Published:Updated:

கொழும்பு தொடங்கி திருகோணமலை வரை... 3 நாள்கள், 730 கி.மீ... குட்டி மொப்படில், பெரிய பயணம்! #Travel

டிவிஎஸ் XL இலங்கைப் பயணம்
டிவிஎஸ் XL இலங்கைப் பயணம்

இலங்கையின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை டிவிஎஸ் XL மொப்படை எடுத்துக்கொண்டு ஒரு பயணம் செய்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

வீட்டில் ஒரு டிவிஎஸ் XL வைத்திருப்பவர்கள் என்ன செய்வார்கள்? சந்தைக்குச் சென்று விஜய் சேதுபதி விளம்பரத்தில் வருவது போல பொருள்களை வாங்கிவருவார்கள், அக்கம்பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரர்களைப் பார்க்கச் செல்வார்கள், காலையில் நியூஸ் பேப்பர், பால் பாக்கெட் போட்டுச் சம்பாதிப்பார்கள், தினமும் வீட்டிலிருந்து ஆபீஸ் சென்று வருவார்கள். இப்படி பெரும்பாலும் லோடு அடிப்பதற்கும், சின்னப் பயணங்களுக்கும் பயன்படும் மொப்பட்டில் லாங் ரைடு அடித்தால் எப்படியிருக்கும் என யாரோ ஒருவரின் மெடுளா ஆப்ளகேட்டாவில் உதித்த அந்த ஐடியாதான் இப்போது இந்தக் கட்டுரையாக மாறியுள்ளது.

இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்

ஈழப்போரின் முடிவுக்குப் பிறகு, மீன் பிடித்தல் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்து இப்போது இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை மையப்படுத்தியதாக மாறிவிட்டது. இலங்கையின் நிலப்பரப்பு தமிழ்நாட்டை விடவும் சிறியது. இந்தச் சிறிய நிலப்பரப்பில், சின்ன மொப்படான டிவிஎஸ் XL-ல் ஒரு பெரிய ரைடைத் தொடங்கினோம். மொத்தம் 730 கி.மீ பயணம். 3 நாள், 730 கி.மீ, மேற்கு கடற்கரை நகரமான கொழும்புவிலிருந்து கிழக்குக் கடற்கரையான திருகோணமலை சென்று, நெகம்போ திரும்புவதுதான் திட்டம்.

இலங்கை
இலங்கை

கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி பைகளை எடுக்க கன்வேயர் பெல்ட்டில் நின்றபோது பாலித்தீன் கவர்களில் சுருட்டப்பட்ட பார்செல்கள் வந்தன. ஒரு நபர் கிட்டத்தட்ட 5 முதல் 12 பார்செல்கள் வரை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தபோது "பெட்ஷீட், பிளாஸ்டிக் பை, பட்டுப் புடவை, ஹேண்ட்மேட் டிரெஸ் எல்லாம் இருக்கு. சென்னையில இருக்க வியாபாரிகள் கொடுத்துவிட்டாங்க. இந்த பார்சலை இங்க இருக்கவங்ககிட்ட கொடுத்தா ஒரு பார்சலுக்கு 300 ரூவா தருவாங்க" என்றார்.

விடியற்காலை
விடியற்காலை

குருவிகளிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தால் இந்தியாவில் பார்க்கமுடியாத அத்தனை கார்களும் ஏர்போர்ட் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தன. விமானநிலையத்துக்குள் வேட்டி சட்டையோடு நின்றிருந்த மனிதர்கள் இது நம் ஊரு என்ற உணர்வைக் கொடுத்தால், வெளியே நின்றிருந்த இம்போர்ட்டட் கார்கள் இது வெளிநாடு என்பதைக் காட்டின.

டிவிஎஸ் XL-ல் சாலைப் பயணத்துக்காக வந்த எங்களுக்கு விமானநிலையத்திலிருந்து ஹோட்டல் வரை ஒரு ஸ்பீடு பிரேக்கர்கூட இல்லாதது ஆரம்பத்திலேயே மன நிம்மதி. இங்கே சாலை விதிமுறைகளில் காவல்துறை மட்டுமல்ல; சாதாரண மக்களும் கூட ரொம்பவே கறாராக இருப்பது எங்களுடைய பொறுப்பை நினைவுபடுத்தியது.

இலங்கைச் சாலை
இலங்கைச் சாலை

நோ பார்க்கிங், வெள்ளைக் கோட்டின் மீது வண்டி ஓட்டுதல் எனச் சாலை விதிமுறையை மீறினாலும் 25,000 முதல் 30,000 வரை அபராதம் கொடுக்கவேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ஓராண்டுக்கு ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் எனக் கடுமையான சாலை விதிமுறைகள் இலங்கையில் இருப்பது, தமிழ்நாட்டில் அமல் படுத்தப்படாமல் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இலங்கைப் பயணம்
இலங்கைப் பயணம்

முதல் நாள், முதல் ஸ்டாப் அனுராதபுரம். 260 கிலோ மீட்டர் பயணம். கலே (Galle) சாலை வழியாகப் பயணம் தொடங்கியது. 2017-ல் ஷிக்கார் தவான் 190 ரன் அடித்து இலங்கை அணியைப் பதறடித்த அந்த கலே ஸ்டேடியத்தை நோக்கிச் செல்லும் சாலை இது. இலங்கையின் மிக முக்கியமான வணிகச் சாலை. ஒரு பக்கம் பெரிய பெரிய கட்டடங்களும் இன்னொரு பக்கம் கடல், அதையொட்டி ரயில் பாதையும் இந்தச் சாலையின் அழகு. சாலையைக் கடக்க ஜீப்ரா க்ராஸிங்கில் இருக்கும் பெடஸ்ட்ரியன் பட்டனைத் தட்டினால் 15 நொடி சிவப்பு சிக்னல் விழுகிறது அதற்குள் கடந்துவிடவேண்டும்.

கலே (Galle) சாலை
கலே (Galle) சாலை

அனுராதபுரம் வரும் வழியில் புத்தளம் கடற்கரையில் ஓய்வெடுக்க ஒதுங்கினோம். டால்ஃபின் மற்றும் திமிங்கிலங்களைப் பார்ப்பதற்கு இந்த பீச் ரொம்பவே பிரபலம். அதுமட்டுமல்ல இலங்கையில் தென்னை மரம் அதிகம் விளையும் இடங்களில் இதுவும் ஒன்று. பிளாஸ்டிக் இல்லாத புத்தளம் கடற்கரையோரம், தென்னந்தோப்புக்கு நடுவே மின்சாரம் உருவாக்கும் நெடிய காற்றாடிகளோடு ஒரு தெம்பிளி குடித்து எங்கள் ஓய்வை முடித்துக்கொண்டோம்.

65 கி.மீ வேகத்தில் காடுகளுக்கு நடுவே இருந்த நெடுஞ்சாலை வழியாக அனுராதபுரம் வந்தோம். வழியில் அமைதியாகச் சாலையைக் கடப்பது காட்டு யானைகளா, கும்கி யானைகளா என்ற குழப்பத்தில் தானாகவே வண்டியின் வேகம் குறைந்துவிட்டது. பயத்தை ஓரங்கட்டிவிட்டு இந்தப் பிரமாண்டத்தை ரசிக்கத் தொடங்கிவிட்டது மனம். அனுராதபுரத்தை இலங்கையின் புராதன நகரம் என்று சொல்கிறார்கள். அதற்கேற்ப புத்த மாடாலயங்களையும், நவீன கார்ப்பரேட் கோயில்களையும் கடந்தே எங்கள் ஹோட்டல் இருந்தது.

யானைப் பாதை
யானைப் பாதை

திருகோணமலை செல்லும் வழி முந்தைய நாள் சாலையைப்போல அவ்வளவு அடர்த்தியான காட்டு வழி கிடையாது. ஆனால், இதுவும் யானை கடக்கும் பாதைதான் எனக் கிளம்பும்போது ஹோட்டல் காரர்கள் சொல்லியனுப்பினார்கள். கடைசி வரை யானை தெரியவில்லை. ஆனால், 10 யானை அகலத்துக்கு நிறைய நீர்நிலைகளையும், கழிமுகங்களையும் கடந்தோம். திருகோணமலை இருப்பது இலங்கையின் கிழக்கு மாகாணம். இங்கே, நுழையும்போது செக்போஸ்ட்டுகளில் ராணுவக் கண்காணிப்பு இருந்தது. அதைத் தாண்டியதும் ராணுவம் இல்லை. ஆனால், எங்கெங்கு காணினும் காவல்துறையே.

இலங்கை போலீஸ்
இலங்கை போலீஸ்

திருகோணமலையில், 1624-ம் ஆண்டு போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட ஃபிரட்ரிக் கோட்டைக் கம்பீரமாய் வலியவர்களின் வரலாறு பேசியது. உள்ளே இருந்த திருகோணீஸ்வரர் கோயில் வரலாறு அழிக்கமுடியாத நம்பிக்கையின் சின்னம். கோயில் கூடவே கோட்டையையும் சுற்றிவிட்டு சிகிரியாவுக்கு வந்தோம்.

கொழும்பு தொடங்கி திருகோணமலை வரை... 3 நாள்கள், 730 கி.மீ... குட்டி மொப்படில், பெரிய பயணம்! #Travel
#theHolyBiker

வழியில் பிதுரங்கலா எனும் பழைமையான புத்த மடாலயம் இருந்தது. நகரத்துக்கு நடுவே, ஒரு பெரிய மலையின் மீது அந்த மொத்த நகரத்தையும் பார்த்தவாறு வெள்ளை நிறப் புத்தர் அமர்ந்திருந்தார். புத்தர் சிலைக்கு முதுகைக் காட்டக்கூடாது என்பது இலங்கையில் பின்பற்றப்படும் நம்பிக்கை. அதற்கேற்ப, புத்தர் சிலை முக்கோண வடிவில் அமைந்திருந்தது. கீழே இருந்து பார்க்கும்போது ஊரின் எந்தச் சாலையும் நேரடியாகப் புத்தருக்கு எதிர்த்திசையில் பார்க்கவில்லை.

சிகிரியா கோட்டை
சிகிரியா கோட்டை

வெள்ளை புத்தரை கடந்தால்தான் சிகிரியா வரும். சிம்மகிரி என இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. கோடியக்கரையில் இருந்து கடல் மார்க்கமாகப் பல சாகசங்கள் செய்து இலங்கையில் இறங்கி, இந்த சிகிரியாவில்தான் முதன்முதலா வந்தியத்தேவன், அருள்மொழி வர்மனைச் சந்தித்தார் எனப் பொன்னியின் செல்வன் சொல்கிறது.

இலங்கையில் ஒரு கைலாசா
இலங்கையில் ஒரு கைலாசா

இந்த மலை சிங்கத்தின் முகம் போலவே அமைந்திருந்தது. மலை அடிவாரத்தில் கோட்டையின் நுழைவாயில் சிங்கத்தின் கால்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. கோட்டைக்குச் செல்ல படிக்கட்டுகள் இருந்தாலும் வெளிநாட்டினர் இந்த வரலாற்றுச் சின்னத்தின் மேல் ட்ரெக்கிங் செய்து போவதைத்தான் விரும்புகிறார்கள். சிகிரியாவிலேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து அந்த நாளை முடித்துக்கொண்டோம். வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருந்த அந்த ஹோட்டலில் எல்லா ஊழியர்களுக்கும் காவி உடைதான் யூனிபாஃர்ம்.

ஃபிரட்ரிக் கோட்டை
ஃபிரட்ரிக் கோட்டை

XL-ல் ஏறும்போது, பெங்களூரில் இருந்து வந்திருந்த பெண்கள் பட்டாளம் எங்களை அதிசய மனிதர்கள்போல பார்த்து சூழ்ந்துகொண்டது. "நாங்களும் ஒரு காலத்தில் பைக்கர்ஸ்தான். நாங்கெல்லாம் முதல்முதலா டிவிஎஸ் XLதான் ஓட்டினோம் என எக்ஸ்பீரியன்ஸ்களை பகிர்ந்துகொண்ட பெண்களிடமிருந்து நெகம்போ வரை போகனும் என டாடா காட்டி புறப்பட்டோம்.

2 நாள், 600 கிலோமீட்டர்கள், டிவிஎஸ் XL-ன் கடுமையான சீட்டில் உட்கார்ந்து பயணித்ததில் பின்தொடைகள் வலிக்கத்தொடங்கியிருந்தன. சோர்வும் அதிகம். மூன்றாம் நாள் 160 கி.மீ மட்டுமே பயணம் என்பதால் உற்சாகம் கொஞ்சம் மிச்சம் இருந்தது.

மழையில் இளைப்பாறல்
மழையில் இளைப்பாறல்

குருநெகலாவைத் தாண்டும்போது அழகான சுவர் ஓவியங்கள் ஹாய் சொன்னது. இலங்கை எப்படி நியூயார்க் ஸ்டைலுக்கு மாறியது என ஒரு பெட்டிக்கடையில் நிறுத்திக் கதை கேட்டோம். "உங்களுக்கு ஸ்வச் பாரத்னா. எங்களுக்கு க்ளீன் அப். எங்க நாட்டைச் சுத்தமான வெச்சுக்க காவல்துறை தனிப்படையெல்லாம் இருக்கு. அழுக்கா இருக்க சுவரைப் பார்த்தா நீங்களே அதில் வரையலாம். நாங்க இங்க, இந்தச் சுவரில் வரையப்போகிறோம்னு சொன்னா ஃபையர் இன்ஜின் வந்து சுவரைச் சுத்தம் செய்து கொடுக்கும்" என்றார் பெட்டிக்கடை அண்ணாச்சி.

கிராஃபிட்டி
கிராஃபிட்டி

குருநெகலாவில் கிராஃபிட்டி ஒரு பக்கம் அழகு என்றால் அதைத் தாண்டியதும் அடர்த்தியான தென்னந்தோப்புகள் அந்த ஊரின் அழகை இன்னும் மெருகேற்றின. இலங்கையின் நியூயார்க்குக்கு பை சொல்லிவிட்டு, மியாமிக்கு வந்து சேர்ந்தோம். நெகம்போவை மியாமி என்று சொல்வதை விட கோவா என்று சொல்வது இன்னும் துல்லியமான இருக்கும். சுத்தமான பீச், ஏகப்பட்ட வெளிநாட்டினர், நிறைய கடைகள், ஹோட்டல், ரெசார்ட் என இந்த இடம் எப்போதுமே திருவிழா கோலம்தான். நெகம்போவில் பீச் மட்டுமல்ல ரோமன் கட்டமைப்பில் இருக்கும் பழைமையான சர்ச்களும் இங்கே அதிகம்.

இலங்கையில் இளநீர் விற்றபோது
இலங்கையில் இளநீர் விற்றபோது

என்னதான் டூரிஸ்ட் நகரமாக இருந்தாலும், இங்கே வியாபாரிகள் எல்லோரும் பேங்க் ஆபீஸர்களைப் போல இரவு 9 மணிக்கே கடையைச் சாத்திவிட்டு நடையைக் கட்டுகிறார்கள். நாங்கள் சென்றது கிறிஸ்துமஸ் நேரம். ஊரின் அத்தனை கட்டடங்களிலும் ஸ்டார் தொடங்கவிட்டபடி, ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பிலிருந்து மீண்டு சான்டகிளாஸ் வருகைக்காகக் காத்திருந்தது நெகம்போ. இந்த நகரத்தின் லக்ஸூரி தெருக்களைக் கடந்து மீன் மார்க்கெட் சென்றபோதுதான் உண்மையான இலங்கையைப் பார்க்கமுடிந்தது.

ஹெவி டியூட்டியில் சின்ன லோடு
ஹெவி டியூட்டியில் சின்ன லோடு

இலங்கையில் எல்லாப் பொருள்களின் விலையும் ரொம்பவே அதிகம். உள்நாட்டுத் தயாரிப்புகள் இங்கே குறைவு. பெரும்பாலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால் இங்கே வாழ்வாதாரம் தொய்வடைந்திருக்கிறது என்கிறார்கள் மீன் மார்க்கெட் மக்கள்.

இந்தியாவில் கிடைக்கும் பொருள்கள் எல்லாம் இங்கே இரட்டிப்பு விலையில் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் கிளம்புவதற்கு முன்பு டிவிஎஸ் ஷோரூம் சென்றிருந்தோம். அங்கே ஒரு XL-ன் விலை இந்திய மதிப்பு படி 87,000 ரூபாய் என்றார்கள். இங்கே அதே மொப்பட்டை 30,000 ரூபாய்க்கு வாங்கலாம்.

இப்படி எல்லாப் பொருள்களும் விலை அதிகமாக இருப்பதால் பல பேர் வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கத்தில் இருப்பதாக எங்களுடன் வந்த டூரிஸ்ட் கைடு சொன்னார். கடந்த 3 நாள்களாக எங்களோடு பயணித்த இலங்கை பத்திரிகையாளர் நண்பர், ஆஸ்திரேலியா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகச் சொன்னார். ஏப்ரல் மாதத்துக்குள் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால் நல்லது. இலங்கை மக்கள் வெளிநாட்டில் செட்டில் ஆவதைக் குறைப்பதற்காக விசா முறையைக் கடினமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சொன்னார்.

கொழும்பு தொடங்கி திருகோணமலை வரை... 3 நாள்கள், 730 கி.மீ... குட்டி மொப்படில், பெரிய பயணம்! #Travel
#theHolyBiker

எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது. அதேநேரம், இலங்கை மக்களும், அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள்.

'சில பருவங்கள் கடந்தும்

வெறிச்சோடிக் கிடந்த

பின் வாசல் முற்றத்து

மரக்கிளையின் பறவைக் கூட்டை

பார்த்துக் கொண்டிருந்தபோது,

முன்வாசல் முற்றத்தில்

நீ அழைப்பு மணி ஒலிக்கிறாய்'

எனும் சொல்வனம் கவிதை இப்போது ஞாபகம் வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு