குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! 8 - கேதார்நாத்தில் அஜித்... அந்த நேரத்தில் ஜஸ்ட் மிஸ்!

காலை எட்டு மணி இருக்கும். குட்டிப் பிரசன்னாவும் மீனு அக்காவும் பேசிக்கொண்டிருப்பதுபோல் சத்தம் கேட்க, எழுந்து அறைக்கு வெளியே சென்று பார்த்தேன்.
நம் வாழ்க்கையில் ஜாலியான காலகட்டம் என்றால் அது பள்ளி - கல்லூரிக் காலகட்டம்தான். அந்தக் காலகட்டத்தில் நமக்கு நடந்த துயரங்களைக்கூட இப்போது நினைத்தால் நகைச்சுவையாகத்தான் இருக்கும். நண்பர்களுடன் கூடிப் பேசும்போது இன்னும் நமக்குத் தெரியாத பல சுவாரஸ்யங்கள் வெளிவரும். அப்படியான பசுமையான நினைவுகளாகத்தான் இந்த கேதார்நாத் பயணம் எங்களுக்கு அமைந்திருந்தது.
முதல் நாள் கேதார்நாத்தில் இருந்து இறங்கி வந்து களைப்பில் நாங்கள் நேரடியாகத் தூங்கச் சென்றுவிட்டோம். பெரிய பிரசன்னா மட்டும் ஓர் அறிவிப்பைக் கொடுத்தான். ‘எல்லாரும் காலையில் ஏழு மணிக்கே கிளம்ப வேண்டும்' என்று. கிரிகாலன் மேஜிக் ஷோ பார்க்க வந்த ஆடியன்ஸ் போல மாறி, ‘அதெல்லாம் முடியாது' என்றபடி உறங்கச் சென்றுவிட்டோம். சிறிது நேரம் போராடிவிட்டு, அவனும் உறங்கிவிட்டான் பாவம்.

காலை எட்டு மணி இருக்கும். குட்டிப் பிரசன்னாவும் மீனு அக்காவும் பேசிக்கொண்டிருப்பதுபோல் சத்தம் கேட்க, எழுந்து அறைக்கு வெளியே சென்று பார்த்தேன். இருவரும் வினோத் அண்ணனிடம் ஏதோ சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். என் கண்ணில் கட்டியிருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் துடைத்துவிட்டுக் கவனித்தபோதுதான் தெரிந்தது. நேற்று வினோத் அண்ணன் பிடித்துக் கொடுத்த குதிரைக்காரர் ஏதோ சொதப்பியிருக்கிறார் என்று. ‘நாங்க சவாரி செய்ய குதிரை கேட்டா, எங்க மேல சவாரி செய்ற மாதிரி குதிரையைப் பிடிச்சுக் கொடுத்திருக்க’ என்று சண்டை.
மருது, மீனு அக்கா, குட்டிப் பிரசன்னா மூவரையும் வினோத் அண்ணன்தான் ஒரு குதிரைக்காரரிடம் பேசி அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில் அவர்கள் பயணம் நன்றாகத்தான் இருந்தது. சிறிது தூரம் போகப் போக குதிரை லேசாக முரண்டு பிடித்திருக்கிறது. ஒரு சிறிய ஓடையைக் கடக்கும்போது, குதிரைக்காரர், குதிரையைச் சற்று ஓங்கி மிரட்ட, குட்டிப் பிரசன்னா குதிரை மிரண்டு கீழே விழுந்துவிட்டது. நம்மாளு சுட்டிப் புயலாக சாதுர்யமாகத் தப்பித்துவிட்டார். குதிரைக்கும் குட்டிப் பிரசன்னாவுக்கும் எந்தச் சேதமும் இல்லை. கடைசி ‘தோ கிலோமீட்டரில்’ மீனு அக்கா குதிரை ஏதோ பிரச்னை பண்ண, மீனு அக்கா இறங்கி நடந்தே வந்்திருக்கிறார். மருது ப்ரோ மட்டும் எப்படியோ பாதுகாப்பாக வந்துவிட்டார்.
இதற்கிடையில் அறையில் இருந்து ரவி பதற்றத்தோடு வெளியே வந்தவர், தன் செல்போனைப் பார்க்கச் சொன்னார். வாங்கிப் பார்த்தால் அதில் அஜித் ஒரு ஹெலிகாப்டர் முன் நின்றுகொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படம் இன்ஸ்டாவில். அதைப் பார்த்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கு ரவி' என்றேன். அதற்கு ரவி, ‘யோவ், அது நேத்து கேதார்நாத்ல எடுத்தது, தல அங்கதான் வந்துருக்கார்; நாம மிஸ் பண்ணிட்டோம்' என்றார். அதைக் கேட்டவுடன் எனக்கும் அதிர்ச்சிதான். நாங்கள் இந்த யாத்திரையை ஆரம்பிக்கும்போது, அஜித் லடாக்கில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார். திடீர்னு நம்ம ஏரியாப் பக்கம் வந்தால் பதற்றம் ஆகுமா இல்லையா!

நான் சற்று யோசித்துவிட்டு, ‘அடுத்து பத்ரிநாத் வருவாரோ' என்று விளையாட்டாகச் சொல்ல, அடுத்த கணமே ரவி பரபரப்பாகி அனைவரையும் கிளம்பச் சொன்னார். எங்கள் திட்டமும் அடுத்து பத்ரிநாத் செல்வதுதான். ஒருவேளை அடுத்து அஜித் பத்ரிநாத் வந்தால் மிஸ் செய்துவிடக் கூடாது என்கிற ஆர்வம் ரவிக்கு. ரவியும் நானும் சிலரை மிரட்டிப் புறப்பட வைத்தோம், சிலரைக் கெஞ்சிப் புறப்பட வைத்தோம். தீபாவளி நேரத்துல டிக்கெட் போடுற ஆம்னி பஸ்காரங்க சகட்டுமேனிக்கு எல்லோரையும் வண்டில ஏத்துவதுபோல் குளிக்காதவன், பல்லு விளக்காதவன்னுகூட பார்க்காமல், அனைவரையும் காரில் ஏற்றி பத்ரிநாத் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.
இந்த முறை நானும் ரவியும் ஜன்னல் சீட்டைப் பிடித்துக்கொண்டோம். குட்டிப் பிரசன்னா ‘எனக்கு வாந்தி வருமே' என்று எங்களை மிரட்ட, ரவி ‘இந்தா இந்த பிளாஸ்டிக் கவர வச்சுக்கோ, வாந்தி வந்தா இதுல எடு' என்றார். அதைச் சிரித்தபடி வாங்கிக்கொண்டான் குட்டிப் பிரசன்னா. நானும் ரவியும் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டு, எங்கேயாவது BMW பைக்கில் வெள்ளைத் தாடியுடன் ஏதாவது ஹெல்மெட் தலை தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தோம். மருது ப்ரோ டைமிங்காகத் தன் புளூடூத்தில் ‘கற்றது தமிழ்' படத்தில் இருந்து, ‘பறவையே எங்கு இருக்கிறாய்' பாட்டைப் போட்டார். ஆமா, எங்களுக்கு இப்போ அஜித்தான் ஆனந்தி! நாங்களும் பாக்குறதுக்கு ‘கற்றது தமிழ்’ ஜீவா கேரக்டர் மாதிரி… பல நாள்கள் துவைக்காத சாக்ஸ், ஷேவ் செய்யப்படாத தாடி என்றுதான் இருந்தோம். இதில் ஒரு விஷயம் புரிந்தது – அஜித்துக்கு எங்களைப் போன்ற யாத்திரை ரைடர்களைப் பார்க்கக் குடுத்து வைக்கவில்லை; ஜஸ்ட் அவ்வளவுதான்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தல!

‘பறவையே எங்கிருக்கிறாய்' பாட்டு, எங்கள் மனநிலைக்குப் பொருந்தியதோ இல்லையோ, அந்தப் பயணச் சூழலுக்குப் பொருந்தியது. எதிரே நெருங்கி வருவதுபோல் பாசாங்கு செய்யும் சிகரங்கள், எங்களைக் கடந்து செல்லும் பச்சை மலைகள், அப்பப்போ தூறி விளையாடும் மழை, எங்கள் கூடவே தாவி வரும் கங்கை என்று - கூடவே யுவன் இசையும் கலக்க… அந்தச் சூழல் மேலும் அழகானது. மழை அதிகமாக இல்லை என்றாலும், அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. வாகனங்களை மாற்றுவழியில் அனுப்பி வைத்தனர்.
நிலச்சரிவால் வெகுநேரப் போக்குவரத்துத் தடை, மாற்றுப்பாதையில் சுற்றியதென்று பல மணி நேரப் பயணத்திற்குப் பின் பத்ரிநாத் வந்தடைந்தோம். முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்த அறைக்குச் சென்றுவிட்டோம்.
மறுநாள் காலையில் காத்திருந்த பிரமாண்டம், திட்டத்தில் திடீர் மாற்றம், பெரிய பிரசன்னா அழைத்துச் சென்ற தரை தொடா அதிசய அருவி என்று பல அதிசயங்கள் பார்க்கலாம்!
லெட்ஸ் வைப் வித் பத்ரிநாத் டுமாரோ!
- தொடரும்