கட்டுரைகள்
Published:Updated:

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! அடித்துப் பிடித்து கங்கை ஆரத்தி, நதிக்கரையில் கிடைக்கும் பரவசம்!

பத்ரிநாத் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் to ரிஷிகேஷ் சுமார் 300 கிலோமீட்டர். அனைத்தும் மலைப் பாதை என்பதால், சாதாரணமாக எட்டு மணி நேரம் ஆகலாம்.

பத்ரிநாத் கோயிலில் காலையில் தரிசனத்தை முடித்துவிட்டு, அப்படியே விடுதியில் காலை உணவையும் முடித்துவிட்டு அங்கிருந்து ஹரித்வார் கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பும்போது லேசாகத் தூற ஆரம்பித்தது. போகப் போக மலையில் நல்ல மழை. டிரைவர் பையா சற்றுக் கவனமாகவும் மெதுவாகவும் வண்டியை ஓட்டிச் சென்றார்.

சில இடங்களில் மழை கடுமையாகப் பொழிய, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டது. உடனே வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். அந்தப் பாதைகள் குறுகலாக இருந்ததால், எங்களுக்கு மேலும் தாமதமாகியது. காரில் மியூசிக் சிஸ்டம் பழுதாகிவிட, நாங்கள் எங்களுக்குள் ‘பாட்டுக்குப் பாட்டு’ விளையாடிக் கொஞ்சம் பொழுதை ஓட்டினோம். அதுவும் போர் அடிக்க, வாங்கி வந்த ஸ்நாக்ஸைக் காலி செய்தோம். அதுவும் காலியாக, அனைவரும் தூங்கி விட்டோம்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! அடித்துப் பிடித்து கங்கை ஆரத்தி,
நதிக்கரையில் கிடைக்கும் பரவசம்!

பத்ரிநாத்தில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியில், சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில், அவ்லி (auli) என்னும் இடத்தில் ரோப் கார் வசதி உண்டு. ஆசியாவிலேயே அதிக உயரத்தில் அமைக்கப்பட்ட ரோப் கார் என்ற வரிசையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் (Gulmarg) ரோப் கார் முதல் இடம் என்றால், இரண்டாவது இடம் அவ்லி. இதையெல்லாம் கேள்விப்பட்டு அனைவருக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அவ்லி கிராமத்தை அடைந்ததும், வண்டியை ரோப் கார் இருக்கும் இடம் நோக்கி விடச் சொன்னோம். ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். அந்தக் காசுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் இருக்கும் அந்த அனுபவம். ஒரு மினி சொர்க்கத்தைப் பார்க்கலாம். அங்கே சென்றதும்தான் தெரிந்தது, அன்று மழை காரணமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று. அனைவரும் வருத்தத்துடன் காருக்குத் திரும்பினோம். ஒருவேளை உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் மிஸ் செய்துவிடாதீர்கள். இந்த ரைடு நிறுத்தப்பட்டது டிரைவர் பையாவிற்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மழை மேலும் கடுமையாவதற்குள் ஊர் போய்ச் சேரலாமே என்று வாகனத்தை விரைவுபடுத்தினார்.

பத்ரிநாத் to ரிஷிகேஷ் சுமார் 300 கிலோமீட்டர். அனைத்தும் மலைப் பாதை என்பதால், சாதாரணமாக எட்டு மணி நேரம் ஆகலாம். நாங்கள் செல்லும்போது, ஆங்காங்கே மழை இருந்ததால் எங்களுக்குக் குறைந்தது 12 மணி நேரம் ஆகியிருக்கும். இரவு 12 மணி அளவில் ரிஷிகேஷ் கார்த்திகேயா ஆசிரமம் வந்தடைந்தோம். ஆசிரம நிர்வாகியிடம் முன்னதாகவே தகவல் சொல்லியிருந்ததால், அவர் எங்களுக்காகக் காத்திருந்தார். நாங்கள் வந்ததும், எங்களுக்கான அறையைக் காண்பித்து ஓய்வெடுக்கச் சொன்னார். நாங்களும் அவருக்கு ஒரு குட்நைட் சொல்லிவிட்டு உறங்கச் சென்றுவிட்டோம்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! அடித்துப் பிடித்து கங்கை ஆரத்தி,
நதிக்கரையில் கிடைக்கும் பரவசம்!

மறுநாள் பொறுமையாக எழுந்து புறப்பட்டு மாலை மூன்று மணியளவில் ஹரித்வார் சென்றோம். ரிஷிகேஷில் இருந்து ஹரித்வார் சுமார் இருபத்தி இரண்டு கிலோமீட்டர்தான் இருக்கும். ஆகையால் நாங்கள் ஆளுக்கு இருபது ரூபாய் என்ற விகிதத்தில் ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து ஹரித்வார் நதிக்கரைக்குச் சென்றோம். அங்கு ஐந்தரை மணிக்குத்தான் கங்கை ஆரத்தி என்றாலும், முன்னதாகப் போனால்தான் நதிக்கரையோரம் இடம்பிடிக்க முடியும். நாங்கள் நாலரை மணிக்குப் போகும்போதே நல்ல கூட்டம். முண்டியடித்து ஒரு நல்ல இடத்தைப் பிடித்து அமர்ந்துவிட்டோம்.

ஹரி என்றால் ‘விஷ்ணு’, துவாரம் என்றால் ‘வாசல்’ என்பதாகும். எனவே, ஹரித்வார் என்றால் ‘விஷ்ணுவின் நுழைவாயில்’ என்று பொருள் சொல்லப்படுகிறது. வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான பத்ரிநாத் தரிசனம் செய்வதற்காகப் புனிதப் பயணிகள் பயணத்தைத் தொடங்கும் இடமாக இது உள்ளதால், இந்தப் பெயரைப் பெற்றது.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! அடித்துப் பிடித்து கங்கை ஆரத்தி,
நதிக்கரையில் கிடைக்கும் பரவசம்!

அதேபோல ஹர என்றால் ‘சிவன்’ என்று பொருள் உண்டு. எனவே, ஹரித்வார் என்பது ‘சிவனின் நுழைவாயில்’ என்றும் கூறப்படுகிறது. ஹரித்வார் ஆனது கயிலை மலை, ஜோதிர்லிங்கங்களில் அதிவடக்கே உள்ள கேதார்நாத், சார்தாம் யாத்திரைத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் போன்ற அனைத்து முக்கிய வழிபாட்டு இடங்களுக்குச் செல்லும் புனிதப் பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு பொதுவான இடமாக உள்ளது. ஆனால், இது சிவனுக்கான இடம்தான் என்பதுதான் வரலாறு.

அதேபோல் இங்கே பாயும் கங்கைக்கு ஒரு சிறப்பம்சமும் உண்டு. கங்கை, ஹரித்வாரில்தான் முதல்முதலில் சமவெளிக்குள் நுழைகிறது. ஆம் தொன்மங்களின்படி மேலிருந்து இறங்கிய கங்கையை, ஹரித்வாரில்தான் சிவன் தனது சடாமுடியில் தாங்கிப் பின்னர் கீழிறக்கினார். அப்போதுதான் கங்கா தேவி ஹரித்வாரில் கங்கை ஆறாக இறங்கினாள். கங்கை ஆறு, கங்கோத்ரி பனிப்பாறையின் விளிம்பில் உள்ள அதன் மூலத்திலிருந்து உருவாகி 253 கிலோமீட்டர்கள் பாய்ந்த பிறகு, ஹரித்வாரில் முதன்முறையாக கங்கை சமவெளியில் நுழைகிறது. இதுவே இந்த நகரத்திற்கு அதன் பண்டைய பெயரான ‘கங்கத்வாரா’ என்று ஏற்படக் காரணமாயிற்று.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! அடித்துப் பிடித்து கங்கை ஆரத்தி,
நதிக்கரையில் கிடைக்கும் பரவசம்!

அப்படியான கங்கை ஆற்றங்கரையில் நடக்கும் ஹரித்வார் கங்கை ஆரத்தியைப் பார்க்க, உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். சுமார் ஒரு மணிநேரம் நடக்கும் ஆரத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புரோகிதர் ஒலிபெருக்கியில் மந்திரம் சொல்ல, அதனை மக்கள் ஒன்றாகச் சொல்வது ஒரு பரவசமான நிலையை உருவாக்கியது. ஒவ்வொரு முறை ஆரத்தி காட்டும்போதும் மக்கள் ஒன்றாக இரு கரங்களையும் உயர்த்தி, தங்கள் வேண்டுதலைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த ஒரு மணி நேரம் எல்லா வகையிலும் சிலிர்ப்பூட்டும் விதமாக இருந்தது. ஆறரை மணிபோல ஆரத்தி முடிவடைய, நாங்களும் அங்கிருந்து ஆசிரமத்துக்கு வந்துவிட்டோம். அதோடு எங்கள் ஆன்மிக யாத்திரை நிறைவடைந்தது.

இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு எங்களைவிட கார்த்திகேயா ஆசிரம நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ‘‘பரவாயில்லை, இந்தச் சின்ன வயதில் இந்த யாத்திரையை முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்'’ என்று எங்களை வாழ்த்தினர். அன்று இரவே ஆசிரம நிர்வாகியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு டெல்லிக்கு ரயில் ஏற ஆயத்தமானோம்.

எங்களைப் பொறுத்தவரை பயணிப்பதே ஆன்மிகத்துக்கு இணையானதுதான். ‘இந்த உலகம் ஒரு புத்தகம். பயணிப்பவர்கள் அடுத்தடுத்த பக்கங்களைப் படிக்கிறார்கள், மற்றவர்கள் முதல் பக்கத்திலேயே தேங்கிவிடுகிறார்கள்’ என்பது புத்தரின் தத்துவம்.

இந்த உலகில் படிக்க வேண்டிய பக்கங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆகையால் பயணித்துக்கொண்டே இருப்போம். எங்கே சென்றாலும் முழு ஈடுபாட்டுடன், திறந்த மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்லுங்கள். அந்த நொடியில் வாழுங்கள். மற்றதைப் பயணம் பார்த்துக்கொள்ளும்.

நிறைவு