கட்டுரைகள்
Published:Updated:

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 10 - பாவிகளின் உடலைத் தொடாத வசுதாரா அருவி!

வசுதாரா நீர்வீழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
வசுதாரா நீர்வீழ்ச்சி

‘இதுக்கு மேல என்னால நடக்க முடியாது, நீங்க போயிட்டு வாங்க' என்று என்னிடம் கேமராவைக் கொடுத்துவிட்டு அருகில் ஒரு பாறையில் படுத்துவிட்டான். எனக்கும் அது சரி என்று பட, நான் மட்டும் ஏற ஆரம்பித்தேன்.

‘‘நேற்று நடந்ததை மாற்ற முடியாது, நாளை நடப்பதைத் தடுக்க முடியாது, இன்றைய பொழுதில் இந்தக் கணத்தில் சரியாக வாழ்வதே உன்னதமானது’ என்று ஒரு பௌத்த தத்துவம் உண்டு. அதன் அடிப்படை யில்தான் இந்த நாளைக் கடந்து கொண்டிருந்தோம். ஆம், ரவி காலையில் எத்தனை முறை கதறியும், பத்ரிநாத் கோயிலுக்கு தாமதமாகக் கிளம்பி, தரிசனத்தைக் கோட்டைவிட்டு விட்டு, சடர்ன் பிளானாக வசுதாரா பார்க்கக் கிளம்பியாகிவிட்டது. இப்படி அந்நாளில் அடுத்ததை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம். ‘லேட்டா கிளம்பிட்டு, புத்தர் தத்துவம்னு என்னென்ன சொல்றான் பாரு...’ என்று நீங்கள் எங்களைப் பார்த்துச் சிரிப்பது புரிகிறது.

வசுதாரா நீர்வீழ்ச்சிக்குச் செல்ல மணா கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் மலை மீது ட்ரெக்கிங் செய்ய வேண்டும். காலை 8 மணிக்கே மலை ஏற ஆரம்பித்தால்தான் மதியம்போல் அடிவாரத்தை வந்தடைய முடியும். அது மட்டுமல்ல, பனிமூட்டம் ஏற்படுவது, மழை பொழிவது, குளிரடிப்பது என்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பித்து, வசுதாராவைத் தெளிவாகப் பார்த்துவிட்டு, பாதுகாப்பாக வீடு திரும்பலாம். நாங்கள் ஏற ஆரம்பித்ததே 12 மணி! பகலென்றும் பாராமல் உச்சியில் நின்றுகொண்டிருந்த சூரியனைக் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. மழை வருவதற்கான அறிகுறியும் தெரிந்தது. நேரத்தைக் கடத்தாமல் வசுதாராவை நோக்கி ஏற ஆரம்பித்தோம்.

ரவி பெரிய பிரசன்னாவுடன் சேர்ந்து விறுவிறுவென்று மலை ஏறிக்கொண்டிருக்க, குட்டிப் பிரசன்னாவும் நானும் அவர்களைத் தொடர்ந்து மெல்ல ஏறிக் கொண்டிருந்தோம். சரியாக ஐந்தாவது கிலோமீட்டரிலிருந்து களைப்படைய ஆரம்பித்தான் குட்டிப் பிரசன்னா. அவனை மெல்ல உற்சாகப்படுத்தி எப்படியோ மேலும் ஒரு கிலோமீட்டர் ஏற வைத்துவிட்டேன். அதற்குள்ளாக பெரிய பிரசன்னாவும் ரவியும் கண்ணிலிருந்து மறையும் துரத்துக்குச் சென்றுவிட்டனர்.

நானும் குட்டிப் பிரசன்னாவும் அங்கிருந்த பாறையில் ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். அப்போது எங்கள் காலுக்கடியில் ஏதோ முயல் ஓடியதுபோல் இருந்தது. கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது அது ஓர் எலி. வாலில்லாமல், பெரிய காதுகளுடன் முயல்போலவே இருந்தது. அந்த இமாலய எலி பார்க்கக் குட்டியாக, அழகாக இருந்தது. அது எங்களைப் பார்த்து பயப்படவில்லை. அங்கே, இங்கே சுற்றிவிட்டு அதன் பொந்துக்குள் ஓடிவிட்டது. அந்த இமாலய எலி கொடுத்த உற்சாகத்தில் மேலும் சிறிது தூரம் நடந்தான் குட்டிப் பிரசன்னா. அவ்வளவுதான்...

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 10 - பாவிகளின் உடலைத் தொடாத வசுதாரா அருவி!

‘இதுக்கு மேல என்னால நடக்க முடியாது, நீங்க போயிட்டு வாங்க' என்று என்னிடம் கேமராவைக் கொடுத்துவிட்டு அருகில் ஒரு பாறையில் படுத்துவிட்டான். எனக்கும் அது சரி என்று பட, நான் மட்டும் ஏற ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் மொத்த மலையில் நான் மட்டும் நடந்துகொண்டிருந்தேன். ஏழாவது கிலோமீட்டரிலிருந்து நானும் கடுமையாகத் தொய்வடைய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் முடியாமல் ஓர் உயரமான பாறையில் அமர்ந்து கொண்டேன். திரும்பிப் பார்த்தால் குட்டிப் பிரசன்னாவும் மறைந்திருந்தான்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், ஓர் உயரமான பாறையில் அமர்த்திருக்கிறீர்கள். நீங்கள் தொண்டை கிழியக் கத்தினால்கூட அந்த ஒலி எட்டுத் திசையிலும் சுற்றிவிட்டு, தன்னை ஏற்க யாரும் இல்லை என்று திரும்பி உங்கள் காதுக்கே வந்துவிடும் அளவுக்கு யாரும் இல்லா வெட்டவெளி. அந்த வெட்டவெளியில் மேகம் தின்றது போக மிச்சம் மீதி வெளிச்சத்தில் பச்சைப் புல் போர்த்திய சிகரங்களைக்கொண்ட பள்ளத்தாக்கு பரந்து விரிந்துகிடக்கிறது. அந்தச் சிகரங்களுக்கு நடுவில், வெள்ளை நூல் கிடப்பதைப்போல் ஒரு நதி. இந்தச் சூழலை ரசித்துக்கொண்டிருக்கும்போதே சில்லென்ற காற்று உங்களைச் சீண்டி விளையாட, அதைச் சுவாசிக்கும்போது உங்கள் நுரையீரல் அந்தத் தென்றலுடன் காதல்கொள்வதை உணர முடியும். இந்தச் சூழலைக் கேட்கவே சிலிர்ப்பாக இருக்கிறதல்லவா.... அப்படியானால் எனக்கு எப்படி இருந்திருக்கும்!

அப்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. ‘நாம் தேடுவது மலையின் உச்சியில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை; இப்படி இடையிலும் கிடைக்கும். இதுதான் மலையேற்றத்தின் அதிசயமோ...'

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 10 - பாவிகளின் உடலைத் தொடாத வசுதாரா அருவி!

எனக்குக் களைப்பாக இருந்தாலும், பின்வாங்கும் எண்ணம் இல்லை. ஆங்காங்கே சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு முன்னேறி நடக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த மூச்சை இழுக்கும்போது அந்தத் தூய்மையான காற்று என்னுள் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியது. தாகத்துக்கு அங்கு ஓடும் சிறிய ஓடையில் நீர் அருந்திவிட்டு மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்தபோது பனி படர்ந்து ஒன்றுமே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருக்கும்போல என்று நினைத்துக்

கொண்டு, ஒரு பாறையில் சாய்ந்து கண்ணை மூடினேன், அடுத்த கணமே ரவியும் பெரிய பிரசன்னாவும் வந்துவிட்டார்கள் ‘யோவ் வந்துட்டியா’ என்று ரவி ஆச்சர்யப்பட்டார். ரவியும் பெரிய பிரசன்னாவும், நான் வருவேனா, மாட்டேனா என்று பந்தயம் கட்டி விளையாடியிருக்கிறார்கள். அதில் ஜெயித்தது பெரிய பிரசன்னாதான்.

இருவரும் என்னை வசுதாரா அருவி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நான் இருந்த இடத்திலிருந்து ஒரு நூறு மீட்டர்தான் இருக்கும் அந்த அருவி. இருந்தும், பனிமூட்டத்தால் ஒன்றுமே தெரியவில்லை. எங்கள்மீது சாரல் மட்டும் விழுவதை உணர முடிந்தது. நாங்கள் அருவியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது. ‘நேரத்தோடு கிளம்புங்கடான்னா கேக்குறீங்களாடா… டார்ச்ச்ச்சர் பண்றாய்ங்க' என்று ‘ஃப்ரெண்ட்ஸ்’ பட வடிவேலு மாதிரி கடிந்து கொண்டார் ரவி. அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவர் சொல்வதும் சரிதான். காலையிலேயே வந்திருந்தால் பனிமூட்டம் இல்லாமல், அருவியை நன்றாகப் பார்த்திருக்கலாம். பந்தயத்தில் தோற்றதற்கு ரவியை அருவிக்கு அருகே சென்று நனையச் சொன்னோம். ‘கொடுத்த வாக்குதாண்டா பெருசு’ எனும்ரீதியில் சத்தியத்தைக் காப்பாற்ற…. அவர் சரீரத்தை அந்த மைனஸ் டிகிரி குளிரிலும் அருவிக்குக் கொடுத்து… ‘கிடுகிடு’வென நடுங்கியதைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 10 - பாவிகளின் உடலைத் தொடாத வசுதாரா அருவி!

இந்த அருவிக்கு என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. ‘வாசு’ என்றால் விஷ்ணு, தாரா என்றால் நதி. ‘விஷ்ணுவின் நதி’ என்று அர்த்தம். இந்த ஊற்றுநீர் பாவிகளின் உடலைத் தொடுவதில்லை. இந்த நீரூற்றின் புனிதநீர், உங்கள்மீது விழ ஆரம்பித்தால், நீங்கள் ஒரு நல்ல ஆன்மா என்று அர்த்தம். இது யார்மீது விழுகிறதோ அவர் முக்திக்குத் தகுதியானவராகக் கருதப்படுகிறார். இந்த நீரூற்று அமிர்தம் போன்ற ஒரு சுவைகொண்டதாகக் கருதப்படுகிறது. அதன் நீர் ஆயுர்வேத மூலிகைகளைக் கடந்து வருவதால் அந்த நீர் விழும் நபர் ஆரோக்கியமானவராக மாறுவார்.

நாங்களெல்லாம் முக்தியடையத் தகுதியானவர்களாக ஜட்ஜ்மென்ட் கொடுத்ததற்கு தேங்க்ஸ் வசுதாரா...

வசுதாரா நீர்வீழ்ச்சியைச் சுற்றி சௌகாம்பா, நீலகந்தா, பலகுன் என மூன்று மலைகள் இருக்கின்றன. இந்த அருவி அலக்நந்தா ஆற்றில் கலந்து, பத்ரிநாத் கோயிலை நோக்கிப் பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 400 அடி (120 மீ). ‘பாகுபலி’ ராஜமெளலி பார்த்திருந்தால்… இந்த லொக்கேஷனை விட்டிருக்க மாட்டார். அங்கே, அருவியின் சாரல் அதிகமாக இருந்ததால் கேராவை எடுக்க முடியவில்லை. ஆகையால் செல்போனில் சில படங்கள் எடுத்துவிட்டு, அங்கிருந்து அடிவாரத்துக்கு நகர்ந்தோம்.

வசுதாரா அருவிக்கு ஒரு புராணக் கதையும் உண்டு. ‘பாண்டவர்கள் ஸ்வர்க்கரோஹிணி யாத்திரைக்கு இந்த வழியாகத்தான் சென்றனராம். சகாதேவன், வசுதாராவின் அருகில்தான் தன் உயிரைவிட்டாராம். அவர்கள் இரண்டு மலைகளைக் கடக்க வேண்டும், ஆனால் அவற்றைக் கடக்க முடியவில்லை. மகாபலி பீமன் அவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார், எனவே, அவர் ஒரு பாறாங்கல்லை எடுத்து இரண்டு மலைகளுக்கு இடையில் எறிந்து, ஒரு பெரிய பாலத்தை உருவாக்கி, அவர்கள் சொர்க்கத்தை நோக்கிச் செல்ல வழிவகுத்தார். அந்தப் பாலம் `பீம்புல்’ என்று அழைக்கப்படுகிறது.’

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 10 - பாவிகளின் உடலைத் தொடாத வசுதாரா அருவி!

இந்தக் கதையை பெரிய பிரசன்னா இறங்கும் வழியில் எங்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டே வந்தான். இறங்கும்போது, வெகு விரைவாகவே இறங்கிவிட்டோம். குட்டிப் பிரசன்னாவுக்கு கால் செய்து பார்த்தோம்; கிடைக்கவில்லை. அவன் ரூமுக்குப் போய்ச் சேர்ந்திருப்பான் என்று விட்டுவிட்டோம். சரஸ்வதி நதி அருகே மகாபாரதத்தை எழுதிய வியாசரின் (வியாஸ் குகை) இருப்பதாக பெரிய பிரசன்னா எங்களை அழைத்துச் சென்றான். அங்கேயும் சென்று பார்த்தோம். வியாஸ் குகை என்பது ஒரு பழைமையான குகை. விநாயகப் பெருமானின் உதவியுடன் வியாச முனிவர் மகாபாரத இதிகாசத்தை இயற்றிய இடம் இது என்று நம்பப்படுகிறது. குகையில் ஒருவர் பூஜை செய்துகொண்டிருந்தார். அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு வந்தோம்.

குகையிலிருந்து மனா கிராமத்தை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது. நல்ல பசி! ஓர் உணவகத்தில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த நேரத்தில் நம் நண்பர்களுக்கு போன் செய்து பார்த்தோம். அனைவரும் நாட் ரீச்சபிள்! எங்களை ரூமுக்கு அழைத்துச் செல்லவேண்டிய டிரைவர் பையாகூட ரீச்சபிளில் இல்லை. அங்கே வாடகை டாக்ஸிகூடக் கிடைக்காது. மழை வேறு கொட்ட ஆரம்பித்தது. இதற்கிடையில் ஆர்டர் செய்த அயிட்டங்கள் வர, அதைச் சாப்பிட்டு முடிக்கும் வரை எதையும் யோசிக்கவில்லை. முடித்த பிறகும் என்ன செய்யலாம் என்று யோசிக்கவில்லை..!

(தொடரும்)