

ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் சுமார் 250 கி.மீ. ஒருபுறம் கங்கை, மறுபுறம் இமயமலை... நடுவே சாலை. கண் இமைக்கக்கூட நேரமில்லை; இல்லை; பிடிக்கவில்லை.

சாலைகள் விசாலமாகத்தான் இருந்தன. ஆனாலும், எங்கள் வண்டி 30 கி.மீ வேகத்தைத் தாண்டவில்லை. மலைப்பகுதி என்பதால் சற்று நிதானமாகச் செல்வதாகவும், இங்கெல்லாம் ஓவர்ஸ்பீடு உடம்புக்கு நல்லதில்லை என்றும், ‘யஹாங் அக்ஸர் பூஸ்கலன் (நிலச்சரிவு) ஹோ ரஹா ஹேய்’ என்றும் எங்கள் டிரைவர் சொல்லி முடிக்கவில்லை... ஒரு நிலச்சரிவைக் கண்ணெதிரே பார்த்தோம். ஆசிரம நிர்வாகிகள் சொன்னது சரிதான்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 3

குட்டி பிரசன்னா லேசாக ஜெர்க் கொடுத்தான். இந்த திகிலிலும் அழகூட்டியது, அங்கு பாய்ந்து சென்ற அருவிகள்தான். கண்களை எந்தப் பக்கம் திருப்பினாலும், அங்கே ஓர் அருவி. பெரிய பிரசன்னாவும் சின்னப் பிரசன்னாவும் ஆளுக்கொரு ஜன்னல் சீட்டைப் பிடித்துக் கொண்டு, அருவிகளை ரசித்தபடியே வந்தனர். நானும் ரவியும், கொஞ்சம் பெரிய மனிதர்களாய் நடந்துகொண்டு அவர்களுக்கு அதை வழங்கியிருந்தோம்.

சரியாக இரண்டு மணி இருக்கும். 3 மலைகளுக்கு நடுவே 3 நதிகள்… ‘என்னடா இது இயற்கையின் விளையாட்டு’ என்று வியந்திருந்த வேளையில், அதன் பெயர் தேவப்பிரயாக் என்றார்கள்.

தேவப்பிரயாக் என்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில், ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இமயமலையில் உற்பத்தியாகும் அலக்நந்தா ஆறும், பாகீரதி ஆறும் இவ்வூரில் ஒன்றாகக் கூடி, கங்கை ஆறு என்னும் பெயர் கொள்கிறதாகச் சொல்கிறார்கள். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்று என்கிறார்கள்.

அதிகாலையிலேயே கிளம்பிவிட்டதால், யாரும் சாப்பிட்டிருக்கவில்லை. எந்த நேரத்தில் எதைக் கொடுத்தாலும் ராவுகாலம் பார்க்காமல் வெளுத்துக்கட்டும் கூட்டம் எங்களுடையது. ஆனால் நதி… அருவி… இமயமலை என்று கேதார்நாத் எங்களைச் சாப்பாட்டையே புறம் தள்ளச் செய்திருந்தது. ஆனாலும் ‘எங்களுக்கும் பசிக்கும்ல’ என்று வயிற்றைத் தடவினார்கள் நண்பர்கள்.

‘ஏண்டா முட்டாப்பசங்களா; இந்த மாதிரி இடத்தில் கிடைத்ததைச் சாப்பிடுவதும் ஒரு சுகம்தானே’ என்று நீங்கள் திட்டுவதும் கேட்கிறது. உண்மைதான்; நாங்கள் சாப்பிடாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. வழியில் எங்கேயுமே ஹோட்டல் இல்லை (அவ்வ்!).

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 3

இனிமே என்ன… நேரடியாக மதிய உணவுதான். ‘‘பூக் லக் ரஹிஹே!’’ டிரைவர் பையாவாகப் பார்த்து ஓர் உணவகத்தில் இறக்கிவிட்டார். அது தில்வாரா என்றொரு மலைக் கிராமம். ‘யாரி கஃபே’ என்று இருந்தது. மலைச்சரிவின் ஓரத்தில் அந்த கஃபே அமைந்திருந்த விதமே அழகு! கிடைத்ததைத் தின்றுவிட்டு ஏப்பம் விட்டபடி, ஒரு போட்டோ ஷூட். மறுபடி வண்டியேறினோம்.

சாலை நன்றாகத்தான் இருந்தது. அதே ‘தீரே தீரே’ டிரைவிங். நிலச்சரிவு இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே வந்தோம். லேசாக இருட்டியேவிட்டது. 7.30 இருக்குமோ என்று நினைத்தேன். ஆறைத்தான் நெருங்கியிருந்தது கடிகாரம். இன்னும் 4 கி.மீ மட்டுமே இருப்பதாகச் சொன்னார் டிரைவர். ஆனால் வண்டியை நிறுத்திவிட்டிருந்தார். அப்புறம்தான் தெரிந்தது – அங்கே தங்கல் என்று. கேதார்நாத் அருகே தங்கும் இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்பதால், 4 கி.மீ–க்கு முன்பாகவே தங்கல். மறுநாள் காலையில் கேதார்நாத் பயணத்தைத் தொடங்குவதாகத் திட்டம்.

கேதார்நாத் ஆலயத்துக்கு அடிவாரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் நடைப்பயணமாக மலை ஏறிச் செல்ல வேண்டும் என்றார்கள். நன்றாக நடப்பவர்கள் என்றாலே, குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது ஆகுமாம். ஆகையால், காலை ஐந்து மணிக்கெல்லாம் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி மறுநாள் அலாரம் வைத்து எழுந்தாயிற்று. ஆனால் வெளியே மழை; அதுவும் நன்றாகத்தான் இருந்தது. அனைவருக்குமே என்ன செய்வதென்று குழப்பம். ஆனால், எங்கள் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த மழையைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவில்லை. கிளம்பிவிட்டார்கள். நாங்கள் மழை அடங்கும் வரை காத்திருந்தோம்.

சரியாக ஆறு மணிக்கு மழை குறைய, கிளம்பினோம். கேதார்நாத் யாத்திரை வருபவர்களுக்காக ஒரு வாகனம் நிறுத்தும் இடம் உண்டு. அதுவரை நாம் வாகனத்தில் செல்லலாம். அந்த இடத்தில் எங்களை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் டிரைவர்.

ஓர் இடத்தில் அனைவரும் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். காவல்துறை அவர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது. வரிசையாக நிற்க வைத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் மக்களை யாத்திரைக்கு விடுகிறார்கள். நடைபாதையில் நெரிசலைக் குறைக்கத்தான் இப்படி. நாமும் அந்த வரிசையில் ஆவலோடு நின்றோம்.

எங்கள் எதிரே தெரிந்த பிரமாண்டமான மலை, எங்களைப் பார்த்து, ‘என்ன பயமா இருக்கா… இனிமே பயங்கரமா இருக்கும்’ என்று எங்களைக் கலாய்ப்பதுபோல இருந்தது.

(பயணம் தொடரும்)