கட்டுரைகள்
Published:Updated:

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 6 - வெள்ளத்தில் கேதார்நாத்தை காப்பாற்றிய பீம் பாறை!

கேதார்நாத்
பிரீமியம் ஸ்டோரி
News
கேதார்நாத்

கேதார்நாத் கோயிலுக்குள் செல்லும்போது அதிகாலை, வெளியே வரும்போது நன்கு விடிந்திருந்தது

உண்மையிலேயே சிவபெருமானைப் பார்த்தாலே, ஒரு வகையில் மற்ற பல கடவுள்களுக்குப் பொறாமை தோன்றலாம். நிற்க! அவர்தான் கடவுள்களுக்கெல்லாம் இறைவன், பெருமான்களுக்கெல்லாம் பெருமான் என்பதனால் அல்ல! அவர் இருக்கும் இடம் அப்படி!

பிள்ளையார்/முருகன் இவர்களுக்கெல்லாம் பிள்ளையார்பட்டி, மருதமலை, பழனி – இப்படி சில தலங்கள் இருக்கின்றன. ஆனால், சிவபெருமான் அப்படி அல்ல. அவரின் வசிப்பிடமே இமயமலைதான் என்கிறார்கள். கைலாய மலை, அதன் இயற்கைச் சூழலால் பிரபலமானதைத் தாண்டி, சிவபெருமானும் ஒரு முக்கிய காரணம்.

நீங்கள் கவனித்தீர்கள் என்றால் தெரியும், சிவபெருமானைப் பற்றிய பெரும்பாலான புராணங்களில்… அவர் முருகன், பிள்ளையார், மாரியம்மன் மாதிரி எங்காவது கோயம்புத்தூரிலோ, பழனிக்குப் பக்கத்திலோ… அட காஷ்மீரில்கூட இருக்க மாட்டார். பெரும்பாலும், இமயமலையில்தான் சுற்றிக் கொண்டிருப்பார். ஒரு காட்டுக்கு சிங்கத்தைவிட்டால் வனத்தின் அரசனாக வேறெதையும் கற்பனை செய்து பார்க்க முடியாதல்லவா! அதுபோல்தான் சிவனும்! அவருடைய கட்டுடல் மேனியும் கம்பீரமும் அவரே எழுந்து வந்து கையெழுத்துப் போட்டது மாதிரி படுத்துக் கிடக்கும் அழகான மலைகளுக்கு நடுவே… சில்லென்ற ஓடைகளுக்கு நடுவே… சூரியனையோ சந்திரனையோ உரசிக்கொண்டு அழகாகத் தெரியும் கைலாய மலை போன்ற இடத்துக்கு சிவபெருமானை விட்டால் வேறு கடவுள்களை நினைத்துப் பார்க்க முடிவதில்லை; அவ்வளவு மகத்தான கடவுள்!

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 6 - வெள்ளத்தில் கேதார்நாத்தை காப்பாற்றிய பீம் பாறை!

இங்கேயும் அப்படித்தான் கேதார்நாத் கோயிலை விட்டு வெளியே வந்தபோதுதான் தெரிந்தது. அதன் பிரமாண்ட அழகு, அசாத்திய சூழல் என்று சிவனின் குணாதிசயத்திற்கு ஏற்றபடி காட்சி அளித்தது இமயமலை. நேற்று 30 கி.மீ நடந்து வந்த களைப்பில், சிவனையே ‘அப்புறமா வாங்க’ என்று சொல்ல நினைத்ததற்கு மன்னிப்புக் கோரினேன்.

கேதார்நாத் கோயிலுக்குள் செல்லும்போது அதிகாலை, வெளியே வரும்போது நன்கு விடிந்திருந்தது. மலை ஏறி வரும்போது, நாங்கள் பார்த்த அந்த வால்பேப்பர் காட்சிகளுக்கு நடுவே நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த தருணம் மனதுக்குள் ஒருவித பரவச நிலை. ‘ப' வடிவில் சுற்றி சிகரங்கள், நடுவில் கேதார்நாத் கோயில், அந்தக் கோயிலின் பின்புறம் மதிமயக்கும் பனிமலை. இறைவன் எங்கும் இருப்பார்; எதிலும் இருப்பார் என்றால், நான் காணும் காட்சிதான் கடவுளோ என்று உணர வைக்கும் மொமென்ட் அது. ‘என்னடா கமல் மாதிரி புரியாமப் பேசுற’ என்று என்னை நீங்கள் திட்ட நினைத்தால்… இதைக் கேளுங்கள்.

‘‘கடவுள் இருக்காருன்னு சொல்லலை; இல்லைன்னும் சொல்லலை! ஆனா இப்போ நம்புறேன்! இந்த மலைதான் கடவுள்; இந்த அருவிதான் கடவுள்; நம்மை இங்கே வர வைத்தது கடவுளின் அருள்!’’ என்று நிஜமாகவே கமல் மாதிரி ஏதோ பேசிக்கொண்டிருந்தான் குட்டிப் பிரசன்னா. உங்களுக்குப் புரியாது; எனக்குப் புரிந்துவிட்டது; அந்தப் பரவச நிலை யாருக்கு வாய்த்தாலும் இப்படித்தான் உணர்வார்கள்; உளருவார்கள்.

பரவச நிலையில் இருந்து வெளியே வரக் கொஞ்ச நேரம் பிடித்தது. கோயிலைச் சுற்றி நிறைய சன்னியாசிகளைக் காண முடிந்தது. அவர்களிடம் ஆசி வாங்குவதும், செல்ஃபி எடுத்துக்கொள்வதுமாய் பக்தர்கள் பிஸியாக இருந்தனர். மீனு அக்காவும் சின்னப் பிரசன்னாவும் ஒரு பெண் சன்னியாசியிடம் சென்று ஆசி வாங்கியதுடன், இருவருமே அவரிடம் திலகமிட்டுக்கொண்டனர். அந்தப் பெண் சன்னியாசி, மீனு அக்காவைப் பார்த்து, ‘தமிழ்நாடா?' என்று கேட்டார். ‘ஆம்!’ என்றதும், தன் கரம் உயர்த்தி ‘ஓம்... மீனாட்சி' என்றார். அதைக் கேட்டதும், எனக்கும் மருதுவுக்கும் ஒரு பெருமிதம்.

அங்கிருக்கும் சன்னியாசிகள் பலர் தங்களைப் புகைப்படம் எடுக்க விடுவதில்லை. அதை மீறி எடுப்பவர்கள்மீது சன்னியாசிகள் கோபம் கொள்வதையும் பார்க்க முடிந்தது. நல்லவேளையாக நடிகர் சிவகுமார் மாதிரி போனை இமயமலையில் இருந்து தட்டியெல்லாம் விடவில்லை; ‘சன்னியாசிகளுக்குக் கோபம்லாம் வருமா’ என்று பாவமாகக் கேட்டான் குட்டிப் பிரசன்னா.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 6 - வெள்ளத்தில் கேதார்நாத்தை காப்பாற்றிய பீம் பாறை!

‘நீ போட்டோ எடுக்கவா நான் சன்னியாசம் வந்தேன்' என்று ஒரு சன்னியாசி ஒருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயம்தான். ஆனால் சில சன்னியாசிகள், காணிக்கை வாங்கிக் கொண்டு அனுமதித்தனர். ‘‘ஆஹா, நல்ல வியாபாரமா இருக்கே; பேசாம நாமளும் சன்னியாசி ஆகிடலாமா’’ என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்க, வினோத் அண்ணன் என் தோள்மீது கை வைத்து ஏதோ சொன்னார். சட்டென்று என் பதிலை எதிர்பாராமல், எங்களைக் கோயிலுக்குப் பின்புறமாக அழைத்துச் சென்றார். நாங்களும் ஆர்வமாகச் சென்று பார்த்தோம். அங்கே ஒரு பெரும்பாறை கிடந்தது.

அந்தக் கல்லின் பெயர் ‘பீம் ஷிலா' (Bheem Shila). மகாபாரதத்தில் வரும் பீமன் போன்று சக்தி வாய்ந்த பாறை என்று அதற்கு அர்த்தமாம். இந்தப் பாறை, கோயிலுக்குப் பின்னால் வந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு உண்டு.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் 2013-ம் ஆண்டு, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பெரும் மேக வெடிப்பு, அதாவது ‘Cloudburst' ஏற்பட்டது. மேகங்கள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் மழை பொழியும் நிகழ்வு அது. அப்படி ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் உருவான வெள்ளத்தில் மிதந்து வந்த பெரிய பாறை ஒன்று, கேதார்நாத் கோயிலின் பின்புறம் சிக்கிக்கொண்டது. அப்பாறை வெள்ள நீரைக் கோயிலுக்கு இருபுறமும் பிரித்துவிட்டது. இதனால் வெள்ளத்தால் கோயிலுக்குப் பெரும் சேதம் உண்டாவது தவிர்க்கப்பட்டது. இப்படிக் கோயிலைக் காத்த பாறையை மக்கள் ‘பீம் ஷிலா' என்று பெயரிட்டு தெய்வப் பாறையாக வணங்குகிறார்கள்.

ஆனாலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வை வினோத் அண்ணன் விளக்கியபோது, ஏதோ ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு. நிஜமாகவே அது பீம் பாறைதான்.

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 6 - வெள்ளத்தில் கேதார்நாத்தை காப்பாற்றிய பீம் பாறை!

‘இதேபோல் எங்களையும் காத்தருள வேண்டும்’ என்று இயற்கை அன்னையிடம் வேண்டிவிட்டு, ஆதி சங்கரர் ஜீவ சமாதி நோக்கி நடந்தோம். ஆதி சங்கரர் இந்தியாவில் பல கோயில்களில், ஆன்மிக அன்பர்களிடம், ஏன் பகுத்தறிவுவாதிகள் வரை பிரசித்தம். அவர் ஜீவசமாதி கேதார்நாத்தில்தான் அமைக்கப்பட்டது. பசுமையான இமயமலைகளுக்கு நடுவே அங்கே அமைந்திருக்கும் 12 அடி உயரம் 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலை, தெய்விகமும் அமைதியும் கொண்டு காட்சி அளித்தது. ஆதிசங்கரரை வணங்கிவிட்டு டென்ட் நோக்கிக் கிளம்பினோம்.

வரும் வழியில் உணவருந்திவிட்டு மணியைப் பார்த்தால் 12. மேகங்கள் மழை வரும் அறிகுறியைக் காட்டின. இருந்தும் நாங்கள் பயப்படும் நிலையில் இல்லை; காரணம், எங்களிடம் வேகமாகச் செல்ல தெம்பும் இல்லை. சுந்தர்.சியைப் பார்த்து எகத்தாளமாக வடிவேலு சொல்வதுபோல், ‘வாடா, நீ எங்க ஏரியாவுக்கு வாடா' என்று வானத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும் போல் தோன்றியது. டென்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

– (தொடரும்)