
நாங்கள் முக்கியமான பொருள்கள் எதையும் அங்கு வைத்துவிட்டுப் போகவில்லை என்றாலும், சிறு பதற்றம். அவரவர் உடைமைகளை செக் செய்துகொண்டோம்
மதுரையில் சித்திரைத் திருவிழா, பொருட்காட்சி... இப்படிச் சில இடங்களுக்குப் போகும்போது ஆங்காங்கே கட்டியிருக்கும் பொதுவான மைக் செட்டில் இப்படி ஒரு அனவுன்ஸ்மென்ட் வந்துகொண்டேயிருக்கும்.
‘‘பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருப்பார்கள்; நீங்கள் அசந்த நேரத்தில் உங்கள் பொருளையோ, குழந்தையையோ திருடிச் சென்றுவிடுவார்கள்; ஜாக்கிரதை. உங்கள் உடைமை; பாதுகாப்பது உங்கள் கடமை. இது காவல்துறையின் வேண்டுகோள்'’ என்று ஒரு விழிப்புணர்வு ஆடியோவை, வசந்த் அண்ட் கோ விளம்பர பாணியில் ஒலிபரப்பிக்கொண்டேயிருப்பார்கள்.
‘இந்த இடத்தில் இவன் எதுக்கு இதைப் பதிவு பண்றான். ஒருவேளை அந்த பிக்பாக்கெட் ஆசாமியே நீதானாடா?’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்துவிட்டேன். நீங்கள் நினைப்பது ஒருவகையில் சரி; நிற்க! நாங்கள் அனைவரும் தோற்றத்தில் வேண்டுமானால் அந்த ரகமாக இருக்கலாம். ஆனால், கையும் மனசும் ரொம்பச் சுத்தம் என்பதைப் பதிவுசெய்துகொள்கிறேன். எங்களுக்கே அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

கேதார்நாத் சிவனை தரிசித்துவிட்டு டென்ட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, விவேக் அண்ணன் ஒருவருடன் சீரியஸாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் அந்த ஊர் ‘படித்துறைப் பாண்டி’போல. என்னவென்று விசாரித்தபோது, விவேக் அண்ணனை வெளியூர்க்காரர் என்று அறிந்துகொண்ட அண்ட ஆசாமி, அவர் தரிசனம் முடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு அணுகியிருக்கிறார்.
அப்படி அணுகிய ஆசாமி, ‘‘பையா… வி.ஐ.பி தர்ஷன் சாயியே க்யா… ஹம் ஜல்தி கதம் கர் சக்தே ஹேய்ங். க்யூ மே ஆனே ஜரூரத் நஹி’’ என்றிருக்கிறார். (வரிசையில் நிக்கத் தேவையில்லை; சீக்கிரமா வந்துடலாம்; விஐபி தரிசனம் காண்பிக்கிறேன்!)
விவேக் அண்ணனுக்குப் பெருமிதமாக இருந்திருக்க வேண்டும். அப்படியே மெயின்டெயின் செய்துகொண்டிருப்பார்போல. ‘‘விஐபி தரிசனம் எவ்வளவு, டிக்கெட் இருக்கா?' என்று கேட்க, ஆசாமியோ, ‘டிக்கெட்டெல்லாம் இல்லை, நானே அழைத்துச் செல்வேன். ஒரு ஆளுக்கு ஃபைவ் தவுசண்ட் ஒன்லி' என்றார்.
விவேக் அண்ணன் காசு விஷயத்தில் ‘கன்னிராசி’ கவுண்டமணி மாதிரி. சிக்கென்று இருப்பார். `எங்க பட்ஜெட்டில் பாதி சொல்றானே...’ என்று புலம்பியபடி ஜெர்க் அடித்து வந்துவிட்டார்.
அதன் பிறகு விசாரித்தபோதுதான் தெரிந்தது. கோயிலுக்கு வெளியே, வரும் வழியில் ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதிக்கிறார்கள். அதுவும் விஐபி கவனிப்புடன் என்பதை அறிந்து கொண்டோம். ஆனால், இது லீகலாக நடப்பதாகத் தெரியவில்லை. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், முன்னே பின்னே தெரியாதவர்களிடம் ஃபைவ் தவுசண்ட் கொடுத்து ஏமாறவும் வாய்ப்பிருக்கிறது. ‘‘அடேய், இதுக்கு நாங்க ஹெலிகாப்டர்லேயே போயிருப்போமேடா’’ என்று அங்கலாய்த்தான் குட்டிப் பிரசன்னா.

இதற்கிடையில் ரவி முன்னதாகவே டென்ட்டுக்குச் சென்றுவிட்டார். நாங்கள் பராக்கு பார்த்துக்கொண்டே கொஞ்சம் தாமதமாகச் செல்ல, டென்ட் வாசலில் ரவி பதற்றமாக நின்றுகொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தபோது, ரவி உள்ளே வரும்போது, யாரோ ஒருவர் அங்கிருக்கும் போர்வைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ரவி ‘‘தும் கோன் ஹே’’ என்று அதட்ட, அந்த ஆசாமி தெறித்து ஓடியிருக்கிறார்.
நாங்கள் முக்கியமான பொருள்கள் எதையும் அங்கு வைத்துவிட்டுப் போகவில்லை என்றாலும், சிறு பதற்றம். அவரவர் உடைமைகளை செக் செய்துகொண்டோம். ரிலாக்ஸ்டாகவும், கொஞ்சம் பதற்றமும் கலந்துகட்டி `லப்டப்’ அடித்தது எங்களின் இதயம்.
ரவி சரியான நேரத்துக்கு வந்ததால் எதுவும் நடக்கவில்லை. இதை டென்ட் உரிமையாளரிடம் சொன்னபோது அவர், ‘டென்ட்டுக்கு வெறும் ஜிப்தான்; கதவெல்லாம் கிடையாது. நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்' என்று கடிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், ‘‘உங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது. சீக்கிரம் காலி செய்யுங்கள்’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
மதியம் ஒரு மணி இருக்கும். ஆனால், பார்ப்பதற்கு 4 மணி வானம் மாதிரி இருந்தது வெளியே. நன்கு இருட்டிக்கொண்டு வர, அனைவரும் டென்ட்டை காலி செய்துவிட்டு மலை இறங்க ஆரம்பித்தோம். வாங்கி வைத்திருந்த நூறு ரூபாய் ரெயின் கோட்டைத் தற்செயலாக மாட்ட, மழை தூற ஆரம்பித்தது.
மீனு அக்கா, மருது, குட்டிப் பிரசன்னா மூன்று பேரும் குதிரையில்தான் வருவேன் என்று சொல்ல, வினோத் அண்ணன் குதிரைக்காரரிடம் பேசி அவர்களை ஏற்றிவிட்டார். குட்டிப் பிரசன்னா ஏறிய குதிரைக்கு என்ன பிரச்னையோ, நகரவே இல்லை, அப்புறம் அடித்துப் பிடித்து நகர்த்தினார்.

அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஆஹா, அப்போ மருது; இப்போ பிரசன்னா' என்று நினைத்துக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பிவைத்தோம்.
நாங்கள் இறங்க ஆரம்பிக்கையில், லேசான சாரல் அடித்துக்கொண்டே இருந்தது. நம் கெஜட் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்து விட்டதால், ‘மழை’ ஷ்ரேயா மாதிரி ‘சின்ன மழையே’ எனும் ஃபீலிங்கில் நனைந்தபடி ரவுசு பண்ணிக்கொண்டே நகர்ந்தோம்.
மழைச்சாரலுக்கு நடுவே அந்த அழகிய இமயம் பேரழகாகத் தெரிந்தது. இதெல்லாம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சுகம். கடுமையான மழை என்றால் சமாளித்திருக்க முடியாது. இந்த இதமான நிகழ்வு, அப்பன் சிவனைப் பார்க்க வந்ததற்காக இயற்கையின் அரசியான பார்வதித் தாய் கொடுத்த பரிசாக நினைத்துக்கொண்டோம்.
வரும் வழியில் ஒரு டீக்கடையில் அமர்ந்து பிளாக் டீ அடித்துக் கொண்டே அவரவர் சொந்தக் கதைகளைப் பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தோம். விவேக் அண்ணன், தனக்கு ஏற்பட்ட விபத்து, அதிலிருந்து அவர் மீண்டுவந்த கதையைச் சொன்னார். கேட்பதற்கு நெகிழ்வாக இருந்தது. அந்த நான்சென்ஸ் உரையாடலில் எங்களுக்குள் ஒரு புரிதலும் நெருக்கமும் ஏற்பட்டன. இந்தத் தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த அந்தக் களைப்புக்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.

‘ஏறுவது கடினம்; இறங்குவது சுலபம்’ என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு, இறங்குவது அத்தனை சுலபமாக இல்லை. கால்களை இறுக்கமாக வைத்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தது. அது அதிக கால் உளைச்சலைத் தந்தது. இதில் குதிரைச் சாணி, வழுக்கலை ஏற்படுத்தும் மழை நீர்ப்பாதை, குதிரை டிராஃபிக் என்று கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது ட்ரெக்கிங். ‘ச்சே... குதிரையிலேயே போயிருக்கலாமோ’ என்று குட்டிப் பிரசன்னா, மீனு அக்கா, மருதுவை நினைத்துப் பொறாமைப்பட்டோம். இதில் விவேக் அண்ணனுக்கு வேறு லேசாகக் காலில் தசைப்பிடிப்பு. இறங்குவது இன்னும் பயமுறுத்தியது.
தண்ணீர் பாட்டில், ஃபுரூட் சாலட் - இப்படி எதை எடுத்தாலும் நூறு ரூபாய் என்றார்கள். ‘பட்ஜெட் தாங்காதுப்பா’ என்று எதுவும் சாப்பிடவில்லை. சுமார் ஏழு மணி நேர நடைக்குப் பிறகு அடிவாரத்தை அடைந்தோம். அங்கு சிக்னல் கிடைக்க, மீனு அக்கா டீம் நான்கு மணி நேரத்திலேயே வந்துவிட்டதாகச் சொன்னார். அவர்களுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மலை அடிவாரத்திலேயே ஒரு வடகிழக்கு மாநில சிஸ்டர் வைத்திருந்த கடையில் இரவு உணவை ஒரு கட்டு கட்டினோம். அவர்களும் எங்களை நன்கு கவனித்தனர். பிறகு டிரைவர் பையாவுக்கு போன் செய்து பார்க்கிங் ஏரியாவுக்கு வரச் சொல்லி ரூமுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
குட்டிப் பிரசன்னா செய்த குதிரை ஸ்டன்ட், நெட் கிடைத்தவுடன் இன்ஸ்டாகிராம் போன எங்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி, இப்படி சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பேசிக்கொண்டே பத்ரிநாத் போவோம் வாங்க!
- தொடரும்