கட்டுரைகள்
Published:Updated:

இந்தியாவின் கடைசிக் கிராமத்தில்… கடைசி டீக்கடையில்… கடைசி அருவியில்..!

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை!
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை!

குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 9

ஒரு முறை புத்தரிடம், ‘‘வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?’’ என்று கேட்டாராம் ஒரு சீடர். அதற்கு புத்தர், ‘‘உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. நேரம் இலவசம்; ஆனால் அது விலைமதிப்பற்றது. நீங்கள் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். நீங்கள் அதை வைத்திருக்க முடியாது. ஆனால் நீங்கள் அதைச் செலவிட முடியும்’’ என்றார் புத்தர்.

இந்தப் பொன்மொழியை எத்தனை முறை எத்தனை நபர்கள் நம்மிடம் போதித்திருப்பார்கள்! பலமுறை அதை அசதிக்குக் கேட்டு வசதிக்கு மறந்திருப்போம். அந்த நிராகரிப்பின் விளைவாக ஏற்படும் பாதிப்பை உணரும்போது காலம் கடந்துபோயிருக்கும். அப்படியான நிகழ்வு இங்கேயும் நிகழ்ந்தது.

முதல் நாள் செய்த நெடுந்தூரப் பயணம், அங்கு நிலவிய அதிகப்படியான குளிர் - எங்களை மிகவும் களைப்படையச் செய்திருந்தது. முக்கியமாக எனக்குக் காய்ச்சல் வருவதுபோல் அறிகுறிகள் தோன்ற, வினோத் அண்ணன், தான் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்து காய்ச்சல் மாத்திரையும் ஒரு ஆப்பிளும் கொடுத்தார். அவ்விரண்டையும் சாப்பிட்டுவிட்டு நான் தூங்கிவிட்டேன். கடுமையான குளிர், உடல் வலி என்று அந்த இரவைக் கடப்பதற்குச் சற்று கடினமாகவே இருந்தது. (இந்தக் காய்ச்சலுக்கும் புத்தரின் ஸ்டேட்மென்ட்டுக்கும் எப்படிச் சம்பந்தப்படுத்தியிருப்பேன் என்று முடிந்தால் கமென்ட்டில் சொல்லுங்களேன்!)

இந்தியாவின் கடைசிக் கிராமத்தில்… கடைசி டீக்கடையில்… கடைசி அருவியில்..!

நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பெயர் ‘ஸ்ம்ருதி பவன் ஹோம் ஸ்டே'. வினோத் அண்ணன் முன்னதாகவே இணையதளத்தில் நேரடியாக புக் செய்திருந்தார். அங்கு மட்டும்தான் ஓர் அறையில் நான்கு பேர் தங்கிக் கொள்வதுபோல் இருந்தது. ஓர் அறைக்கு 2000 ரூபாய். அதாவது, தலைக்கு 500 ரூபாய். விடுதிக்கு நேரில் வந்து பார்த்தபோது, அறைகள் நன்றாக இருந்தன. முக்கியமாகக் கழிப்பறைகள் மிகவும் சுத்தமாக இருந்தமையால், ஓகே சொல்லிவிட்டோம். அங்கு காலையில் குளிப்பதற்கு வெந்நீருக்கு மட்டும் முன்னதாகவே சொல்லிவிட வேண்டும். நம் அறைக்கே கொண்டு வந்து தருவார்கள். ஒரு வாளி வெந்நீர் ஐம்பது ரூபாய். சாப்பாடும் சொல்லிவிட்டால் அருகில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வருவார்கள். ‘ஸ்ம்ருதி பவன்' மிகப்பழைய விடுதியாக இருக்க வேண்டும். அவர்கள் பராமரிக்கும் லெட்ஜரைப் பார்க்கும்போதே அது தெரிந்தது. பெரிதாக வித்தியாசமாக இருந்தது.

எங்களுக்கும் காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றுதான் எண்ணம். கொஞ்சம் அலுப்பாக இருக்க, சற்று அசால்ட்டாக விட்டுவிட்டோம். ரவி மட்டும் காலை ஆறு மணிக்கே எழுந்து வெந்நீர் வாங்கிக் குளித்துவிட்டு இரண்டு அறைக்கும் மாறி மாறி வந்து ‘கடைசி விவசாயி’ மாயாண்டி தாத்தா மாதிரி, ‘எப்பா போலாமா, எப்ப கிளம்பலாம்' என்று கேட்டுக்கொண்டிருந்தார். நாங்களும் அந்தப் படத்தில் வரும் நீதிபதி அம்மாவைப் போல், ‘அப்படில்லாம் வர முடியாது, கொஞ்சம் பொறுங்க' என்று சொல்லி அவரை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப ஒன்பது மணி ஆகிவிட்டது. இதில் ரவி மட்டும் செம கடுப்பில் இருந்தார்.

இந்தியாவின் கடைசிக் கிராமத்தில்… கடைசி டீக்கடையில்… கடைசி அருவியில்..!

நாங்கள் விடுதியில் இருந்து வெளியே கிளம்பும் வரை நல்ல பனிமூட்டம். எதிரே என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. நாங்கள் பத்ரிநாத் கோயிலுக்குக் கிளம்பும்போது, பனி மூட்டம் விலகி எங்கள் எதிரே பிரமாண்டமான மலை தோன்றியது, அதில் பால்வெள்ளை நிறத்தில் அருவி; அதை உரசி ஓடும் அலக்நந்தா நதி. அந்த மலையின் பின்புறம் மங்கலாக ஒரு பனிமலை, ஆஹா என்ன பிரமாண்டம்! இதை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பத்ரிநாத் கோயிலுக்கு அருகே பாய்ந்தோடும் இந்த அலக்நந்தா நதி, பாகீரதி ஆற்றுடன் உத்தரகாண்ட்டில் உள்ள தேவப்பிரயாகையில் இணைகின்றது. அதுவே கங்கை ஆற்றின் தொடக்கமாகிறது.

நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோயில் 200 மீட்டர் தூரம் இருக்கும். மெல்ல நடந்து ஆற்றுப் பாலத்தைக் கடந்து கோயில் அருகே சென்றோம். தரிசனத்திற்காக மிக நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. இந்த வரிசையில் நின்றால் தரிசனத்திற்கு மாலை ஆகிவிடும். என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கையில், பெரிய பிரசன்னாவுக்கு மண்டையில் பல்பு எரிந்ததாகச் சொன்னான். ‘‘நாளைக்குப் போக இருக்கும் வசுதாரா ஃபால்ஸ் இன்னைக்கே போயிடலாம்; நாளை காலை சீக்கிரம் வந்து தரிசிப்போம்'’ என்று இளித்தான். எங்களுக்கும் அது சரி என்று பட்டது. உடனே ப்ளான் மாற்றப்பட்டது. ஓவர் டு வசுதாரா அருவி.

இந்தியாவின் கடைசிக் கிராமத்தில்… கடைசி டீக்கடையில்… கடைசி அருவியில்..!

பெரிய பிரசன்னாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வசுதாரா அருவி மீது மிகுந்த ஆர்வம். ‘அது, தரை தொடா நீர்வீழ்ச்சி, கரை படா நீர்வீழ்ச்சி, புனிதமான அருவி, மூலிகை அருவி, இது நம்மீது பட்டால் குளிரும் நீர்வீழ்ச்சி' என்று நமது டி.ராஜேந்தர் மாறி ஒரே பில்டப்பு வேறு தூக்கத்தில். இதைக் கேட்டு ரவி, ‘இஸ் இட்' என்று ஆர்வமானார். சின்னப் பிரசன்னாவுக்கு, ‘ஆஹா, நம்மள திரும்பி நடக்க விட்டுடுவாங்க போலயே' என்று பயம். வசுதாரா அருவி செல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் கடைசி கிராமத்துக்கு ட்ரெக்கிங் அடிக்க வேண்டும். இந்தியா மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ள ‘மணா' கிராமத்தைக் (MANA Village) கடந்து 10 கிலோமீட்டர் மலைமேல் ஏறிச் செல்ல வேண்டும்.

எங்களை அழைத்துச் சென்ற டிரைவர் பையா, கிராமத்தின் நுழைவு வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றார். கிராமத்திற்குள் மெல்ல நடக்க ஆரம்பித்தோம்; சுற்றி நிறைய கடைகள் இருந்தன. அந்தச் சூழல் ஒரு கிராமம்போல் இல்லை, ஏதோ கூட்டம் கம்மியான ஒரு பாண்டி பஜாருக்குள் நுழைந்ததுபோல்தான் இருந்தது. கிராமத்தின் மறு எல்லையில், ‘India's last tea shop' என்று போட்டிருந்தது. ஆமாம்! அந்தக் கடை இந்தியாவின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்தக் கடைக்கு அந்தப் பெயர். இன்னும் சில கடைகள் இருந்தன. அவற்றிலும் அப்படித்தான் போட்டிருந்தார்கள். இதைப் பார்த்ததும் மருது புரோ, ‘அப்போ இந்தியாவோட முதல் கடை நம்ம கன்னியாகுமரியில்தான் இருக்கா' என்று ‘சின்ன கவுண்டர்’ செந்தில் மாதிரி பெருமிதமாக முழித்தார். நாங்கள் கவுண்டமணியாய் மாறி அவரை அந்தக் கிராமம் முழுதும் துரத்தினோம்.

இந்தியாவின் கடைசிக் கிராமத்தில்… கடைசி டீக்கடையில்… கடைசி அருவியில்..!

கொஞ்ச தூரத்தில் சரஸ்வதி நதி என்றொரு நதி வீணை மீட்டியது. இதைப் பெயர்ப் பொருத்தத்துக்காகச் சொல்ல வில்லை; நிஜமாகவே அந்த நதிஓட்டம் வீணையை மீட்டுவதுபோல் காதில் இனித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாயும் அலக்நந்தா ஆற்றின் துணை ஆறாம். இது பத்ரிநாத் மணா கிராமத்திற்கு அருகில் உள்ள கேசவ் பிரயாகில் உள்ள அலக்நந்தா ஆற்றில் இணைகிறது. சரஸ்வதி நதி வரை எட்டுப் பேருமே வந்துவிட்டோம். அதன்பிறகு வசுதாராவிற்குப் பத்து கிலோ மீட்டர் ட்ரெக் செய்ய வேண்டும் என்றதும் நாலு டிக்கெட் அவுட்! சின்னப் பிரசன்னா, பெரிய பிரசன்னா, ரவி மற்றும் நான் மலை ஏறுவதற்குத் தொடங்கினோம். ‘எவ்வளவோ பண்ணிட்டோம்; இதைப் பண்ண மாட்டோமா’ என்று வெங்கட் பிரபு பட பிரேம்ஜி மாதிரி கெத்தாக நடந்தோம். கேதார்நாத்தில் 30 கி.மீ நடந்த அந்தத் தைரியம்தான் எங்களுக்குள் இருந்த பிரேம்ஜி கண் முழிக்கக் காரணம்.

பெரிய பிரசன்னாவும் ரவியும் உற்சாகமாக மலை ஏற ஆரம்பித்தனர். சின்னப் பிரசன்னா, ‘‘பெருமாளே, இவிங்ககிட்ட இருந்து எப்படி யாவது என்னைக் காப்பாத்தி உசுரோட ஊர் போய்ச் சேத்துரு, நடக்கவிட்டே கொல்றாய்ங்க’’ என்று புலம்பியபடியே ஏற ஆரம்பித்தான்.

சில்லென்ற அருவி, முயல்போன்ற எலி, மகாபாரதத்தில் வரும் குகை இப்படி நிறைய காத்திருக்கு…

அடுத்த வாரம் வசுதாராவில்!