Published:Updated:

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

சிவா ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
சிவா ராகுல்

வாசகர் பயண அனுபவம்

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

வாசகர் பயண அனுபவம்

Published:Updated:
சிவா ராகுல்
பிரீமியம் ஸ்டோரி
சிவா ராகுல்
நம் எல்லோருக்கும் நமது தினசரி இயந்திர வாழ்க்கையில் இருந்து ஒரு சிறு இடைவேளை எடுத்துவிட்டு, எங்காவது ஒரு பயணம் செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கே செல்வது, யாருடன் செல்வது, எப்படிச் செல்வது, எப்போது செல்வது என்று பல கேள்விகளும் அந்த ஆசைகளுடன் சேர்ந்து கூடவே இருக்கும்!

உதாரணமாக, நீங்க உங்க நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து சிம்லா, குளுமணாலிக்குப் போகலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் பண்றீங்க... அதற்கு உங்க நண்பன் ஒருவன், `சிம்லாலாம் போய்ட்டு வர அதிகமா செலவு ஆகும்டா’ என்பான். அடுத்து ப்ளான், அப்படியே சிம்லால இருந்து கீழ இறங்கி கோவா பக்கம் வரும். அதற்கு இன்னொரு நண்பன், `கோவாக்குலாம் சீஸன் டைம்ல போனாதான் நல்லா இருக்கும்; இப்பப் போறதுக்கு போகாமலே இருக்கலாம்’னு சொல்வான். இப்படியாக உங்க பயணம் ஆரம்பிக்கப்படாமலேயே முடிந்து விடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

குரூப்பா சேர்ந்து பயணம் போவதில் எப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல சோலாவாகப் (Solo Travelling) பயணம் போவதிலும் நிறைய நன்மைகள் உண்டு. நான் எப்படித் தனியாகப் பயணம் செய்ய ஆரம்பித்தேன் என்பதையும், தனிப் பயணங்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு, அதாவது நான் கல்லூரிப் படிப்பை முடித்து ஈரோட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் தூத்துக்குடியில் இருக்கும் என் கல்லூரி நண்பனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, டெல்லி மற்றும் தாஜ்மஹாலுக்குச் செல்ல வேண்டும் என்ற என் ஆசையை அவனிடம் கூறினேன். அவனுக்கும் அந்த ஆசை இருப்பதாகச் சொல்ல, என்னுடைய ஒரு வருடப் பயிற்சி முடித்த பிறகு ஆக்ரா & டெல்லி செல்லத் திட்டமிட்டோம். அதன்படி 2016 நவம்பர் 10-ம் தேதி போகலாம் என்று முடிவு செய்தோம். பயணத்திற்கான ரயில் டிக்கெட், ரூம் புக்கிங் ஏற்பாடுகளை நண்பனே செய்தான். நான் என் ஒரு வருடப் பயிற்சியை முடித்துவிட்டு அந்த வேலையைத் தொடராமல் ரிசைன் செய்துவிட்டு ஜாலியாக ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அந்த நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

'சாரி சிவா, என்னால் டெல்லிக்கு வர முடியாது, நீ போய்ட்டு வா’ என்று அவன் சொல்ல, எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. அப்போது என்னுடன் வரமுடியாத சூழ்நிலையில் அவன் இருந்தான். சரி என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நான் தனியாகப் போகலாமா அல்லது டிக்கெட்டை நானும் கேன்சல் செய்து விடலாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலேயே பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்போதுதான் எனக்குத் தனியாகப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் அமைந்தது. 

அதுவரை எனக்குத் தனியாகப் பயணங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றியது இல்லை. அதற்கு முன்புவரை நான் வடஇந்தியாவுக்கும் சென்றதும் இல்லை. அப்போது எனக்கு ஹிந்தியும் சுத்தமாகத் தெரியாது. மேலும் அவன் வேறு இடத்திலும், நான் வேறு இடத்திலும் இருந்ததால் பயணத்தின்போது இரயிலில் வைத்து ப்ளானைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நானும் ரொம்ப அசால்ட்டாக இருந்துவிட்டேன். இன்னும் பயணத்துக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதை எப்படி என் பெற்றோரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். சொல்லாமல் போகவும் முடியாது. ஒருவழியாக என் பெற்றோரிடம், `நண்பன் வரவில்லை; நான் மட்டும் தனியாகப் போகலாம்’னு நினைக்கிறேன் என்று சொல்ல, `தனியாலாம் நீ போக வேண்டாம்’னு சொன்னாங்க.நண்பனிடம் பயணத்துக்காக அவன் போட்டு வைத்திருந்த ப்ளானைக்கூட என்னால் கேட்க முடியாத சூழ்நிலையில் அவன் இருந்ததால், புக் செய்த ரயில் டிக்கெட் மற்றும் ரூமின் முகவரிகளை வைத்து கூகுளின் உதவியுடன் ஏதோ எனக்குத் தெரிந்ததுபோல, 8 நாள் பயணத்துக்குத் தேவையான ப்ளானை நானே தயார் செய்தேன். அதன்பின் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பிறகு அதை ஒரு ஜெராக்ஸ் எடுத்து என் பெற்றோரிடம் கொடுத்து, `இதுல இருக்குறதுதான் ப்ளான்; இதுபடிதான் நான் போவேன்’ என்று வங்கிக் கொள்ளைக்குப் போகும் ஒரு திருடர் கூட்டத்துத் தலைவனைப்போல, என்னுடைய முழு திட்டத்தையும் சொல்லி என் பெற்றோரின் சம்மதத்தை வாங்கிவிட்டு ரொம்ப சந்தோசமாக டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தனிப் பயணங்களில் கவனிக்க வேண்டியவை:

பயணத்தின் ஆரம்பம் முதல் மறுபடியும் வீட்டுக்கு வந்து சேர்வது வரை, உங்களின் உடல் நலத்திலும் உங்கள் லக்கேஜ், மொபைல், பர்ஸ், ஏடிஎம் கார்டு என்று எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்குக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வைத்துக் கொள்ள வேண்டும். வட இந்தியா செல்லும்போது, லக்கேஜைப் பூட்டி வைத்துக் கொண்டால் நல்லது. டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு டைரி வைத்துக்கொண்டால், பயணத்தில் உங்களின் அனுபவங்களை எழுதி வைத்துக் கொள்ளலாம்.
சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

அன்று இரவுதான் இந்தியாவில் பண மதிப்பிழப்பு (Demonetization) செய்யப்பட்டது. மறுநாள் காலை செய்தியில், மக்கள் போராட்டங்கள் நடத்த வாய்ப்பு உள்ளதால், டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக நியூஸ்... இந்தச் செய்தியைப் பார்த்ததும் என் அப்பா, `போறதுக்கு முன்னாடியே இவ்வளவு தடங்கல் வருதே; கண்டிப்பா போகணுமா’னு கேட்க, `ஆமா, என்ன நடந்தாலும் பாத்துக்கிறேன்’ என்று சொல்லி, எப்படியோ சமாதானப்படுத்திட்டேன். மறுநாள் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ப் போய்விட்டு அங்கு இருந்து ஆக்ரா டெல்லிக்குச் சென்றுவிட்டு 10 நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அந்த 10 நாளில் பல பிரச்சனைகளைச் சந்தித்தேன். அதுக்குப் பிறகு சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடத்தில் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன்.

அன்று, `என் நண்பன் வரவில்லை; நான் தனியாகப் போய்ட்டு வாரேன்’னு என் முதலில் நான் சொன்னபோது... `அதுலாம் வேணாம். எதாவது அவசரம்னா கூட உதவிக்கு அங்க நமக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்ல... மொழி தெரியாது; நீ போக வேணாம்’னு என்கிட்ட கோவமா சொன்ன என் அப்பா, கடைசியா நான் ஊருக்குப் போயிருக்கும்போது என்னைக் கூப்பிட்டு உக்காரச் சொல்லி, சிறு தயக்கத்துடன், `அடுத்த மாசம் ஜெயில் டிபார்ட்மென்ட்ல இருந்து டெல்லிக்கு நான் மூணு நாள் பயிற்சிக்குப் போக வேண்டியது இருக்கும்னு நினைக்கிறேன்’னு ஆரம்பிக்க... `சரிப்பா போய்ட்டு வாங்கப்பா’னு சொன்னேன். உடனே, `ஏல, நான் தனியா போகணும்னு சொல்லிட்டு இருக்கேன். நீ போய்ட்டு வாங்கனு சொல்லுற’ என்று அவர் சொல்ல, என்ன சொல்ல வாராங்கனு எனக்குப் புரிஞ்சுடுச்சு. இருந்தாலும் ஒன்றும் புரியாத மாதிரி, `சரிப்பா, அதுக்கு நான் என்ன பண்ணணும்’னு கேட்டேன். `நீதான் ஒரு வாரம் தனியாவே போய் டெல்லி, ஆக்ராலாம் சுத்திப் பாத்துட்டு வந்துருக்கேல... இப்பம் ஒரு 5 நாள் லீவு போட்டுட்டு என் கூட துணைக்கு வா’னு சொல்லும்போது, அப்படி ஒரு சந்தோசம். இந்தச் சந்தோசம்லாம் யாரால... நான் படிச்ச இன்ஜினீயரிங்கினாலயா? இல்ல, நான் பாக்குற வேலையாலயா? இரண்டு கையையும் தூக்கி, `பிகிலு’னு நம்ம விஜய் அண்ணா சொல்வதைப்போல Solo Travelllllllll என்று என்னுடைய Mind Voice சொல்வது எனக்கு அப்போது கேட்டது.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!


தனித்து விடப்படும்போதுதான் நம் பலமும் பலவீனமும் நமக்குத் தெரியும் என்பது 100% உண்மை. அடுத்த என் பயணம் கர்நாடகாவில் தொடங்கியது. கர்நாடகாவில் சிவமொங்கா மாவட்டத்தில் உள்ள Jogg falls-க்குச் சென்றேன். ஒருவழியாக மலைமீது ஏறிச் சுற்றிப் பார்த்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்க இரவு 8 மணி ஆகிட்டு. செம்ம அலுப்பு. அப்படி சாப்பிட்டுவிட்டு புக் செய்திருந்த ஹோட்டலைத் தேடிக் கண்டுபிடித்து இரவு 10 மணிக்குச் சென்றேன். கதவு பூட்டப்பட்டு இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு வடஇந்திய ஆசாமி ஒருவன் வந்து, `ரூம் வேண்டும் என்றால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் போய் அனுமதி வாங்கிட்டு வா’ என்று ரொம்பத் திமிராகச் சொன்னான். `நான்கு நாட்களுக்கு முன்பே நான் ரூம் புக் செய்துவிட்டேன். நான் எதற்கு அனுமதி வாங்கவேண்டும்’ என்று கேட்டேன். அதுக்குப் பதில் சொல்லாமலே அவன் செல்ல, அங்கு வேலை செய்யும் தமிழ்ச் சிறுவன் ஒருவன், `அண்ணா, இன்னைக்குச் சாயங்காலம் பக்கத்துத் தெருவில் ஒரு கொலை நடந்துடுச்சு.அதனால போலீஸ் யாருக்கும் அவங்க அனுமதி இல்லாமல் ரூம் கொடுக்கக் கூடாதுனு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. நீங்க போய் அனுமதி வாங்கிட்டு, உங்களின் ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்கண்ணா’ என்று அமைதியாகச் சொன்னான்.

சிவா ராகுல்
சிவா ராகுல்

தனிப் பயணங்கள் செல்ல விரும்பும் என் நண்பர்களுக்கு என்னுடைய சில முக்கியக் குறிப்புகள்..

 • முதன்முறை தனியாகப் பயணம் செய்யும்போது முதலில் தமிழ்நாட்டிற்குள் எங்காவது செல்வது நல்லது. ஒன்று இரண்டு அனுபவங்களுக்குப் பிறகு வெளி மாநிலங்களுக்குச் செல்லலாம்.

 • தனிப் பயணங்களுக்கு முன்பே திட்டமிட்டுச் செல்வதே மிகவும் சிறந்தது. அதனால் உங்களின் தேவையற்ற பயண நேரம் மற்றும் செலவுகள் குறையும்.

 • பணம் பிரச்சினையாக இருப்பவர்கள், பயணங்களுக்காக ஒவ்வொரு மாதமும் 500 முதல் 1000 ரூபாய் சேர்த்தால் போதும்.. பட்ஜெட் டிரிப் செல்ல முடியும். அதுவே சிறந்தது.

 • பயணங்களின்போது அதிக செலவுகளைத் தவிர்க்க தங்கும் ஹோட்டலிலோ, அல்லது பயணம் செய்யும்போது AC கோச்சிலோ செல்லாமல், Non AC-ல் கூட பயணம் செய்யலாம். ஆனால் சாப்பாட்டில் மட்டும் சிக்கனமாக இருக்கக்கூடாது. அந்த ஊரில் எது ஃபேமஸ் என்பதை அறிந்து அதைக் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

கொலை நடக்கும் நேரங்களில் குற்றவாளி பதுங்குவதற்கு இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக, அருகில் உள்ள விடுதிகளுக்கு போலீஸ் இந்த உத்தரவு போடுவார்கள். என் அப்பாவும் போலீஸ்காரர் என்பதால், இதைப் பற்றி அவர் சொல்லியும் கேள்விப்பட்டு இருக்கிறேன்... அதனால் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். முதலில் அவர், சிறிது தொலைவில் இன்னொரு ஹோட்டலில் போய்த் தங்கச் சொன்னார். முடியாது என்று போலீஸிடம் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல என்பதால், சரி என்று அவர் சொன்ன ஹோட்டலுக்குச் சென்று விசாரித்தேன். அங்கு நான் புக் செய்திருந்த அந்த ஹோட்டலைவிட மூன்று மடங்குக் கட்டணம் அதிகமாகச் சொன்னான். மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்து அதிகாரியிடம் நடந்ததைச் சொன்னேன்...அங்கு கட்டணம் அதிகம் என்று அவருக்கே தெரிந்து இருந்தது. அதனால் அவர் சிறிது யோசிக்க, நான் சுற்றிப் பார்க்கத்தான் வந்துள்ளேன் என்பதை அவருக்கு உறுதிப்படுத்த, அன்று Jogg falls-ல் நான் எடுத்த சில புகைப்படங்களையும், ஏற்கெனவே அந்த ஹோட்டலில் ரூம் புக் செய்ததையும் எடுத்துக் காட்டினேன். இன்னும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார். `வேண்டுமென்றால் என்னுடைய ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுத்துத் தருகிறேன்’ என்று சொல்ல, சில நிபந்தனைகளுக்குப் பிறகு சம்மதித்தார். மற்றொரு அதிகாரியிடம், என்னை வண்டியில் அழைத்துச் சென்று அந்த ஹோட்டலில் சொல்லி, விட்டுவிட்டு வருமாறு உத்தரவு போட்டார். அந்த நல்ல போலீஸ் அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு, மற்றொரு போலீசுடன் பைக்கில் அந்த ஹோட்டலுக்குச் சென்றேன்.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!


பயங்கர பணிவுடன் கதவைத் திறந்தான் அந்த வடஇந்திய ஆசாமி. பின் அவனே ரூமிற்கு வந்து கதவைத் திறந்து கொடுத்துவிட்டுப் போனான். அறையின் வாசலுக்கு நேராக இருந்த கண்ணாடியின் வழியாக, நான் என் கண்ணில் எதையோ சாதிச்ச ஒரு சந்தோசத்தை அப்ப பார்த்தேன். அதற்குக் காரணம், மொழி தெரியாத ஊருக்கு வந்தாலும், நான் என் முயற்சியில் இருந்து பின் வாங்காமல் இருந்ததால், ஒருவித சந்தோஷத்தை என்னால் அப்போது உணர முடிந்தது.

மறுநாள் காலையில் இருந்து மாலை வரை சுற்றிவிட்டு, பிறகு `சாகர்’ என்ற இடத்தில் இருந்து முருடேஷ்வர் செல்வதற்காகப் பேருந்தில் மாலை 4 மணிக்கு ஏறினேன். 4 மணிநேரப் பயணம். இரவு 8 மணிக்கெல்லாம் அங்கு சென்று விடலாம் என்ற நினைப்பில் பயணித்துக் கொண்டு இருந்தேன். சரியாக மாலை 5 மணி இருக்கும்போது தூறல் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பெரும் மழையாக மாறியது. நம் தமிழ்நாட்டில் மழையானது ஆண்கள் கண்ணீர் போன்றது. அவ்வளவு எளிதில் இமையைத் தாண்டி வராது. அதையும் மீறி வந்தாலும் சிறிதுநேரம்தான். ஆனால் கர்நாடகாவின் மழை அப்படி அல்ல! பெண்களின் அழுகையைப் போன்றது.ஒருமுறை துடங்கி விட்டால் முடிப்பது ரொம்ப கஷ்டம். அப்படி ஒரு பேய் மழை..

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!


கர்நாடகாவில் பெங்களூருவைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் காடுகளும் மரங்களும் அதிகம் இருப்பதால், அங்கு எப்போதுமே அதிகமான மழை இருக்கத்தான் செய்யும். சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய மின்னலும் வந்தது. நான் இடி மின்னலுக்கும் ரொம்பப் பயப்படுபவன். சிவமொங்கா மாவட்டம் முழுவதுமே காடுதான். சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்து காட்டு வழியாகச் செல்ல ஆரம்பித்தது. அடர்ந்த காடு, முழுவதும் இருட்டு, மழை, இடி, மின்னல், அவ்வளவு நேரம் பேருந்தை மெதுவாக ஓட்டி வந்த ஓட்டுநர், திடீரென நம்ம ஊரு ரோட்டுல Dio பைக்கில் பறக்கும் நம்ம புள்ளிங்கோக்களைப்போல அந்தக் காட்டுப் பாதையில் பேருந்தை ஓட்ட, மரண பயத்தைத் தொட்டுவிட்டேன். இருக்குற பிரச்சினை பத்தாதுனு, அதிகமா தண்ணீர் குடித்ததால் வரும் அந்த அடக்கக் கூடாத பிரச்சினையும் என்னைச் சோதிக்க வரிசையில் காத்து நின்றது. கடவுள் புண்ணியத்தில் சிறிது நேரத்தில் நடுக்காட்டில் ஓர் இடத்தில் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. எல்லோரும் பயத்தில் என்ன என்று வெளியே எட்டிப் பார்க்க, நான் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவசர அவசரமாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கி மழையில் நனைந்தபடியே நான் வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறினேன். முன்பு சென்ற எல்லா வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. ஏன் எதற்கு என்று ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த ஒருவர் நடத்துனரிடம், `இந்த வழியில் ஒரு பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்து விட்டது. மாற்று வழியில் செல்லுங்கள்’ என்று சொன்னார். வந்த வழியிலேயே மறுபடியும் திரும்பி வந்து சிறிது தூரத்தில் வலதுபுறம் திரும்பி வேறு ஒரு வழியில் பேருந்து சென்றது. உடனே கூகுள் மேப்பை எடுத்துப் பார்த்தால், இந்த மாற்று வழி நான் இறங்க வேண்டிய இடத்துக்கு ஒரு கிமீ-க்கு முன்பாகவே வேறு ஒரு திசையில் திரும்புகிறது. இரண்டு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. அங்கு இருந்த ஒரு மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பில் நான் இறங்கினேன். அதற்குள் மொபைல் சார்ஜ் முழுவதுமாகக் குறைந்துவிட்டது.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு! தனிப் பயணங்களின் முக்கியப் பயன்கள்!

 • யாரையும் சார்ந்து இருக்காமல், எப்படிச் சுதந்திரமாக இருப்பது என்று தெரிந்து கொள்வீர்கள்.

 • உங்களால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் ஆகும்.

 • பயணங்களில் பிரச்சனைகளைத் தனியாகச் சந்திப்பதன் மூலம், உங்களின் தினசரி வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் தனியாக எதிர்கொள்வீர்கள்.

 • நீங்கள் செல்லும் இடத்தில் உள்ள மக்களின் உணவு, மொழி, கலாசாரத்தைத் தெரிந்து கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது.

 • மற்றவர்களுடன் எளிதில் பழகக் கூடிய நபராக மாறுவீர்கள்.

 • நிறைய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

 • அதுவரை உங்களுக்குத் தெரியாத நிறைய புதுப் புது விஷயங்களைப் பயணங்களில் கற்றுக் கொள்வீர்கள்.

 • அதுவரை நீங்கள் கடைப்பிடித்த எல்லைக் கோட்டைத் தாண்டிச் (limits) செல்லும்போது இப்போதைய நீங்கள், உங்களின் புதிய Version 2.0 போல உணர்வீர்கள்.

 • உங்களுக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவதைவிட எளிதானது ஆகும்.

 • உங்களின் இதயம் விரிவடையும்; அதனால் பொருட்களைச் சேமிப்பதைவிட பயணங்களில் கிடைக்கும் அழகான நினைவுகளை அதிகம் சேமிப்பீர்கள்.

 • பயணத்தின்போது உங்களின் பலவீனங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் பலவீனத்தைச் சரி செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்.

 • உங்களின் பொறுமை மிகவும் அதிகரிக்கும்.

 • நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்; அதனால் உங்களின் மனவலிமையும் அதிகமாகும்.

 • என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் அறிவீர்கள்.

 • சில நேரங்களில் உங்களுக்குள் இருக்கும் ஒரு குழந்தைத்தனத்தை உணர்வீர்கள்.

 • '96' படத்தில் வரும் Life of Ram - `கரை வந்த பிறகே பிடிக்குது கடலை’ என்ற இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியின் ஆழமான உள் அர்த்தங்களையும் உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால், என்னைப் பொருத்தவரை அந்தப் பாடல்தான் Solo traveler-களின் தேசிய கீதம்.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!

அந்த இடம் காட்டுப் பகுதி இல்லை என்றாலும், சாலையின் நடுவே தெருவிளக்குகளுடன் ஆள் நடமாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. எனக்கு அப்போது அதிகப் பசியாக வேறு இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடைகள் எதுவும் தெரியவில்லை. விசாரிப்பதற்குக்கூட அங்கு யாரும் இல்லை. நாம் பேருந்தில் மதிய நேரங்களில் செல்லும்போது, வெயில் அடிக்காத பக்கம் பார்த்து உட்கார எந்தப் பக்கம் உட்கார்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் வரும். ஆனால் எனக்கு, வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு சொல்வதுபோல, `Right Side is always be right’ என்று ஒரு நம்பிக்கை உண்டு. இரண்டு விரலைக் காட்டி ஒன்றைத் தொடச் சொன்னால் எனக்கு எது வலதுபுறம் உள்ளதோ, அதைத்தான் நான் தேர்வு செய்வேன். இதுவரை அது தவறாக ஆனது இல்லை. இப்போதும் யாரும் இல்லாத அந்த வலதுபுறச் சாலையில் இரவு 9 மணிக்கு அந்தக் கடும் குளிரில் நடந்தே சென்றேன். சரியாக 1 கிமீ-க்குப் பிறகு ஒரு ஹோட்டல் இருந்தது. அன்று பயணத்தில் சந்தித்த எல்லா பிரச்சினைகளையும் மறக்கும் அளவுக்கு வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு ரூமுக்குச் சென்று படுத்ததுதான் தெரியும்; அப்படி ஒரு தூக்கம்.

சோலோ ரைடுதான் பெஸ்ட் ரைடு!


பிறகு மறுநாள் காலையில் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது, முந்தைய நாள் இரவு நான் பேருந்தில் இருந்து இறங்கி நின்ற அந்தச் சந்திப்பைக் கடந்து ஆட்டோ சென்றது. அந்தச் சந்திப்பில் இருந்து 4 கிமீ கடந்து சென்ற பிறகும், அந்த வழியில் ஒரு கடையைக்கூட நான் பார்க்கவில்லை. ஒருவேளை நான் நேற்று இரவு இடதுபுறம் திரும்பி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்துத் தனியாகச் சிரித்துக் கொண்டேன்.

ஒரு திரைப்படத்தில் சிம்பு இப்படிச் சொல்வார்: `நமக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; ஆனா அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism